சரோஜா தேவி: 9. சக்கரக்கட்டி ராசாத்தி...!

1965  தீபாவளி ரிலீஸ் தாழம்பூ. அதன்  ஷூட்டிங்கை முடித்து விட்டு, உதவியாளர்கள் சாமி, ஆர்.எம்.வீரப்பன், முத்து

1965  தீபாவளி ரிலீஸ் தாழம்பூ. அதன்  ஷூட்டிங்கை முடித்து விட்டு, உதவியாளர்கள் சாமி, ஆர்.எம்.வீரப்பன், முத்து ஆகியோரோடு கொழும்பில் கால் வைத்தார் எம்.ஜி.ஆர்.  அவருடன் சரோவும் ருத்ரம்மாவும்.

இலங்கை வானொலியில் தன்னுடைய ராசி எண்ணான ஒன்பதாம் இலக்க கலையகத்தில் எம்.ஜி.ஆர். உரையாற்றினார்.

வெளியே வரலாறு காணாத மழை.

நனைந்த படியே ஈழ ரசிகர்கள் எம்.ஜி.ஆரைக் காண  நின்றனர். எம்.ஜி.ஆரும் சரோவும் பேட்டி முடிந்து வெளியே வந்த போது, கண்ணாடிகளின் வழியே ஈரத் தமிழர்கள்  எம்.ஜி.ஆரிடம் கெஞ்சினார்கள்.

‘அண்ணேன்... அண்ணேன்...  கொஞ்சம் நின்னு உங்க முகத்தைக் காட்டிட்டுப் போங்கோ... ’

எம்.ஜி.ஆர்.- ‘அம்மா  சரோ நீயும் உம்முகத்த காட்டு’.

ரசிகர்:சிறப்பா போயிட்டு வாங்க.

சிலோன் பயணத்தில் சரோ அவ்வளவு சந்தோஷமாக இல்லை. ஆயிரத்தில் ஒருவனின் அட்டகாச வெற்றிக்குப் பிறகு எம்.ஜி.ஆர்., அம்முவுக்கு மாறி விட்டது கடல் கடந்தும் தெரிந்திருந்தது.

 சரோ மனத்தில் அடுத்து எம்.ஜி.ஆரோடு நடிக்கப்  புதிய படங்கள் ஒப்பந்தம் ஆகாத கவலை.

‘நுவரெலியாவில்  ஒன்னறை மணி நேரமும் சிரிக்காத சரோஜாதேவிக்கு என்ன கோபமோ!’ 

என்று வார இதழ் ஒன்றில் வருந்தினார் இலங்கையைச் சேர்ந்த மா. சிவராஜன்.

இலங்கையின் பிரதமர்  டட்லி சேனா நாயகாவை  எம்.ஜி.ஆரும்- சரோவும் சந்தித்தார்கள். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் தந்தத்தாலான நேருவின் சிலையை எம்.ஜி.ஆர். நினைவுப் பரிசாக வழங்கினார். அது போதாதென்று தன்னுடைய அன்பையும் மரியாதையையும் தெரிவிக்கும் வகையில் தந்தத்தாலான விளக்கொன்றையும் அளித்தார்.

அக்டோபர் 22ல் கொழும்பு விளையாட்டரங்கில் எம்.ஜி.ஆருக்கு  மாபெரும் பாராட்டுக் கூட்டம் நடந்தது. லட்சக்கணக்கான  மக்கள், கொட்டும் மழையிலும் எம்.ஜி.ஆரின் பேச்சை  ஆர்வத்தோடு நனைந்த படியே கேட்டார்கள்.

 கொழும்பு மேயர், ஸ்ரீலங்காவின் உள் நாட்டு மந்திரி தகநாயகா எம்.ஜி.ஆருக்கு வரவேற்புரை வழங்கினர். சரோவுக்கு அவர் இருப்பது கோடம்பாக்கமா, கொழும்புவா என்று பிரமிப்பாகத் தோன்றியது.

நிருத்திய சக்கரவர்த்தி என எம்.ஜி.ஆருக்கும்,  நிருத்திய லட்சுமி என்று சரோவுக்கும்  இலங்கை கலாசாரத்துறை   அமைச்சர் காமினி ஜெயசூர்யா  பட்டங்கள் வழங்கிச் சிறப்பித்தார்.

