66. நூலறிவு

கலைந்து கிடந்த புத்தகங்களை எடுத்து அழகாக அடுக்கிவைத்துவிட்டு, படிக்க ஆரம்பித்தவன் சிறப்பானவன். தான் இருக்கும் இடத்தை அழகாகவும் சுத்தமாகவும் வைத்துக்கொள்ளத் தெரிந்தவன்.
66. நூலறிவு

குருவும் சிஷ்யனும் பொது நூலகம் ஒன்றுக்குச் சென்றிருந்தார்கள்.

தினமும் தன் முகத்தையே பார்த்துக்கொண்டிருக்கும் சிஷ்யனை இப்படி ஏதாவது ஒரு பொது இடத்துக்கு அழைத்துச் சென்று, அங்கே அவன் பாடம் கற்றுக்கொள்ள வழிவகை செய்வது குருவின் வழக்கம். அன்றும் அப்படித்தான்.

நூலகத்தில் பலவிதமான மனிதர்கள் இருந்தார்கள். பலரும் புத்தகங்களில் மூழ்கியிருந்தனர்.

குருவும் சிஷ்யனும் ஆட்கள் யாரும் இல்லாத ஒரு பெரிய மேசையைத் தேர்ந்தெடுத்து, அதனைச் சுற்றி போடப்பட்டிருந்த இருக்கைகளில் இரண்டை ஆக்கிரமித்தார்கள். மேசை மீது இறைந்துகிடந்த புத்தகங்களை ஆசைஆசையாக எடுத்து புரட்டிக்கொண்டிருந்தான் சிஷ்யன். அமைதியாக சுற்றி நடக்கும் சம்பவங்களை கவனித்துக்கொண்டிருந்தார் குரு.

அந்த மேசையை நோக்கியும் ஆட்கள் வரத்தொடங்கினார்கள். ஒரு கட்டத்தில் சிஷ்யனையும் அருகே அழைத்து, சுற்றி நிகழ்வதை கவனிக்கச் சொன்னார்.

அங்கு வந்த இளைஞன் ஒருவன் ஏதோ ஒரு நூலை கையில் எடுத்துக்கொண்டு உட்கார்ந்து, கவனமாக படிக்க ஆரம்பித்தான்.

இன்னொருவன் ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு அதை முழுவதுமாக படிக்காமல் படபடவென பக்கங்களை புரட்டினான். அங்கும் இங்குமாக படித்துப் பார்த்தான். திரும்பவும் புத்தகத்தைக் கொண்டுபோய் அலமாரியில் வைத்துவிட்டு வேறொரு புத்தகத்தை எடுத்துவந்தான். அதையும் அப்படியே பக்கங்களை புரட்டி அங்குமிங்குமாக படித்துவிட்டு, திரும்பவும் கொண்டுபோய் அலமாரியில் வைத்தான். இப்படியே ஒவ்வொரு புத்தகத்தையும் எடுப்பதும் பிரிப்பதும் மேய்வதுமாகவே இருந்தான் அவன்.

வேறொருவன் வந்தான். மேசை மீது சிதறிக்கிடந்த புத்தகங்களை எடுத்து அவற்றை அதனதன் இடத்தில் அழகாக அடுக்கிவைத்தான். பின்னர், ஒரு புத்தகத்தை கையில் எடுத்துக்கொண்டு ஒரு ஓரமாய்ச் சென்று அமர்ந்தான்.

வேகவேகமாக வந்தான் இளைஞன் ஒருவன். கண்களில் விளக்கெண்ணெய் ஊற்றிக்கொள்ளாத குறையாக அலமாரிகளில் ஏதோ ஒரு நூலை தேடிக்கொண்டே இருந்தான். அவன் தேடிய நூல் கிடைக்கவில்லை போலும். எரிச்சலுடன் முணுமுணுத்துக்கொண்டே தேடுதலைத் தொடர்ந்துகொண்டிருந்தான்.

அடுத்து வந்த இளைஞன் அங்கும் இங்கும் உலவியபடியே இருந்தான். ஏதோ ஒரு புத்தகத்தை கையில் எடுப்பான், ஓரிரு பக்கங்கள் புரட்டியதும் அதை கீழே வைத்துவிடுவான். அடுத்த புத்தகத்தை எடுப்பான். அட்டையைப் பார்த்துவிட்டு அதையும் கீழே வைத்துவிடுவான். அடிக்கடி கடிகாரத்தில் நேரம் பார்த்துக்கொள்ளவும் செய்தான்.

