சரோஜா தேவி: 7. கோபால்...!

1963ல்  எம்.ஜி.ஆர்.-சரோ - தேவர் பிலிம்ஸ் கூட்டணியில் மற்றுமோர் 100 நாள்  வெற்றிச் சித்திரம் நீதிக்குப் பின் பாசம்.

1963ல்  எம்.ஜி.ஆர்.-சரோ - தேவர் பிலிம்ஸ் கூட்டணியில் மற்றுமோர் 100 நாள்  வெற்றிச் சித்திரம் நீதிக்குப் பின் பாசம்.

அதில் புரட்சி நடிகர் நிஜமாகவே ஒரு  வாத்தியார் என்பதை நிருபித்திருப்பார். சரோவுக்கு  சைக்கிள் கற்றுத்  தரும் கட்டத்தை, 

கண்ணதாசன்  சுவையான வார்த்தைகளில் டூயட்டாக வடிவமைத்தார்.

'அக்கம் பக்கம் பார்க்காதே ஆளைக் கண்டு மிரளாதே

இடுப்பை இடுப்பை வளைக்காதே ஹாண்டில் பாரைப் போடாதே’

பாடலைக் கேட்கும் யாருக்கும்  மிதி வண்டி ஓட்டக் கற்றுக் கொண்ட முதல் நாள் நிச்சயம் நினைவுக்கு வரும்.

எம்.ஜி.ஆர். ரசிகர்களின் மதிப்புக்குரிய அண்ணி சரோ.  அநியாயத்துக்கு பிஸி. அவரது தாயார் ருத்ரம்மா மகளின் நட்சத்திர வாழ்க்கையை கால்ஷீட்டுகளாகக் கணக்கிட்டார்.

முதன் முதலில்  வண்ணப்படங்களை யார் எடுத்தாலும் சரோவே நடிக்கவேண்டும் என அடம் பிடித்தனர்.

சரோ தேவர் பிலிம்ஸின் பிரியசகி. ஜனவரி 7ஆம் தேதி அவரது பிறந்த நாள். தேவர்  சரோவுக்குக் கனகாபிஷேகம் செய்யாத குறையாக பொற்காசுகளால் வாழ்த்தி விட்டு வருவார்.

சரோ வசித்ததால் அடையாறு  காந்தி நகர் தமிழ் சினிமாவின் தலையெழுத்தை தீர்மானிக்கும்  திரை பீடமாகப் புகழ் பெற்றது.

தேவர்  வேட்டைக்காரனுக்காக எம்.ஜி.ஆர் உள்பட வழக்கமான எம்.ஆர். ராதா, நம்பியார், அசோகன் தேதிகளை மொத்தமாக வாங்கிவிட்டார். சரோ மட்டுமே பாக்கி. நம்பிக்கையின் சிகரமாக  சரோவின் இல்லத்துக்குள்  நுழைந்தார்.

ருத்ரம்மா விடம்  'வேட்டைக்காரன் 1964  பொங்கல் ரிலீஸ்’  என்ற படியே பேச்சு வார்த்தையைத் தொடங்கினார்.

'முன்னே மாதிரி ஒரேயடியா கொடுக்க முடியாதுங்க. பாப்பா  ராத்திரி பகலா வேல செஞ்சாலும் போதல. ’

தேவர் அதை சட்டை செய்யவில்லை. எல்லோரிடமும் சொல்வது தனக்கு ஒத்து வராது. சரோவைப் பொறுத்தவரையில் அவர்  ஸ்பெஷல் என்கிற எண்ணம். 

'எம்.ஜி.ஆரின் கால்ஷீட்டை நான் வீணாக்க முடியாதேம்மா... ’ என்றார்.

'நாகிரெட்டி,ஜி.என்.வேலுமணி, எம்.ஜி.ஆர். மேனேஜர் வீரப்பா, ராமண்ணா இவங்களும் காத்திருக்காங்க.  நீங்கமட்டும் மொத்தமா கேட்டா எப்படி? ’

தேவர்   திடுக்கிட்டார். எல்லோருக்கும் ஒரே  தராசா?

தேவரை ருத்ரம்மா  மதிக்காமல் அலட்சியப்படுத்துவதா...  அத்தனை தூரத்துக்கு வந்து விட்டாரா?

மறவன் ரத்தம் உச்சி மண்டையில் பாய்ந்தது.

வெற்றுக் காசோலைகளால்  உழைக்கும் கலைஞர்களின் வயிற்றில் அடிக்கும் தயாரிப்பாளர்களுக்கு நடுவில் தேவர் வேடந்தாங்கல்.

