Enable Javscript for better performance
24. கிருமிகள் வாழ்க!- Dinamani

சுடச்சுட

  

  கடவுளுக்குப் பயப்படாத, கடவுளை நம்பாத மனிதர்கள்கூட உண்டு. ஆனால் கிருமிகளுக்குப் பயப்படாத மனிதர்கள் உலகத்தில் இல்லை என்று உறுதியாகச் சொல்லிவிடலாம்.

  - ஹீலர் உமர் ஃபாரூக்

  எங்கெங்கு காணினும்

  எங்கெங்கு காணினும் சக்தியடா என்ற பாடல் நமக்குத் தெரியும். ஆனால், பாடல் மட்டும்தான் தெரியும். அது சொல்லும் உண்மையை நம்மில் பலர் இதுவரை உணராதிருக்கலாம். ஆனால், எங்கெங்கு காணினும் கிருமியடா என்பது மட்டும் எல்லோருக்கும் அனுபவத்தில் தெரிந்த ஒன்றாக உள்ளது. 

  கிருமிகளைப் பற்றிய பயம் அன்றாடம் நமக்குள் விதைக்கப்படுகிறது. விளம்பரங்கள், மருத்துவர்கள், மருந்துக் கம்பெனிகள், அரசாங்கங்கள் என இந்தப் பயத்தை உலகளாவத் தூவுவதில் அனைவருக்கும் பங்கு உண்டு. இதில் விளம்பரங்களை விட்டுவிடலாம். அவர்கள் தங்கள் பொருள் விற்க வேண்டும் என்பதற்காக எதை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். இது நாம் புரிந்துகொள்ளக் கூடியதே.

  ஆனால், மருத்துவர் முதல் அரசாங்கம் வரை இந்தக் காரியத்தை ஒரு கடமையாக, ஒரு தர்மமாகச் செய்துகொண்டிருக்கிறார்களே! இதில் மருத்துவர்களையும் மருந்துக் கம்பெனிகளையும்கூட விட்டுவிடலாம். அவர்களின் சிபாரிசின் பின்னாலும் பணம் இருப்பது சாத்தியமே. ஆனால் அரசாங்கங்கள்?! கிருமி பற்றிய அச்சத்தை ஏற்படுத்துவதால், அவர்களுக்கு என்ன வருமானமா கிடைக்கப்போகிறது? சிங்கப்பூரில் 13 இந்தியர்கள் ஜிகா (zika) வைரஸ் பாதிப்புக்கு உள்ளானதாக தொலைக்காட்சி செய்திகள் சமீபத்தில் அழுதன. பகல் நேரத்தில் கடிக்கும் கொசுக்களால் ஜிகா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகும் மனிதர்களுக்கு ஒருவகை காய்ச்சல் வருவதாகவும் சொல்லப்பட்டது. ஜிகா வைரஸை இலவசமாகக் கொடுப்பதாக நம்பப்படும் கொசுக்களை ஒழிக்க ‘மெஷின் கன்’ மாதிரி எதையோ தூக்கிக்கொண்டு போவதையும் காட்டினார்கள். 

  எல்லா வகையான காய்ச்சல்களும் கண்ணுக்குத் தெரியாத வைரஸ் எனும் கிருமியால் பரவுகிறது என்று நம்பப்படுகிறது. காய்ச்சல் மட்டுமல்ல, டெங்கு, டைஃபாய்டு, மலேரியா, பொன்னுக்கு வீங்கி, போலியோ முதல் எய்ட்ஸ் வரை மனிதர்களுக்கு உண்டாகும் நோய்களுக்கெல்லாம் காரணம் கிருமிகள்தான் என்று சொல்லப்படுகிறது. விஞ்ஞானிகள் என்று கருதப்படுபவர்களும் அப்படியே சொல்வதால், அரசாங்கங்களும் அதை நம்பி, மக்களைக் காப்பாற்ற ‘உரிய’ நடவடிக்கைகளை எடுக்கின்றன.

