வைஜெயந்தி மாலா: 3. ஓஹோ... எந்தன் பேபி...!

டைரக்டர் ஸ்ரீதரின் சொந்தப்பட நிறுவனம் சித்ராலயா. அதன் முதல் தயாரிப்பு தேன் நிலவு. ஹாஸ்யம் கலந்த காதல் கதை.

டைரக்டர் ஸ்ரீதரின் சொந்தப்பட நிறுவனம் சித்ராலயா. அதன் முதல் தயாரிப்பு தேன் நிலவு. ஹாஸ்யம் கலந்த காதல் கதை.

செலவைப் பார்க்காமல் ஒரே ஷெட்யூலில் படத்தை முடிக்க வேண்டி, ஒட்டு மொத்தக் கலைஞர்களையும் குடும்பத்தோடு காஷ்மீருக்குக் கூட்டிச் சென்றார் ஸ்ரீதர்.

ஜெமினியின் திருமதி- பாப்ஜி என்கிற அலமேலுவின் குடும்பம், நடிகையர் திலகம் சாவித்ரி, மகள் விஜய சாமூண்டிஸ்வரி சகிதம் ஜெமினி கணேசன் காஷ்மீருக்குப் பயணமானார்.

யாராலும் நெருங்க முடியாத உச்சாணிக் கிளையில் வைஜெயந்தி கொடி கட்டிப் பறந்த காலம்.

இரு மனைவிகள் உடன் இருக்க, வைஜெயந்தி மாலாவுடன் காஷ்மீர் டால் ஏரியில் டூயட் பாடும் அதிர்ஷ்டம் ஜெமினிக்கு.

கோலிவுட் கவிஞர்களுக்கு உச்ச நட்சத்திரங்களின் திருநாமங்களை, பட்டப் பெயர்களை, புகழை சினிமாப் பாடலுக்குள் நுழைப்பது கை வந்த கலை. கண்ணதாசனுக்கு அதில் அலாதி ருசி.

பத்மினியைப் பப்பி என்று செல்லமாக அழைத்ததைப் போல், வைஜெயந்தி மாலாவைப் பாப்பா என்று கூப்பிடுவது தொட்டில் பழக்கம்.

பாப்பா என்று வசீகரமான இளம் நாயகியை ஜெமினி வர்ணித்துப் பாடினால் எதுகை மோனை இடிபடுமே. சந்தம் உதைக்குமே... கண்ணதாசன் சாமர்த்தியமாகப் பாப்பாவை, ‘பேபியாக’ ஆங்கிலப்படுத்தினார்.

‘ஓஹோ எந்தன் பேபி... நீ வாராய் எந்தன் பேபி’ என்று பல்லவி ஆரம்பித்தது.

எஸ். ஜானகியின் அசாத்திய திறமை மீது இளையராஜாவுக்கு முன்பாகவே அதிக அக்கறை செலுத்தியவர் ஸ்ரீதர். தனக்குப் புகழ்ப் புடைவை நெய்த ஸ்ரீதரின் இயக்கத்தில், ஏராளமான இனிய பாடல்களை ஜானகி பாடியுள்ளார்.

தேன் நிலவு அதற்குப் பிள்ளையார் சுழி போட்டது. ‘சிங்கார வேலனே தேவா’ மக்களைச் சென்று மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துவதற்கு முன்னரே, ஏ. எம். ராஜா இசையில் தேன் நிலவில் ஒலித்த ‘ஓஹோ எந்தன் பேபி, காலையும் நீயே மாலையும் நீயே’ பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனவை.

வைஜெயந்தி மாலாவுக்குப் பாடிய பின்பு ஜானகியின் அந்தஸ்து உயர்ந்தது.

2016 லும் நேயர் விருப்பத்தில் முதல் பாடலாக ஓஹோ எந்தன் பேபி வலம் வருகிறது.

ஓஹோ எந்தன் பேபி பாடல் படமானதே ஒரு சுவாரஸ்யமான சம்பவம்.

சரோஜாதேவியை சினிமாவில் ஜீன்ஸ் போடச் சொல்லி, வற்புறுத்தாத பட முதலாளிகளே கிடையாது. சரோ இன்று வரையில் சம்மதிக்கவில்லை.

வைஜெயந்தி மாலா தேன் நிலவில் ஜீன்ஸ் அணிந்து ஆடிப் பாடியதில் இளைஞர்கள் இன்பம் அடைந்தனர்.

