21. 'இசை இளவரசர்' எஸ்.டி.பர்மன் 

இந்த வாரம், ஒரு ஹிந்தி இசையமைப்பாளரைப் பற்றிக் கவனிப்போம். பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு ‘சச்சின்’ என்ற பெயர் வைக்கப்படுவதற்குக் காரணம் இவரே.
21. 'இசை இளவரசர்' எஸ்.டி.பர்மன் 
Published on
Updated on
4 min read

இந்த வாரம், ஒரு ஹிந்தி இசையமைப்பாளரைப் பற்றிக் கவனிப்போம். பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு ‘சச்சின்’ என்ற பெயர் வைக்கப்படுவதற்குக் காரணம் இவரே. சச்சினின் தந்தை இவரது ரசிகர் என்பதே காரணம். அவர்தான் ‘SD Burman’ என்று அழைக்கப்பட்ட சச்சின் தேவ் பர்மன். சச்சின் தேவ் பர்மன் இல்லாமல் ஹிந்தித் திரைப்படங்களின் பாடல்கள் முழுமை அடையவே அடையாது. இறக்கும் வரை மிகப்பெரும் புகழோடு இருந்தவர். பிறக்கும்போதே ஒரு இளவரசனாக, அரச பரம்பரையில் பிறந்தவர். இவரது இசையின் நினைவாக, இவரது புதல்வர் ஆர்.டி.பர்மனை நமக்கெல்லாம் கொடுத்துச் சென்றவர்.

தற்போதைய பங்களாதேஷில், திரிபுராவின் இளவரசரான நபத்வீப் சந்த்ரதேவ் பர்மனுக்கும், மணிப்பூரின் இளவரசி நிர்மலாதேவிக்கும் 1906ல் பிறந்த இளவரசர்தான் சச்சின் தேவ் பர்மன். அவர்களின் ஐந்தாவது புதல்வர். இவரது பெற்றோருக்கு மொத்தம் ஒன்பது குழந்தைகள்.  கல்லூரியில் பி.ஏ படித்து முடித்ததுமே, வங்காளத்தில் பிரபல இசையமைப்பாளரான கே.சி டே (K.C Day)யிடம் இசை பயின்றார் சச்சின். அவருக்குப் பின் பீஷ்மதேவ் சட்டோபாத்யாய், கஹிஃபா பதல் கான் (சாரங்கி), உஸ்தாத் அலாவுதீன் கான் (வயலின்) ஆகியவர்களிடமும் இசை கற்றார். ஆனால் இவர்களுக்கெல்லாம் முதலில், தனது தந்தையிடம்தான் இசை கற்கத் துவங்கியிருந்தார் சச்சின். சச்சினின் தந்தை நபத்வீப் சந்த்ரதேவ் பர்மன், சிறந்த பாடகராகவும், சிதார் விற்பன்னராகவும் இருந்தவர்.

இசையை இவர்களிடம் நன்றாகப் பயின்ற பின்னர், கல்கத்தாவின் வானொலியில், 1932 முதல் பாடத் துவங்கினார் சச்சின். முதலில் சில ஆண்டுகள் வானொலி நிலையத்திலேயே பாடகராக இருந்து, திரிபுரா மற்றும் வங்காளக் கிராமிய இசை, ஹிந்துஸ்தானி இசை ஆகியவற்றைப் பாடிவந்தார். அப்போதைய காலகட்டத்தில் 131 வங்காளப் பாடல்களை வெளியிட்டிருக்கிறார்.

அச்சமயத்தில்தான் சச்சின் தேவ் பர்மனின் வாழ்க்கையில் குறிப்பிடத்தகுந்த சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. மீரா தாஸ்குப்தா என்ற மாணவிக்கு இசை சொல்லிக்கொடுத்துக்கொண்டிருந்த சச்சின், அந்த மாணவியின் மீதே காதல் கொண்டார். மாணவிக்கும் சம்மதம். ஆனால் குடும்பத்தினருக்கு இது பிடிக்கவில்லை என்பதால், குடும்பத்திடம் இருந்தும் அதன் சொத்துகளிடம் இருந்தும் முற்றிலுமாகத் தன் உறவைத் துண்டித்துக்கொண்டார் சச்சின். இதன்பின் மீராவைத் திருமணமும் செய்துகொண்டார். அவருக்கு ராகுல்தேவ் பர்மன் என்ற மகன் பிறந்த ஆண்டு - 1939.

