சாவித்ரி - 21. கண்ணம்மா!

ஏவி.எம். என்னை வைத்து செல்லப்பிள்ளை படத்தை ஐந்து ஆண்டுகள் எடுத்தார்.‘உனக்காக ஒரு கதை வைத்திருக்கிறேன் அம்மா! அதில் நீ தான் நடிக்க வேண்டும்’என்று கேட்டுக் கொண்டார்.

ஏவி.எம். என்னை வைத்து செல்லப்பிள்ளை படத்தை ஐந்து ஆண்டுகள் எடுத்தார்.

‘உனக்காக ஒரு கதை வைத்திருக்கிறேன் அம்மா! அதில் நீ தான் நடிக்க வேண்டும்’என்று கேட்டுக் கொண்டார். அந்தப் படம் களத்தூர் கண்ணம்மா - சாவித்ரி.

சாவித்ரியின் மிக முக்கியமான வெற்றி முத்திரை களத்தூர் கண்ணம்மா. தாயான பிறகும் சாவித்ரிக்கு தமிழ் சினிமாவில் மிகப் பெரிய திருப்பத்தை ஏற்படுத்திய படம்.  கண்ணம்மா பற்றி இத் தொடரில்  எதையும் இதுவரை நான் எழுதவில்லை. ஏனோ அதன் திரைக்கதையும் அதில் இடம் பெற்றப் பாடல்களும் சாவித்ரியின் வாழ்வும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தது போல் காட்சி தருகின்றன.

‘அருகில் வந்தாள் உருகி நின்றாள் அன்பு தந்தாளே
அமைதி இல்லா வாழ்வு தந்தேன் எங்கு சென்றாளோ...
பிரிவாலே மோதும் துயர் போதும் போதுமே’

ஏ.எம். ராஜாவின் குரல் காற்றில் அலை மோதும் போதெல்லாம் அதில் ஒலிக்கும் ஒவ்வொரு சொல்லிலும் சாவித்ரி குறித்த வலுவானதொரு சோகம் நெஞ்சை அழுத்துவதாகத் தோன்றும்.

மலரே மலரே நீ யாரோ வஞ்சனை செய்தவர் தான் யாரோ
உன்னைச் சூடி முடித்ததும் பெண் தானோ பின் தூக்கி எறிந்ததும் அவள் தானோ
இதயம் என்பது ஒரு வீடு அன்றும் இன்றும் அவள் வீடு
அது மாளிகை ஆனதும் அவளாலே பின் மண் மேடானதும் அவளாலே.
சினிமாவுக்காக எழுதப்பட்ட அந்தப் பாடலுக்கும் ஒரு சரித்திரம் உண்டு.

பிரிவுத்துயரை வலியுறுத்திக் கூற கண்ணதாசனின் நாவிலிருந்து கொட்டிய பல்லவிகள் மொத்தம் 58.  தெலுங்கு மொழி பேசும் டைரக்டர் பிரகாஷ்ராவுக்கு அதில் ஒன்றைத் தேர்வு செய்யும் அளவு தமிழறிவு கிடையாது. களத்தூர் கண்ணம்மாவை தொடக்கத்தில் இயக்கியவர் அவரே. பின்னர் ஏ. பீம்சிங் தொடர்ந்தார்.

58லிருந்து மிகச் சிறந்த எட்டு பல்லவிகளைக் கொண்டு முழுப்பாடல் உருவானது. எனக்குத் தெரிந்து  அனு பல்லவி, சரணம் எதுவுமின்றி பல்லவிகளால் நிரப்பப்பட்ட ஒரே  பாடல் ‘அருகில் வந்தாள்’ மாத்திரமே என்று நினைக்கிறேன்.

ஏவிஎம். ஸ்டுடியோ மாந்தோப்பு. களத்தூர் கண்ணம்மா ஷூட்டிங். ஜெமினியும் சாவித்ரியும் ‘கண்களின் வார்த்தைகள் புரியாதோ’ என்று ஆனந்தமாக டூயட் பாடிக் கொண்டிருந்தார்கள். அங்கு ஏவி.எம். சரவணன்  சென்றார்.