  நடந்துகொண்டிருப்பது இதுதான். ஆனால், கிருமிகளைப் பற்றிய உண்மை என்ன? அவற்றால் உண்மையிலேயே நோய்கள் உண்டாகின்றனவா? பரவுகின்றனவா? இக்கேள்விகளுக்கான பதிலை நாம் அனைவரும் விரிவாகவும், விளக்கமாகவும் தெரிந்துகொள்ள வேண்டும். எனக்குத் தெரிந்த உண்மைகளை உங்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டியது என் கடமை. அதற்காகத்தான் இந்த பீடிகை. சரி, கிருமிகளைப் பார்க்கலாமா?!

  கிருமிகள் ஓர் அறிமுகம்

  கிருமி என்று நாம் சொன்னாலும் பாக்டீரியா, வைரஸ், ஃபங்கஸ், ஆல்கே, ஜெ(ர்)ம் என நம் புறக்கண்களுக்குப் புலப்பலாத அந்தக் குட்டி உயிர்களுக்குப் பல செல்லப் பெயர்கள் உண்டு. நான் அன்றாடம் வாங்கும் பேஸ்ட், ஃபெனாயில், மௌத் வாஷ், சோப்பு, வியர்வை துர்நாற்றம் போக்க உதவும் டியோடரன்ட், டாய்லெட்டில் கறை போக்க உதவும் ஹார்பிக் போன்ற எல்லாமே கிருமி எனப்படும் நுண்ணுயிரிகளிடமிருந்து நம்மைக் காப்பாற்றத்தான் என்று விளம்பரங்கள் கூறுகின்றன.

  நம் டாய்லட்டில் உள்ளதைவிட 400 மடங்கு அதிகமான கிருமிகள் நாம் அன்றாடம் பயன்படுத்தும் மேஜை மீது உள்ளதாம்! மொபைல் ஃபோன் பயன்படுத்துபவர்களுக்கு இன்னொரு முக்கியமான செய்தி உள்ளது. கழிவறையில் உள்ளதைவிட 18 மடங்கு அதிகமாக நமது கைப்பேசியில் கிருமிகள் உள்ளனவாம்! ஆனாலும் மொபலை நாம் ஹார்பிக் ஊற்றிக் கழுவ முடியாது! இதுமட்டுமா? சுத்தமான ஒரு மனித வாயில் ஆயிரத்திலிருந்து ஒரு லட்சம் வரை ஒவ்வொரு பல்லுக்குள்ளும் கிருமிகள் உள்ளனவாம்! ஒவ்வொரு டாலர் நோட்டிலும் 3000 வகையான பாக்டீரியாக்கள் உள்ளனவாம்! அப்போ நம் நாட்டு காந்தித் தாத்தா மேலே எவ்வளவு இருக்கும் என்று தெரியவில்லை!

  எல்லாவற்றுக்கும் உச்சமாக ஒன்று சொல்லப்படுகிறது. கமலஹாஸன்களுக்கு இந்தச் செய்தி அதிர்ச்சி தருவதாக இருக்கலாம்! இரண்டு பேர் ஆசையாக முத்தமிட்டுக் கொண்டால், ஒருவர் வாய் வழியாக இன்னொருவர் வாய்க்கு பத்து மில்லியனிலிருந்து ஒரு பில்லியன் பாக்டீரியா ஊடுறுவுமாம்! அடக்கடவுளே! இனிமேல் முத்தமே கொடுக்க முடியாதா? ச்சே, ச்சே, அப்படியெல்லாம் இருக்காது. வாய் துர்நாற்றம் கொண்ட பொறாமைப் புடிச்ச யாரோ ஒருவன்தான் இப்படிச் சொல்லியிருக்கான் என்று நான் நம்புகிறேன்! கிருமிகளின் முத்தப் பரிமாற்றத்தில்தான் கருமிக்குக்கூட இன்பம் என்பது நமக்குத் தெரிந்ததுதானே! முத்த வாசல் திறந்தால்தானே காதல் அரண்மனைக்குள் நுழைய முடியும்! 

  பயப்பட வேண்டாம். இவையெல்லாம் விஞ்ஞானப்பூர்வமான பொய்கள்! லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் கிருமிகள் இருப்பது உண்மைதான். ஆனால், அவற்றால் நமக்கு எந்த ஆபத்துமில்லை என்பது மட்டுமல்ல, அவைதான் நம்மை ஆரோக்கியமாக வாழவைத்துக் கொண்டிருக்கின்றன என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? இந்த உலகின் மெகா ஆச்சரியமும் மெகா உண்மையும் இதுதான். அது எப்படி என்று பார்க்கும் முன், கிருமிகள் என்று சொல்லப்படும் கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரிகள் பற்றிய மேலும் சில தகவல்களைப் பார்த்துவிடலாம்.