எடுத்த எடுப்பில் குதிரை, நாய்களுக்கும் மொத்த சம்பளத்தையும்  முன் பணமாகவே கொடுத்து விரட்டி வேலை வாங்குவது  தேவர் ஸ்டைல். அவருக்கு ஆத்திரம் வராமல் இருந்தால் மாத்திரமே ஆச்சர்யப்பட வேண்டும்.

அதிலும் சரோ  அரை டஜன் படங்களுக்கும் மேல் தேவர் பிலிம்ஸில்  அரிதாரம் பூசியவர். தேவரின் ஒவ்வொரு அசைவுக்கும்   ஆயிரம் அர்த்தங்கள் அறிந்தவர். அவரும் வேடிக்கை பார்க்கிறாரே...

‘எம்.ஜி.ஆர். ஒதுக்கின நாள்ள சரோஜா வந்து நடிக்குமா, இல்லையா...? ’

தேவர்  ஓர் எஜமானராக உள்ளுக்குள்  சுயமரியாதைச் சுடர் எரிய  நின்றார்.

‘இப்படிப் பேசினா எம் பொண்ணு உங்க படத்துல நடிக்காது. ’ ருத்ரம்மா எரிமலைக்குள் கற்பூரத்தை எறிந்து விட்டார்.

‘உங்க மக என் படத்துல நடிக்கணுமா வேணாமான்னு நீங்க முடிவு பண்ணக் கூடாது. அதைத் தீர்மானிக்க வேண்டியவன் நான். ’

அங்கவஸ்திரத்தை ஆவேசமாக  இழுத்துப் போர்த்திக் கொண்டு புயலாகப் புறப்பட்டார் தேவர்.

 சினிமா காட்சி போல் சரோ ஓடி வந்து தடுத்தார். அதைச் சட்டை செய்யாமல் கார் வெளியேறியது.  

தெய்வத்தாய் ஷூட்டிங்கில் நடந்த  இனிப்பு விஷயம், சரோவின் சர்க்கரை வார்த்தைகளில்:

படப்பிடிப்பு நாள்களில் சாயந்தரமானா  எம்.ஜி.ஆர். அண்ணனே டிபன் வரவழைப்பார். அதுல ஸ்பெஷல் ஐட்டமா இருக்கிறது பாஸந்தி. அண்ணன் பாஸந்தியை விரும்பிச் சாப்பிடுவார். அப்ப நான் ரொம்ப ஒல்லியா இருப்பேன். எங்கிட்டே ‘சரோஜா, பாஸந்தி சாப்பிடு. உடல் கொஞ்சம் பூசினாப்பல வரும். ’ என்பார்.

‘இல்லண்ணே... உண்டாகிற உடம்பு இயற்கையா உண்டாகட்டுமே... ’ என்பேன்.

 அன்னிக்கு ‘ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்’ பாடல் சீன் எடுத்தாங்க.  அதுல எம்.ஜி.ஆர். அங்கங்கே என்னை அலாக்கா  தூக்கி வைப்பார்.  அத்தனை ஒல்லியா இருந்தேன். அதனாலதான் உடம்பில் கொஞ்சம் சதை போடட்டுமேன்னு கரிசனத்தோட கேட்டிருந்தார்னு புரிஞ்சிக்கிட்டேன். ’-சரோஜாதேவி.

தெய்வத்தாய் சினிமா விமர்சனத்தில் ஆனந்த விகடன் எழுதியவை,  சரோ - எம்.ஜி.ஆர். ஜோடியை ஒவ்வொரு பாராவிலும் உச்சி குளிர வைத்தது. 

மாணிக்கம் - -: எம்.ஜி.ஆரைப் பற்றிச் சொல்லுப்பா!

முனுசாமி - : தெய்வத்தாயில் எம்.ஜி.ஆர். பிரமாதமா இங்கிலீஷ் டான்ஸ் ஆடியிருக்கார் பார்த்தியா? ஏன் நடிப்புக்கும் தான் என்ன குறைச்சல்?தனக்குக் கல்யாணம் ஆன மாதிரி சரோஜாதேவியோட நாடகம் ஆடறாரே, அந்த சீன்லே  சிரிப்பை அடக்க முடியலே!

மாணிக்கம் - : அந்தக் காட்சி மட்டுமா, முதல்லருந்தே  ஸ்கூட்டர் மாறிப் போறதும், போன்ல ரெண்டு பேரும் பேசிக்கறதும்  ‘பார்க்லே’ சந்திக்கிறதும் எல்லா  காட்சிகளும் நல்லாத்தான் இருந்தது.