‘வாங்க சரவணன்... யார் இந்த பாலமுருகன்...? ’

‘டெய்சி ராணிக்குப் பதிலா அப்பச்சி இந்தப் பையனை ஓகே பண்ணிருக்காங்க. ’

நாயகன் - நாயகி இருவரும் வாஞ்சையோடு சூட்டிகையான கமலை முதன் முதலாகப் பார்த்தார்கள்.

அப்படியோர் அழகு பாலகன் தங்களுக்கு இன்னும் வந்து பிறக்கவில்லையே...  ஏழுமலையான் இன்னமும் அந்த பாக்கியத்தை வழங்கவில்லையே என்கிற ஏக்கம் ஜெமினி- சாவித்ரியின் முகங்களில் மேக் அப்பை மீறி வெளிப்பட்டது.

‘உங்களுக்கும் பிடிச்சிருந்தா இவனையே படத்துல நடிக்க வைக்கலாமான்னு அப்பச்சி கேட்டாங்க. ’ என்றார் சரவணன்.

எஸ்.பி. முத்துராமனின் தோள்களில் ஒய்யாரமாக அமர்ந்திருந்த கமல், நட்சத்திரத் தம்பதிகளுக்கு வணக்கம் சொன்னார்.

60களில் டெய்சி ராணியை விட்டால் சிறப்பாக நடிக்க அகில இந்தியாவிலும் வேறு சிறுமி இல்லை என்கிற நிலைமை. யார் பையனில் ஜெமினி - சாவித்ரி ஜோடி திகட்டத் திகட்ட அவளோடு நடித்திருந்தது.

டெய்சி ராணிக்கு மாற்றாக கமலைத் தேர்வு செய்யும் பொறுப்பும் கடமையும் ஏவி.எம். செட்டியார் மூலம்  அவர்களைச் சேர்ந்தது.

‘இந்தப் பொடியன் ஜோரா... நல்லா இருக்கானே. சாவித்ரி இந்தா உன் பிள்ளையை வாங்கிக்க. ’என்றவாறே ஜெமினி கை நீட்ட  கமல் எஸ்.பி. முத்துராமன் தோள்களிலிருந்து இடம் மாறினார். கமலை இடுப்பில் வைத்துக் கொண்டு ஜெமினியும் சாவித்ரியும் தனித் தனியே ஸ்டில் செஷனில் பங்கேற்றார்கள்.

‘படிக்கிறியா...  ரைம்ஸ்லாம் சொல்வியா...?’ வண்ணக் கோலமாகப் பளிச்சிட்ட  துறுதுறு மழலையிடம் குசலம் விசாரித்தார்கள். அதற்காகவே காத்திருந்தாற் போல் உடனடியாக குட்டி கமல் அபிநயங்களோடு பாட ஆரம்பித்தார்.

Goosey Goosey Gardner
whither shall you wander
upstairs and downstairs
and in my lady's chambers

‘சமத்துக்குட்டி என் சர்க்கரைக் கட்டி’ என்று சாவித்ரி பரவசமாகி கமலை முத்தமிட்டார். உடனே ஜெமினி தமிழில் அந்த நர்ஸரி பாடலை பாடி ஆடினார்.

‘வாத்து வாத்து வாத்து
எங்கே போறே வாத்து
மேலே கீழே கீழே மேலே
துரைசானி அம்மா ரூம்லே! ’

தமிழ் சினிமாவில் ஜெமினி - சாவித்ரி ஏற்றி வைத்த இன்னொரு ஒளி விளக்கு கமல்ஹாசன்! களத்தூர் கண்ணம்மாவில் ஜெமினியை விட வலுவான ரோலும் விளம்பரமும்  தேசிய விருதும் கமலுக்குக் கிடைத்தது.