   

  கிருமிகள் பற்றிய பொய்கள் 

  கிருமி எதுவும் நமது புறக்கண்களுக்குத் தெரியாது என்று நமக்குத் தெரியும். ஆனாலும் விளம்பரங்கள் என்ன சொல்கின்றன? எப்படிக் காட்டுகின்றன? உதாரணமாக லிஸ்டரீன் மௌத்வாஷ் விளம்பரம் உங்கள் பற்களுக்கு இடையில் இருக்கும் கிருமிகளைக் கொல்வதாகக் காட்டுகிறது. பற்களின் இடுக்குகளில் இருக்கும் ஏகப்பட்ட கிருமிகளையும் கருப்பு கருப்பாகக் காட்டுகிறது! ஹார்பிக் விளம்பரம் டாய்லெட்டில் கிருமிகள் விளையாடிக் கொண்டிருப்பதைப் போலவும், ஹார்பிக்கை ஊற்றியதும் அலறிக்கொண்டு அவை சாவதைப் போலவும் காட்டுகிறது. ‘‘கிருமிகளை பளீரென படம் பிடித்துக் காட்டும் ஒரு டார்ச் லைட் நமக்குக் கிடைத்தால் எவ்வளவு வசதியாக இருக்கும்? ஆனால் அப்படி ஒன்று இல்லவே இல்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்”என்கிறார் ஹீலர் உமர் ஃபாரூக்!

  கிருமிகளில் பாக்டீரியா, வைரஸ் என்று இரண்டு முக்கிய வகை உண்டு. அதில் பாக்டீரியாவை நாம் பார்க்க முடியும். ஆனால், அதற்கு நமக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட இயற்கையான புறக்கண்கள் உதவாது. ஏனெனில், கிருமியின் ‘சைஸ்’அப்படி! பாக்டீரியாவைவிட வைரஸ்தான் ரொம்பச் சின்னது. பாக்டீரியாக்களை எலெக்ட்ரான் மைக்ராஸ்கோப் மூலம் பார்க்கலாம். ஆனால், வைரஸை அப்படியும் பார்க்க முடியாது! ஒரு ஊசியின் தலை மீது ஐந்து லட்சம் வைரஸ்கள் பத்மாசனம் போட்டு உட்கார முடியும்! இந்த உலகத்தில் எவ்வளவு கிருமிகள் இருக்கும்? குத்து மதிப்பாக, 5X1000000000000000000000000000000 என்று சொல்கிறது விஞ்ஞானம்! (இது எவ்வளவு என்று நம்ம ஊர் ராமானுஜன்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளவும்). இந்த உலகில், இந்தப் பிரபஞ்சத்தில், மனிதர்களைவிட அதிகமாக கிருமிகளே உள்ளன! நம் உடம்பில் மட்டும் 90 டிரில்லியன் கிருமிகள் இருக்கிறதாம்!

  அப்படியானால், விளம்பரங்களில் காட்டப்படுவது என்ன? சுத்தமான ஏமாற்று வேலை! ஒரு சோப்பு வாங்கவில்லை எனில் ‘பத்து ஸ்கின் ப்ராப்ளம்’ வந்துவிடும் என்று பயமுறுத்துவதுதான் அவர்களது தந்திரம். உண்மையில் வேதிப்பொருள் கலந்த ஒரு சோப்பை – அதாவது எல்லா சோப்புகளையும் – போடுவதால்தான் எல்லாவிதமான ஸ்கின் ப்ராம்பளமும் வரும்!

  சென்ற ஆண்டுகளில் பன்றிக் காய்ச்சல் எனப்படும் ஸ்வைன் ஃப்ளூவுக்கு எதிரான பிரசாரம், நடவடிக்கைகள் வெகு தீவிரமாக நடந்தன. ஆசிரியர்கள், மாணவர்கள், மருத்துவர்கள், செவிலியர், விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், பொதுமக்கள் என எல்லாரும் ஒரு துணிப்பையை மூக்கில் மாட்டிக்கொண்டு ஊர்வலம் சென்றார்கள். பன்றிக் காய்ச்சலை உருவாக்குவதாக சொல்லப்பட்ட H1N1 வைரஸ், அந்த ‘மாஸ்க்’குக்கு உள்ளே புகமுடியாமல் சொந்த ஊருக்கே திரும்பிச் சென்றுவிடும் என்று ஒரு நம்பிக்கையை ஏற்படுத்த முயன்றார்கள்! 