இதற்கிடையே, வங்காள நாடகங்களுக்கு ஏராளமாக இசையமைக்கத் துவங்கியிருந்தார் சச்சின். அவைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள், வங்காளத் திரைப்படங்களிலும் உபயோகிக்கப்பட்டன. ‘ராஜ்கீ’ (Rajgee-1937) என்பதுதான் சச்சின் தேவ் பர்மன் முதன்முதலில் இசையமைத்த வங்காளப்படம். இதன்பிறகு 1944 வரை வரிசையாகப் பல வங்காளப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். அவ்வருடம்தான் பம்பாய்க்குக் குடிபெயர்ந்தார் சச்சின். ‘ஷிகாரி’ (1946) & ‘ஆத் தின்’ (1946) ஆகிய இரண்டு அஷோக் குமாரின் படங்களுக்கு இசையமைத்தார். இதன்பிறகு பல ஹிந்திப் படங்களுக்கு இசையமைத்தார் சச்சின் தேவ் பர்மன்.

இயல்பிலேயே கோபமும் கலாகர்வமும் உடைய சச்சினுக்கு, பம்பாயின் திரையுலகம் கலைஞர்களைத் துளிக்கூட மதிக்காமல் ஏனோதானோ என்று நடந்துகொண்டது கோபத்தை வரவழைத்தது. எனவே, ஒருசில வருடங்கள் இசையமைத்த பின்னர், மீண்டும் வங்காளத்துக்கே திரும்பிவிடலாம் என்று உறுதியான ஒரு முடிவை எடுக்கிறார். ‘மஷால்’ (1950) படத்தை விட்டுவிட்டுப் பாதியிலேயே வெளியேறுகிறார். ஆனால் அதன்பின்னர், பல இயக்குநர்களின் அன்பான வேண்டுகோள்களுக்கு இணங்கி, மீண்டும் பம்பாயிலேயே இருக்க முடிவு செய்கிறார். அப்போதுதான் ‘சஸா’ (1951), ‘பாஸி’ (1951), ‘ஜால்’ (1952), ‘அர்மான்’ (1953), ‘டாக்ஸி ட்ரைவர்’ (1954), ‘தேவ்தாஸ்’ (1955), ‘முனீம்ஜி’ (1955), ‘ஃபந்தூஷ்’ (1956), ‘பேயிங் கஸ்ட்’ (1956), ‘ப்யாஸா’ (1957- குரு தத் இயக்கம்), ‘நௌ தோ க்யாரா’ (1957), ‘காலாபானி’ (1958) ஆகிய காலத்தால் மறவாத பல படங்களுக்கு இசையமைக்கிறார் சச்சின் தேவ் பர்மன்.

அப்போதிலிருந்து இறக்கும் காலகட்டம் வரை நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் எஸ்.டி. பர்மன். 1975ல் வெளியான ‘மிலி’ படத்தில், ‘படி சூனி சூனி ஹை’ என்ற ஒரு அற்புதமான கிஷோர் குமாரின் பாடல் உண்டு. அப்பாடலுக்கு இசையமைத்து, ஒத்திகை பர்த்துக்கொண்டிருக்கும்போதே மயங்கி விழுந்த சச்சின், உடனடியாகக் கோமாவுக்குப் போகிறார். அதன்பின் அக்டோபர் 31ம் தேதி பம்பாயில் இறக்கிறார்.

