63. விதைகள் விருட்சங்கள்

ஒவ்வொரு விதையும் விருட்சமாக உருமாற வெவ்வேறு கால அளவு தேவைப்படும். அதனால், ஒன்றுடன் மற்றொன்றை ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது.
63. விதைகள் விருட்சங்கள்

குரு ஒருகாலத்தில் குருகுலப் பாடம் கற்றுக்கொண்டிருந்தபோது உடன் பயின்ற நண்பர் ஒருவர் இப்போது வேறொரு ஊரில் குருகுலம் நடத்திவருகிறார். அவரிடம் பாடம் பயிலும் சீடர்களும் உண்டு.

அந்த குருநாதர், இந்த குருவைச் சந்திக்க வந்திருந்தார் ஒரு நாள்.

பால்ய கால நண்பர்கள் சந்தித்துக்கொண்ட சந்தோஷத்தில் பேசிக் களித்தார்கள் இருவரும்.

குருநாதர்கள் இருவரும் குழந்தைகள்போல குதூகலத்துடன் இருப்பதைக் கண்டு குஷியானான் சிஷ்யனும். விழுந்து விழுந்து உபசரித்தான் இருவரையும்.

எள் என்றதுமே எண்ணெயாக நிற்கும் சிஷ்யனின் சுறுசுறுப்பைக் கவனித்தபடியே இருந்தார் வந்திருந்த குருநாதர். ஒரு கட்டத்தில் தன் மனதுக்குள் எழுந்த சந்தேகத்தை வாய்விட்டே கேட்டுவிட்டார்.

“உங்கள் சீடனைப் பார்க்கையில் உவகையாக இருக்கிறது. மிகவும் மரியாதையுடன் நடந்துகொள்கிறான். சுறுசுறுப்புக்கு மறு வடிவமாகவும் இருக்கிறான். நீங்கள் சொல்ல நினைப்பதை சொல்வதற்கு முன்பே புரிந்துகொள்கிறான். எனக்கு வாய்த்த சீடர்கள் ஒருவரும் இப்படி இருப்பதில்லை..” என்று சொன்னார் வந்திருந்த குருநாதர்.

ஈன்ற பொழுதிற் பெரிதுவந்து மகிழும் தாய்போல தன் சிஷ்யனுக்குக் கிடைத்த புகழ் வார்த்தைகளால் மனம் மகிழ்ந்தார் குரு.

“இவனைப் போலவே எனது சீடர்களும் இருக்க வேண்டும் என்றால் அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார் வந்திருந்த குருநாதர்.

“ஒரு குழந்தையை இன்னொரு குழந்தையுடன் இப்படி ஒப்பிடக் கூடாது..” என்றார் குரு. தொடர்ந்து பேசினார்..

“ஒவ்வொரு விதைக்குள்ளும் விருட்சம் பொதிந்திருக்கிறது. ஆனாலும், விதைகள் வெவ்வேறு. விதை போட்ட இரண்டு வருடங்களிலேயே வளர்ந்து நிற்கும் வேப்ப மரம். புங்கை வளர்ந்து மரமாக நான்கு வருடங்களாகும். தென்னைக்கு குறைந்தது ஐந்து வருடங்களாகும். ஆல மரம், அரச மரம் இரண்டுக்கும் அவை வளர்ந்து நிற்க பத்து வருடங்களாகும். இவை எல்லாமே மரங்கள்தான். ஆனால், ஒவ்வொரு விதையும் விருட்சமாக உருமாற வெவ்வேறு கால அளவு தேவைப்படும். அதனால், ஒன்றுடன் மற்றொன்றை ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது..” என்றார் குரு.

உடனிருந்த குருநாதர் ஒரு சிஷ்யனின் மனநிலையுடன் தன் நண்பனின் வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டிருந்தார்.

“தவிர, இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். எனக்கு வாய்த்த சீடர்கள் ஒருவரும் இப்படி இருப்பதில்லை என நீங்கள் சொன்னதால் இந்தக் கோணத்தில் சிந்திக்கவேண்டி இருக்கிறது. விதைப்பதால் மட்டுமே எல்லா விதைகளும் மரங்களாகிவிடும் என்று தப்புக்கணக்கு போடக் கூடாது. வேர் பிடிக்கும் வரை அதீத கவனம் காட்டுவது, போதிய இடைவெளியில் நீர் ஊற்றுவது, புறச்சூழலால் பாதிப்பு ஏதும் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பது, உரம் சேர்ப்பது, உயிர் வளர உதவி செய்வது.. என விருட்சமாகும் வரை அவற்றை போற்றிப் பாதுகாக்க வேண்டியது விதைப்பவரின் கடமைதானே! கடமையில் எந்தக் குறையுமில்லை என்றால் விதைகள் அனைத்தும் விருட்சமாக வளருவதை யாராலும் தடுத்து நிறுத்த இயலாதுதானே!”.

தன்னிடம் என்னென்ன தவறுகள் இருக்கலாம் என ஆக்கப்பூர்வமாக யோசிக்க ஆரம்பித்தார் வந்திருந்த குருநாதர்.

தன்னை முன்வைத்து அவர்கள் பேசியதை அறியாமல் தூரத்தில் தோட்டச் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தான் சிஷ்யன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com