கமலுடனான நேசம் குறித்து சாவித்ரி-

‘நாம் பாடுவதையும் பேசுவதையும் அப்படியே இமிடேட் செய்யும் சாமர்த்தியம் கமலுக்கு உண்டு. அந்த மழலைப் பருவத்தில் என்னையும் அவரையும் மாமா - மாமி என்று கூப்பிட்டுக் கொண்டு ரொம்ப ஆசையாகப் பழகுவான்.

டான்ஸ் மாஸ்டராக இருந்த போதும் முக்கிய வேடங்களில் நடிக்கத் தொடங்கிய நேரத்திலும் என்னை அடிக்கடி வந்து பார்ப்பார். சிகப்பு ரோஜாக்களுக்காக பிலிம் ஃபேர் அவார்டு வாங்கிய சமயம் நான் அவரைப் பாராட்டினேன்.

என்னுடைய திரை உலக வாழ்க்கையில் என்னுடனே வளர்ந்து முன்னுக்கு வந்த ஒரு மகனாகவே கமலை எனக்கு நினைக்கத் தோன்றுகிறது. ’

ஏவி.எம்மின் களத்தூர் கண்ணம்மா சாவித்ரியின் அற்புத நடிப்புக்கான அட்சயப் பாத்திரம். அதில் நடிக்கும் போது நடந்த சம்பவங்கள் பற்றி எஸ்.பி. முத்துராமன்.

‘சாவித்ரி அம்மா வீட்லருந்து பர்ஸ்ட் கிளாஸ் சாப்பாடு தினமும் வரும். சாவித்ரி அம்மாவே தன் கையால  பரிமாறிடுவாங்க. ஹோம்லி அட்மாஸ்பியர் ஏவி.எம்ல இருக்கும். ’

அதுல ஒரு சீன். குழந்தை இறந்துட்டதாகச் சொல்லி அடக்கம் செய்துட்டதா சாவித்ரியோட அப்பாவா வர, எஸ்.வி. சுப்பையா டயலாக் பேசுவார்.

அப்ப சாவித்ரி, ‘எல்லாரும் குழந்தை பிறந்தா இனிப்பு தருவாங்க. நீங்க செத்த குழந்தைக்கு இனிப்பு கொடுங்கன்னு சொல்லி, அழுது சிரிச்சி எமோஷன் ஆகி மயக்கம் போட்டே விழுந்துட்டாங்க. ’

சாவித்ரிக்கு, செகன்ட் ரவுண்டில் கிடைத்த புதிய ஜோடி மேஜர் சுந்தர்ராஜன். சூரிய காந்தி, ஜக்கம்மா, மஞ்சள் குங்குமம், தாய்க்கு ஒரு பிள்ளை, வீட்டுமாப்பிள்ளை, அக்கரைப் பச்சை என சாவித்ரி நடித்தவை நன்றாக ஓடின.

மீண்டும் சாவித்ரிக்கு நல்ல காலம் பிறந்து விட்டது. அம்மா வேடங்களில் அவர் உச்சம் தொடலாம், இழந்ததை  ஓரளவு மீட்டு விடலாம் என்கிற நிலைமை.

ஆனால் சாவித்ரி தன் வெற்றிகளைத்  தக்க வைத்துக்கொள்ளவில்லை. நடிப்பை விட மதுவுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்தார். எத்தனை குடித்தாலும் ஜெமினியை மறக்க முடியாமல் தவிப்பு கூடியது. இருதயத்தின் வெற்றிடம் அதிகரித்தது. மனத்துக்கு அரிதாரம் தேடி மாய்ந்து போனார்.

பட்டாம்பூச்சி படம் மூலம் ஹீரோ அந்தஸ்து பெற்ற கமலுக்கு  காதல் இளவரசன் பட்டம் கிடைத்தது. கமல் ப்ளே பாயாக கோலிவுட்டில் புகழ் பெற்ற நேரம்.