   

  ஒரு வைரஸின் அளவு என்ன என்று பள்ளிக்கூடப் பிள்ளைகளைக் கேட்டால்கூடச் சொல்லிவிடுவார்கள். ஏனெனில் அவர்களது பாடத்திலேயே அது உள்ளது! ஒரு ஊசி முனையின் மேலே லட்சக்கணகான வைரஸ்கள் சொகுசாகப் படுத்து உறங்கமுடியும் என்றால், மூக்கை மூடிய ஒரு துணியில் உள்ள ராட்சச ஓட்டைகள் வழியாக அந்த வைரஸ் உள்ளே நுழைய முடியாதா? யாரை ஏமாற்ற அந்தப் பிரசாரம்? நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளத்தான்! ஏமாற்றுவதிலும் ஏமாறுவதிலும் நம்மைவிடச் சிறந்தவர்கள் இந்த உலகில் உண்டா என்ன?! 

  இரண்டு சதவீத மனிதர்களே சிந்திக்கிறார்கள். மூன்று சதவீதம் சிந்திப்பதாக நினைத்துக்கொள்கிறார்கள். 95 சதவீதம் பேர் சிந்திப்பதைவிட செத்துப்போவதே மேல் என்றிருக்கிறார்கள் என்று ஜார்ஜ் பெர்னார்ட் ஷா சொன்னதுதான் எவ்வளவு தீர்க்கதரிசனமான வார்த்தைகள்!

   

  கிருமிகளால் மனிதர்களுக்கு எந்தப் பிரச்னையுமில்லை என்று நாளைக்கு உலக சுகாதார நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டால் என்னாகும்? அவ்வளவுதான், சோப்புக் கம்பெனிகள், பேஸ்ட்டு கம்பனிகள், மௌத் வாஷ்கள், ஹாண்ட்வாஷ்கள், டாய்லட் க்ளீனர்கள், சுத்திகரிக்கப்பட்ட பொருள்கள், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் என்று எதையுமே நாம் வாங்கமாட்டோம்! கிருமி தாக்கிவிடுமோ என்ற பயத்தினால்தானே இவற்றையெல்லாம் மாற்றி மாற்றி வாங்கிக்கொண்டிருக்கிறோம்! வெளிநாட்டுக் கம்பெனிகளின் மொத்த வியாபாரமும் அடிபட்டுப் போகும். ஐந்தே ஆண்டுகளில் இந்தியா உலக வல்லரசாக மாறிவிடவும் வாய்ப்பு உண்டு!

  ஆஹா, அப்படியெல்லாம் விட்டுவிடுவோமா என்று வரிந்து கட்டிக்கொண்டு கம்பெனிகளும், விஞ்ஞானிகளும் வந்துவிடமாட்டார்களா? ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக நமக்கு அறிவு வந்துகொண்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்! சில நாட்களுக்கு முன் ஒரு தொலைக்காட்சியில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரில் எந்தச் சத்துமே இல்லை, அது உயிரற்றது என்ற உண்மை சொல்லப்பட்டது! இப்படியே போனால், கிருமிகள் பற்றிய உண்மையும் பரவலாக வெளிவருதல் சாத்தியம்தான். 

  கிருமிகளின் மூலமாக நோய் வருமா? காற்றில், தண்ணீரில் என்று கிருமிப் பரவல் மூலமாக நோய் தொற்றுமா? இது உண்மையானால், உலக யுத்தங்கள் நடந்திருக்க வேண்டிய அவசியமே இல்லை! மெனக்கெட்டு ஹிரோஷிமா, நாகசாகி, ஆப்கனிஸ்தான், பாகிஸ்தான், ஈராக் என்றெல்லாம் பறந்து சென்று குண்டுகளைப் போட்டு அழித்ததற்குப் பதிலாக, அந்தந்த நாடுகளுக்குச் செல்லும் நதிகளில் கோடிக்கணக்கான கிருமிகளை இறக்கிவிட்டிருந்தால் போதுமே! இந்நேரம் எதிரிகள் அனைவரும் கிருமிகளால் தாக்கப்பட்டு நோய்க்கு ஆளாகி செத்திருப்பார்களே! 