தமிழ்நாட்டில் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு இணையான ஹிந்தி இசையமைப்பாளர் சச்சின் தேவ் பர்மன். பல்வேறு பாடகர்களுக்கும் இறவாப்புகழ் தரக்கூடிய பல்வேறு பாடல்களை இசையமைத்திருக்கிறார். தமிழ்நாட்டில் டி.எம்.எஸ் புகழேணியின் உச்சியில் பலவருடங்கள் விளங்கினார். அவருக்கு நிகர் என்று சொல்லக்கூடிய பாடகர் அச்சமயத்தில் இங்கு இல்லை. ஆனால் ஹிந்தியிலோ, முஹம்மது ரஃபி, கிஷோர் குமார் என்ற இரண்டு ஜாம்பவான்கள் ஒரே நேரத்தில் புகழ்பெற்று விளங்கினர். இந்த இருவருக்கும் பலப்பல பாடல்களைத் தந்திருக்கிறார் எஸ்.டி.பர்மன். ஐம்பதுகளின் இறுதியில் கிஷோர் குமார் மெல்லப் புகழேணியின் உச்சத்தில் இருந்து இறங்கி, கிட்டத்தட்டக் காணாமலே போனபின்னரும் எஸ்.டி பர்மன் மட்டுமே கிஷோருக்கு விடாபிடியாகப் பாடல்கள் அளித்து வந்தார். அதன் பலனாக, ‘1969ல் ‘ஆராதனா’ வெளியாகி, கிஷோரை மறுபடியும் சூப்பர்ஸ்டாராக உயர்த்தியது. அப்போதில் இருந்து இறக்கும்வரை (1987) கிஷோரே ஹிந்தித் திரையுலகின் நம்பர் ஒன் பாடகர்.

அதேபோல், நடிகர் தேவ் ஆனந்த்தின் ‘நவ்கேதன்’ நிறுவனத்தின் பல படங்களுக்கு எஸ்.டி. பர்மன் தான் இசை. தேவ் ஆனந்த் நடிக்க, அவரது சகோதரர் விஜய் ஆனந்த் இயக்க, எஸ்.டி. பர்மன் இசையமைத்த அத்தனை படங்களின் பாடல்களும் ஹிட்.

எஸ்.டி.பர்மன், கவரிமான் போன்றவர். எனவே, படாடோபமும் ஜம்பமும் அவரிடம் செல்லுபடி ஆகாது. இதனாலேயே, ஐம்பதுகளில் லதா மங்கேஷ்கரை முற்றிலும் ஒதுக்கினார் பர்மன். லதாவின் கர்வமே காரணம். எனவே லதாவின் சகோதரியான ஆஷா போஸ்லேவுக்குப் பாடல்கள் வழங்கினார். இதனால் ஆஷாவுக்கும் எஸ்.டி.பர்மனின் புதல்வர் ஆர்.டி. பர்மனுக்கும் காதல் உண்டானது தனிக்கதை. இருவரும் இணைபிரியாமல் பலகாலம் வாழ்ந்தனர்.

அதுவே, கிஷோர் குமாரை, தனது சொந்தப் புதல்வராகக் கருதினார் எஸ்.டி. பர்மன். இந்த இருவருக்கும் இடையே இருந்த உறவு, புகழ்பெற்றது.

எஸ்.டி. பர்மனின் பிரபல பாடல்களை இங்கே எழுதத் தொடங்கினால், இன்னும் பத்து வாரங்களாவது எழுத வேண்டும் என்பதால், ஒருசில பாடல்களை மட்டும் பார்க்கலாம்.

ப்யாஸா படத்தின் ‘ஜானே வோ கைஸே லோக்’ பாடலைப் பல ஹிந்திப் பாடல் ரசிகர்களால் மறக்கமுடியாது. ஸாஹிர் லுத்யான்வி எழுதி அமரத்துவம் பெற்ற பாடல். பாடலைப் பாடியவர் ஹேமந்தா முகர்ஜீ.பாடலுக்கான சுட்டி கீழே:

பேயிங் கஸ்ட் படத்தின் அத்தனை பாடல்களும் அவ்வளவு இனிமையாக இருக்கும். ‘மானா ஜனாப்னே புகாரா நஹி’ பாடல், ‘ச்சோட் தோ ஆஞ்ச்சல் ஸமானா க்யா கஹேகா’ பாடல் ஆகிய இரண்டுமே இறவாப்புகழ் பெற்றவை. ‘ச்சோட் தோ ஆஞ்ச்சல்’, இப்போதும் பலமுறைகள் ரீமிக்ஸ் செய்யப்படுகிறது. பாடலுக்கான சுட்டி கீழே:

