தேவிகா 4. மறக்க முடியுமா...?

கிடைத்த சந்தர்ப்பத்தை இறுகப் பற்றிக் கொண்டு தனது அசாத்தியத் திறமையால், மேலும் பல படிகள் வேக வேகமாக முன்னேறிச் சென்றார் தேவிகா.


கிடைத்த சந்தர்ப்பத்தை இறுகப் பற்றிக் கொண்டு தனது அசாத்தியத் திறமையால், மேலும் பல படிகள் வேக வேகமாக முன்னேறிச் சென்றார் தேவிகா.

தேவிகாவின் வளர்ச்சிக்கு மிகச் சிறந்த எடுத்துக் காட்டு 1964, 1965 -1966ஆம் ஆண்டுகளில் தேவிகாவின் படங்கள் பெரும்பாலும் அவர் நடிகர் திலகத்துடன் இணைந்து நடித்ததாகவே அமைந்தது.

இடையில் இரு மாறுபட்ட படங்கள் வாழ்க்கைப்படகு மற்றும் கலைஞரின் மறக்க முடியுமா? அவை சிவாஜி இல்லாமலும், ஒப்பற்ற நடிப்பில் தேவிகா  சிறகு விரிக்க முடியும் என நிருபித்தன.

வாழ்க்கைப்படகு சினிமாவில் நடிக்க நேர்ந்தது குறித்து தேவிகா-
‘ஜெமினியில் வைஜெயந்திமாலா நாயகியாக நடிக்க ஜிந்தகி என்ற இந்தி சினிமாவைத் தயாரித்தார்கள்.  ஜிந்தகி பெரும் வெற்றி பெறவே  அதை ஒரே சமயத்தில் தமிழ்-தெலுங்கு இரண்டிலும் படமாக்க வாசன் திட்டமிட்டார்.

தெலுங்குக்கு என்.டி.ராமாராவ்-  தமிழுக்கு ஜெமினி கணேசன் நாயகர்கள் என முடிவானது.அந்தத் தருணத்தில் வாசன் சாரிடமிருந்து மீண்டும் எனக்கொரு வசந்த அழைப்பு வந்தது.
‘என்னோட இந்தப் படத்தில் இரண்டு மொழிக்கும் ஹீரோதான்  தனித் தனியே             தவிர, ஹீரோயின் நீ தாம்மா...’ என்றார். என் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கை ரொம்பவே என்னை உற்சாகப்படுத்தியது.

இந்தி, தெலுங்கில் ஓஹோவென்று ஓடிய ஜிந்தகி தமிழில் வாழ்க்கைப் படகு என்ற பெயரில் ரீமேக் ஆனது.

நேற்று வரை நீ யாரோ, சின்ன சின்னக் கண்ணனுக்கு, ஆயிரம் பெண்மை மலரட்டுமே, உன்னைத்தான் நான் அறிவேன், பழநி சந்தனவாடை... என்று,  விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையில் படத்தில் ஒலித்த கண்ணதாசனின் அத்தனைப் பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனவை.

எல்லா அம்சங்களும் சிறப்பாக இருந்தும், சில நேரங்களின்  ஜனங்களின் முடிவைப் புரிந்து கொள்வது சிரமமாகி விடுகிறது. வாழ்க்கைப் படகு வசூலில் தோல்வி  அடைந்தது. நான் மனம் நொந்து போனேன்.

வாழ்க்கைப் படகு பிரமாதமாக வெற்றி பெறாவிட்டாலும், வைஜெயந்திமாலா அதில் எனது நடிப்பைப் பாராட்டி வாழ்த்தியதை  என்னால் என்றும் மறக்க முடியாது.

‘வாழ்க்கைப்படகு படத்தைப் பொறுத்தவரையில் தேவிகாவுக்கே முதல் பரிசு. தேவிகாவின் அடக்கமான நடிப்பில் நிறைவைக் காண்கிறோம்.

தன் உதிரத்தில் உதிர்ந்த குழந்தை  என்று உணராமல்,  கணவர் அதனுடன் கொஞ்சி  விளையாடுவதை மறைவிலிருந்து கண்டு, உளம் நெகிழ்ந்து ஆனந்தக் கண்ணீர் சொறிகிறாரே தேவிகா... அதுதான்  நடிப்பின் உச்சம்.’ என்று ‘குமுதம்’ என்னைப் பாராட்டி எழுதியது நினைவில் நிற்கிறது.

