Enable Javscript for better performance
1. முதல் முயற்சி- Dinamani

சுடச்சுட

  

  1. முதல் முயற்சி

  By ஜே.எஸ். ராகவன்.  |   Published on : 23rd August 2018 10:00 AM  |   அ+அ அ-   |    |  

  jews_-_sivasami

   

  பாண்டிச்சேரி மணக்குள விநாயகர் பட தினசரி காலண்டரிலிருந்து, ‘ப்பூ’ என்று ஊதி, இரவு தூங்கி எழுந்த இமைகளாக ஒட்டியிருந்த சல்லாத் தாள்களைப் பிரித்து, முந்தைய நாள் தாளை சரக்கென்று கிழித்து, அதைக் கசக்கி சுருட்டி குறிபார்த்து தாங்கியில் எறிந்து, புதிய நாளின் ராசிபலனை சிவசாமி பார்த்தான். மகரத்துக்கு மேன்மை என்று இருந்தது. மேற்கே சூலம் என்றும், நயினார்கோவில் சௌந்திரநாயகி பல்லாங்குழி ஆடிவரும் திருக்காட்சி என்றும் சொல்லப்பட்டு இருந்தது. பல்லாங்குழி ஆடிவருவதா? எப்படி என்று பார்க்க வேண்டுமே என்று நினைத்துக்கொண்டான். ஐ-பாடில் கூகிளை அழைத்து, நயினார்கோயில் எங்கேன்னு கேட்டான். பரமக்குடி பக்கம்னு திசை காட்டியது.

  காயத்ரி ஜபத்தை முடித்து ஜன்னல் வழியாகப் பார்த்தான். பூத்துக் குலுங்கிய வேப்ப மரங்களிலிருந்து பட்சிகள் ஆர்ப்பரிக்க ஆரம்பித்திருந்தன. கூ..கூ.. என்று ஒரே டேக்கில் ஒரு பாட்டம் கூவி முடித்த குயிலைப் பார்த்து, சூப்பர் சிங்கர் ஜட்ஜாக, ‘ஏய்! குயில்! சூப்பர்மா! அட! அட! அட! அடா! எப்படித்தான் இப்படிக் கூவுறயோ, தெரியலே. அப்படியே மெய்மறந்து போயிட்டேன். சித்ராம்மா சொன்னா மாதிரி, சான்ஸே இல்லை. காட் ப்ளஸ் யூ என்று டெம்ப்ளேட் தீர்ப்பை வழங்கவில்லை. வழக்கமாகக் கிரீச்சிடும் பச்சைக் கிளி ஜோடிகளை அன்று காணவில்லை. இரண்டு காக்கைகள் யாருடைய தொண்டை கத்திக் கத்தி முதலில் வெளியே விழுகிறது பார்ப்போம் என்கிற ரீதியில், போட்டி போட்டுக்கொண்டு கூச்சலிட்டுக்கொண்டிருந்தன.

  ‘அடேய், சிவசாமி. நான் எழுந்தாச்சு, பல் தேச்சாச்சுடா? எங்கே இருக்கே?’

  பஞ்சாமியின் குரல் கேட்டவுடன், வைப்ரேட்டர் மோடில் அலாரம் வைத்த டயத்தில் சர்வாங்கமும் உதறும் ஆண்ட்ராய்டு ஃபோனாக சிவசாமி உசுப்பேறி, ‘இதோ வந்தேன் அண்ணா’ என்று உள்ளே பாய்ந்தான்.

  கூட்டில் மடக்கிவைத்த மூக்குக் கண்ணாடி போஸில் கட்டில் மேல் உட்கார்ந்திருந்தார் பஞ்சாமி. பெட்ரோல் பங்க்கில் தன்னுடைய டர்னை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ஆட்டோவாக, பிரம்மமே என்று உட்கார்ந்து இருந்தார். பஞ்சாமியின் பொறுமை பாற்கடலினும் பெரிது.

  பூக்காரி ஜாதி முல்லையை முழம் போடுவது போலத் தூக்கி, பின்னர் அடுத்த முழங்களை, மடக்கி மடக்கி குறைத்துக்கொண்டு வருவதுபோல, காபியின் வீழ்ச்சியைக் குறைத்து ஆற்றி, பஞ்சாமி குடிக்கும் சூட்டில் அவரிடம் பித்தளை டம்ளரை குடுத்தான்.

  விஸ்தாரமான ராக ஆலாபனையில் கையை ஜிலேபி சுத்துவதுபோல சுழற்றிச் சுழற்றி, அதன் நுணுக்கங்களைக் காண்பிப்பதுபோல பஞ்சாமி டம்ளரை சுழற்றி சுழற்றி காபியை அணுஅணுவாக ரசித்துக் குடித்தார்.

  ‘புதுப் பொடியாடா? காபி மணக்கிறதே? கள்ளிச் சொட்டு. என்னோட செல்லம்மா பாட்டி போடற காபிடா இது’.

