தேவிகா 5. காட் பாதர்..!

கண்ணதாசனின் நட்புக் களஞ்சியத்தில் கடைசிவரை நம்பகமான தோழியாக உலா வந்து, கவிஞரது நெஞ்சத்தில் நீங்காத இடம் பிடித்தவர் தேவிகா.

கண்ணதாசனின் நட்புக் களஞ்சியத்தில் கடைசிவரை நம்பகமான தோழியாக உலா வந்து, கவிஞரது நெஞ்சத்தில் நீங்காத இடம் பிடித்தவர் தேவிகா.

‘பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே...!’என்ற ஆனந்தஜோதி படப்பாடலை உரிமையுடன் உற்சாகம் பொங்கக் கவிஞர் முன்பே பாடி, சகஜமாக கேலி, கிண்டல் செய்யும் அளவு கண்ணதாசனின் அன்பையும் அன்யோன்யத்தையும் பெற்றவர் தேவிகா.

பாலிருக்கும் பழமிருக்கும், சொன்னது நீதானா, என்ன நினைத்து, முத்தான முத்தல்லவோ, வாழ நினைத்தால் வாழலாம், அத்திக்காய் காய் காய்,  கங்கைக்கரை தோட்டம், ஊமைப் பெண் ஒரு கனவு கண்டாள், தூக்கனாங் குருவிக்கூடு, கள்ள மலர்ச் சிரிப்பிலே, இரவுக்கு ஆயிரம் கண்கள், நினைக்கத் தெரிந்த மனமே, கால மகள் கண் திறப்பாள் செல்லையா,  நெஞ்சம் மறப்பதில்லை, கண்கள் எங்கே, கண்ணுக்குக் குலமேது, அமைதியான நதியினிலே, அழகே வா, ஆயிரம் பெண்மை மலரட்டுமே, உன்னைத்தான் நான் அறிவேன், ஊரெங்கும் மாப்பிள்ளை ஊர்வலம், நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய், பொதிகை மலை உச்சியிலே, ஓஹோ ஒஹோ ஓடும் எண்ணங்களே, சொல்லடா வாய் திறந்து அம்மாவென்று, என்று காலத்தால் அழியாத சாகாவரம் பெற்ற கவிஞர் - பி. சுசிலா இணைந்த சிரஞ்சீவி  திரை கானங்களுக்கு மிக அதிகமாக வாயசைத்த பெருமைமிக்கவர் தேவிகா.

கவிஞர் தயாரித்த மாறுபட்ட திரைப்படம் தாயே உனக்காக. அதில் சிவாஜி-பத்மினி, எஸ்.எஸ்.ஆர்- விஜயகுமாரி,  முத்துராமன்-தேவிகா ஆகியோர் கவுரவ வேடங்களில் நடித்திருந்தனர். அதில் ரீடா என்கிற கிருத்துவப் பெண் வேடம் தேவிகாவுக்கு.

தேவிகா பாடுவதாக அதில் இடம் பெற்ற ‘ஏசு நாதர் பேசினால் அவர் என்ன பேசுவார்’ என்கிற பாடல்  வானொலி நேயர்களால் மிக நீண்ட காலம் விரும்பிக் கேட்கப்பட்டது.கிருத்துமஸ் தோறும் தவறாமல் ஒலிபரப்பாகும்.   

இத்தனைக்கும் அந்தப் பாடலைப் பாடியவர் பி. சுசிலா இல்லை. புதிய பாடகியான வசந்தா. யார் பின்னணி பாடினாலும் கவிஞர் - தேவிகா இணைந்து பணியாற்றிய பாடல்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் ஆனவை.

கண்ணதாசன் பற்றிய தேவிகாவின் மலரும் நினைவுகள்-
‘கவிஞர் பற்றி நிறையவே சொல்லலாம். அவர் எனக்கு ஒரு காட்ஃபாதர் மாதிரி.

நெஞ்சில் ஓர் ஆலயம் தயாரானதும் ரஷ் பார்த்த கவிஞர் கண்ணதாசன் என்னிடம், ‘தேவிகா... நீ வேணும்னா பாரேன். இந்தப் படம் வெளிவந்த பிறகு  நீ கேட்காமலே உன் சம்பளம் கூடிடும்’ என்றார். அந்த அளவுக்குக் கதை மீதும் என் கேரக்டர் மீதும் கவிஞருக்கு நம்பிக்கை.

