41. என் கண்ணே! - 9

மூக்குக் கண்ணாடி போடாமல் தெளிவாகப் பார்க்கமுடியும் என்ற சாத்தியக்கூறு இருப்பதை விளக்குவதற்காகத்தான் இக்கட்டுரைகள்.

அழாத கண்கள் குருட்டுக் கண்கள்

– ஸ்வீடிஷ் முதுமொழி

கண்ணின் பாவை, கிட்டப்பார்வை, சிதறல் பார்வை, திபேத்திய வட்டப் பயிற்சிகள், விழிக்கோளங்கள் ஆகியவற்றுக்கான பயிற்சிகள் சிலவற்றைப் பார்த்தோம். மேலும் சில முக்கியமான பயிற்சிகளைப் பார்த்துவிட்டு கண் பற்றிய கட்டுரைகளை முடித்துக்கொள்ளலாம். ஆனால், பேட்ஸின் பயிற்சிகள் இத்துடன் முடிவடைந்துவிடவில்லை. நூற்றுக்கும் மேலான பயிற்சிகள் உள்ளன. அவற்றில் மிகமிக முக்கியமானவை என்று நான் கருதியவற்றை மட்டும்தான் உங்களோடு பகிர்ந்துகொண்டுள்ளேன்.

யூடியூபில் நிறைய காணொளிகள் கிடைக்கின்றன. பார்த்தும் தெரிந்துகொள்ளலாம். படித்துப் புரிந்துகொள்வதைவிட அது எளிது. இன்னும் ஆற்றல் வாய்ந்தது. ஏற்கெனவே அனுபவம் உள்ளவர்களிடம், பயிற்சிகளைச் செய்து வெற்றிபெற்றவர்களிடம் பேசிப் பார்க்கலாம். மூக்குக் கண்ணாடி போடாமல் தெளிவாகப் பார்க்கமுடியும் என்ற சாத்தியக்கூறு இருப்பதை விளக்குவதற்காகத்தான் இக்கட்டுரைகள். அப்பயிற்சிகளைக் கொடுத்தற்காக டாக்டர் வில்லியம் பேட்ஸுக்கு இவ்வுலகம் கண் உள்ளவரை கடன் பட்டிருக்கிறது!

ஸ்நெல்லன் சார்ட்டுடன் கூடிய பயிற்சி (கிட்டப்பார்வைக்காக)

1. ஸ்நெல்லன் சார்ட்டை பாதி தெளிவாகத் தெரியும் தூரத்தில் வைத்துக்கொள்ளவும். மீதி மங்கலாகவோ அல்லது தெரியாமலோகூட இருக்கலாம்.

2. ஒவ்வொரு வரிசையிலும் உள்ள எழுத்துகளை ஒவ்வொன்றாக தெளிவாகப் படிக்கவும். எழுத்துகளின் வடிவம், கருப்பு நிறமெல்லாம் தெளிவாகத் தெரிவதை மனதில் பதிய வைத்துக்கொள்ளவும். அவ்வப்போது இமைத்தும், கண்களை மூடியும் ரிலாக்ஸ் செய்துகொள்ளவும். கண்ணால் பார்த்த எழுத்தை மனதால் பார்த்துக்கொள்ளவும். அப்போது அந்த எழுத்து இன்னும் கருப்பாகவும் தெளிவாகவும் தெரிவதாகக் கற்பனை செய்யவும்.

3. இப்படிச் செய்யும்போது கண்கள் இருக்கும் உயரத்துக்கு கைகளையும் உயர்த்திப் பிடித்து வைத்துக்கொள்வது மன அழுத்தத்தைக் குறைக்க உதவும்.

4. தெளிவாகத் தெரியாத வரிசைக்கு வரும்போது, பார்வைக்கு அழுத்தம் கொடுத்து கஷ்டப்பட்டு படிக்க முயலவேண்டாம். அவற்றை நீங்கள் தெளிவாகப் பார்க்கவும் தேவையில்லை, படிக்கவும் வேண்டாம். உங்கள் கண்களை மட்டும் எழுத்துகளின் குறுக்கே மெள்ள ஓட்டவும். எழுத்துகளுக்கு இடையில் உள்ள இடைவெளியை, அவை எவ்வளவு கருப்பாக உள்ளது, அவற்றின் வடிவம் இவற்றை மட்டும் கவனிக்கவும். ஆழமாக, நிதானமாக மூச்சு விடவும். விரல்களையும் அசைக்கலாம். அவ்வப்போது கண்களை மூடி ஓய்வு கொடுத்து, மனதில் எழுத்துகளை காட்சிப்படுத்தவும். சார்ட் வெள்ளையாகவும் எழுத்துகள் கருப்பாகவும் இருக்கின்றன என்று மனதில் திரும்பத் திரும்ப சொல்லிக்கொள்ளவும்.