‘நிருத்திய சக்கரவர்த்தி’ என்பதைத்  தமிழக எம்.ஜி.ஆர். விசிறிகள் நடிகப் பேரரசு எனவும், ‘நிருத்திய லட்சுமி’யை நடிகத் திருமகள்  ஆகவும் தங்களின் விருப்பத்துக்கேற்றவாறு அர்த்தப்படுத்திக் கொண்டனர்.

1966ல் எம்.ஜி.ஆரின் முதல் படம் ஏவிஎம்மின்  50வது தயாரிப்பு. 1965 ஆகஸ்ட் 12ம் தேதி அன்பே வா படத்துக்கு பூஜை போட்டார்கள்.

ஆயிரத்தில் ஒருவனுக்குப் பிறகு அம்முவே எம்.ஜி.ஆரின் அன்பான சாய்ஸ். ‘சரோ வேண்டாம்’ என்றார். 

‘அண்ணி  சரோவோடு  வாத்தியாருக்கு என்ன தகராறு..?   எம்.ஜி.ஆரும் சரோஜா தேவியும் இனிச் சேர்ந்து நடிக்கவே மாட்டார்களா..?’ எனப் பத்திரிகைகளில் வாசகர்கள்  தொடர்ந்து  கேள்விகள் கேட்டார்கள்.  ஏவி.எம்.  எங்க வீட்டுப் பிள்ளை  ஜோடிக்கு ஆதரவாக  நின்றார்.

சிம்லாவில் சரோவுக்கு வேலை கிடையாது. ஆனால் ஏவிஎம்., சரோவையும் எம்.ஜி.ஆரோடு அனுப்பினார்.

‘இருவரையும் சேர்த்து காதல் மூவ்மெண்டுகளை சிம்லாவில் ஷூட் செய்யுங்கள். டூயட் பாடல் காட்சியில் ஆங்காங்கே பயன் படுத்திக் கொள்ளலாம்.

 பத்திரிகைகளில் ‘எம்.ஜி.ஆர்.- சரோஜா தேவி ஜோடியாக, அன்பே வாவுக்காக சிம்லா போகிறார்கள்!’ எனச் செய்தி வரும்.

மக்கள் மத்தியில் பரபரப்பும், படத்தை உடனே பார்க்க விரும்பும் ஆர்வமும் அதிகரிக்கும்’ என்றார்.

எம்.ஜி.ஆர். ஏறக்குறையத் தன்னைக் கைவிட்டு விட்டதாகவே சரோ நினைத்தார். எங்க வீட்டுப் பிள்ளைக்குப் பிறகு, எட்டு மாதங்கள்  ஆகியும் அவர் நடித்து எந்தப் புதுப்படமும் ரிலிசாகவில்லை.

அரச கட்டளை, நாடோடி, தாலி பாக்கியம், பறக்கும் பாவை மாதிரியானப் பழைய,நீண்ட காலத் தயாரிப்புகளில் மட்டும் எம்.ஜி.ஆருடன்  நடிக்க வேண்டிய சூழல்.

சோகத்தை வெளிக்காட்டாமல் சரோ, சிம்லா தோட்டங்களில் எம்.ஜி.ஆருடன் சும்மா வேணும் ஆடிக் களித்தார்.

ஒரு நாள் புல்வெளி ஒன்றில், ரெடி ஸ்டார்ட்டுக்காக, சரோ நின்று கொண்டிருந்த நேரம்.  எம்.ஜி.ஆர். அவரைப் பிடித்து மல்லாக்கத் தள்ளினார். சரோ  நாலடி எட்டிப் போய் மண்ணில் விழுந்தார். யூனிட் பதறியது.

 என்ன ஆச்சு எம்.ஜி.ஆருக்கு. யாருக்கும் ஏதும் புரியாது மலைத்தனர். எம்.ஜி.ஆர். அவர்களிடம் நடந்ததைக் கூறி சாந்தப் படுத்தினார்.