சாவித்ரி தொடர்ந்து குடித்து விட்டு வந்தாலும் பரவாயில்லை என்று,  முக்தா சீனிவாசன் மேஜரையும் சாவித்ரியையும்  நாயகன் - நாயகியாக நடிக்க வைத்துத் துணிச்சலாக உருவாக்கிய படம் அந்தரங்கம். கமலும் தீபாவும் அதில் கவர்ச்சி காட்டும் இளஞ் ஜோடிகள்.

கமல் முதன் முதலாக ‘ஞாயிறு ஒளி மழையில்’ என சொந்தக் குரலில் பாடிய படம். தீபா அதில் செக்ஸ் பாம் ஆக அறிமுகம் ஆனார். ஐம்பது நாள்களுக்கு மேல் ஓடியது. எமர்ஜென்சி காலத்தில்  1975ல் அதுவே அதிகம்.

மேஜருடன் நிழலாக இணை சேர்ந்த பின்னும் ஜெமினி கணேசனை  ‘இதயத்தில் நீ! ’ என்று  நெஞ்சுக்குள் நினைத்து உருகிக் கொண்டிருந்தார் சாவித்ரி. அதை நிருபித்தது சேலத்தில் நடைபெற்ற ‘அந்தரங்கம்’ சினிமா ஷூட்டிங்- லன்ச் பிரேக் நிகழ்வு.

சாவித்ரி கமலுக்கு நிஜமாகவே சோறு ஊட்டி விட்டார். நடிகையர் திலகத்தின் கண்கள் கலங்கின.

‘அப்பா மாதிரியே ஆயிடாதேடா. இப்ப ஒன்... டூ... த்ரி சொன்னா அப்பா வர மாட்டாருடா. ’ என்றார் சாவித்ரி.

களத்தூர் கண்ணம்மாவில் நான் உணவருந்தும் போது ஒன்... டூ... த்ரி... சொல்லுவேன். அப்போது கண்ணம்மாவுக்கு காதலன் ஞாபகம் வரும். படத்தில் ஜெமினி மாமா உருவம் தோன்றி மறையும். சாவித்ரி அம்மா அந்த ஒரு நிமிடம் கண்ணம்மாவாகி விட்டார்கள்.

என்னை கதி கலங்க வைத்த சம்பவம் அது!  -  ‘உறங்கும் உண்மைகள்’  முதல் அத்தியாயத்தில் கமல். (பொம்மை - ஜனவரி 1977)

சுழி!

ஏறக்குறைய  சாவித்ரியின் தனிமை வாழ்க்கையைப் பிரதி எடுத்தாற் போல் அமைந்த மலையாளச் சித்திரம் சுழி. பூனா திரைப்படக் கல்லூரி மாணவர்களின் படைப்பு.

கணவரால் குடிக்கு அடிமையாகும் எஸ்டேட் அதிபர் எலிசெபத் வேடத்தில் சாவித்ரி. அவரது ஒரே பெண் ரோசி - சுஜாதா. அவள் ஒரு தொடர்கதை கவிதாவாக- சுஜாதா தமிழர்களுக்கு அறிமுகமாகாத காலம்.

மதுப்பழக்கத்தால் விதவைத் தாய் இளம் எஸ்டேட் மானேஜரிடம் தன்னை இழந்து மூன்று மாதம் முழுகாமல் இருக்கிறாள். அம்மாவின் சிநேகிதரான குடிகார மேனஜரைத் திருத்த மகளும் அவனிடம் கற்பைத் தொலைக்கிறாள். அம்மா சாவித்ரி தற்கொலை செய்து கொள்ள, மகள் சுஜாதா கடைசியில் கன்னியாஸ்திரி ஆகிறார்.

சுழியில் சாவித்ரி பங்கேற்ற ஆபாசமான படுக்கையறை, மற்றும் நீச்சல் குளக் காட்சிகள் சென்சார் போர்டை நெளிய வைத்தன. நடிகையர் திலகத்தின் முதல்  ஏ சினிமா,  தடை செய்யப்பட்ட முதல் தென் இந்தியப்படம் என்கிறப் புகழ் சுழிக்குக் கிடைத்தது.