என் வாழ்வில் நான் மறக்க முடியாத மிகச் சிலரில் கவிஞரும் இருக்கிறார். கலை உலகில் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் மனிதர்களையே, பெரும்பாலும் சந்தித்து வந்த எனக்கு கவிஞர் ஒரு குழந்தை மனம் படைத்தவராகத் தெரிந்தார்.

அப்ப நாங்க வெங்கட் நாராயணா ரோட்டில் உள்ள வீட்டில் இருந்தோம். கவிஞருக்கு எங்க வீடு பக்கம்.

நேரம் கிடைக்கிறப்ப வருவார். பல விஷயம் பேசுவார். கண்ணதாசன் மனசு ஒரு குழந்தை மாதிரி. அவர் தப்பாவே ஏதாவது சொன்னாலும் நமக்கு சீரியஸா எடுத்துக்கத் தோணாது.

கவிஞர் எனக்கு எவ்வளவோ செய்திருக்கிறார். ஏற்ற சமயத்துல உதவியிருக்கிறார். பதிலுக்கு நான் செய்ததெல்லாம் ஒரு தடவை கண்ணதாசன் பிறந்த நாளுக்கு அவரது போட்டோவை வெள்ளி பிரேம் போட்டு பிரஸண்ட் பண்ணினேன் அவ்வளவே.

ஒரு தரம் என்னிடம் பேசறப்ப, ‘எனக்கு எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் என்னடிங்கிற வார்த்தை வந்துடும். நானும் எத்தனையோ முறை பார்க்குறேன். உங்கிட்ட பேசறப்ப மட்டும் ‘என்னம்மான்னு’மட்டுமே வருதும்பார்.

திடீர்னு ஒரு டைரக்டர் கிட்டே இப்ப சண்டை போட்டுக்கிட்டு வந்தேன்னாரு. எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. எதுக்காகத் தகராறு வந்துச்சுன்னு கேட்டேன்.

‘அட உனக்காகத்தாம்மா... உன்னைப் பத்தித் தப்பாப் பேசினார். அது எனக்குப் பிடிக்கலே. என்னால அதை சகிச்சுக்க முடியலே. உன்னை எனக்கு நல்லாவே தெரியும். அப்படியிருக்க எங்கிட்டயே உன்னைக் குறைச்சு சொல்லலாமா...?’ என்றார் கவிஞர்.

அந்தப் பதிலிலும் அதை அவர் சொன்ன த்வனியிலும் தெரிந்த அக்கறையில் மெய் சிலிர்த்துப் போனேன்.

தனக்கு வேண்டியவர்களை யாராவது பழித்து விட்டால் கண்ணதாசனுக்குக் கடும் கோபம் வரும்.

அவர்களை உண்டு இல்லை என்று ஒரு வழி ஆக்கி விடுவார். அவர்களால் தனக்கு இத்தனை லாபம் இருக்கிறதே... பகைத்துக் கொள்ளக் கூடாதே என்றெல்லாம் உள்ளுக்குள்ளே கணக்கு பண்ண மாட்டார். தனக்கு எது நியாயம் என்று தோன்றுகிறதோ அதை அப்படியே வெளிப்படுத்துவார்.

மனசுக்குள் ஒண்ணை வெச்சிக்கிட்டு வெளியில் நாடகம் நடிக்கிற  வித்தையெல்லாம் கண்ணதாசனுக்கு தெரியவே தெரியாது.

அவர் தயாரித்த படங்களில் தொடர்ந்து நடிக்கிற வாய்ப்பு எனக்குக் கிடைச்சது. அதுலயும் கறுப்புப் பணம் மாதிரியான சில சினிமா மிஸ் ஆச்சு.  என் கால்ஷீட்டுக்காகக் காத்திருந்து பார்த்துட்டு அது கிடைக்காதுன்னு தெரிஞ்சதும் கே.ஆர்.விஜயாவை நடிக்க வைத்தார்.

கடைசியா அமெரிக்கா போறப்பவும் எங்கிட்ட சொல்லிட்டுப் போனார். அங்கேயே அவர் காலமாயிட்டார்ன்ற தகவல் கிடைச்சதும் நான் தூங்கவே இல்ல.

நமக்கு வேண்டியவங்க இறந்துட்டா என்ன மாதிரி பாதிக்கப்படுவோமோ அதே உணர்வு எனக்குக் கவிஞர் மரணத்துல இருந்தது.