ஜீன்ஸ் மட்டுமல்ல. ஸ்ரீதர் - வைஜெயந்தி மாலா இருவரது வாழ்க்கையிலும் மறக்க முடியாத சம்பவங்கள் தேன் நிலவு ஷூட்டிங்கில் நடைபெற்றன.

‘மலைச் சரிவில் பனிச் சாரலில் சறுக்கி வரும் விளையாட்டுக்கு ஸ்கீயிங் என்று பெயர். கொஞ்சம் பயிற்சி பெற்றதுமே வைஜெயந்தி மாலா தைரியமாக ஸ்கீயிங் செய்ய ஆரம்பித்து விட்டார். நடனம் ஆடிப் பழகியவர் அல்லவா.

ஒரு நாள் பனிச் சறுக்கு விளையாட்டைப் படமாக்கிய சமயம். காமிரா ஓடிக் கொண்டிருக்கிறது. வீல் என்று ஓர் அலறல்!

ஸ்கீயிங்கில் வேகத்தை அதிகரிக்கவும், குறைக்கவும், பேலன்ஸ் செய்யவும் இரு கைகளிலும், ஊன்றுகோல் போல இரு கம்பிகளைப் பிடித்துக் கொள்ள வேண்டும்.

வெண்பனியில் பதிந்து கிடக்கும் அதன் கூரிய முனை, டேக்கில் வைஜெயந்தியின் தொடையில் பாய்ந்து அவரைத் துடி துடிக்க வைத்தது.

உடனடியாக பேக் ஆஃப் சொன்னேன். வைஜெயந்தியை அலுங்காமல் குலுங்காமல் அப்படியே தூக்கிக் கொண்டு காரில் ஏற்றி டாக்டரிடம் போனோம்.

வலியின் உபத்திரவத்திலும் வைஜெயந்தி என்ன சொன்னார் தெரியுமா ?

‘எனக்காக ஷூட்டிங்கை நிறுத்திடாதீங்க. ரெண்டு நாள் மற்ற காட்சிகளை எடுங்க. அப்புறம் என் சம்பந்தப்பட்ட சீன்களை எடுக்கலாம்... ’என்றார். பதற்றத்திலிருந்து விடுபட்டுச் சற்றே நான் தைரியம் அடைந்ததும்,

‘ஸார்! தப்பித் தவறி கூட எனக்குக் காயம் பட்ட விவரம், அம்மாவுக்கு மட்டும் கண்டிப்பாத் தெரியக் கூடாது. (யதுகிரி பாட்டியை வைஜெயந்தி அம்மா என்றே அழைப்பார்.)

தெரிந்தால் ரகளை பண்ணிடுவார். மெட்ராஸுக்குத் திரும்பலாம் என்று ஆரம்பித்து விடுவார். உங்களுக்கு ரொம்ப நஷ்டமாகி விடும். ’என்ற வைஜெயந்தி மாலா, தன் நோவைப் பெரிது படுத்தாமல் எங்களுடன் ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே தங்கினார். ஓட்டல் அறைக்குச் சென்றால் பாட்டிக்குத் தெரிந்துவிடுமே என்கிற பயம்... - ஸ்ரீதர்.

காஷ்மீரில் படப்பிடிப்பு நடத்திய ஸ்ரீதர், கல்யாணப்பரிசின் வலுவான கதையோடு தேன் நிலவை வண்ணச் சித்திரமாக எடுக்காமல், பிளாக் அண்ட் வையிட்டில் உருவாக்கியது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தது.

குமுதம் ‘தேன் நிலவு வீண் செலவு’ என்று லாஸ்ட் பன்ச் வைத்தது. பத்திரிகை விமர்சனங்களையும் மீறி, வணிக நகரங்களில் பல தியேட்டர்களில் 50 நாள்களை வெற்றிகரமாகக் கடந்தது தேன் நிலவு.

வைஜெயந்தியுடன் தேன் நிலவு, நஸ்ரானா, சித்தூர் ராணி பத்மினி என்று மூன்று படங்களில் தொடர்ந்து பணி புரிகிற வாய்ப்பு ஸ்ரீதருக்குக் கிடைத்தது.

நஸ்ரானா கல்யாணப் பரிசு படத்தின் இந்தி ரீமேக். அதில் சரோஜாதேவியையே நடிக்க வைக்க முதலில் நினைத்தார் ஸ்ரீதர். சரோவினால் ஏற்பட்ட சில விரும்பத்தகாத சம்பவங்களால், தன் முடிவை மாற்றிக் கொண்டார்.