‘நான் நடித்த ஒரே மலையாளப் படம் சுழி. அந்த கேரக்டர் எனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. படம் வெளி வந்த போது சில ஷாட்டுகள் எனக்குப் பிடிக்காமலும் இருந்தன. அவற்றில் இருப்பது நானா என்று கூடச் சந்தேகமாக இருந்தது. ’-சாவித்ரி.

சாவித்ரி என்றால் சகலருக்கும் இளக்காரமாகி விட்ட சூழல். பட்டத்து யானை சோம பானச் சாக்கடையில் விழுந்து விட்டதே என்கிற அவமரியாதை!  சுழிக்குப் பிறகு அத்தகைய சூழ்ச்சிகள் அதிகமானது.

‘முதல்ல மஞ்சள் காமாலை வந்து இளைத்தேன். அடுத்து ஃப்ளூ ஜூரத்தால முன்னை விடத் துரும்பா போய் இருக்கேன். இளைச்சிப் போனாலும் சாவித்ரிக்கு என்னமோ வியாதின்னு ஒரு வதந்தியைப் பரப்பறாங்க. இந்த மாதிரி வம்பு கிளம்புற இடம் எது தெரியுமா ?

மாம்பலம் பாண்டிபஜார்தான். ரொம்ப மோசமான இடம்! ’

ஒரே நேரத்துல ஜூபிடரோட கற்புக்கரசி, தங்கப்பதுமை, அரசிளங்குமரி ஷூட்டிங் நெப்டியூன் ஸ்டுடியோல நடந்துருக்கு. எங்க செட்ல லைட்டிங் நடக்குது. ஆர்ட்டிஸ்டுக்கு வேலை இல்லன்னா பக்கத்து ஃப்ளோர் போவோம். அங்கே பப்பி- சிவாஜி அண்ணன் நடிச்சிட்டு இருப்பாங்க. அவங்க நடிக்கிறதை பார்த்துட்டு இருப்போம். ரொம்ப அற்புதமா இருக்கும்.

இப்ப அந்த மாதிரி பக்கத்துல நடக்கிற படப்பிடிப்புக்கு போனா, சாவித்ரி சான்ஸ் கேட்டு வந்து நிக்கிறான்னு நினைக்கிறாங்க.

ஒரு நாள் திடீர்னு  தயாரிப்பாளர் ஒருத்தர், ஸ்டன்ட் படம் ஒண்ணு எடுக்கப் போறேன்... நடிக்கிறீங்களா...? ன்னு கேட்டார். நானே முன் கோபக்காரி. எனக்குக் கோபம் வரக் கேட்கவா வேணும்!

‘என்னைப் பார்த்து இந்தக் கேள்வியை கேக்கறதுக்கு உங்களுக்கு என்ன தைரியம்? இந்த மாதிரி ரோலுக்கு விஜயலலிதா, ஜோதிலட்சுமி இருக்காங்களே... போட்டுக்குங்க என்று சொல்லி, ஒரு கப் காபி கொடுத்து அனுப்பி வைத்தேன். ’ சாவித்ரி.

பிரிவுக்குப் பின்னர் ஜெமினியைப் பற்றி சாவித்ரி, தன்னிடம் ஏதும் விசாரித்தது கிடையாது என்று ஆரூர் தாஸ் எழுதியிருக்கிறார்.

ஆனால் ஜெமினியால் வாழ்வு பெற்ற மேக் அப் மேன் சுந்தர மூர்த்தியின் கூற்று வேறு விதமாக உள்ளது.

‘சாவித்ரி எப்ப என்னைப் பார்த்தாலும் அய்யா எப்படி இருக்காரு...? ’ன்னு விசாரிப்பாங்க.  எனக் கூறியுள்ளார்.