ஆனந்த விகடன் இதழில் மீனாட்சி அம்மாள்- ‘தேவிகா இந்த மாதிரி நடித்து நான் பார்த்ததே கிடையாது. பிரமாதமாக நடனம் ஆடியும் நடித்துமிருக்கிறார். எனக்கு ரொம்பப் பிடிச்சதுங்க...’என்று  சொல்வது போல் எழுதி இருந்தார்கள்.

‘என்னை நம்பி வாசன் சார் ஒப்படைத்த பணியை ஒழுங்காகச் செய்தேன்’ என்கிற மனநிறைவு ஏற்பட்டது.  

ஒரு மொழியில் வாசன் சார் எடுக்கிற சினிமா நல்லா ஓடினா, அந்தப் படத்தை மறுபடியும் ரீமேக் செய்யும் போது ஒரிஜினல் சினிமாவில் நடித்தவர்கள், என்ன மாதிரி காஸ்ட்யூம் பயன்படுத்தினாங்களோ அதே கலரில் டிரஸ் தந்து நடிக்கச் சொல்லுவார்.

வாழ்க்கைப் படகு அவுட்டோர்லயும் அப்படி எனக்கு நடந்தது. ஜோக் நீர் வீழ்ச்சில வைஜெயந்தி மாலா யூஸ் பண்ண அதே கலர் டிரஸ்ஸில் என்னை வைத்து ஒரு லாங் ஷாட் எடுத்தாங்க. நான் அதைப் போட்டுக்கிட்டு ஓடினப்ப வாசன் சார் மனைவி  பார்த்துருக்காங்க.

‘என்னது இது... வைஜெயந்தி மாலா ஓடின மாதிரி இருக்குன்னு’ சொல்லியிருக்காங்க. உடனே யூனிட்ல,  ‘இல்லம்மா தேவிகாதான் ஓடினாங்கன்னு’ பதில் சொன்னாங்களாம். ஆனா அவங்க அதை நம்பவே இல்லையாம்.  

என்னை முதன் முதலா பார்த்தப்ப திருமதி பட்டம்மாள் வாசன், ’ என்னோட இன்னொரு பெண் நீ தாம்மா.’ என்று வாயாரச் சொன்னதை, அந்த ஆழமான அன்பை என்னால் எப்படி மறக்க முடியும்?

இப்ப ஜெமினி ஸ்டுடியோ இல்லை. எப்பவாச்சும் அந்தப் பக்கம் போனா, சட்டுன்னு பழைய நினைவுகள் ஞாபகத்துக்கு வரும். கூடவே அழுகையும் வந்துடும்.’ -தேவிகா.
-------------

‘சந்தானம்’ என்ற பெயரில் தெலுங்கில் வெளியான சினிமா, தமிழில் கலைஞரின் ‘மறக்க முடியுமா?’ என்றானது. 1966 ஆகஸ்டு வெளியீடு.

மு. கருணாநிதியின் வசனத்தில் தேவிகா நடித்த ஒரே படம். அவருக்கு ஜோடி முத்துராமன்.

கருணாநிதி எழுதிய உரையாடல்கள்  தமிழகத்தில் தளிர்களுக்கும் மனப்பாடம்.  அவர் எழுதிய சினிமா பாடல்களைக் கேட்டால் சட்டென்று பட்டியலிட தி.மு.க.வினர் கூடத் திணறுவார்கள்.

உலகத் தமிழர்கள் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் நீங்காத இடம் பிடித்த கலைஞரின் ஒரே பாடல், மறக்க முடியுமா? படத்தில், பி. சுசிலாவின் குரலில், தேவிகா பாடுவதாக அமைந்த

’காகித ஓடம் கடல் அலை மீது’ மட்டுமே.
பூமி சுற்றும் வரை கலைஞர், தேவிகா, பி. சுசிலா மூவரையும் ஞாபகப்படுத்தும் சோக கீதம்! அந்தப் பாடலுக்கு ஒரு வரலாறே உண்டு.

மறக்க முடியுமா படத்தின் இசை அமைப்பாளர் டி.கே. ராமமூர்த்தி. பாடல் எழுத வந்தவர் கவிஞர் மாயவநாதன்.பாடலாசிரியரிடம் ‘மாயவநாதா, மாயவநாதா, மாயவநாதா என்று மூன்று முறை கூறி, இதுதான் ட்யூன். பாட்டை எழுதுங்கள்’ என்றார் டி.கே. ராமமூர்த்தி.