  சிவசாமி தலையைச் சாய்த்து புகழ் மாலையை சூட்டிக்கொண்டான். ‘பொடி மாத்திரம் இல்லேண்ணா. பால் புதுசு, டம்ளர் புதுசு, ஃபில்டர் புதுசு, பாலைக் காய்ச்சின ஏனம் புதுசு’.

  ‘அடுப்பும் புதுசா?’ என்று பிரசன்ன வதனத்துடன் கிண்டலாகக் கேட்ட பஞ்சாமி, ‘இன்னிக்கு என்னடா புரோக்ராம்? யாரான வர இருக்கா? நாம போணுமா? மழை வேற வரா மாதிரி இருக்கே. ஆடி மாசமாச்சே காத்தே இல்லையே?’

  ‘நகரவைக்க சேலஞ்சா அம்மிகள் இல்லாததினாலே, ஆடிக் காத்து அடக்கி வாசிக்கிறது அண்ணா. மறந்துட்டேனே, காலம்பற கோபாலசாமி சார் போன் பண்ணினார்’.

  ‘எந்த கோபாலசாமிடா? சாமியார் மடத் தெருலே இருக்காரே அவர்தானே’.

  ‘ஆமாண்ணா. உங்களைப் பாக்கணுமாம். ஒம்பது மணிக்கு வரேன்னிருக்கார்’.

  சரியாக ஒன்பது மணிக்கு, கோபாலசாமி நீராவி இன்ஜினின் ஆர்ப்பாட்டத்துடன் வந்தார்.

  சிவசாமி கொடுத்த நீரை களக் களக் என்று குடித்து, அப்பனே ஜம்புகேஸ்வரா என்று குலதெய்வத்தை விளித்துவிட்டு, பஞ்சாமியையும் சிவசாமியையும் பரிதாபமாகப் பார்த்தார்.

  ‘புரியலே, சார்?’ என்றார்.

  பஞ்சாமி, சிவசாமியைப் பார்த்தார். சிவசாமி, கோபாலசாமியைப் பார்த்தார்.

  ‘புரியலை’ என்றார் பஞ்சாமி.

  ‘எப்படிப் புரியும்? நான் இன்னும் சொல்ல ஆரம்பிக்கவே இல்லையே?’ என்றார் கோபாலசாமி.

  இந்தச் சிறிய நகைச்சுவை இடைவெளியால் மூன்று சாமிகளின் ‘சம்மிட்’டின் இறுக்கம் சற்றே குறைந்தது.

  ‘என் பொண்ணு அங்கிதா சார். உங்களுக்குத்தான் தெரியுமே. லீவர்லே வேலை பாக்கிறா. நான் ஜென்மத்திலே வாங்கின சம்பளத்தை முதல் வருஷமே வாங்கியிருக்கா. அதோட போனஸ், டிராவல், லொட்டு லொஸ்குன்னு நெறய்ய்ய்ய தரா. கல்யாணம்தான் தள்ளிப்போறது. இப்போ ஒரு பையனை பாத்திருக்கு. ஜாடிக்கு ஏத்த மூடியா பொருத்தமா இருக்கு. ஒரே சப்ஜெக்ட், படிப்பு, ஸ்டேடஸ் எல்லாமே சூப்பர். சேர்ந்து நின்னா, மலேஷியா பெட்ரனாஸ் டவர்ஸ் மாதிரி ஜோரா இருக்கும். என்ன, இரண்டுக்கும் நடுவே லிங்க் கொடுக்கணும்’.

  ‘பின்னே என்னடா? மேளத்தைக் கொட்ட வேண்டியதுதானே?’

  ‘வாழ்க்கை அப்படி தைலதாரையா போயிடறதா? சிக்கல்டா?’

  ‘என்ன சிக்கல்? சிவசாமி, என்னவாடா இருக்கும்?’

  ‘தெரியலையே அண்ணா?’

  ‘தெரியலையா? ஏதான இட்சனி வித்தையா கரெக்டா சொல்லுவியே?’

  ‘இல்லேண்ணா. தெரியலே’.

  ‘போடா போ. சிவசாமியை விடு. கோபாலசாமி, நான் பாத்துக்கறேன்’.

  கோபாலசாமி எழுந்தார். ‘சிவசாமி உனக்கு அங்கிதாவைத் தெரியுமோன்னோ?’

  ‘நன்னாத் தெரியும் மாமா’.

  பஞ்சாமி குறுக்கே பாய்ந்தார். ‘இதுக்கு சிவசாமி எதுக்கடா. நான் பாத்துக்கறேன்’.

  ‘என்னடா? சிவசாமி? சரியா?’

  ‘அப்படியே ஆகட்டும் அண்ணா’.

