67. ஜல்ஜல்

தன்நிலை உணர்பவர்கள், தன்நேர்த்தியுடன், தன்னிச்சையாகவே, தங்கள் கடமைகளைச் செய்து முடிக்கிறார்கள்.
67. ஜல்ஜல்

துள்ளிக் குதித்தபடியே ஆசிரமத்துக்குள் ஓடிவந்தான் சிஷ்யன்.

அவனது உற்சாக முகம் பார்த்து ரசித்தார் குருநாதர். “ஏதேது... உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறதுபோல் இருக்கிறதே!” என்றார்.

“உற்சாகத்துடன் மட்டுமில்லை குருவே. ஒரு கேள்வியுடனும் வந்திருக்கிறேன். நீங்கள்தான் என் ஐயத்தைப் போக்க வேண்டும்..” என்றான் சிஷ்யன்.

“அப்படியா, உன் கேள்வியைக் கேள். உற்சாகத்தையும் ஐயத்தையும் ஒரே நேரத்தில் உனக்குக் கொடுத்த சம்பவம் என்னவோ?” என்று கேட்டார் குரு.

“சற்று நேரத்துக்கு முன்னர் இந்தப் பக்கமாக ஒரு மாட்டு வண்டி கடந்து சென்றதைக் கவனித்தேன். வண்டி ஓட்டி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். நிமிர்ந்து உட்கார்ந்திருக்கக்கூட இல்லை அவர். ஆனால், அவரது வழிநடத்துதல் இல்லாமலேயே சீராக சென்றுகொண்டிருந்தன அந்த வண்டி மாடுகள். மாடுகள் இரண்டும் ஜல்ஜல் என்று ஒலித்த சலங்கைகளுடன் துள்ளிக் குதித்துச் சென்றதைப் பார்த்தபோது உற்சாகமாக இருந்தது. அதேசமயம், எஜமானனின் குரலோ கட்டளையோ இல்லாமல் அவை அப்படி தன்நேர்த்தியுடன் சென்றதைப் பார்த்தபோது, எப்படி இது சாத்தியம் என்ற கேள்வியும் எனக்குள் எழுந்தது” என்றான் சிஷ்யன்.

“சரியாக சிந்தித்திருக்கிறாய்..” என்று சிஷ்யனின் தோளில் தட்டிக்கொடுத்தார் குருநாதர். அவனது சந்தேகத்துக்கு விளக்கம் கூற முற்பட்டார்.

“நீ சொன்ன தன்நேர்த்தி என்ற வார்த்தை என்னை மிகவும் கவர்ந்தது. தன்னிச்சையாக ஒரு செயலை நேர்த்தியுடன் செய்யும்போது அதனை இப்படிக் குறிப்பிடுவது பொருத்தமான வார்த்தையாகும். தன்நிலையை உணர்வதே இப்படி அனிச்சையாக செயல்பட வைக்கும்..” என்றார் குரு.

தன்நேர்த்தி, தன்னிச்சை, தன்நிலை.. புரிந்தது போலவும் இருந்தது சிஷ்யனுக்கு. கொஞ்சம் புரியாதது போலவும் இருந்தது!

“விளக்கிக் கூறுங்களேன் குருவே..” என்று கேட்டான்.

“ஒன்றை ஒன்று தொடர்புடைய வார்த்தைகள்தான் இவையனைத்துமே. அதாவது தன்நிலையை நன்கு அறிந்துகொள்பவன், தனக்கான கடமைகள் என்ன என்பதையும் நன்கு அறிவான். தன்நேர்த்தியுடன் அதை செய்து முடிக்கும் திறனையும் அடைவான். பிறரது வழிகாட்டுதல்களோ எச்சரிக்கைகளோ கட்டளைகளோ தேவையின்றி தன்னிச்சையாக தன் கடமைகளைச் செய்து முடிப்பான். அதைத்தான் அந்த வண்டி மாடுகள் செய்திருக்கின்றன. வழக்கமாகப் பயணிக்கும் பாதையை நினைவில் வைத்துக்கொண்டு, தாமாகவே சென்றிருக்கின்றன. உன்னை அதிசயிக்கவைத்திருக்கின்றன. மாடுகளுக்கு மட்டுமல்ல, மனிதர்களுக்கும் இது பொருந்தும். தன்நிலை உணர்பவர்கள், தன்நேர்த்தியுடன், தன்னிச்சையாகவே, தங்கள் கடமைகளைச் செய்து முடிக்கிறார்கள்..” என்றார் குரு.

பார்க்கும் ஒவ்வொரு உயிரினத்தில் இருந்தும் வாழ்க்கைப் பாடம் எடுத்துப் போதிக்கும் தன் குருநாதரை இப்போது வியப்போடு பார்த்தான் சிஷ்யன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com