ஸ்ரீதரின் முதல் இந்திப்படம் நஸ்ரானா. ஹீரோவாக ராஜ்கபூரும், நாகேஸ்வரராவ் நடித்த வேடத்தில் ஜெமினி கணேசனும் நடித்தனர். இருவருக்கும் இடையில் நாயகியாக வைஜெயந்தி மாலா சிறப்பாக நடித்துப் பாராட்டைப் பெற்றார்.

நஸ்ரானா பிரமாதமாக ஓடி ஸ்ரீதரை ஆல் இந்தியா ஸ்டார் ஆக்கியது. அதற்கு வைஜெயந்தி மாலாவின் நட்சத்திரப் பங்களிப்புப் பெரிதும் உதவியது.

‘சித்தூர் ராணி பத்மினி’ சினிமாவில் வைஜெயந்தி மாலாவுக்கு டைட்டில் ரோல். அந்தப் படத்தின் அவுட்டோர் ஷூட்டிங்கில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை ஸ்ரீதர் குறிப்பிட்டுள்ளார்.

‘பெரிய அளவில் படம் எடுக்கணும்னு திட்டம் போட்டு, சிவாஜி, பத்மினி, வைஜெயந்தி மாலான்னு மெகா ஸ்டார்கள் நடிக்க, வலுவானதொரு கதையை எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறேன்’ என்றார் என்னிடம், உமா பிக்சர்ஸ் பட முதலாளி ராமநாதன் செட்டியார். எம்.ஜி.ஆரை வைத்து சக்கரவர்த்தித் திருமகள் வெற்றிப் படத்தைத் தயாரித்தவர்.

பிரம்மாண்ட கதையை தேடியவரிடம், ‘ஹிஸ்டாரிகல் ட்ரை பண்ணலாமே... ’ என்று அவரது டைரக்டர் திரு. சி.ஹெச். நாராயணமூர்த்தி சொல்ல, ‘சித்தூர் ராணி பத்மினி’ என்கிற சரித்திரக் கதையைப் படமாக்க முடிவு செய்தார்கள்.

என்னை வசனம் எழுத அழைத்தனர். நானும் ஒப்புக் கொண்டேன்.

‘சித்தூர் ராணி பத்மினி’ எதிர்பார்த்த அளவு வேகமாக வளரவில்லை. காரணம் பணத்தட்டுப்பாடு. மாதத்தில் நாலைந்து நாள்கள் மட்டுமே படப்பிடிப்பு நடக்கும்.

ஒரு ஷெட்யூலுக்கும் அடுத்த ஷெட்யூலுக்கும் ஏகமான இடைவெளி இருக்கும். ஆதலால் விட்டு விட்டு வசனம் எழுதுவது சிரமமாக இருந்தது. எனவே எனக்கு அதில் அத்தனை ஆர்வம் ஏற்படவில்லை.

உதய்பூரில் அவுட்டோர் ஷூட்டிங் நடந்தது. நடிகர் திலகத்தின் வற்புறுத்தலால் நானும் அவருடன் சென்றேன்.

வைஜெயந்தி மாலாவின் தாயார் வசுந்தராதேவியை, சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் ராமநாதன் செட்டியார். அதனால் வைஜெயந்தி மாலாவுக்கு அவர் மீது மரியாதை உண்டு. அந்த அடிப்படையில் தான் அவரை, செட்டியார் தன் படத்தில் புக் செய்தார்.

வைஜெயந்தி மாலாவுடன் எப்போதும் உடன் வருபவர் யதுகிரி பாட்டி. அவருக்குக் காலையில் எழுந்தவுடன் காபி குடித்தாக வேண்டும். இல்லையெனில் எல்லாரையும் உண்டு இல்லை என்றாக்கி விடுவார்.

எங்களுக்குத் தரப்பட்ட காபியில் வித்தியாசமான ஒரு வாடை வந்தது. யதுகிரி அம்மாளிடம் யாரோ போய், பசும் பாலுக்குப் பதிலாக, ஒட்டகப் பாலில் காபி தயார் செய்வதாகச் சொல்லிவிட, பெரிய ரகளை பண்ணி விட்டார் பாட்டி.

‘இப்போதே வைஜெயந்தியை அழைத்துக் கொண்டு மெட்ராஸ் கிளம்புகிறேன்...’என்று அடம் பிடிக்க ஆரம்பித்தார்.