திணறிப் போனார் இளம் கவிஞர். பிறகு கலைஞரிடம் போய் தன் இயலாமையைத் தெரிவித்தார். ‘ராமமூர்த்தியிடம் ட்யூன் கேட்டால் என் பெயரையே மீண்டும் மீண்டும் சொல்கிறார். அதை வைத்து எப்படிப் பாட்டு எழுதுவது...?’ என்றவாறே திரும்பிச் சென்றார்.

மு.கருணாநிதி தனக்கே உரிய புத்திசாலித்தனத்துடன் 1.மாயவநாதா - காகித ஓடம்,2. மாயவநாதா-கடல் அலை மீது, 3. மாயவநாதா- போவது போலே மூவரும் போவோம் என்று எழுதினார்.

சற்றும் எதிர்பாராமல் கலைஞர் தீட்டிய பாடல் அரசியலை  விடவும் அழியாப் புகழை அவருக்குத் தேடித் தந்தது.வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் அபலைப் பெண் தங்கம். பால்ய வயதில் அநாதையாகி, உடன் பிறந்தவர்களை தொலைத்தது மட்டுமல்லாது காதல் கணவனையும் இழந்த கைம்பெண்.

விதி அவளை  விலைமாதாக வீதியில் நிறுத்தி அரங்கேற்றம் செய்கிறது. தங்கம் தனது சகோதரி என்பதை அறியாது, குடிபோதையில் சிறு வயதில் ஆழ்மனத்தில் நன்கு பதிந்த‘காகித ஓடம் கடல் அலை மீது’ பாடலைப் பாடியவாறு, தம்பி மாணிக்கம் அக்காளிடமே இன்பம் துய்க்க வருகிறான். அதே ‘காகித ஓடம்’ பாடலால் தம்பியை இனம் கண்டு கொள்கிறாள் தங்கம்.

அவமானத்தில் அலறித் துடித்து, துயரத்தின் தாக்கம் தாளாமல் உயிரை  விடுகிறாள். மாணிக்கமாக நடித்தவர் எஸ்.எஸ். ஆர். தங்கமாக மாறுபட்டக் கதாபாத்திரத்தில் படம் முழுவதும் தன் அற்புத நடிப்பால் பொன்னாக ஓளி வீசினார் தேவிகா.

உவமைக் கவிஞர் சுரதா எழுதி, பி. சுசிலாவின் குரலில் ஒலித்த ‘வசந்த காலம் வருமோ நிலை மாறுமோ’ என்ற பாடலும் மறக்க முடியுமாவின் மற்றொரு சூப்பர்ஹிட் பாடல்.
---------
மறக்க முடியுமா படத்திற்குப் பிறகு தமிழில் தேவிகா நாயகியாக நடித்தவை 1968ல் தெய்வீக உறவு, தேவி  ஆகியன.

தெய்வீக உறவு படத்தில் தேவிகாவுக்கு சீதா-கீதா என இரட்டை வேடங்கள். அவருக்கு ஜோடி மக்கள் கலைஞர் ஜெய்சங்கர். அவர்கள் இருவரும் இணைந்து நடித்த ஒரே படம் தெய்வீக உறவு.

ஏ.கே. வேலன் தயாரித்து இயக்கிய படம் தேவி . தேவிகாவின் ராசியான ஹீரோ முத்துராமன் நடித்தும் ஓடவில்லை.

1968க்குப் பிறகு தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாகத் தன் முழு கவனத்தைச் செலுத்தத் தொடங்கினார் தேவிகா. தமிழில் அவரது ஹீரோயின் எபிசோட் நிறைவு பெற்றது.
----------

இனி தேவிகாவின் இனிய அனுபவங்கள் உங்களுக்காக-  
‘குடும்பப் பாங்கான கேரக்டர்களை எனக்குத் தந்து ரசிகர்களிடம், குறிப்பாகத் தாய்மார்களிடம் என்னை நல்ல விதத்தில் வெளிப்படுத்திய டைரக்டர் ஏ. பீம்சிங். தனது படங்களில் தொடர்ந்து அதிக முறை பங்கேற்க வைத்து, என் திறமையை வளர்த்தவரும் அவரே.

நடிச்செல்லாம் காட்ட மாட்டார்.

‘இதுதாம்மா கதை. அதுல உன் கேரக்டர் இப்படியிருக்கணும்னு’ சொல்லி அப்பவே அந்தக் கதாபாத்திரம் மேலே நமக்கு ஓர் ஈர்ப்பை ஏற்படுத்தி விடுவார்.