5. சார்ட்டின் இறுதிப் பகுதிக்கு வந்து சுருக்கமாக ஒரு ’பாமிங்’ செய்துகொள்ளவும். மீண்டும் பயிற்சியை முதலில் இருந்து தொடங்கவும். ஆனால் இந்த முறை கீழிருந்து மேலாக. முன்னர் தெரிந்த எழுத்தின் வடிவங்கள் இப்போது இன்னும் தெளிவாகத் தெரிகின்றனவா என்று கவனிக்கவும். மங்கலாகத் தெரிவதைப் பற்றிக் கவலைகொள்ளாமல், தெளிவாகத் தெரிவதை ஏற்றுக்கொண்டு ரசிக்கவும்.

இப்பயிற்சியை 4 முதல் 8 நிமிடங்கள்வரை செய்யலாம். ஒரு நாளைக்கு இரண்டு தடவைகள் செய்யலாம்.

கண்களின் சாய்வுத் தசைகளை இழுக்கும் பயிற்சி (இதுவும் கிட்டப்பார்வைக்கானது)

கண்ணின் சாய்வுத் தசைகள்தான் நாம் தெளிவாகப் பார்ப்பதற்கு உதவும் முக்கிய கருவிகள் என்று ஏற்கெனவே சொன்னதை நினைவுபடுத்திக்கொள்ளுதல் நல்லது.

1. ஒரு பென்சிலை எடுத்துக்கொள்ளலாம். அல்லது உங்கள் கட்டை விரலையும் பயன்படுத்தலாம். கட்டை விரலை கீழிருந்து மேலாக மூக்கின் நுனிவரை கொண்டு வரவும். மூக்கைத் தொடும் கட்டை விரலின் நுனியைப் பார்க்கவும். இப்போது இரண்டு கட்டை விரல்கள் தெரியலாம்.

2. பிறகு கட்டை விரலை உங்கள் வலது பக்கமாக கை போகும் தூரம் வரை நகர்த்திக்கொண்டு போகவும். அப்போது நகரும் விரலையே பார்க்கவும். பின் மெள்ள மூக்கின் நுனிக்கு மீண்டும் திரும்பி வரவும்.

3. மூக்கின் நுனியிலிருந்து வலமாகவோ இடமாகவோ கட்டை விரலை நகர்த்தும்போது மூச்சை நிதானமாக உள்ளிழுக்கவும். ஓரிரண்டு விநாடிகளுக்கு நிறுத்தி, பின் மூக்கின் நுனியை நோக்கி திரும்ப விரலைக் கொண்டுவரும்போது மூச்சை நிதானமாக வெளியில் விடவும்.

4. பாயின்ட் 2-ல் சொன்னமாதிரி, இப்போது மேல் நோக்கிச் செய்யவும். பிறகு இடது புறமாகச் செய்யவும். ஏதாவது வலி தென்படுமானால், பயிற்சியை சற்று நிறுத்திக்கொள்ளலாம். கண்கள் தளர்ச்சி அடையாதவரை இப்பயிற்சியை மேலே, கீழே, வலம், இடம் என்று இரண்டு முறை முதல் பத்து முறைவரை செய்யலாம்.

இப்பயிற்சியை இரண்டு நிமிடங்களுக்கு, ஒரு நாளைக்கு இரண்டு முதல் நான்கு தடவைகள் செய்யலாம்.

இரண்டு சார்ட்டுகள் பயிற்சி (இதுவும் கிட்டப்பார்வைக்கானது)

இப்பயிற்சிக்கு ஸ்பெஷலான இரண்டு சார்ட்டுகள் தேவை. ஒரே எழுத்துகளைக் கொண்ட ஒரு பெரிய எழுத்து சார்ட்டும், அதே எழுத்துகளைக்கொண்ட சின்ன எழுத்து சார்ட்டும். அருகிலிருந்தும், கொஞ்ச தூரத்திலிருந்தும் படிக்க முடிகிற மாதிரியும் இருக்க வேண்டும்.

