73. குளிர்வித்தல்

முதலில் பாதங்களை நனைக்க வேண்டும். பின்னர் படிப்படியாக கீழிருந்து மேலாக உடல் பாகங்களைக் குளிர்விக்க வேண்டும்.
73. குளிர்வித்தல்

பயணம் ஒன்றின் வழியில் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்த ஆற்று நீரைக் கண்டார்கள் குருவும் சிஷ்யனும். இருவருக்கும் அதில் இறங்கிக் குளிக்க ஆசை வந்தது.

ஆடைகளைக் களைந்துவிட்டு, ஆற்றுக்குள் இறங்கினார்கள் இருவரும். அழுக்குத் தொலையவும், ஆசை தீரவும் சில நிமிடங்கள் ஆனந்தமாகக் குளித்துவிட்டுக் கரையேறினார்கள்.

“இப்போது என் உடலுக்குள் பரவசம் புகுந்திருப்பதுபோல புத்துணர்ச்சியாக இருக்கிறது குருவே..” என்றான் சிஷ்யன். தலையைச் சிலிர்த்துக்கொண்டான்.

“ஆமாம். எனக்கும்தான்..” என்றார் குரு. சிஷ்யனின் தலையைத் தன் மேல் துண்டால் துடைத்துவிட்டார்.

அதன் பின்னர் இருவரும் நடந்தபடியே பேசலானார்கள்.

“நீ உணர்ந்த பரவசத்துக்கான காரணம் என்னவென அறிவாயா?” என்று கேட்டார் குரு.

உதடு பிதுக்கி, “இல்லை” என்றான் சிஷ்யன். “கூறுங்கள் குருவே..” என்றான்.

“பயணத்தினாலும் அலைச்சலாலும் நம் உடலில் உஷ்ணம் கூடியிருந்தது. உடலில் சேரும் வெப்பம் பலவகையான பிரச்னைகளை உண்டு பண்ணிவிடும். நம் உடலின் இயக்கத்தை, தசை - மூட்டு - எலும்பு இவற்றின் பணியை, சீரான சுவாசத்தை, செரிமான சக்தியை பாதிக்கும். ஆற்றுநீர்க் குளியல் அத்தனை பிரச்னைகளையும் போக்கிவிட்டது. மனிதர்கள் எப்படிக் குளிக்க வேண்டுமோ அப்படிக் குளிப்பதற்கு ஆற்றுநீர்க் குளியலே இயல்பாக வழிகாட்டுகிறது..” என்றார் குரு.

“எப்படிக் குளிக்க வேண்டும் குருவே?” என்று கேட்டான் சிஷ்யன்.

“ஆற்றில் இறங்கும்போது முதலில் நம் பாதங்கள் தண்ணீரில் நனைகின்றன. உள்ளே செல்லச் செல்ல.. கீழிருந்து மேலாக ஒவ்வொரு பாகமாக நம் உடல் நனைகிறது. குளிர்கிறது. உடல் உஷ்ணம் பாதத்தில் இருந்து விலகி, ஒவ்வொரு பாகமாக மேலேறுகிறது. இறுதியாக சூடு முழுவதும் தலையில் சேர்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக உடலை நீருக்குள் நனைத்ததும், தலையை மட்டும் நனைக்காமல் இருந்தால், உச்சந்தலையில் கை வைத்துப் பார்த்தால் அந்தச் சூட்டை நாம் உணரமுடியும். அதன்பிறகு, தலையையும் நீருக்குள் நனைக்க வேண்டும். மொத்தச்சூடும் வடியும். இதுதான் ஆற்று நீர்க்குளியல் அளிக்கும் அற்புதம்..” என்றார் குரு.

குரு சொல்லச் சொல்ல, இன்னொரு முறை ஆற்றில் இறங்கி குளித்ததுபோல உணர்ந்தான் சிஷ்யன்.

“வீட்டில் குளிக்கும்போதும் இப்படித்தான் குளிக்க வேண்டும். முதலில் பாதங்களை நனைக்க வேண்டும். பின்னர் படிப்படியாக கீழிருந்து மேலாக உடல் பாகங்களைக் குளிர்விக்க வேண்டும். இறுதியாக தலைக்குக் குளிக்க வேண்டும். அதுதான் ஆரோக்கியமான குளியலாக இருக்கும். குளியல் என்பதன் பொருள்.. நம் உடலைக் குளிர்வித்தல் ஆகும்..” என்றார் குரு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com