பீம்சிங் இயக்கத்தில் ஆரம்பத்தில் நான் தோன்றிய சகோதரி, களத்தூர் கண்ணம்மா, சிவாஜியோடு நடித்த பாவமன்னிப்பு, பந்த பாசம், பழநி, சாந்தி, அத்தனையிலும் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. இப்பவும் அவை ஜனங்களால் ரசிக்கப்படுகிறது.

பி.ஆர். பந்தலு ஒரு தயாரிப்பாளர் மட்டுமல்ல. சிறந்த டைரக்டரும் கூட. அவர் ஒரு முறை என்னிடம்,  ‘நடிப்புங்கறது விளையாட்டு மைதானத்துல பந்தாடற மாதிரிதான் தேவிகாம்மா...’ என்றார்.

ஒரு காட்சியைச் சொல்லிட்டு,  ‘இது தாம்மா சீன். நீ உன் திறமையைக் காட்டு. ஏதாவது சந்தேகம்னா சிவாஜி சார் உன்னை கைடு பண்ணுவார்.’ என்பார்.

தெலுங்கிலும் பந்தலு சாரின் ஏழெட்டு சினிமாக்களில் நான் நடித்திருக்கிறேன். கர்ணன், முரடன் முத்து போன்ற பத்மினி பிக்சர்ஸ் படைப்புகளில்  பட்டை தீட்டப்பட்ட என் நடிப்புக்கு, டைரக்டர் பந்தலுவின் அத்தகைய அணுகுமுறையும் ஒரு காரணம் என்றே சொல்லலாம்.

முரடன் முத்து படத்துக்குப் பிறகு நான் ரொம்பவே பிஸி  ஆகிட்டதால் பந்தலு சார் படங்களுக்கு அவர் கேட்ட தேதிகளில் என்னால் கால்ஷீட் கொடுக்க முடியாமல் போயிற்று.

தெலுங்கில் என்னைப் பிரபலப்படுத்திய டைரக்டர்னா அவர் சி.எஸ். ராவ். நடிகை ராஜ சுலோசனாவின் கணவர்.

நான் நடித்து சுந்தர்லால் நஹாதா எடுத்த அத்தனை சினிமாக்களிலும் ராவ் சாரே டைரக்டர். நல்லா ஆக்ட் பண்ணி காட்டுவார். என்னோட அதிகமா டூயட் பாடிய  ஒரே ஹீரோ என்.டி. ராமாராவ். கணக்கு பார்த்தா 50 படங்களுக்கு மேலயே இருக்கும்.

தெலுங்கு செட்கள்ள அவரோட ஜோடியா நிச்சயம் நான் தான் நடிச்சிட்டிருப்பேன்ற பரிபூரண நம்பிக்கை என்.டி.ஆர். ரசிகர்களுக்கு உண்டு. அதனால தேவிகாகாரு எங்கே காணோம்னு என்.டி.ஆர். கிட்டயே உரிமையா கேட்பாங்களாம்.

படத் தொழிலில் அன்றாடம் நான் சந்திக்கிற பிரச்னைகளை எல்லாம் எப்போதுமே  வெளியில் சொல்ல மாட்டேன். எனக்குள்ளேயே பூட்டி வைத்துக் கொள்வேன்.‘நான் நெருக்கடிகளில் சிக்கித் தவிப்பதை எப்படியோ  தெரிந்து கொண்டு, என்.டி. ராமாராவ் என்றுமே என்னால் மறக்க முடியாத பல உதவிகளைச் செய்திருக்கிறார்!’-- தேவிகா.
---------------

இயல்பாகவே பெண்களைப் புரிந்து கொள்வதில் ஆயிரமாயிரம் சிரமங்கள் உண்டு. அதிலும் தேவிகா என்கிற  ஒளி வீசும் திரைத் தாரகையை, எளிதில் உணர்ந்து கொண்டு நடிப்பு சொல்லித் தருவது,  எம்.ஜி.ஆர்.- சிவாஜியை இயக்கிய கே. சங்கர் போன்ற இமாலய இயக்குநர்களுக்கு அதிகபட்ச சவாலாக இருந்தது.