1. பெரிய எழுத்து சார்ட்டை, தெளிவாகப் படிக்கமுடிகிற தூரத்தில் சுவரில் பொருத்தவும். சின்ன எழுத்து சார்ட்டை, அதன் எழுத்துகள் சற்று மங்கலாகத் தெரியும் தூரத்தில் வைத்துக் கையில் பிடித்துக்கொள்ளவும்.

2. பெரிய சார்ட்டில் உள்ள முதல் மூன்று எழுத்துகளைப் படிக்கவும். பின் கண்களை மூடி அந்த மூன்று எழுத்துகளின் வடிவங்களையும் நினைவில் கொண்டுவரவும். பின் சின்ன சார்ட்டை பார்த்து அதே எழுத்துகளைப் படிக்கவும். இதேபோல அடுத்த மூன்று எழுத்துகளுக்கும் செய்யவும்.

3. இந்தப் பயிற்சியின்போது எழுத்துகளை நீளவாக்கில், செங்குத்தாக, குறுக்காக என்று எப்படி வேண்டுமானாலும் படிக்கலாம். இப்படி ஐந்து முறைகள்வரை செய்யலாம். அதற்கு மேல் வேண்டாம்.

4. இப்போது சின்ன சார்ட்டை எழுத்துகள் மங்கலாகத் தெரியுமாறு அருகில் கொண்டுவந்து பாயின்ட் 2 மற்றும் 3-ல் உள்ளதுபோல் செய்யவும். அவ்வப்போது, இமைத்துக்கொண்டும் நிதானமாக மூச்சு விட்டுக்கொண்டும் இருக்க வேண்டும். அப்போதுதான் உடலும் மனமும் ரிலாட்ஸ்டாக இருக்கும்.

5    இப்பயிற்சியின்போது எப்போதாவது கண்ணில் வலி ஏற்பட்டால் பயிற்சியை நிறுத்திவிட்டு பாமிங் செய்துகொள்ளவும்.

இப்பயிற்சியை இரண்டு முதல் நான்கு நிமிடம்வரை செய்யலாம். ஒரு நாளைக்கு இரண்டிலிருந்து நான்கு முறைகள் செய்யலாம்.

தலைகீழ் எழுத்துகளைப் படிக்கும் பயிற்சி

1. ஒரு புத்தகத்தில் உள்ள ஒரு பக்கத்தை 180 டிகிரி தலைகீழாகப் பிடித்துக்கொண்டு கொஞ்சம் மங்கலாகத் தெரியும் தூரத்தில் வைத்துப் பிடித்துக்கொள்ளுங்கள்.

2. ஒவ்வொரு எழுத்தாகப் படியுங்கள். அடிக்கடி இமைத்துக்கொள்ளுங்கள். நன்றாக மூச்சுவிட்டுக்கொள்ளுங்கள். என்ன எழுத்து, என்ன சொல் என்று பார்க்க வேண்டியதோ புரிந்துகொள்ள வேண்டியதோ இல்லை. எழுத்தின் வடிவத்தை மட்டும் பார்த்துக்கொண்டே சென்றால் போதும். ஒவ்வொரு வரி அல்லது வாக்கியம் முடியும்போதும், கண்களை சற்று மூடி ஓய்வு கொடுத்து, அந்த எழுத்துகள் எவ்வளவு கருப்பாக இருந்தன என்று கற்பனையால் பாருங்கள்.

3. இப்போது எழுத்துகளுக்கும் சொற்களுக்கும் இடையில் இருக்கும் வெள்ளையான பகுதியைப் பாருங்கள். எழுத்துகளின் பின்புலம் எவ்வளவு வெண்மையாக இருக்கிறது என்று கற்பனை செய்யுங்கள். அவ்வப்போது இமைத்துக்கொண்டும், சிறிது நேரத்துக்கு ஒருதரம் கண்களை மூடி ஓய்வு கொடுத்துக்கொண்டும் இருங்கள். ’தாள் வெள்ளையாக இருக்கிறது, எழுத்துகள் கருப்பாக உள்ளன’ என்பதை மனதால் பாருங்கள்.

4. இது படிக்கும் பயிற்சி அல்ல. அர்த்தங்களைப் பற்றி யோசிக்காமல் சும்மா பார்க்கும் பயிற்சி. இப்போது புத்தகத்தை நேராக வைத்து அருகில் வைத்துப் பார்த்தால் எழுத்து படிக்க முடிகிறதா என்று பரிசோதியுங்கள்.