கிஷோர் குமார் சகோதரர்கள் நடித்த ‘சல்த்தீ கா நாம் காடி’ படத்தின் ‘எக் லட்கி பீகீ பாகி ஸீ’ பாடல் எப்படிப்பட்டது? கேட்டதுமே பிடித்துப்போய், மனதைத் துள்ளவைக்கும் பாடல் இது. கிஷோர் குமார் பிரமாதப்படுத்தியிருப்பார். கிஷோரே நடித்த பாடல் இது.பாடலுக்கான சுட்டி கீழே:

‘தேரே கர் கே சாம்னே’ படத்தில், ‘தில் கா பவர் கரே புகார்’ பாடல் அற்புதமானது. ஒரு லைட்ஹௌஸில் எடுக்கப்பட்ட பாடல்.பாடலுக்கான சுட்டி கீழே:

பிரபல எழுத்தாளர் ஆர்.கே நாராயண் எழுதிய நாவலின் பெயர் ‘Guide’. இது தேவ் ஆனந்தின் நவ்கேதன் நிறுவனத்தால் படமாகவும் எடுக்கப்பட்டது. இயக்கம், அவரது சகோதரர் விஜய் ஆனந்த் தான். இதன் பாடல்களை இன்றும் கேட்டுக்கொண்டே இருக்கலாம். ‘காதா ரஹே மேரா தில்’, ‘தின் டல் ஜாயே’, ‘ஆஜ் ஃபிர் ஜீனேகி தமன்னா ஹை’, ‘தேரே மேரே சப்னே’, ‘சைய்யன் பெய்மான்’ ஆகிய பாடல்களை ஒருமுறை கேட்டுப்பாருங்கள். கட்டாயம் உங்களால் மறக்கமுடியாத பாடல்களாக அவை மாறும். இந்தப் படம் ஆங்கிலத்திலும் வெளியானது.பாடலுக்கான சுட்டி கீழே:

‘அபிமான்’ படத்தில், ‘தேரி பிந்தியா ரே’ பாடலை எவரால் மறக்கமுடியும்? அப்படமே ஒரு பின்னணிப் பாடகனின் கதைதான். அந்தப் படம் பிரம்மாதமாக ஓடியதற்கு எஸ்.டி.பர்மனின் இசையே பிரதான காரணம். க்ளைமேக்ஸில் இடம்பெறும் ‘தேரே மேரே மிலன் கி ஏ ரைனா’ பாடலை அக்காலத்தில் கண்ணீரோடு கேட்காத நபரே இல்லை எனலாம்.பாடலுக்கான சுட்டி கீழே:

அப்படிப்பட்ட எஸ்.டி பர்மனின் இசையில் எனக்கு மிகவும் பிடித்த ஒரு பாடல் இங்கே. ‘ஷர்மிலீ’ (1971) படத்தில், ‘கில் தே ஹைன் குல் யஹான்’ என்ற பாடல் இடம்பெற்றது. தமிழில், ‘ராதையின் நெஞ்சமே.. கண்ணனுக்குச் சொந்தமே’ என்று மொழிமாற்றம் செய்யப்பட்ட பாடல் இது. மிக மிக இனிமையான ட்யூன். கிஷோர் குமார் அட்டகாசமாகப் பாடியிருப்பார். சசி கபூர் நடித்த படம். பாடலைப் பாருங்கள். இன்றும் எஸ்.டி பர்மனுக்கு ஹிந்தியில் லட்சக்கணக்கான ரசிகர்கள் உண்டு. குறிப்பாக, அவர்களில் பலர் இளைஞர்கள். அதுவே, நம்மூரில் இளையராஜாவையே தெரியாது என்று சொல்லக்கூடிய தலைமுறை ஒன்று உருவாகிவருகிறது என்பதை நாம் கவனிக்கவேண்டும். எம்.எஸ்வி, கே.வி.எம், ஜி.ராமநாதன், பாபநாசம் சிவன் முதலிய பல பழம்பெரும் இசையமைப்பாளர்களின் இசையைக் கேட்காமல் தமிழ்த்திரைப்பட இசை ரசனை முற்றுப்பெறாது. அதற்காகத்தான் இந்தத் தொடரே எழுதவும் துவங்கினேன். நீங்கள் இசை ரசிகர் என்றால் முதலில் இவர்களின் இசையைக் கேட்டுவிட்டு வாருங்கள்.பாடலுக்கான சுட்டி கீழே:

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com