72. திசை மாறும் விவாதம்

இருவரையும் அழைத்துக்கொண்டு குருவின் முன்னால் நின்றான் சிஷ்யன். அவர்களது பிரச்னைக்கு தீர்வு கொடுக்கும்படி கேட்டுக்கொண்டான்.
72. திசை மாறும் விவாதம்

குடிநீர் எடுத்துவருவதற்காக ஊருக்குள் இருந்த பொதுக்கிணற்றுக்கு சென்றிருந்தான் சிஷ்யன்.

கிணற்றடியில் இரு இளைஞர்கள் காரசாரமாக ஏதோ விவாதித்துக்கொண்டிருந்தனர். நெருங்கிச் சென்று விசாரித்தான் சிஷ்யன்.

“நாங்கள் இருவரும் எதைப்பற்றிப் பேசினாலும் எங்களுக்குள் கருத்து மோதல் வந்துவிடுகிறது. பேச ஆரம்பிக்கும் விஷயத்தை விட்டுவிட்டு, வேறு ஏதேதோ பேசி சண்டை போட்டுக்கொள்கிறோம். இப்போதுகூட அப்படித்தான்" என்றான் ஒருவன்.

“ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ளாமல் இருக்கவும் முடியவில்லை. இந்த பிரச்னையை எப்படி நிரந்தரமாகப் போக்கிக்கொள்வது எனத் தெரியவில்லை..” என வருந்தினான் அடுத்தவன்.

இருவரையும் அழைத்துக்கொண்டு குருவின் முன்னால் நின்றான் சிஷ்யன். அவர்களது பிரச்னைக்கு தீர்வு கொடுக்கும்படி கேட்டுக்கொண்டான்.

இளைஞர்கள் இருவரையும் அமரும்படி கூறினார் குரு.

“ஒருவரைப் பற்றி மற்றவர் என்ன மதிப்பீடு வைத்துள்ளீர்கள் என்பதைக் கூறுங்கள் முதலில்..” என்றார் குரு.

முதலாவது இளைஞன் பேச ஆரம்பித்தான்.. “நான் மிகவும் மதிக்கும் நல்ல நண்பன் இவன்..” என்று பேச ஆரம்பித்ததுமே, குறுக்கிட்டான் அடுத்தவன்.

“பார்த்தீர்களா.. இவனே என்னை நல்லவன் என்றும் நண்பன் என்றும் கூறுகிறான். ஆனால், என் வார்த்தைகளை கொஞ்சமும் மதிக்கமாட்டேன் என்கிறான்..” என்று புகார் வாசித்தான்.

“சரி.. நீ இப்போது உன் நண்பனைப் பற்றிக் கூறு..” என்றார் குரு.

“இவன் ஒரு முன் கோபக்காரன்..” என்று பேச ஆரம்பித்தான் இரண்டாவது இளைஞன். அடுத்த கணமே, முதலாவது இளைஞன் குறுக்கே புகுந்தான்.

“என்னிடம் இருக்கும் நல்ல குணங்கள் இவனுக்குத் தெரிவதில்லை. முன் கோபம் மட்டுமே பிரதானமாகத் தெரிகிறது..” என்று புலம்பினன் அவன்.

அவர்களது பிரச்னைக்கு ஆணி வேர் என்ன என்பது குருவுக்கு விளங்கிவிட்டது.

“நீங்கள் பேச வேண்டாம். ஒருவரைப் பற்றி மற்றவர் என்ன மதிப்பீடு வைத்திருக்கிறீர்கள் என எழுதிக்காட்டுங்கள்..” என்றார் குரு. அவர்கள் எழுத காகிதமும் எழுதுகோலும் கொடுத்தான் சிஷ்யன்.

இருவரும் எழுதினார்கள். அதை குருவிடம் கொடுத்தார்கள்.

வாங்கிப் படித்து, புன்னகைத்துக்கொண்டார் குரு. இரண்டு காகிதங்களையும் சிஷ்யனிடம் கொடுத்தார்.

முதலாவது இளைஞன் என்ன எழுதி இருக்கிறான் என்பதைப் படித்துக்காட்டச் சொன்னார்.

சிஷ்யன் உரத்தகுரலில் படித்தான். “நான் மிகவும் மதிக்கும் நல்ல நண்பன் இவன். ஆனால், நான் எதைச் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளாமல் விதண்டாவாதம் செய்கிறான்..” என்று வாசித்தான் சிஷ்யன்.

இளைஞர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.

“அடுத்ததையும் படி..” என்றார் குரு.

“இவன் முன் கோபக்காரன். ஆனாலும் நான் மிகவும் மதிக்கும் நல்ல நண்பன்" என்று வாசித்தான் சிஷ்யன்.

இளைஞர்கள் இருவரும் மீண்டும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.

“இப்போது புரிகிறதா உங்கள் பிரச்னை?” என்றார் குரு. தொடர்ந்து பேசலானார்.

“ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ளும்போது.. முதல் வரியிலேயே பேச நினைப்பதை முழுமையாக பேசிவிட முடியாது. குறைந்தபட்சம் இரண்டு வரிகளையாவது எதிரே இருப்பவர் பேச அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் அவர் சொல்ல நினைப்பதை முழுமையாக கேட்கமுடியும். மாறாக, முதல் வரியைக் கேட்டதுமே குறுக்கே புகுந்து மல்லுக்கட்ட ஆரம்பித்துவிடுகிறீர்கள். விவாதம், திசைமாறிவிடுகிறது. இந்தக் குணம் உங்கள் இருவருக்குமே இருக்கிறது. ஆனால், ஒருவரை ஒருவர் மதிக்கிறீர்கள். ஒருவர் நட்பை மற்றவர் விரும்புகிறீர்கள். அதை இருவரும் புரிந்துகொள்ளாமல் எடுத்ததெற்கெல்லாம் விதண்டாவாதம் செய்துகொள்கிறீர்கள். அதனால்தான் எதைப் பேசினாலும் ஓயாத சண்டை உங்களுக்குள்..” என்றார் குரு.

தங்கள் தவறு புரிந்தது இருவருக்கும். தலை கவிழ்ந்தார்கள்.

“ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும்போது மட்டுமில்லை, ஒன்றாகப் பலர் கூடி விவாதிக்கும்போதும் இந்தப் பழக்கம் இருக்க வேண்டும். முதல் வரியிலேயே ஒருவரை முடிவு செய்து, குறுக்கே புகுந்து, விவாதத்தை திசைதிருப்பிவிடக் கூடாது. முழுதாக அவர் பேசுவதைக் கேட்ட பின்பே அடுத்தவர் தம் கருத்தைக் கூற வேண்டும். அதுவே ஆரோக்கியமான விவாதத்துக்கு அழகு..” என்றார் குரு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com