சிஷ்யனை அழைத்துக்கொண்டு நூலகத்தைவிட்டு வெளியேறினார் குரு. இருவரும் நடந்துகொண்டிருந்தனர்.

“நூலகத்தில் நாம் பார்த்த மனிதர்களில் யார் யார் எப்படிப்பட்டவர்கள்.. யாரெல்லாம் சிறப்பானவர்கள் என உன்னால் கூறமுடியுமா?” என்று சிஷ்யனிடம் கேட்டார் குரு.

அது அவன் பதில் சொல்வதற்கான கேள்வி அல்ல. குருவின் வார்த்தைகளில் இருந்து தான் பாடம் கற்றுக்கொள்வதற்கான கேள்வி என்பது சிஷ்யனுக்குப் புரிந்தது. மௌனம் காத்தான். குரு பேச ஆரம்பித்தார்.

“கிடைக்காத புத்தகத்தை தேடுவது சரியான செயல்தான். ஆனால், அது கிடைக்கவில்லையே என்று புலம்பியபடியே தேடிக்கொண்டிருந்தவன், கிடைக்கும் புத்தகத்தை சுவைத்துப் பார்க்காமல் வருத்தத்துடனேயே இருப்பவன். அவன் வாழ்க்கையும் அப்படித்தான்.. கிடைக்காத சுகங்களுக்காக ஏங்கியபடியே இருப்பான். கிடைத்திருக்கும் பொழுதுகளை வருத்தங்களுடனேயே கழிப்பான். அவனுக்கு ஆறுதல் கூற எப்போதும் இன்னொருவரது துணை தேவை.

பல புத்தகங்களை கையிலெடுத்து மேய்ந்தவன் ஒரு புத்தகத்தைக்கூட ஆழமாகப் படிக்கமாட்டான். நுனிப்புல் மேய்பவன். எந்த விஷயத்திலும் ஆழமான கருத்து அவனுக்கு இருக்காது. அவனால் அவனுக்கும் இந்த உலகுக்கும் பயனேதும் இருக்காது.

ஒரு புத்தகத்தையும் எடுத்துப் படிக்காமல் அங்கும் இங்குமாக அலைந்துகொண்டிருந்தவன் வேறேதேனும் வேலைக்கிடையில் பொழுதைப் போக்குவதற்காக இங்கு வந்தவன். புத்தகங்கள் மனிதர்களின் வாழ்வைப் புடம் போடக் கிடைத்த பொக்கிஷங்கள் என்பதை அவன் அறிந்திருக்கமாட்டான். பரிதாபத்துக்குரியவன் அவன்.

ஏதோ ஒரு புத்தகத்தை எடுத்து அதை கவனமாகப் படித்துக்கொண்டிருந்தவன் படிப்பாளி. புத்தகங்கள் மூலம் தன் அறிவை விசாலப்படுத்திக்கொண்டிருப்பவன். ஆனால், அவன் பெற்ற நூலறிவு பிறருக்கோ இந்தச் சமுதாயத்துக்கோ பலனளிக்கும்விதமாக அவன் நற்செயல்கள் புரிந்தால் மட்டுமே அவன் வாழ்வு பயனுள்ளதாக அமையும்.

கலைந்து கிடந்த புத்தகங்களை எடுத்து அழகாக அடுக்கிவைத்துவிட்டு, படிக்க ஆரம்பித்தவன் சிறப்பானவன். தான் இருக்கும் இடத்தை அழகாகவும் சுத்தமாகவும் வைத்துக்கொள்ளத் தெரிந்தவன். புத்தகங்களால் விசாலமாகும் அவன் அறிவு, சிறப்பான வாழ்க்கையை அவனுக்குக் கொடுக்கும். அவனைச் சுற்றியிருப்போருக்கும் கொடுக்கும்..” என்றார் குரு.

கவனமாக குருவின் வார்த்தைகள் முழுவதையும் கேட்டுக்கொண்டிருந்த சிஷ்யன் கேட்டான்..

“ஆமாம் குருவே. நூலகத்துக்குச் சென்று, நூல்களைப் படிப்பதற்குப் பதிலாக, இப்படி மனிதர்களைப் படித்துவரும் நாம் எந்தவகையில் சேர்த்தி?” என்றான் அப்பாவியாக.

வெடிச்சிரிப்பு கிளம்பியது குருவிடமிருந்து!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com