கண்ணதாசன் தனது வாழ்க்கைச் சரித்திரத்தில் மூன்று நடிகைகளை மட்டுமே பாராட்டி எழுதியிருக்கிறார். அந்தப் பட்டியலில் டி.ஆர். ராஜகுமாரி, மனோரமா ஆகியோருடன் நானும் இடம் பெற்றுள்ளேன் என்பதே எனக்குக் கிடைத்த பெருமை! ’ - தேவிகா.

குமுதம் வார இதழில் வெளியானது கவிஞர் கண்ணதாசனின்  ‘இந்த வாரம் சந்தித்தேன்’ தொடர். அதில் ஓர்   அத்தியாயத்தில், தனக்கும் தேவிகாவுக்கும் இடையே நிலவிய தோழமை குறித்தும் விரிவாக எழுதியுள்ளார் கவிஞர்.

‘சினிமா நடிகைகள் எல்லாருமே ஒரே மாதிரி குணங்கெட்டவர்களோ, நடத்தை கெட்டவர்களோ அல்ல; அவர்களிலே உன்னதமான குணம் கொண்டவர்கள் பலர் இருக்கிறார்கள்.

சுற்றம் காத்தல், விருந்தோம்பல், மரியாதை அனைத்தும் தெரிந்தவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். தயாரிப்பாளர்களின் கழுத்தை நெரித்த நடிகைகளும் உண்டு. கை கொடுத்து உதவிய உத்தமிகளும் உண்டு. அதில் இரண்டாம் வகையைச் சேர்ந்தவர் தேவிகா!

அவர் கதாநாயகியாக நடித்த போது இன்றைய பல நடிகைகளை விட, நன்றாகவே நடித்தார். அழகாகவே இருந்தார். வாழ்க்கையை தேர்ந்தெடுக்கத் தெரியாத காரணத்தால் தோல்வி  அடைந்தார். இல்லையென்றால் தேவிகாவின் குணத்துக்கும், நடத்தைக்கும், எவ்வளவோ நிம்மதியான வாழ்க்கை அமைந்திருக்கும்.      

‘என்ன, உங்கள் படங்களில் தேவிகாவை  விட்டால் வேறு யாரும் கிடைக்க வி வில்லையா?’ என்று நண்பர்கள் பலர் என்னைக் கேட்பார்கள்.

‘எந்தக் குடை என்னை மழையிலிருந்தும் வெயிலிலிருந்தும் காப்பாற்றுகிறதோ - அந்தக் குடையைத்தானே நான் தேர்ந்தெடுக்க முடியும்’ என்பேன் நான்.

தேவிகா படப்பிடிப்புக்கு நேரத்தில் வருவார். பணம் கொடுத்தால் தான் வருவேன் என்று பிடிவாதம் செய்ய மாட்டார். தயாரிப்பாளர்களின் கஷ்ட நஷ்டங்களில் முழுக்கப் பங்கு கொள்வார்.

என்னைப் பொறுத்தவரை, சில நேரங்களில் நான் திட்டிவிட்டாலும், அழுது  விடுவாரே தவிர, முறைத்துக் கொள்ள மாட்டார்.     

தமிழ் நாட்டிலேயே அதிகம் வளர்ந்த ஆந்திரப் பெண்மணியான தேவிகா, தெலுங்கை  விடத் தமிழைத்தான் அழகாக உச்சரிப்பார்.

குடும்பப் பெண்ணாக நடித்தால், மயக்கம் தரக்கூடிய உருவங்களில் இவரது உருவமும் ஒன்று. இந்த வாரம், ஒரு தெலுங்குப் படம் எடுப்பது பற்றிப் பேச அவர் என்னைச் சந்தித்தார்.

குடும்பத்துக்காகவே வாழும் சினிமா நடிகைகளில் தேவிகாவும் ஒருவர். எந்தக் காலத்திலும் சொந்த ஆசைகளுக்காக, குடும்பத்தின் நலனை அவர் தியாகம் செய்ததில்லை.

‘அப்பா ’ என்றொரு தமிழ் சொல் தமிழில் உண்டு. இது ’பா ’ என்பதன் எதிர்மறை. ’பிரதட்சிணம் அப்பிரதட்சிணம்’ என்பது போல், ‘ஒரு பாவமும் அறியாதவர்’ என்பதே அதற்குப் பொருள்.