இப்பயிற்சியை மூன்று முதல் ஐந்து நிமிடம்வரை செய்யலாம். ஒரு நாளைக்கு இரண்டு முறைகள் செய்யலாம்.

அருகில் உள்ளதை தெளிவாகப் படிக்க பயிற்சி

1. பலவித எழுத்துருக்களைக் கொண்ட புத்தகத்தையோ சார்ட்டையோ எளிதில் படிக்க முடிகிற தூரத்தில் வைத்துக்கொள்ளவும்.

2. படிக்க முடியாத அளவுக்கு அதை அருகில் கொண்டுவரவும்.

3. எழுத்துகளைப் படிக்க முடியாதபோது, எழுத்துகளுக்கும் சொற்களுக்கும் குறுக்கே கண்களை ஓட்டுங்கள். என்ன எழுத்து, என்ன சொல் என்று அறிய முற்பட வேண்டாம். கண்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம். வெறுமனே எழுத்துகளின் வடிவம், ஓரங்கள், அவற்றுக்கு இடயேயான இடைவெளி இவற்றை மட்டும் பார்த்துக்கொண்டே செல்லவும். அவ்வப்போது கண்களை இமைத்து ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள்.

4. இப்போது, படிக்கமுடியாத தூரத்துக்கு புத்தகத்தை / சார்ட்டை நகர்த்துங்கள்.

5. பாயின்ட் 2-ல் உள்ளதையும் 3-ல் உள்ளதையும் திரும்பச் செய்யுங்கள்.

6. முன்பைவிட அருகில் வைத்து இப்போது படிக்கமுடிகிறதா என்று பாருங்கள்.

இப்பயிற்சியை இரண்டு முதல் நான்கு நிமிடம்வரை செய்யலாம். ஒரு நாளைக்கு இரண்டு முறைகள் செய்யலாம்.

ஓரக்கண் பார்வைக்கான பயிற்சி

ஸ்ட்ராபிஸ்மஸ் என்று சொல்லப்படும் சாய்வுக் கண், ஓரக்கண் என்றெல்லாம் சொல்லப்படும் கோணல் பார்வை கொண்டவர்கள் இப்பயிற்சியை மேற்கொள்ளலாம். ஒரு கண் சரியான திசையில் பார்க்கும்போது, இன்னொரு கண் வேறொரு கோணத்தில் பார்த்துக்கொண்டிருக்கும் பிரச்னை இது. சமுதாயத்தில் கேலிக்கு இலக்காகும் மனிதர்களில் இவர்களும் உண்டு. இப்பயிற்சியின் மூலம் இப்பிரச்னை தீர்ந்து அவர்கள் மதிக்கப்பட வேண்டும் என்று பிரார்த்தித்துக்கொள்கிறேன்.

முதல் பயிற்சி

1. ஒரு நிலைக்கண்ணாடிக்கு முன் உங்கள் முதுகைக் காட்டிக்கொண்டு நில்லுங்கள். இரண்டு கைகளுக்கும் இடையில் உள்ள இடைவெளி அளவுக்கு கால்களையும் அகட்டி வைத்துக்கொள்ளுங்கள்.

2. நன்றாகத் தெரியும் கண்ணை உள்ளங்கையால் மூடிக்கொள்ளுங்கள். (உதாரணமாக வலது கண் என்று வைத்துக்கொள்வோம்). இடது கண்ணால் / ஓரக்கண்ணால் நேரே எதிரில் பாருங்கள்.

3. இப்போது உங்கள் உடலை அப்படியே இடது புறமாகத் திருப்பி இடது கண்ணை கண்ணாடியில் பாருங்கள்.

4. இப்போது பழையபடி மெதுவாக முன்னிருந்த நிலைக்கு உடலைத் திருப்பி நில்லுங்கள். இப்படியாக 4 அல்லது 6 முறைகள் செய்யுங்கள்.

5. இப்போது ஓரக்கண்ணை மூடிக்கொண்டு வலது பக்கமாக உடலைத் திருப்பி கண்ணாடியில் வலது கண்ணைப் பாருங்கள்.

இப்பயிற்சியை இரண்டு முதல் நான்கு நிமிடம்வரை செய்யலாம். ஒரு நாளைக்கு இரண்டு முதல் பத்து முறைகள் செய்யலாம்.