சரோவின் காலுக்கடியில் ஓர் இரட்டைத் தலை நாகம் சீறியவாறு நெருங்கி வந்திருக்கிறது. நாயகிக்குப் பக்கத்தில் பாம்பு படம் எடுத்து நிற்பதை கவனித்த மக்கள் திலகம், எப்போதும் போல் உஷார் பார்ட்டியாக நடந்து கொண்டார்.

‘சரோ... பாம்பு... பாம்பு... எனக் கத்திப் பதற்றத்தை உண்டு பண்ணாமல், சமயோசிதமாக ஹீரோயினை கீழேத் தள்ளிச் சாய்த்திருக்கிறார். அதோடு நிறுத்தாமல் தன் பூட்ஸ் கால்களால், கொடிய நாகத்தை மிதித்தேக் கொன்றும் விட்டார்.

சரோவுக்கு நிம்மதிப் பெருமூச்சு தோன்றியது. எம்.ஜி.ஆர். மனத்துக்குள் தனக்கான இடம் பத்திரமாக  உள்ளதாக  உணர்ந்தார். வாத்தியாருடைய அன்புக்கும், சமயோசிதத்துக்கும் நன்றி சொன்னார்.

 தன் உயிரைக் காப்பாற்றிய வாத்தியாரிடம்,

‘எப்படிண்ணே இந்த மாதிரிப் பண்ணணும்னு உங்களுக்குத் தோணிச்சு?’ எனக் கேட்டார்.

‘இப்படி இக்கட்டான நேரத்துல நம்ம புத்தியை யூஸ் பண்றதுலதான் வெற்றியே இருக்கு.’ என்றார் எம்.ஜி.ஆர்.

சிம்லா மற்றும் ஊட்டி அவுட்டோர்களில் எம்.ஜி.ஆர். நடனப் பெண்களுக்குப் போட்டி வைத்து, சிறப்பாக ஆடியவர்களுக்கு  நூறுநூறாக அள்ளிக் கொடுத்தார். பந்தயம் நடத்தச் சொல்லி சரோவிடமும் கேட்கச்  சொன்னார்  எம்.ஜி.ஆர். 

அதற்கு சரோவின் பதில்- ‘ஓகே. நான் கேம்ஸ் வைக்கிறேன். ஆனா ப்ரைஸ் ஹீரோ தான் கொடுக்கணும். ’

சரோவுக்கும் சேர்த்து எம்.ஜி.ஆர். இரட்டிப்பாகத்  தந்தார்.

அன்பே வா படத்துக்கு எம்.ஜி.ஆர். அவர் அதுவரையில் வாங்கியிராத  கூடுதல் சம்பளத்தை ஏவிஎம். மிடமிருந்து வற்புறுத்திப் பெற்றார்.

எல்லாம் அறிந்தவர்  ஏவி.எம். நாயகி சரோவின் மார்க்கெட் சரிந்து வருவதை அறிந்து,  அவருக்கு மிகக் குறைவான ஊதியத்தை நிர்ணயித்தார். வெறும் தொண்ணூறு ஆயிரம் ரூபாய்!

கிட்டத்தட்ட  மூன்று லகரங்கள் வரை டிமான்ட் செய்யும் சரோ,  சமர்த்தாகக் கொடுத்ததை வாங்கிக் கொண்டார்.

நாகிரெட்டி  எங்கவீட்டுப் பிள்ளைக்காக பிரம்மாண்ட செட்களை அமைத்தார். ஆனால் ஏவிஎம்மோ  எம்.ஜி.ஆருக்காக  எட்டாவதாகப் புதிய தளத்தை  விசாலமாகக் கட்டினார்.

கூடவே  எம்.ஜி.ஆருக்கும் சரோவுக்கும்  ஸ்பெஷலாகத்  தனித் தனி  ஏசி மேக்அப் ரூம்கள்.

‘ அன்பே வா’ வில் ஏவி.எம். ஹீரோயினின் ஆடை அலங்காரத்திலும் அதிக அக்கறை காட்டினார்.

பெங்களூரில் ரிலிசாகியிருந்தது வக்த் இந்தி கலர் சினிமா. யதேச்சையாக மெய்யப்பன் அதைக் காண நேர்ந்தது.