மனமறிந்து அல்ல தற்செயலாகக் கூட யாருக்கும் தீங்கு செய்தறியாதவர் தேவிகா.

‘ஆண்டவன் நல்லவர்களை சோதிப்பான்’ என்றபடி, அவருக்குச் சில சோதனைகள் வந்தன. ஆண் துணை இல்லாத தேவிகா, அந்தச் சோதனைகளிலிருந்து தம்மைத் தாமே காத்துக் கொள்ள வேண்டியவரானார்.

‘நந்தன் படைத்த பண்டம்,  நாய்பாதி, பேய்பாதி’ என்பார்கள் என் தாயார்.

அது போல், தேவிகாவின் பணத்தையும் சிலர் சாப்பிட்டு விட்டுப் போனார்கள். அதனை எண்ணி தேவிகா துன்புறவில்லை.

எப்போது அவருக்கு எந்தத் துன்பம் வந்தாலும், எனக்குத்தான் டெலிபோன் செய்வார். என்னவோ ஆண்டவன் அவருக்கும் எனக்கும் ஓர் ஒற்றுமையைக் கொடுத்தான். எனக்கு இருப்பது போலவே தேவிகாவுக்கும் ரத்தக் கொதிப்பு இருக்கிறது.

சினிமா உலகில், ஒவ்வொரு நாளும் சோதனைகளைத் தாங்கிக் கொண்டு மற்றவர்களுக்காகவே வாழும் உயர்ந்த பெண்களில் ஒருத்தி தேவிகா.

துரதிர்ஷ்டவசமாக எனது மங்கல மங்கை படம் பாதியிலேயே நின்று  விட்டது. அதில் ஒரு  விரகதாபப் பாடலுக்கு தேவிகா நடித்ததைப் போல அதற்கு முன்னாலும் பின்னாலும் எவரும் நடித்ததில்லை.

லால்பகதூர் சாஸ்திரி காலத்தில் பாகிஸ்தான் யுத்தத்தின் போது, சினிமா நடிகர் நடிகைகள் பெரும்பாலோரோடு, நானும் பஞ்சாப் முழுவதும் சுற்றுப் பிரயாணம் செய்தேன்.  

இரண்டு  விமானப் படை வானூர்திகளில் பயணம்.  விமானம் உயரமாக இருக்கும். அதற்கும் ஏணிக்கும் உள்ள தூரம் மூன்றடி உயரம் இருக்கும்.

எல்லாரும் மளமளவென்று ஏறி  விடுவார்கள். எனக்கு மட்டும் கால்கள் நடுங்கும். அந்நேரம் எனக்குக் கை கொடுத்து  விமானத்துக்குள், இழுத்துக் கொள்வார் தேவிகா.

வாழும் போது உலகம் கூட வரும். தாழும் போது ஓடி விடும். இது வாடிக்கை. இதை நன்றாக உணர்ந்தவர் தேவிகா.

சினிமா படப்பிடிப்பு, இப்போது தெருக்கூத்து மாதிரி ஆகிவிட்டது. அந்தக் காலங்களில் அது ஒரு தெய்வீக அம்சமாக இருந்தது.

கதை, வசனம், பாட்டு, இயக்கம், நடிப்பு எல்லாமே பொறுப்போடு இயங்கிய காலம் அது.

சமயங்களில் தனியாக உட்கார்ந்திருக்கும் போது அந்தக் காலங்களை நினைத்துப் பார்ப்பேன்.

சில உன்னதமான உருவங்கள் படம் படமாகத் தோன்றும். அவற்றில் தேவிகாவின் வடிவமும் உண்டு.

தேவிகா - ஒரு நாள் கூடப் படப்பிடிப்பை ரத்து செய்து என் தூக்கத்தைக் கலைக்காத தேவிகா.

என் முகம் கொஞ்சம் வாடியிருந்தால் கூட, ‘அண்ணனுக்கு என்ன கவலை?’ என்று கேட்டு, என்னைப் புகழ்ந்தாவது ஒரு நிம்மதியை உண்டாக்கி விடும் தேவிகா.

அவர் ஒரு சினிமா நடிகைதான்.

ஆனால் பல குடும்பப் பெண்களை  விட உயர்ந்த குணம் படைத்தவர்.

‘பிரமீளா’ என்ற தேவிகாவை நான் நினைக்கும் அளவுக்கு யார் நினைக்கப் போகிறார்கள்?’