‘நீங்கள் குடிப்பது பசும்பாலில் போடப்பட்ட காபியே’ என்று செட்டியார் எத்தனை முறை எடுத்துச் சொல்லியும், யதுகிரி அம்மையார் சிறிதும் சமாதானமாகவில்லை.

மறுநாள் முதல் தன் கண் எதிரேயே ஒரு பசு மாட்டைக் கொண்டு வந்து கட்டி, அதன் பாலைக் கறந்து காபி போட வேண்டும் என்று கண்டித்துக் கூறினார்.

பாவம் செட்டியார். ஷூட்டிங் வேலைகளை கவனிக்க முடியாமல், பசுவுக்காக உதய்ப்பூர் முழுவதும் சுற்றித் திரிந்தார்.

ஒரு தொத்தல் பசு மாட்டைப் பிடித்து வந்து, கஷ்டப்பட்டு அதன் பாலைக் கறந்து காபி போட்டுக் கொடுத்தார்கள். அதன் பிறகே யதுகிரி அம்மாள் முழுத் திருப்தி அடைந்தார். ’ - டைரக்டர் ஸ்ரீதர்.

நடிகர் திலகம் - ஸ்ரீதர் கூட்டணியில் வைஜெயந்தி மாலா நடித்தும் தோல்வியைத் தழுவியது சித்தூர் ராணி பத்மினி. அதற்கான காரணத்தை ‘கல்கி’ விமர்சனத்தில் தெரிந்து கொள்ளலாம்.

‘இதில் நடிக்க எப்படித்தான் சம்மதித்தாரோ சிவாஜி கணேசன் ..? சிவாஜிக்கும் ராஜா ராணி கதைகளுக்கும் ஏனோ ஒத்துக் கொள்ளவில்லை. மனோகரா, வீர பாண்டிய கட்டபொம்மன் இரண்டும் விதிவிலக்கு.

சித்தூர் ராணி பத்மினி நடனமாடுவது மனதுக்குக் கஷ்டமாக இருந்தாலும், வைஜெயந்தியின் அபிநயங்களும் முக பாவங்களும் நெஞ்சில் அழியா ஓவியங்களாகப் பதிந்து விடுகின்றன.

தன் அழகால் சித்தூர் அழிவதை எண்ணித் தன் எழிலை வெறுத்து வைஜெயந்தி தற்கொலைக்கு முயலும் கட்டம் உருக்கமாக இருக்கிறது.

ஆனால் வரலாற்றுப் படத்தில் வசனம் பேசும் போது வைஜெயந்தியிடம் உணர்ச்சி இல்லையே...! ’

----------------------

‘சித்தூர் ராணி பத்மினி படமே வைஜெயந்தி மாலா நடித்த கடைசி தமிழ் சினிமா. ’அதற்குப் பின்னர் அவர் கோலிவுட்டில் கோலோச்சவில்லை.

ஆனாலும் அவர் இந்தியில் நடித்தவை பிரமிக்கத்தக்கக் காலத்தை வென்ற காவியங்கள். தமிழர்கள் அனைவரும் வைஜெயந்தியின் இந்திப்படங்களுக்கு நிரந்தர விசிறிகளாகி குளுமை பெற்றனர்.

வைஜெயந்தியின் நடிப்புக்குத் தமிழகத்தில் நல்ல மதிப்பும், எதிர்பார்ப்பும், என்றும் மாறாத அபிமானமும் எப்போதும் உண்டு.

வைஜெயந்தி மாலா தொடர்ந்து தமிழில் நடிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் அனைவரும் விரும்பினார்கள். அவர்களில், தமிழ், தெலுங்கு, இந்தி என்று மும்மொழி சினிமாக்களில் வைஜெயந்தி மாலாவை அறிமுகப்படுத்திய ஏ.வி. மெய்யப்பச் செட்டியார் மிக முக்கியமானவர்.

காலம் அதற்கானக் கதவை அடைத்து விட்டது.

‘பெண் படத்துக்குப் பிறகு வைஜெயந்தி என் படங்களில் நடிக்கவில்லை. அவரது பாதுகாவலர்கள் கடைசிக் கட்டத்தில் என்னுடன் நடந்து கொண்ட சில செயல்பாடுகள், எனக்கு மனக் கசப்பை அளித்தது. வைஜெயந்தியை நான், மீண்டும் என் படங்களில் நடிக்க அழைக்காதபடிச் செய்தது.