‘வக்த்’ நாயகி அணிந்திருந்த வண்ணமயமான சுடிதார்களில் மனம் மயங்கி, அதே போன்ற உடுப்புகளை நம்ம சரோவுக்கும் அன்பே வா வில் பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அதற்காகவே சரோவின் காஸ்ட்யூமர் பெங்களூர் சென்று வக்த் படத்தைப் பார்த்து, சரோவுக்கான உடைகளைத் தைத்துக் கொடுத்தார்.

 சரோவின் சம்பளக் குறைப்பை சரிக்கட்டும் விதமாகவும்,  அபிநய சரஸ்வதி சந்தோஷத்துடன்  நடிப்பதற்காகவும், கிட்டத்தட்ட எண்பதாயிரம் ரூபாய் செலவில் ஆடை ஆபரணங்கள் ஏவி.எம்மால்  சரோவுக்காக வாங்கப்பட்டன.

ஒரே காட்சிக்கு ஒவ்வொரு முறையும் மூன்று செட் துணிகள். புதிய புதிய வண்ணங்களிலும், ரகங்களிலும் அதி நவீன ஆடைகள்.

 அதில் எம்.ஜி.ஆரும், சரோவும் தங்களுக்குப் பிடித்ததைத் தேர்வு செய்ததை,சிவசங்கரியின் வார்த்தைகளில் சொன்னால்- 

‘தினுசு தினுசான காஸ்ட்யூம்களில் எதை எடுப்பது எதை விடுவது!’

அன்பே வா  அவுட்டோருக்காக  ‘ஊட்டி உட்லண்ட்ஸ் ஹோட்டலில்’, சரோவின் உடைகளைப் பராமரிப்பதற்காக மாத்திரம் தனி அறை ஒன்று 24 மணி நேரமும் தயாராக இருந்தது.

ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் பல்லவியை  எம்.எஸ்.வி  சொல்ல, மற்ற சரணங்கள்  வாலியால் வலியோடு எழுதப்பட்டது.

மறு நாள்  சிம்லாவுக்குப் போக வேண்டும். அதற்குள்  ராஜாவின் பார்வை பாடலைப்  படமாக்க  டைரக்டர் ஏ.சி. திருலோகசந்தருக்குக்  கட்டளையிட்டார் செட்டியார்.

திருலோக் ஒரு சாரட்டைக் கொண்டு வரச் சொன்னார். எம்.ஜி.ஆர் -சரோவை அதில் ஏற்றி,  எம்.ஜி.ஆரின் கையில் குதிரை லகான் போன்ற வார்ப்பட்டையைக் கொடுத்தார்.

அதன் மறு கோடியில் ஒரு  பையனை இழுத்துப் பிடித்துக் கொள்ளச் சொன்னார். அவன் தான் குதிரை.  ராஜாவின் பார்வை ஒலிக்கப் படம் பிடித்தார்.

பின்பு  நிஜக்  குதிரையைக் கொண்டு வரச்  செய்து,  அது  தலையை மேலும் கீழும் அசைப்பதையும் குதிரையை ஓட விட்டு அதன் கால்களும்   தனியேப் பதிவு செய்யப்பட்டன.  அடுத்து சாரட்டின் சக்கரங்களும்  சுழல  அனைத்தும்  காமிராவில் விழுந்தன.

சிம்லாவிலும்  எம்.ஜி.ஆர்.-சரோவை  ஆடச்செய்து  சில காட்சிகளை  எடுத்தார்கள். எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து ஒரு பாடலாக உருவாக்கினார் திருலோக்.

இன்று வரையில்  ராஜாவின் பார்வை  ரசிகர்களின் பக்கம். அதன் பிறகு  எம்.ஜி.ஆர் படங்களில்  காதல்  கனவுப் பாடல்கள்  முக்கிய முதலீடு ஆனது.

ஏறக்குறைய  மூன்று லட்சத்துக்குள்  ஏவிஎம்  தயாரிப்புகள் முடிந்து விடும். ஹீரோ  எம்.ஜி.ஆர் என்பதற்காக  முப்பது லகரங்கள்  துணிந்து செலவிட்டார் செட்டியார். தமிழ் சினிமா  சரித்திரத்தில் முதல் முறையாக முப்பத்தி மூன்று லட்சங்களுக்கு அன்பே வா  விலை போனது.