--கண்ணதாசன்.

***

தேவிகாவின் மனம் திறந்த மடல் -

பிறந்த தேதி- ஆகஸ்டு 16.

நட்சத்திரம்-பூரம்

ராசி- சிம்மம்.

பிடித்தது - சிதார், வீணை இசை கேட்பது

பிடிக்காதது - பகலில் தூங்குவது.

கோபம்- அசுத்தமானவர்கள், பொய் சொல்பவர்கள்,
திருடுகிறவர்கள், ஆகியோரை நினைத்தால் வருவது.

விருப்பமான உணவு- சிக்கன்.

அஞ்சுவது - இருட்டுக்கும், தேளுக்கும்

பிடித்த வண்ணம் - ஆரஞ்சு. சிவப்பு

சிரிப்பு - அதிகமாகச் சிரித்துச் சிரித்து என் உடலே பெருத்துவிட்டது.

பொறாமை - ஒல்லிக்குச்சி மனுஷிகளிடம் ஏற்படுவது.
அடுத்து அதிக நேரம் தூங்குபவர்களைப் பார்த்து. - கவலைகளை மறந்து எவ்வளவு நிம்மதியாகத் தூங்குகிறார்களே என்று மலைத்துப் போவேன்.

மூட நம்பிக்கை -  சாஸ்திரத்தில் பலத்த ஈர்ப்பு உண்டு எனக்கு. ராகு காலத்தில் புதிதாக யார் வந்தாலும் பேச மாட்டேன்.

அதிகாலையில் என்னை யார் சந்திக்க வந்தாலும் இல்லை என்று சொல்லச் சொல்வேன். எந்த முகத்திலாவது  விழித்து அன்றைய பொழுது பூராவும் போராட்டமாகி  விட்டால் என்ன செய்வது?

மறக்கவே முடியாத ஒரே சம்பவம்-  பிரபலமானத்  திரைத்தாரகையாக என்னிடம் ஓடி வந்து எத்தனையோ பேர் கையெழுத்து வாங்கிப் போவார்கள். பாரதப் பிரதமர் - லால் பகதூர் சாஸ்திரி அவர்களது மனைவியை நேரில் சந்தித்து, நான் ஆட்டோகிராஃப் வாங்கியது, என் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வுகளில் மிக முக்கியமானது.

ஆசைகள் - எனக்குப் படிக்கிற ஆசை அதிகம்.  

உலகம் சுற்ற. ஆசைக்கு  ஒரு பெண்ணும் ஆஸ்திக்கு ஓர் ஆணும் பெற்றுக் கொள்ள.

எங்காவது கிராமத்துக்குச் சென்று அமைதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எண்ணம் மட்டும் எனக்கு எப்போதும் உண்டு.

பெருமைகள் - 1. நடிகர் திலகமும் நானும் ஜோடியாக நடித்த முதல் படம் பாவ மன்னிப்பு. அது வெள்ளி விழா கொண்டாடியதும், அகில இந்தியாவிலேயே சிறந்த இரண்டாவது படமாக தேசிய விருது பெற்றதும்.

2. என்னோடு அதிகத் தமிழ்ப் படங்களில் நடித்த ஹீரோ சிவாஜி கணேசன் என்பதில் கிடைத்த பேரும் புகழும்!

3. நான் தயாரித்த வெகுளிப்பெண் படத்துக்கு தேசிய விருது கிடைத்தது. அதில் இன்னொரு சிறப்பு வெகுளிப்பெண்  பூஜைக்கு வந்து படத்தை ஆரம்பித்து வைத்தவர் என்.டி.ஆர்.

அதற்காகக் கல்கத்தா சென்று பரிசு பெற்ற போது என்னுடன் சேர்ந்து 1971 ஆம் ஆண்டிற்கான சிறந்த நடிகர்  விருது பெற்றவர் எம்.ஜி.ஆர்.!

பின்னாளில் இருவரும் முதல்வர்களாக தென்னாட்டை ஆண்டதும், தெலுங்கு கங்கையான கிருஷ்ணா நதி நீரை சென்னைக்குக் கொண்டு வந்ததும் சரித்திரத்தில் இடம் பெற்றன.

வேறு எந்த பிரபல நடிகைக்காவது அத்தகைய பெருமை வாய்த்திருக்குமா...! - தேவிகா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com