65. குட்டி குரு!

உயிர் நம் உடலோடு ஒட்டியிருக்கும் கடைசி விநாடி வரை நாம் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்.
65. குட்டி குரு!

மதிய உணவுக்குப் பின்னர்.. கண்களை மூடியபடி சாய்ந்து அமர்ந்திருந்தார் குருநாதர். அது அவர் ஓய்வெடுக்கும் சில நிமிடங்கள்.

சற்று தூரத்தில் சிஷ்யன் இருந்தான். படுத்திருக்கப் பிடிப்பதில்லை அவனுக்கு. அவன் இஷ்டத்துக்கு ஏதாவது ஒரு காரியம் செய்துகொண்டிருப்பான். அன்று.. உற்சாகத்துடன் ஏதோ ஒரு பாடலை முணுமுணுத்துக்கொண்டிருந்தான்.

“அப்பாக்குட்டி.. மகன் சுப்பாகுட்டி.. அப்பாவும் பிள்ளையும் பாசத்தில் கெட்டி..”

சிஷ்யனின் பாடலில் தானாகவே ஒரு தாளமும் சேர்ந்துகொண்டதைக் கேட்டு ரசித்தார் குருநாதர். கண்களைத் திறந்துகொண்டு, எழுந்து உட்கார்ந்தார். சிஷ்யனை அருகே அழைத்தார்.

“நன்றாக இருக்கிறது நீ பாடிய பாடல்..” என்றார்.

சிஷ்யனுக்கு குஷியாகிவிட்டது. “உங்களிடம் வந்து சேருவதற்கு முன்பு பாலர் பள்ளியில் எனக்குச் சொல்லிக்கொடுத்த பாடல் அது.. எனக்கு மிகவும் பிடிக்கும்..” என்றான்.

“எங்கே.. அந்தப் பாடலை எனக்கும் கற்றுக்கொடுப்பாயா..” என்று கேட்டார் குரு.

ஆச்சரியத்துடன் குருவை நோக்கினான் சிஷ்யன்.

“எனக்குப் பாடம் கற்பிக்கும் குரு நீங்கள். எல்லாம் அறிந்தவர். என்னிடம் போய், இப்படிக் கேட்கிறீர்களே!” என்று ஆச்சரியம் விலகாமல் கூறினான்.

சத்தம்போட்டுச் சிரித்துக்கொண்டார் குரு.

“குரு என்ற நிலையை அடைந்ததனாலேயே ஒருவன் எல்லாம் அறிந்தவன் என்று ஆகிவிடாது. நீ பாடிய பாடலை நான் அறிந்திருக்கவில்லையே. பிறகெப்படி நான் எல்லாம் அறிந்தவனாக இருக்கமுடியும்?” என்றார்.

அதற்கு என்ன பதில் சொல்வதெனத் தெரியாமல் அமைதியாக இருந்தான் சிஷ்யன். குருவே தொடர்ந்தார்.

“இனி கற்றுக்கொள்ள எதுவும் இல்லை என்ற எண்ணம் ஒருவனுக்கு வரவே கூடாது. வந்துவிட்டால், அவன் சிஷ்யனாக இருக்கும் தகுதியை மட்டுமல்ல.. குருவாக இருக்கும் தகுதியையும் இழந்துவிடுவான்..” என்றார் குரு.

“உயிர் நம் உடலோடு ஒட்டியிருக்கும் கடைசி விநாடி வரை நாம் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். நல்ல விஷயங்களையும் ஆக்கப்பூர்வமான செயல்களையும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். உனக்குக் கற்றுக்கொடுப்பது மட்டும் என் கடமை அல்ல. உன்னிடம் இருந்தும் கற்றுக்கொள்வதே, என்னை நானாக இறுதிவரை இருக்கச்செய்யும். போதுமா என் விளக்கம். இப்போது அந்த அப்பாக்குட்டி பாடலை எனக்குக் கற்றுத்தருகிறீர்களா குட்டி குருவே?” என்றார் குரு. புன்னகை அவர் முகத்தில் தவழ்ந்திருந்தது.

பெருமையோடும் பெருங்குரலோடும் பாட ஆரம்பித்தான் சிஷ்யன்.. “அப்பாக்குட்டி.. மகன் சுப்பாகுட்டி..”.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com