முனுசாமி : - சரோஜாதேவியும் குறும்புக்கார பொண்ணா நல்லா நடிச்சிருக்காங்க. வெடுக்குப் பேச்சும், துடுக்குத்தனமும், பாட்டி மாதிரி இருமி நடிக்கிறதும் ரொம்ப ஜோர்.

‘இந்தப் புன்னகை என்ன விலை, வண்ணக்கிளி சொன்ன மொழி’ ரெண்டு டூயட்டும் கேட்க சுகமாயிருந்தது. எனக்கு ரொம்பப் பிடிச்சது.’

------------------சமீபத்தில் சென்னையின் பிரபலமான பள்ளி  ஒன்றில் நடந்த பல்சுவை நிகழ்ச்சிகளில் ‘கனெக்ஷன்’ என்கிற விளையாட்டும் ஒன்று.  அதில் மூதறிஞர் ராஜாஜியின்  முழு பெயரைக் கண்டு பிடிப்பதற்காகக்  திரையில் காட்டப்பட்டவை  சீட்டாட்ட ராஜா, புதிய பறவை சிவாஜி, சேலை ஆகியன.

இமை மூடித் திறக்கும் நொடி நேரத்துக்குள் மாணவிகள் மிகச் சரியாக ராஜாஜியின் திருநாமத்தை ‘ராஜ கோபாலச்சாரி’ என்று கண்டுபிடித்துச் சொன்னார்களாம்!

நீதிக்குப் பின் பாசம் படத்தில் கூட எம்.ஜி.ஆர். பெயர் கோபால்.

‘வாங்க வாங்க கோபாலய்யா வழக்கு என்ன கேளுங்கய்யா... ’  என்று சரோவே நாயகனை வரவேற்றுப் பாடுவார்.

பாரத விலாஸில் சிவாஜியும் - கோபால் தான். அப்படி எத்தனையோ ஹீரோக்கள் கோபால் என்று அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.

கே. பாக்யராஜூக்கும் கோபால் ராசியான திருநாமம். சின்ன வீடு படத்தில் அவரை கோவை சரளா கோவாலு என்று அழைக்கும் விதமே அலாதியாக இருக்கும். அரங்குகளில் அமர்க்களத்தை உண்டு பண்ணும்!

சமூக சீர்திருத்த கருத்துகளைச் சொல்லி வெள்ளி விழா கொண்டாடிய, கே.பாக்யராஜின் இது நம்ம ஆளு படத்தில் அவரது பெயர் கோபால்.

‘புதிய பறவை கோபால்’ மட்டும் இளங்குருத்துக்களின் மனத்திலும் பதியம் போட மிக முக்கிய காரணம் சரோ.

புதிய பறவை ஹீரோவை அவர் குழைவாக அழைத்த ஸ்டைலும், அந்தக் ‘கொஞ்சும் கிளி’ பாஷையும் நாலு தலைமுறைகளைகளையும் தாண்டி தனித்து நிற்கிறது.

‘சின்னக் கலைவாணர், ‘பத்மஸ்ரீ’ விவேக்’கால், கே.ஆர். ஜி.யின் கடைசித் தயாரிப்பான ‘குரு என் ஆளு’ படத்தில் ‘கோபால்’ மறு வாழ்வு பெற்றது.

சென்ற தலைமுறையினருக்கு ‘அண்டை வீட்டுக்காரரின் பொறாமை’  என்கிற வாசகத்தோடு பிரபலமான ‘ஒனிடா’  கலர் டிவி  விளம்பரம் மறந்திருக்காது.

புதிய பறவை மெல்லச் சிறகை விரித்த போது பத்மினி, தேவிகா என்று வி.சி. கணேசனின் ‘இஷ்டப் பிராணேஸ்வரிகள்’  ஃபீல்டில் இருந்தார்கள்.

கே.ஆர். விஜயா, ஷீலா, ராஜஸ்ரீ, காஞ்சனா, ஜெயந்தி போன்ற கவர்ச்சிகரமானப் புதுமுகங்களுக்கும் பஞ்சமில்லை.

‘சிவாஜி பிலிம்ஸ்’ தயாரிக்கும் முதல் படம். அதுவும் வண்ணச் சித்திரம். அதில் அவசியம் சரோ   ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்று நடிகர் திலகம் ஒற்றைக் காலில் நின்றார்.

ஒப்பனை உலகின் ஒரே மகாராணியாக, வெவ்வேறு காட்சிகளுக்காக  ஆடை மாற்றவும் சந்தர்ப்பம் கிடைக்காமல் சரோ மூச்சுத் திணறிக் கொண்டிருந்தார்.