‘புதுமையான பொழுது போக்குச்  சித்திரம்!’ என விளம்பரம் செய்தது ஏவிஎம்.

 எம்.ஜி.ஆர். கொடுத்த வாக்கைக் காப்பாற்றினார். பொதுவாக ஏவி.எம். படங்கள்  மவுண்ட் ரோடில்  வெலிங்டனில் ரிலிசாகும்.

1966 பொங்கல் அன்று அன்பே வா  கேசினோவில்  வெளியானது. எங்க வீட்டுப் பிள்ளை வெள்ளி விழா  கொண்டாடிய அரங்கம். அதிலும் எம்.ஜி.ஆர். ஸ்பெஷல்.

தங்களின் முதல் வண்ணச் சித்திரமான ‘அன்பே வா’ வில் சரோ அழகாகத் தெரிய வேண்டும் என்று ஏகத்துக்கும்  மெனக் கெட்டது ஏவி.எம். ஆனால் ஆனந்த விகடன்  தன் விமர்சனத்தில்

‘சரோஜாதேவி மோசமான மேக் அப் செய்து கொண்டு வந்து செகரட்ரி பாலுவைக் காதலிக்கிறாங்க.  அவர் தான் பணக்கார ‘ஜேபி’ன்னு தெரிஞ்சதும் அழறாங்க’என்று எழுதியது.

ஆனால் மக்கள் வழக்கம் போல் சரோவை அள்ளிக் கொண்டார்கள்.

100 நாள்கள் ஓடி முடிந்த பிறகு ரசிகர்களுக்கு ஒரு போட்டியை அறிவித்தார்கள்.  அன்பே வா  படத்தில் 12 காட்சிகளை வரிசைப்படுத்தி, அதில் எது முதலிடம் பெறும் சிறந்த காட்சி  என்று கேட்டார்கள்.  வேறு எந்த எம்.ஜி.ஆர்- சரோ  படங்களுக்கும் போட்டி அறிவிக்கப்பட்டதாகத் தகவல்கள் இல்லை.

 எல்லா வகையிலும் எம்.ஜி.ஆர் - சரோ ஜோடிக்கும், அவர்களின்  விசிறிகளுக்கும்  அன்பே வா மொத்தத்தில் ஒரு புதிய அனுபவம். 

அன்பே வா   23 வாரங்கள்  ஓடியது.  ஏனோ  வெள்ளிவிழாவுக்குப்  பதிலாக   100வது நாள் கொண்டாட்டம் நடந்தது. அதில் பேசிய எம்.ஜி.ஆர்,

‘அன்பே வா  வெற்றிக்கு முழு முதற் காரணம்  டைரக்டர் ஏ.சி. திருலோகச்சந்தர். இது ஒரு டைரக்டரின் படம்’ என்றார்.

எம்.ஜி.ஆரின் நூற்று முப்பத்தாறு படங்களில் அவரால் மறக்க முடியாத  முதல் படம் பெற்றால்தான் பிள்ளையா. அதன் இயக்குநர்கள் கிருஷ்ணன்- பஞ்சு.

பெற்றால் தான் பிள்ளையா வெளிவரும் முன்னரே அதில் சரோவின் நடிப்பைப் பாராட்டி பிரபல சினிமா மாத இதழில்  எழுதியிருந்தார்கள்.

‘கவர்ச்சியும் களிப்பும் நிறைந்த வேடங்களில் தான் சரோஜாதேவி சோபிக்க முடியும் என்ற தவறான எண்ணம் பல தயாரிப்பாளர்களுக்கு இருக்கிறது.

எங்களைப் பொறுத்தவரையில் எல்லாத் தரப்பட்ட வேடமும் ஏற்று நடிக்கக் கூடியவர் சரோஜாதேவி.

பெற்றால்தான் பிள்ளையா படத்தில் சரோஜாதேவியின் திறமைக்கேற்ற மாறுபட்ட வேடத்தில் நடிக்க வைத்திருக்கிறோம்.

யார் அவரைப் பற்றி எப்படிச் சொன்னாலும் சரி, எங்களைப் பொறுத்தவரையில் சரோ மென்மை உள்ளம் கொண்ட,  நன்கு ஒத்துழைக்கக் கூடிய நடிகை என்றே சொல்வோம்.