ஆனால் அப்போது அதை எல்லாம் புரிந்து கொள்கிற நிலையில் வைஜெயந்தி இல்லை. எனவே அவர் மீது நான் இதற்கான குற்றத்தைச் சாட்டத் தயாராக இல்லை. தவிர, வைஜெயந்தி மீது இருந்த அபிமானமோ மதிப்போ எனக்கு என்றும் குறையவில்லை.

என் ஸ்டுடியோவை விட்டு விடை பெற்றுச் சென்ற பிறகு, வைஜெயந்தியை நான் 12 ஆண்டுகள் வரை நேரிடையாகப் பார்க்கவே இல்லை.

1965ல் பம்பாயில் ‘கிரகஸ்தி’ (தமிழில் ஜெமினியின் மோட்டார் சுந்தரம்பிள்ளை) இந்திப் படத்தின் பிரத்யேகக் காட்சியின் போது, அவரை மீண்டும் சந்தித்தேன். எனக்குப் பின்னால் கொட்டகையில் உட்கார்ந்திருந்தார் அவர்.

இடைவேளையில் என்னைப் பார்த்து, ‘மிஸ்டர் செட்டியார் சவுக்கியமாக இருக்கிறீர்களா...? ’ என்றார் கைகளைக் கூப்பி வணக்கம் தெரிவித்த படி.

நானும் ‘நன்றாக இருக்கிறேன்’ என்று பதில் சொன்னேன். மேலே எதுவும் பேசவில்லை!

வைஜெயந்தி என் படத்தில் நடிப்பாரா... ஏன் நடிக்கக் கூடாது...?

என்னைப் பொறுத்தவரை, அன்று முதன் முறையாக என் படத்தில் நடிக்க வந்த போது, நான் எப்படி உயர்ந்த அபிப்ராயத்தை அவர் மீது வைத்திருந்தேனோ, அதே எண்ணத்தில் தான் இன்றும் இருக்கிறேன்.

அவர் மீது எனக்கு எந்தவித மனக்கசப்பும் இல்லை. வெறுப்பும் கிடையாது.

எனவே என் படத்தில் அவரை நடிக்க வைக்க எந்த விதத் தடையும் இல்லை. என் படமொன்றில் அவர் நடிக்கக் கூடும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.’ - ஏவி. மெய்யப்பச் செட்டியார்.

சூப்பர் ஸ்டாரும் வைஜெயந்தி மாலாவும் ஓய். ஜி. மகேந்திரன் வகையில் உறவினர்கள். ரஜினியின் மாமியாராக மாப்பிள்ளை படத்தில் வைஜெயந்தி மாலாவை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்தன. ஆனால் அதுவும் கை கூட வில்லை. பின்பு அந்த வேடத்தில் நடித்தவர் ஸ்ரீவித்யா.

‘ஓஹோ எந்தன் பேபி... நீ வாராய் எந்தன் பேபி... ’ என்று உற்சாகமாக லவ் டூயட் பாடிய காதல் மன்னனைப் பற்றி, வைஜெயந்தி மாலா-

‘ என்னுடன் மிக அதிகப் படங்களில் நடித்த ஒரே தமிழ் ஹீரோ ஜெமினிகணேசன்.

அவரது குழந்தைகள் கமலா, ரேவதி, இருவரும் என் பரத நாட்டியப் பள்ளியில் நடனம் கற்றுக் கொண்டார்கள். அதனால் ஜெமினி கணேசன் குடும்பத்தாருடன் எனக்கு நிறையப் பழக்கம் உண்டு.

பார்த்திபன் கனவு படத்தில் என்னைப் பொறுத்தவரையில் குந்தவியாக நடித்த அனுபவம் மறக்க முடியாதது. அது என் முதல் சரித்திரப் படமும் கூட. சகஜமாகப் பழகும் சுபாவமுடையவர் ஜெமினி கணெசன்.

அவருடனான பார்த்திபன் கனவு அனுபவம் என் மனத்தில் அழுத்தமாகப் பதிந்து போன ஒன்று. தேவதா, நஸ்ரானா என்று இந்தியிலும் நாங்கள் இணைந்து நடித்தோம்.

வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் கர்வமான இளவரசி மந்தாகினியாக வருவேன். பத்மினியோடு போட்டி போடுவேன். பத்மினிக்கும் எனக்கும் நடுவில் சிக்கித் தவிக்கும் பாவத்தை மிக அருமையாக வெளிப்படுத்தினார் ஜெமினி கணேசன். - வைஜெயந்தி மாலா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com