சிம்மக்குரலோனின் இனிய விருப்பத்தை நிறைவேற்ற முடியாத கசப்பான சூழல். சரோ நிஜமாகவே தவித்தார்.

‘புதிய பறவை பற்றி ஒரு புத்தகமே எழுதலாம். அப்போது நான் முப்பது படங்களில் நடித்துக் கொண்டிருந்தேன். சிவாஜியின் தம்பி ஷண்முகம் புதிய பறவை படத்துக்காக கால்ஷீட் கேட்டார்.

காலை ஏழு மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடித்தால் போதும் என்று சொன்னார். அவர் கேட்ட மாதிரியே செய்தேன். புதிய பறவைக்காக காஸ்ட்யூம், மேக் அப் எல்லாமே விசேஷமாக அமைந்தது.

சிவாஜி என் உடை, தலை அலங்காரம் ஆகியவற்றை  பார்த்து விட்டு, ‘சரோஜா, இது உனக்கு நன்றாக இருக்கிறது. இதையே கன்டினியூ பண்ணு’ என்றார். - சரோஜாதேவி.

ஏகத்துக்குப் பரபரப்பாக, பத்திரிகைகளில்  தலைப்புச் செய்தியாக... வரலாறு காணாத கனவுக் கன்னியாக நாளுக்கு நாள் சரோ சாதனை படைத்த பொற்காலம்.

வெள்ளித் திரைகளில் உற்சாக மூட்டும் உன்னத நட்சத்திரம் - ‘சரோ’ என்கிறத் தன் பிரிய புத்திரி, உள்ளத்துக்குள் வேதனையை அனுபவிப்பதை தாயார் ருத்ரம்மாவுக்கு ஒரு தினம் உணர்த்தியது.

நடந்தது என்ன ?

‘நான் சிரிக்கக் கூடாதா? ’ என்கிறத் தலைப்பில் வார இதழ் ஒன்றில் வந்ததை, வரிக்கு வரி  அப்படியே உங்களுக்கும் தாரை வார்க்கிறேன்.

‘சரோஜாதேவிக்குச் சொந்தமான கோவை மில்லில் வேலை நிறுத்தம் ஏற்பட்டிருந்த சமயம். அனைத்து முக்கிய நிர்வாகிகளும் சென்னைக்கு வந்து ருத்ரம்மாவைச் சந்தித்தனர்.

சரோஜாதேவி அவர்களின் பேச்சில் கலந்து கொள்ளவில்லை. ஏதோ ஒரு தமாஷைப் படித்து விட்டு, ‘கடகட’  என வாய் விட்டுச் சிரித்துக் கொண்டே இருந்தார்.

தாயார் கோபமாக  - ‘சரோ...  நாங்கள் எவ்வளவு சீரியஸாகப் பேசிக் கொண்டிருக்கிறோம். நீ என்னமோ குழந்தை மாதிரி சிரிக்கிறாயே... இங்கே வந்து இவங்க சொல்வதைக் கேள்! ’

சரோ - ‘உங்க சீரியுஸுமாச்சு. நீங்களுமாச்சு.

1.எதைத் தின்றால் உடம்பு ஊதி விடுவோமோ என்ற பயத்திலே ஆசைப்பட்டதைச் சாப்பிட முடியல.

2. சொந்தத் துணிமணிகளைத்தான் கட்ட முடிகிறதா...? நாள் பூராவும் சினிமாப் படத்துக்கான டிரஸ்தான்.

3. கல்யாணம் கார்த்திகை என்று எங்காவது போக முடிகிறதா...?

4. சரி போகட்டும். நான் படுத்துத் தூங்குவதற்காகப் பிரமாதமாக ஒரு அறை கட்டியிருக்கிறாயே, அங்கே தான் நான் அப்பாடா... என்று மணிக்கணக்காகப் படுத்துத் தூங்கவாவது முடிகிறதா...?

எதுவுமில்லை.

5. இந்தச் சிரிப்பு ஒன்றுதான்  நான் கண்ட ஒரே சுகம். இதையும் வேண்டாம் என்று சொல்கிறாயே...! ’

பெற்ற தாய்க்குக் கண்களில் நீர் முட்டி நின்றது.

-----------------------------------------------------------

படகோட்டி 1964  தீபாவளிக்கு ரிலிசானது. நடிகர் திலகம் சதம் அடித்த நவராத்திரி, 101வது முரடன் முத்து இரண்டு சினிமாக்களுக்கும் இடையே படகோட்டி நூறு நாள்களைக் கடந்து  வெற்றி பவனி வந்தது.