  பதினைந்து நாள் கழித்து, கோபாலசாமி தன் மனைவியுடனும் கோபாலசாமியின் மாமனார் அண்ணாசாமி, அண்ணாதுரைசாமி, தம்பி ராமசாமின்னு குழுவாக பஞ்சாமி, சிவசாமியை அங்கிதாவின் கல்யாணப் பத்திரிகையுடன் கூப்பிட வந்து, வீடு பூராக ஒரே சாமிகளாக நிரப்பினார்கள்.

  சாமிகளின் புறப்பாட்டுக்குப் பிறகு, சிவசாமியை பஞ்சாமி ஏற இறங்க பார்த்தார்.

  ‘என்னடா? கல்யாணம் நடக்குமான்னு சந்தேகம். அங்கிதா பிடிகொடுத்து பேசமாட்டேங்கிறான்னெல்லாம் கோபாலசாமி சொல்லிண்டிருந்தானே. அப்புறம் மேட்டர் எப்படி சால்வ் ஆச்சு? பாலிலே நீ டிகாக்ஷன் விட்டியா?’

  சிவசாமி நெளிஞ்சான். ‘அப்படி ஒண்ணும் பெருசா செய்யலே. அது வந்து, அது வந்து, வந்து…’

  ‘அட! சொல்லுடா. அது என்னடா வந்து.. வந்து.. வந்து..’

  ‘வந்து இல்லேண்ணா. அவன் பேரு நந்து. கோபாலசாமி சொன்னாப்போல ரெண்டு பேர் பேலன்ஸ்ஷீட்டும் டாலி ஆச்சு. ஆனா..’

  ‘பேலன்ஸ்ஷீட்டா? அது எங்கடா இங்கே வந்தது? அது சாட்டர்டு அக்கௌண்டண்ட்டுகளோட சமாசாரம்னா?’

  ‘சரியாச் சொன்னேள் அண்ணா. எல்லாம் சரியா இருந்தாலும், அவ சொன்னது எனக்கு சில்லியாப் பட்டது. சி.ஏ. பரீட்சையை அவ முதல் அட்டெம்ட்டிலேயே பாஸ் பண்ணினவளாம். நந்து ரெண்டாவது அட்டெம்ட்டிலதான் பாஸ் பண்ணி இருந்தானாம். ‘லெவல் ஒரு டிகிரி குறைவுதானே அங்கிள்னு?’ என்னைக் கேட்டா’.

  ‘என்னடா இப்படி ஒரு சிந்தனையா?’

  ‘சும்மா விடுவேனா? ‘அப்படி எடுத்துக்கக் கூடாதும்மா. சி.ஏ.ல பாஸாகறது சாமானிய விஷயம் இல்லே. சி.ஏ. படிச்ச உனக்கே அந்த அரதப் பழைய ஜோக் தெரியுமே. Jesus never fails-னு சொல்றாங்களே. Jesus சி.ஏ. பரீட்சை எழுதிப் பார்த்தா தெரியும்னு. அதை விடு. நீ பாஸ் பண்ணின வருஷம் உனக்கு சந்தர்ப்பங்கள் சாதகமா இருந்திருக்கலாம். நந்து எழுதினபோது அவனுக்கு ஜுரம் வந்திருக்கலாம். டூவீலர்லே எக்ஸாம் ஹால் போகும்போது நிறுத்தி போலீஸ் தண்ணி காட்டி இருக்கலாம். கிரிக்கெட் ஆடி அடிபட்டிருக்கலாம். அதான் அடுத்த வருஷம் பாஸ் பண்ணிட்டு இப்போ ஊரைக் கொளுத்தறானே? அது போறாதா? படிப்பு பாஸெல்லாம் வேலைக்கு சேர்ந்தப்பறம் பெருசா தோணாது. முதல் பிரசவம் தப்பிப் போய் இரண்டாவதா பிறந்த குழந்தை இளைச்சதுன்னு ஆயிடுமா? இதை எல்லாம் பெருசு பண்ணாதேம்மா. இது என்னோட ஆங்கிள். அட்வைஸ்னு சொல்லமாட்டேன். இதையே நான் உன்னை அண்ணாந்து பாத்துதான் பேசறேன். நீ அஞ்சடி ஆறங்குல புத்திசாலி ஆச்சே. நல்ல முடிவா எடு’ன்னு சொன்னேன்’.

  ‘சூப்பர்டா, சிவசாமி. நீ மேரேஜ் கௌன்சலிங் சர்வீஸ் ஆரம்பிக்கலாம்டா’.

  ‘நானா? இந்தக் கட்டை பிரம்மசாரியா?’

  ‘அவங்களுக்குத்தான் நாலும் தெரிஞ்சிருக்கும். இன்னும் தெரிஞ்சிண்டே இருக்கும். என்னைப் பாரு..’

  ‘அடப் போங்கண்ணா. சாயந்திர டிபன் சப்போட்டா புட்டிங், ஆலு டிக்கி. கொண்டு வரட்டுமா அண்ணா’.

  ‘என்ன கேள்விடா. கொண்டா கொண்டா, ஃபாஸ்ட் டிராக்கிலே கொண்டா’.

  *

  kattana sevai