கே. சங்கரும் தேவிகாவும் தொடர்ந்து ஆடிப்பெருக்கு, ஆண்டவன் கட்டளை, அன்புக்கரங்கள் ஆகிய மூன்று படங்களில் பணியாற்றினார்கள். தேவிகாவுடனான கே. சங்கரின் தோழமை அனுபவம் -

‘ஆடிப்பெருக்கு சினிமாவில் தேவிகா நடிக்க வந்தார். முதல் பார்வையிலேயே எனக்கு தேவிகா பற்றி அவ்வளவு நல்ல அபிப்ராயம் ஏற்படவில்லை.

ஏன் எப்படியடா... இவரை வைத்து...  என்று தயக்கமாகக் கூடத் தோன்றியது. ஆனால் ஆரம்ப தினத்தன்றே ஆளை எடை போடுவதில், எனக்கு அத்தனை சாமர்த்தியம் போதாது என்பதைத் தெரிந்து கொண்டேன்.

நான் நினைத்தற்கு மாறாக, கட்டிய பசுவாக நடந்து கொண்டு தேவிகா என்னைத் திகைக்க வைத்தார்.

ஒரு காட்சியைப் படமாக்கும் முன் இருமுறை ஒத்திகை பார்த்துவிட்டு, பாதகமில்லை படமாக்குவோம் என்று அரை மனத்துடன் ஷாட் வைத்தால் ஹீரோயின் தேவிகா என்னை ஓகே சொல்லவே  விட மாட்டார்.

பூரணத் திருப்தி என்று நான் கூறுகிற வரையில், தனக்கே தனது நடிப்பு நிறைவு என்று தேவிகாவின் உள்ளத்தில் உறைத்தால்  மட்டுமே, அதுவும் கூடுதல் ரிகர்சல்களுக்குப் பிறகு ஒரு சீனை எடுக்கலாம் என்பார்.

காட்சி சிறப்பாக வர எத்தனை முறை வேண்டுமானாலும் அலுக்காமல் சலிக்காமல் ஒத்திகை பார்த்துக் கொள்வார். தேவிகாவின் நடிப்பைக் கண்டு நான் முகம் சுளித்ததே கிடையாது.

தொழிலில் நேர்த்தியாக நடந்து கொள்ளும் தேவிகாவுக்குக் குசும்பும் கூடப் பிறந்த ஒன்று. எனது கேமரா மேன் தம்பு. பாவம் அவர்...

அநேக தொல்லைகளுக்குப் பிறகு அவுட்டோரில் ஆங்கிள்,  லைட்டிங் எல்லாம் பார்த்து, ஒளிப்பதிவாளர் தம்பு கேமராவை ஓட  விடும் நேரம், தேவிகா டச் அப் என்பார்.

மீண்டும் அவரது எழில் கொஞ்சும் இதழ்களுக்கு ஒய்யாரமாக உதட்டுச் சாயம் பூசிக் கொள்வார். கண்களில் மை கரைந்து  விட்டதா என்று திரும்பவும் கண்ணாடி பார்ப்பார். ‘ஒன் மினிட் ப்ளீஸ்...’ என்று தேவிகா கொஞ்சிக் கொஞ்சி கெஞ்சுகையில் எங்கள் கோபம் மறைந்தே போகும்.’ -கே. சங்கர்.   

‘பொள்ளாச்சி சிவலிங்கம் வீரப்பா’- வில்லன்களுக்கான இலக்கணத்துக்குத் தமிழ் சினிமா ல் பிள்ளையார் சுழி போட்ட பிதாமகன்.

அருமையான குணச்சித்திர நடிகர். தேவிகா எம்.ஜி.ஆரோடும், சிவாஜியோடும் நடித்த  ஆனந்த ஜோதி, ஆண்டவன் கட்டளை படங்களின் தயாரிப்பாளர்.

‘தேவிகா எனக்கு ஒரு பாப்பா. நானும் அதுவும் முதலாளி- நடிகை மாதிரியா பழகறோம். தேவிகா நம்ம வீட்டுப் புள்ள மாதிரி. நினைச்சா வண்டியைத் தூக்கிக்கிட்டு நம்ம வீட்டுக்கு வந்துடும்.

ஃப்ரண்ட்ஷிப்காக ஷூட்டிங்  டிலே ஆனதா உண்டுங்களா...? அது அறவே கிடையாது. தேவிகா எங்க வீட்டுப் பெண். எங்க படத்துல உசுரைக் கொடுத்துத்தான் நடிக்கும். ஆண்டவன் கட்டளை அவுட்டோர்ல தேவிகா உசுருக்கே ஆபத்து ஏற்பட இருந்துச்சே...’  - பி.எஸ். வீரப்பா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com