ஊஞ்சலாட்ட பயிற்சி

1. இரு கைகளும் இருக்கும் தூரத்தின் அளவுக்கு இரு கால்களையும் அகட்டிவைத்து நின்றுகொள்ளுங்கள். கைகளை தோள்பட்டை அளவுக்கு உயர்த்தி நீட்டி வைத்துக்கொள்ளுங்கள்.

2. எந்தக் கண் ஓரக்கண்ணாக உள்ளதோ அதற்கு எதிர்த்திசையில் தலையையும் உடலையும் திருப்ப வேண்டும். உதாரணமாக, வலது கண்ணில் பிரச்னை என்றால் இடது பக்கமாகத் தலையையும் உடலையும் திருப்பி இடது கையைப் பார்க்க வேண்டும்.

3. இப்போது நின்றுகொண்டு உடலின் மேல் பகுதியை இடுப்புவரை வலது பக்கமாக வளைத்துத் திருப்பவும். அப்போது இடது கை தலைக்கு மேலும் வலது கை தரையைத் தொடுகிற மாதிரியும் இருக்கும்.

4. பழைய நிலைக்குத் திரும்பி உடலை இடுப்புவரை இடது பக்கமாக வளைத்துத் திருப்பவும். அப்போது வலது கை தலைக்கு மேலும், இடது கை தரையைத் தொடுமளவும் இருக்கும்.

5. இப்போது பாயின்ட் 2-ல் செய்த பயிற்சியை மாற்றிச் செய்யவும். அங்கே இடது பக்கம் என்றால் இப்போது வலது பக்கம். அங்கே வலது பக்கம் என்றால் இப்போது இடது பக்கமாகச் செய்ய வேண்டும்.

இப்பயிற்சியை இரண்டு முதல் நான்கு நிமிடம்வரை செய்யலாம். ஒரு நாளைக்கு இரண்டு முதல் பத்து முறைகள் செய்யலாம்.

கற்பனைப் பயிற்சிகள்

நம் ஆரோக்கிய வாழ்வில் கற்பனைக்குப் பெரிய பங்கு உண்டு. கற்பனை என்பது சக்தியின் பிழம்பு என்று என் குருநாதர் கூறுவார். அந்த மாபெரும் சக்தியை கண் பார்வையைக் கூர்மை ஆக்கவும் பயன்படுத்தலாம் அல்லவா? அதற்காகத்தான் இப்பயிற்சிகள்.

மூக்கால் வரையும் பயிற்சி

மூக்கால் வரைவதா? ஆமாம். ஆனால் உண்மையாக அல்ல. கற்பனையால். அமைதியாக உட்கார்ந்துகொண்டு, கண்களை மூடிக்கொண்டு, உங்களுக்குப் பிடித்த எதையாவது மூக்கால் வரைவதாக கற்பனை செய்ய வேண்டும். ஒரு வட்டமாக, ஒரு பூவாக, ஒரு குறியீடாக, ஏன், உங்கள் கையெழுத்தாககூட அது இருக்கலாம். உங்கள் மூக்கை ஒரு ராட்சச பேனா அல்லது தூரிகை என்று நினைத்துக்கொள்ளுங்கள்.

இப்பயிற்சியை செய்யும்போது ரொம்ப வேடிக்கையாக இருக்கும். ஆனால் பார்வையை கூர்மைப்படுத்துவதில் இதற்கு இணையே இல்லை என்று சொல்லலாம். இப்பயிற்சிகளையெல்லாம் கண்களை மூடிக்கொண்டு செய்தாலும் பார்வையை கூர்மைப்படுத்துவதில் இவை பெரும் பங்கு வகிக்கின்றன.

கப்பல் கற்பனை

1. ஒரு நாற்காலியில் தளர்ச்சியாக உட்கார்ந்துகொண்டு கண்களை மூடிக்கொள்ளுங்கள்.