படகோட்டிக்கு அநேகப் பெருமைகள் உண்டு.

சரவணா பிலிம்ஸின் முதல் வண்ணத் தயாரிப்பு!

குப்பத்து மீனவர் வாழ்க்கையைத் தமிழ்த் திரையில் காட்டிய முதல் படம்.

படகோட்டிக்குப் பின்னர் கடலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட சாவித்ரியின் பிராப்தம், பி.வாசுவின் கட்டுமரக்காரன், மணிரத்னத்தின் கடல், தனுஷின் மரியான் உள்பட  அநேக சினிமாக்கள் வசூலில் கவிழ்ந்து போயின.

‘செம்படவப் பெண் முத்தழகியாக சரோவும், படகோட்டி மாணிக்கமாக மக்கள் திலகமும் உலகத் தமிழர்களுக்குத் தங்கள் அற்புதத் திறமையால் இன்று வரை நவரஸ விருந்து படைக்கிறார்கள்.

மலையாள மண்ணின் மைந்தர் எம்.ஜி.ஆர். கேரளா சென்று அவுட்டோரில் கலந்து கொண்ட முதல் படம்.

கண்ணதாசனுக்கு இணையாக கவிஞர் வாலிக்குத் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய அங்கீகாரத்தை எம்.ஜி.ஆர். ஏற்படுத்தித் தந்த முதல் படம்.

எம்.ஜி.ஆர்.- சரோ ஜோடி நடித்த படங்களில் இனிமையான  சூப்பர் ஹிட் பாடல்களில் என்றும் படகோட்டிக்கே முதல் இடம்!

‘பாட்டுக்கு பாட்டெடுத்து’ மாதிரியான காதல் ஏக்கப் பாடல் எம்.ஜி.ஆர்.- சரோ வெற்றிச் சித்திரங்களில் படகோட்டிக்கு முன்போ பின்போ இடம் பெறவே இல்லை.

எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் தயாரிப்புகள் உள்படப் பொன்மனச்செம்மல் - அபிநய சரஸ்வதி இணைந்து நடித்த பெரும்பாலான படங்கள் சின்னத்திரையில் அன்றாடம் இடம் பெறுகிறது.

அவற்றில் படகோட்டிக்கான உரிமை மட்டும் இன்னமும் வழங்கப்படவில்லை. காரணம் படகோட்டி விநியோக உரிமையை வைத்திருக்கும் தேவி பிலிம்ஸ் இன்றைய முன்னணி நட்சத்திரங்களின் வெற்றிச்சித்திரங்களுக்கு நிகராக  கேட்கும் மதிப்பு மிக்கத் தொகை! 

அதுவே படகோட்டியின் தனிச் சிறப்பு!

எப்போது மீண்டும் திரைக்கு வரும் என்று  சகலரையும் ஏங்க வைத்துக் கொண்டிருக்கும் வெற்றிச்சித்திரம் படகோட்டி.     

‘கன்னடத்துப் பைங்கிளியைக் கேரளத்து மண்ணில் விளையாட விட்டிருக்கிறார்கள்.சதங்கை ஒலி நடையும் வனப்பும் ஓரளவு நடிப்பும் நன்றாக அமைந்துள்ளன.

தென்னஞ்சோலைகள், உப்பங்கழிகள், சூரிய அஸ்தமனக் காட்சிகள்... - ஒளிப்பதிவாளர் பி.எல். ராய்க்கு பாராட்டுதல்கள்.

புரட்சி நடிகரின் ரசிகர்களுக்கு ஒரு விருந்து! ’

என்றது ‘கல்கி’யில் வெளியான விமர்சனம்.

ஏ.ஆர். ரஹ்மான் முதன் முதலில் ரீமிக்ஸ் செய்த பாடல் தொட்டால் பூ மலரும். அதற்கு இளைய தலைமுறையின் அமோக ஆதரவும், பெரிசுகளின் கண்டனமும் அதிகமாகவே எழுந்தது.

அந்தப் பாடல் காட்சியில் நடித்த சரோஜா தேவியின் கருத்து என்ன?

‘ரீ மிக்ஸ் பண்ணும் போது, பழைய பாடலில் இருந்த இனிமை போய் விடுகிறது. குறிப்பாக நானும், எம்.ஜி.ஆரும் நடித்த தொட்டால் பூ மலரும் என்ற ரீ மிக்ஸ் பாடல், என் ரசிகர்களுக்குப் பிடிக்கவேயில்லை. ’ 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com