இடைக் காலத்தில் அவரைப் பற்றி ‘கர்வி’ என்று சிலர் சொல்லக் கூட கேள்விப்பட்டு இருக்கிறோம். சிறிது முன் கோபம் கொண்டவர் என்றாலும், சிரித்துப் பேசிப் பழகும் தன்மை நிறைந்தவர்.’ - கிருஷ்ணன் - பஞ்சு.

கிருஷ்ணன் பஞ்சுவின் பெற்றால் தான் பிள்ளையா படத்தில் சரோவுக்குச் சற்றே நூதனமான பாகம்.

‘கிளி ஜோசியக்காரி மோகினி’.  கிணற்றில் தூர் வாருகிற நாயகன் ஆனந்தனை ஐந்து வருடமாகக் காதலிக்கும் நாயகி பாத்திரம்.

தமிழ் சினிமாவில் சரோவுக்கு முன்போ பின்போ வேறு ஹீரோயின்கள் கிளி ஜோசியக்காரியாக நடித்து இருக்கிறார்களா...! 

‘எம்.ஜி.ஆர் நடிப்பு திருப்தி. சற்றே பளுவான வேடம். துணிவுடன் சுமத்தி அதில் ஓரளவு வெற்றி கிருஷ்ணன் -பஞ்சுவுக்கு.

‘மீண்ட சொர்க்கத்தை மில்டன் எழுதினார். சரோஜாதேவியை ஸ்ரீ முத்துக்குமரன் பிக்சர்ஸ் மீண்டும் தயாரித்து இருக்கிறார்கள். கொஞ்ச காலத்துக்கு முன்னாடியே மீட்டிருக்கக் கூடாதா என்றிருக்கிறது.

‘எப்போய்யா ...  என்னைக் கல்யாணம் கட்டிக்கப் போறே... சீக்கிரம் என் கழுத்துல தாலியைக் கட்டய்யா...’ என்று  அவரைத் தவிர வேறு யாராலே அப்படிக் குழந்தைத்தனமாகக் கேட்க முடியும்? ’

 சரோவைத் தவிர வேறு யார் சரோவாக நடிக்க முடியும் என்றெல்லாம் அபூர்வமாகப்  பாராட்டுப் பத்திரம் வாசித்தது குமுதம்.

 1966  ஜனவரியில்  அன்பே வா.  டிசம்பரில் பெற்றால்தான் பிள்ளையா. இரண்டும் மாறுபட்ட வெற்றிச் சித்திரங்கள்.

 தமிழ் சினிமாவில் காதலியை வித்தியாசமாகவும் விதவிதமாகவும் எத்தனையோ கவிஞர்கள் கற்பனை செய்திருக்கிறார்கள்.

ஆனால் வாலியைத் தவிர இன்று வரை நேசத்துக்குரிய பெண்ணை யாரும்  ‘சக்கரக்கட்டி ராசாத்தி’ என்று வர்ணித்ததாக வரலாறு கிடையாது.

 கனவில் பறக்கும் காரில் சென்றபடி எம்.ஜி.ஆரும் சரோவும் பாடுவதாக டைரக்டர்களும் தங்கள் பங்குக்கு அதைப் பிரமாதப்படுத்தினார்கள்.

பெற்றால்தான் பிள்ளையா 100 õள்கள்  ஓடியது. அண்ணா  தமிழக முதல்வரான பின்பு அவரது தலைமையில் வெற்றி விழா கொண்டாடிய முதல் எம்.ஜி.ஆர். சினிமா.

சரோ அந்த வைபவத்தில் கலந்து கொள்ளவில்லை. காரணம் அவர் புது மணப்பெண். தவிர, எம்.ஜி.ஆர். சுடப்பட்ட சம்பவமும் அதிர்வு அலைகளை உண்டாக்கி இருந்தது.

ஆரூர்தாஸின் யோசனைப்படி  சரோவுக்காக,  அண்ணாவிடமிருந்து விருது கேடயத்தைப் பெற்றவர் சாட்சாத் நடிகையர் திலகம் சாவித்ரி!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com