2. ஒரு பெரிய பயணிகள் கப்பல் நிற்கும் துறைமுகத்தின் பாலத்தின் மீது நீங்கள் நின்றுகொண்டிருக்கிறீர்கள். கப்பலில் பல பயணிகளைப் பார்க்கிறீர்கள். குழந்தைகள் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். சிலர் டெக்கில் நின்றுகொண்டு கடலையும் கரையையும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். மெள்ள மெள்ள அந்தப் பெரிய கப்பல் துறைமுகத்தை விட்டு தூரமாகப் போக ஆரம்பிக்கிறது. போகப்போக மனிதர்களும், கப்பலின் பாகங்களும் சின்னதாக ஆக ஆரம்பிக்கின்றன. கடைசியில் கப்பல் ரொம்ப தூரம் போய் ஒரு சின்ன புள்ளியாக மாறிவிடுகிறது.

3. இப்போது காட்சி தலைகீழாக மாறுகிறது. தூரத்திலிருந்து புள்ளியாகிப்போன கப்பல் மெள்ள மெள்ள துறைமுகத்தை நோக்கி வர ஆரம்பிக்கிறது. பொருள்களும், மனிதர்களும் மெள்ள மெள்ள உருவத்தில் பெரிதாகிக்கொண்டே வருகின்றனர். உங்களை நோக்கி கப்பல் வந்துகொண்டிருக்கிறது. இப்போது காட்சிகள் மிகத் தெளிவாகத் தெரிய ஆரம்பிக்கின்றன.

4. இப்படி கப்பல் போவதையும் வருவதையும் பலமுறை மனதால் காட்சிப்படுத்துங்கள். மெள்ள மெள்ள இந்த நிகழ்வை துரிதப்படுத்துங்கள். ஒவ்வொரு முறையும் கப்பல் அடிவானத்துக்குப் போய் புள்ளியாக மாற வேண்டும். மீண்டும் அது திரும்பி தன் ராட்சச ஸ்வரூபத்துடன் துறைமுகத்துக்குத் திரும்ப வேண்டும்.

5. இப்படி காட்சிப்படுத்துவது உங்கள் கண்களில் எந்தவிதமான தாக்கம் ஏற்படுத்துகிறது என்று கவனியுங்கள். கண்கள் மூடிய நிலையில் இக்கற்பனை செய்யப்பட்டாலும், விழிக்கோளத்தின் தசைகளுக்கும் ஒளிவிலகலுக்கும் பெரிதும் துணை செய்ய வல்லது இக்கற்பனை.

இப்பயிற்சியை இரண்டு நிமிடங்களுக்கு, ஒரு நாளில் இரண்டு முதல் நான்கு முறைகள் செய்யலாம்.

டாக்டர் வில்லியம் பேட்ஸில் அற்புதமான பயிற்சிகளில் முக்கியமானவற்றை நான் முடிந்த அளவு எளிமையாகவும், புரிந்துகொள்ளும்படியும் சொல்லியிருக்கிறேன். எனினும் அனுபவம் உள்ளவர்களிடம், ஏற்கெனவே செய்துகொண்டிருப்பவர்களிடம் கேட்டும், யூட்யூபில் இது பற்றிய வீடியோக்களைப் பார்த்தும் முடிவுக்கு வருவது நல்லது. முடிந்தால், புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமம் சென்று இலவச பயிற்சி பெற்று வருவது நல்லது. ஆனால், நாற்பது வயதுவரைதான் அங்கே அனுமதி உண்டு என்று கேள்விப்பட்டேன். சோடாப்புட்டிக் கூட்டம் அப்படி!

எப்போதுமே புத்தகத்தில் படித்ததை மட்டும் பகிர்வது என் பழக்கமல்ல. நானும் இப்பயிற்சிகளில் எனக்குத் தேவையானவற்றை மேற்கொண்டேன். நான் சில ஆண்டுகளாக மூ.க. போட்டுக்கொண்டிருந்தேன். இப்போதும் போட்டுக்கொண்டிருக்கிறேன். ஆனால் ஒரு நாளின் பெரும்பகுதியில் மூ.க. இல்லாமல்தான் இருக்கிறேன். பார்வை நன்றாக உள்ளது. மூ.க. போட்டுத்தான் படிக்கமுடியும் என்றிருந்த பல விஷயங்களை மூ.க. போடாமலே என்னால் நன்றாக இப்போது படிக்கமுடிகிறது. என் நண்பர்கள் பலருக்கு இவ்விஷயம் தெரியும்.

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற அடிப்படையிலேயே இக்கட்டுரைகளை நான் எழுதியுள்ளேன். நீங்களும் எவ்வளவு காலம்தான் சோடாபுட்டியாகவே இருப்பது! முயற்சி செய்துதான் பாருங்களேன் நண்பர்களே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com