திருமாலின்  பரி பூரண அருளாலேயே தனக்கொரு ஆண் வாரிசு அமைந்தது என்பது ஜெமினி -சாவித்ரியின் திடமான முடிவு. மகன் சதீஷ்  பிறந்த வைபவத்தைக் கொண்டாடும் விதமாக திருப்பதி ஏழுமலையானுக்கு கல்யாணம் செய்து கண் குளிர கண்டார்கள் காதல் மன்னனும் நடிகையர் திலகமும்.

தனது நேர்த்திக் கடனாக முப்பது பவுனில் பெருமாளுக்கு காசு மாலை செய்தார். அது எப்போதும் பாலாஜியின் தெய்வீக ஸ்பரிசத்தில் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காக மூவாயிரம் ரூபாயை கோயில்  கட்டணமாக வழங்கினார் சாவித்ரி.  (ஆனந்த விகடன் 6.2.1966)

நடிப்போடு ஆத்ம சுத்தியுடன் பகவத் சேவையில் ஈடுபட்ட சாவித்ரியை விடாமல் சஞ்சலங்கள் துரத்தின. முக்தா பிலிம்ஸ் ‘அந்தரங்கம்’   வெற்றி பெற்றும் அடுத்த வாய்ப்பு வருடக் கணக்கில் வரவில்லை. காரணம் பிரதமர் இந்திரா காந்தியின் அவசர நிலை பிரகடனம் அமுலில் இருந்தது. சென்சார் போர்டு கெடுபிடிகளை அதிகப்படுத்தியது.

இளையராஜாவின் இசையில் வெளியான அன்னக்கிளி, பத்ரகாளி தவிர, எம்.ஜி.ஆர். சிவாஜி படங்களும் எதிர்பார்த்த வசூலை பெற முடியாமல் போனது.

அரசியலை மட்டுமல்லாமல் சினிமாவையும் சீரழித்த கருப்பு ஆண்டு 1976.  அதன்  இறுதி மாதங்களில் சாவித்ரி  மேடையில் நடித்து வயிறு வளர்க்க வேண்டிய கொடிய வறுமையில் அவதியுற்றார்.

‘மனைவி அமைவதெல்லாம்’ பிரபல கதாசிரியர்  ‘தேவர் பிலிம்ஸ் மாரா’ எழுதிய நாடகம். சாவித்ரியுடன் அவரது மகன் சதீஷ் மற்றும் ஜெமினி மகாலிங்கம் (ஜெமினி கணேசனின் அந்தரங்கக் காரியதரிசி) ஜெமினி ராஜேஸ்வரி (நிறம் மாறாத பூக்கள் படத்தில் ‘சுதாகரு... சுதாகரு’ என ஹீரோவைத் துரத்தும் நடிகை) ஆகியோரும் நடித்திருந்தார்கள்.

‘வட்டத்துக்குள் சதுரம்’ மகரிஷியின் கதை. லதாவும் சுமித்ராவும் தோழிகளாக நடிக்க, எஸ்.பி. முத்துராமன் இயக்கிய படம். சாவித்ரி கஷ்டப்படுவதாக கேள்விப்பட்ட எஸ்.பி.எம்.  ஒரு துணை நடிகையின் வேடத்தை சாவித்ரிக்குத் தர  முடிவு செய்தார்.

‘நாலு நாள் வேலை. எஸ்.பி. எம். நீங்க நடிக்கணும்னு விரும்பறார்’ என தயாரிப்பாளர் சாவித்ரியிடம் சொன்னார். ஷூட்டிங்கு வந்த உடனேயே அவருக்கு செக் கொடுத்தார்கள். சாவித்ரி அதை வாங்க மறுத்து பணமாகக் கேட்டார்.

அதைப் பெற்றுக் கொண்டவர் உணர்ச்சி வசப்பட்டு அழுதார்.

‘இந்தப் பணத்தை இப்ப நான் வாங்கலைன்னா நாளைக்கு என்னை நான் குடியிருக்கிற வீட்டை விட்டுத் துரத்தி இருப்பாங்க. சாமான்லாம் தூக்கி போட்டு இருப்பாங்க’ என்று தேம்பினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com