  சிந்து நதியின் வழியாகக் கிருமிகளை அவர்கள் அனுப்பியிருந்தால் நாமும், நாம் அனுப்பியிருந்தால் அவர்களும் செத்திருக்கலாமே? இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது நடந்த வன்முறையைத் தடுத்திருக்கலாமே! ரசாயன ஆயுதம் (கெமிகல் வெப்பன்) வைத்திருந்ததாகச் சொல்லி ஈராக்குக்கு ராணுவத்தை அமெரிக்கா அனுப்பியிருக்க வேண்டியதில்லையே! கிருமிப் படையை அனுப்பி சதாம் ஹுசைனை சாகடித்திருக்கலாமே!

  இப்படி உலக வரலாற்றில் எங்காவது கிருமிகள் அனுப்பப்பட்டு யுத்தம் நடத்தப்பட்டிருக்கிறதா? எங்குமே இல்லை. ஏன்? ஏனெனில், அப்படியெல்லாம் செய்ய முடியாது என்று அவர்களுக்கே தெரியும்! ஏழாம் அறிவு போன்ற திரைப்படங்களுக்காக வேண்டுமென்றால், சைனாவிலிருந்து ஒருவர் வந்து ஒரு நாயின் உடம்பில் கிருமியைப் புகுத்தி அது மக்களை பாதிக்குமாறு காட்டலாம். அதற்கும், மக்களுக்கு ஏற்கெனவே வந்துவிட்டிருந்த நோய்க்கு போதிதர்மர் மருந்து கொடுத்ததற்கும் தொடர்பில்லை. அது வேறு விஷயம். 

  உடல் நோயுற்ற ஒரு ஒட்டகத்தின் மூலம் மற்ற ஒட்டகங்களுக்கும் அந்த நோய் தொற்றிக்கொண்டது என்று ஒருமுறை நபிகள் நாயகத்திடம் சொல்லப்பட்டபோது, அப்படியானால் முதல் ஒட்டகத்துக்கு எப்படி அந்த நோய் வந்தது என்று அவர்கள் கேட்டதாகவும், தொற்று நோய் என்று எதுவும் இல்லை என்று அவர்கள் சொன்னதாகவும் ஒரு நபிமொழி உள்ளது. இந்த நபிமொழிக்கு பலவிதமான விளக்கங்களும் கொடுக்கப்படுகின்றன. இந்த நபிமொழியை நான் நினைவுகூர்ந்ததற்கு ஒரு காரணம் உள்ளது. நபிகள் நாயகத்தின் காலம் ஏழாம் நூற்றாண்டு. கிருமிகள் உள்ளன, அவற்றால் நோய் தொற்றுகிறது என்று முதன்முதலாக லூயி பாஸ்டரால் சொல்லப்பட்டது 19-ம் நூற்றாண்டு! நாம் ஞானியாக இருக்கும்பட்சம், விஞ்ஞானிகள் உண்மை பற்றி உளறுவதற்கு முன்பே நமக்கு உண்மை தெரிந்திருக்கும் என்பதையே வரலாறு காட்டுகிறது. 

  விளம்பரங்களில் காட்டப்படுவதுபோல, சினிமாவில் காட்டப்படுவதுபோல, பிரசாரங்களில் காட்டப்படுவது அல்லது சொல்லப்படுவதுபோல கிருமிகளால் நோய்கள் பரவுவதே இல்லை என்பதுதான் சத்தியம். அப்படியானால் கிருமிகளால் நோய்கள் உருவாவதோ, பரவுவதோ இல்லையா, கெட்ட கிருமிகளே கிடையாதா என்ற கேள்விக்கான பதிலைக் கொஞ்ச நேரம் கழித்துப் பார்க்கலாம். ஏனெனில், கிருமிகளைப் பற்றி நாம் இன்னும் கொஞ்சம் ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது.

  வாருங்கள், கிருமி லோகத்துக்குச் செல்லலாம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai