37. என் கண்ணே! -  5

கற்பனை என்பது ஆன்மாவின் கண்ணாகும் - ஜோசஃப் ஜுபர்ட்

டாக்டர் வில்லியம் பேட்ஸின் முக்கியக் கோட்பாடுகளை மூன்று சொற்களில் சுருக்கிவிடலாம் - ரிலாக்சேஷன், நினைவாற்றல், கற்பனை. முன்னது கிடைத்தால் பின்னால் உள்ள இரண்டும் சரியாக வேலைசெய்யும். அவை சரியாக வேலை செய்தால், கண் பார்வை மட்டுமல்ல, எல்லாப் பிரச்னைகளும் சரியாகும். எல்லாப் பிரச்னைகளுக்குமான ஒரே தீர்வு, ரிலாக்சேஷன் என்ற மந்திரம்தான். 

ரிலாக்சேஷன் செய்த அற்புதம்

பத்து வயதுப் பையன் ஒருவனை பரிசோதித்த ஒரு கண் மருத்துவர், அவனுக்குக் கண்கள் முறையாக வளர்ச்சி அடையாததால் பார்வைக் குறைவும் வலியும் ஏற்பட்டிருக்கிறது; அவன் கிட்டத்தட்ட குருடாகிக்கொண்டிருக்கிறான் என்று அவன் பெற்றோர்களிடம் கூறினார். ஆனால், அந்தப் பையனுக்கு நம்பிக்கையூட்டி பேட்ஸின் ரிலாக்சேஷன் பயிற்சிகளைக் கொடுத்து பத்தே நாளில் அவனை குணப்படுத்தினார் வில்லியம் மெக்ராக்கன் என்ற டாக்டர்! கிட்டப்பார்வை, சிதறல் பார்வை போன்ற பிரச்னைகளெல்லாம் மனதில் ஏற்படும் இறுக்கத்தின் விளைவுகள்தான் என்பதை அவனுக்குப் புரியவைத்தார். 
அதேபோல், திக்குவாய் கொண்ட ஒரு பையனையும் மெக்ராக்கன் குணப்படுத்தியுள்ளார். பல ஆண்டுகளாக ‘கேடராக்ட்’ நோயால் அவதிப்பட்டு, கிட்டத்தட்ட குருடாகிப்போன ஒரு பெண்ணையும் அவர் இரண்டே வாரங்களில் குணப்படுத்தினார். பேட்ஸின் வழிமுறைகளைப் பின்பற்றி அவர் குணப்படுத்திய மேலே சொன்னது போன்ற பல நிகழ்வுகளை தனது Use Your Own Eyes என்ற நூலில் அவர் பதிவு செய்துள்ளார். பேட்ஸின் வழிமுறைகளின் வெற்றிக்கு அவர் ஒரு நல்ல சான்று.

ஒரு நோயாளி குணமடையத் தேவை, சரியான மனப்பாங்கு மட்டுமே என்கிறார் பேட்ஸின் சீடரைப்போலப் பேசும் டாக்டர் மெக்ராக்கன்! அவரும் ஆரம்பத்தில் மூ.க. அணிந்துகொண்டிருந்தார். அதுவும் முப்பத்தேழு ஆண்டுகளாக! பேட்ஸின் நூலைப் படித்து, அதில் உள்ள பயிற்சிகளைச் செய்தபிறகு, மூ.க. இல்லாமலே நன்றாகப் பார்க்கக்கூடிய திறனைப் பெற்றார். அதன் பிறகுதான் பேட்ஸின் வழிமுறைகளை அவர் மற்றவர்களுக்குப் பயன்படுத்தவும் பிரபலப்படுத்தவும் ஆரம்பித்தார்.

தீர்ந்த பார்வைக்கு உதவும் நினைவாற்றல்

நம்முடைய நினைவாற்றலானது நாம் தெளிவாகப் பார்ப்பதற்கு உதவி செய்யும் என்கிறார் பேட்ஸ். நமது ஐம்புலன் அனுபவம் எதுவாக இருந்தாலும் அதை மனம் ரிலாக்ஸ்டாக இருக்கும்போது பரிபூரணமாக மீண்டும் நினைவுக்குக் கொண்டுவர முடியும் என்கிறார். கண்கள் திறந்திருக்கும்போது பார்வை நார்மலாக இருக்கும். கண்கள் மூடியிருக்கும்போது பின்புலம் எல்லாம் கருப்பாகத் தெரியும். ஒரு கைக்கடிகாரத்தின் டிக்டிக்கையோ, ஒரு வாசனையையோ அப்போது உங்களால் துல்லியமாக உணர முடியுமென்றால், உங்கள் மனம் நல்ல ஓய்வில் இருக்கிறது என்று அர்த்தம். அந்த நேரத்தில் கண்கள் மூடியிருந்தாலும், மூடிய கண்களுக்குள் பரிபூரணமான கருப்பு நிறம் தெரியும். கருப்பு பின்புலம் ஆழமாகத் தெரிவது மனம் நன்றாக ரிலாக்ஸ்டாக இருப்பதன் அடையாளம் என்கிறார் பேட்ஸ். எந்த அளவுக்கு கருப்பு நிறம் சரியாகத் தெரியவில்லையோ அந்த அளவுக்கு மனதின் ரிலாக்சேஷன் கெட்டிருக்கிறது என்றும் புரிந்துகொள்ளலாம். 

கண்ணுக்கு உள்ளே ஒளியைப் பாய்ச்சும் ரெடினாஸ்கோப் என்ற கருவி மூலமாக இதை நிரூபிக்கமுடியும் என்றும் அவர் கூறுகிறார். அதாவது, எந்த அளவுக்கு கருப்பு நிறத்தைத் துல்லியமான நினைவுகூர முடிகிறதோ அந்த அளவுக்கு பார்வை சரியாகும் என்று அர்த்தம். அப்படியானால், பார்வைக் கோளாறை சரிசெய்ய கருப்பு நிறத்தை ஆழமாகவும் துல்லியமாகவும் மூடிய கண்களுக்கு உள்ளே பார்க்கக் கற்றுக்கொள்ள வேண்டுமென்றும் புரிந்துகொள்ளலாம். பார்வைக் கோளாறை சரிசெய்ய, நினைவாற்றலையும் ரிலாக்சேஷனையும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அர்த்தம். கருப்பை சரியாகப் பார்க்க முடியவில்லையெனில், மனமும் கண்களும் ரிலாக்ஸ்டாக இல்லை, ஸ்ட்ரெய்னில் உள்ளது என்று புரிந்துகொள்ளலாம்.

ஒரு கண்ணில் பிரச்னை உள்ள ஒருவரை இரண்டு கண்களாலும் ஸ்நெல்லன் சார்ட்டில் உள்ள புள்ளியைப் பார்க்கவைத்தால் இது விளங்கிவிடும். முதலில் இரண்டு கண்களாலும் பார்க்கச் சொல்லிவிட்டு, பின்னர் நன்றாக இருக்கும் கண்ணை மூடச் சொல்லிப் பார்க்கச் சொல்ல வேண்டும். இப்படிச் செய்யும்போது, உதாரணமாக, வலது கண் பார்வை நார்மலாகவும், இடது கண் பார்வை பிரச்னையோடும் உள்ளவராக அவர் இருந்தால், இரண்டு கண்களையும் திறந்திருக்கும்போது ஸ்நெல்லன் சார்ட்டில் உள்ள புள்ளியை இருபது விநாடிகளுக்கு அவரால் நினைவில் வைத்திருக்கமுடியும். பிரச்னை உள்ள கண்ணால் மட்டும் பார்க்கும்போது பத்து விநாடிகள்தான் வைத்திருக்கமுடியும். பிரச்னையின் அளவைப் பொறுத்து நினைவாற்றல் குறைந்துகொண்டே போகும்.

அதாவது, வலது கண் பார்வை நன்றாக இருந்தால், அது திறந்திருக்கும்போது நினைவாற்றலும் சிறப்பாக இருக்கும். பார்வைக் கோளாறு உள்ள ஒரு நோயாளி எந்தவிதமான பயிற்சியை மேற்கொண்டிருந்தாலும் சரி, ஏற்கெனவே பார்த்த கருப்புப் புள்ளியை நினைவில் வைத்திருப்பதன் மூலம் பார்வைக் கோளாறை விரைவில் சரி செய்ய முடியும் என்கிறார் பேட்ஸ். 

ஆனால், முயற்சி செய்து நினைவில் வைத்திருக்க வேண்டியதில்லை. அப்படிச் செய்வது டென்ஷனை ஏற்படுத்திவிடும். ரிலாக்சேஷன் இருக்கும்போது நினைவாற்றலும் நன்றாக இருக்கும். ‘பாமிங்’பயிற்சி செய்வது கருப்பை நன்றாக நினைவில் கொண்டுவர உதவும் என்கிறார் பேட்ஸ். (‘பாமிங்’பயிற்சி பற்றி விரைவில் பார்க்க இருக்கிறோம்).

கண்களைத் திறந்து ஒரு வெற்றுப்பரப்பை / சுவரை / திரையைப் பார்ப்பதன் மூலம் ஸ்ட்ரெய்ன் குறைகிறது என்றும், அதன்பிறகு கருப்புப் புள்ளியை நன்றாக நினைவில் கொண்டுவர முடியும் என்றும், ஒளிவிலகல் தொடர்பான எல்லாத் தவறுகளும் சரிசெய்யப்பட்டு பார்வைக் கோளாறுகள் நீங்குகின்றன என்றும் பேட்ஸ் சொல்கிறார். ஒன்றுமே இல்லாத பரப்பைப் பார்க்க எந்தவித முயற்சியும் தேவையில்லாததால், கண்ணில் தேவையில்லாமல் ஸ்ட்ரெய்ன் எதுவும் ஏற்படுவதில்லை. வெற்றுப்பரப்பின் மீது கண்ணைப் போட்டுவைக்க தூரமும் ஒரு பொருட்டில்லை. 

ஆனால், எழுதியிருக்கும் எதையாவது படிக்க வேண்டும் என்றாலோ, திரையில் தெரியும் ஏதாவதொரு பொருளைப் பார்க்க வேண்டும் என்றாலோ, எவ்வளவு தூரத்தில் அது இருக்கிறது என்பதைப் பொருத்து பார்வையில் தெளிவு இருக்கும். அந்த நேரத்தில், கண்ணுக்கும் திரைக்கும் இடையில் உள்ள தூரம் முக்கியமாகிறது. ஆனால், வெற்றுத்திரையைப் பார்க்கும்போது இந்தப் பிரச்னை ஏற்படுவதில்லை. திரையில் ஒருக்கும் ஒன்றைத் தெளிவாகப் பார்ப்பதற்கு நமது நினைவாற்றலே துணை நிற்கிறது. நினைவாற்றல் நன்றாக இருக்கும்போது பார்க்கப்படும் பொருளும் தெளிவாகத் தெரியும்.

ஐம்பத்தைந்து வயது பெண்மணிக்கு கிட்டப்பார்வை இருந்தது. அவரால் ஸ்நெல்லன் சார்ட்டில் உள்ள பெரிய C என்ற எழுத்தைப் பார்க்கமுடியாது. அதுமட்டுமல்ல, அவரால் துணை இல்லாமல் வெளியே செல்லமுடியாது. ஆனால், ஏதுமற்ற ஒரு பச்சை நிற சுவரைப் பார்க்கவைத்ததன் மூலம், அவரை ரிலாக்ஸ் செய்து, நினைவாற்றலைக் கூட்டி கதவின் பிடியை அவர் பார்க்கும்படிச் செய்து அதைத் தொட்டுத் திருப்ப வைத்தார் பேட்ஸ். (Perfect Eyesight Without Glasses – பக். 163).

ஸ்நெல்லன் கார்டில் உள்ள ஒரு புள்ளியை நினைவு வைத்திருந்தால்கூட எழுத்துக்கள் நன்றாகத் தெரிய ஆரம்பிக்கும். ஏனெனில், ஒரு புள்ளிக்காக ரிலாக்ஸ் ஆகிவிட்ட மனம் ஒரு எழுத்துக்காக ஸ்ட்ரெய்ன் ஆகாது. புள்ளியில் தொடங்கிய ரிலாக்சேஷனும் நினைவாற்றலும் எழுத்திலும் தொடரும். தனியாக ஒரு புள்ளியைப் பார்த்து நினைவுகூர்வதற்குப் பதிலாக தொடர்ந்து பல புள்ளிகளையோ அல்லது i, j போன்ற எழுத்துகளின் மீதுள்ள புள்ளிகளையோ நினைவில் கொள்ளலாம் என்கிறார் பேட்ஸ்.

கருப்பு நிறம்தான் என்றில்லை. அது பிடிக்காவிட்டால், பிடித்த நிறத்தைத் தேர்ந்தெடுத்து நினைவில் கொள்ளலாம். ஏதாவதொரு புள்ளியை முதலில் மனம் நினைவில் வைத்துக்கொண்டால், சென்ட்ரல் ஃபிக்சேஷன் என்ற விஷயம் நடந்துவிடும். (இதுபற்றி போன கட்டுரையில் பார்த்தோம்). அது பார்வையை நிச்சயம் மேம்படுத்தும் என்றும் பேட்ஸ் கூறுகிறார். மூன்று அல்லது ஐந்து விநாடிகளுக்கு மேல் விழிகளை மூடிய நிலையில் கருப்பை நினைவுகூர முடியாதவர்களுக்கு central fixation பயிற்சி பயன் தரும் என்று பேட்ஸ் கூறுகிறார். 

ஒரு உயர்நிலைப் பள்ளிக்கூட மாணவிக்கு ஒரு தேர்வில் ஒரு கேள்விக்கான பதில் நினைவுக்கு வராதபோது, தன் பார்வைக் கோளாறை சரிசெய்ய பேட்ஸ் சொன்னபடி புள்ளியை நினைவுகூர, மறந்துபோன பதில்கள் ஞாபகம் வந்தனவாம். இதுமட்டுமல்ல; ஒரு நோயாளியின் பெயர் பேட்ஸுக்கு மறந்துபோனது. உடனே ஒரு புள்ளியை நினைவுபடுத்திக்கொள்ளவும் நோயாளியின் பெயர் அவர் ஞாபகத்து வந்தது (பக்கம் 167)! 

ஒரு புள்ளி நினைவுக்கு வரும்போது பரிபூரணமான பார்வையும் ஒருவருக்குக் கிடைத்துவிடுகிறது என்பது பேட்ஸின் முக்கியமான கண்டுபிடிப்பென்றே சொல்லலாம். அப்படி தெளிவான பார்வை வந்தபிறகு, அது தொடர்ந்து நன்றாகவே இருக்கும் என்றும் அவர் கூறினார். A perfect memory is not only instantaneous, but continuous என்கிறார் அவர் (பக்கம் 168). ஒரு புள்ளியை நினைவுகூர்வது, ரிலாக்சேஷன் வந்துவிட்டதா இல்லையா என்று தெரிந்துகொள்வதற்கான பரிசோதனை என்றே சொல்லலாம் என்கிறார் அவர். 
பார்வைக்கு உதவும் கற்பனை

நாம் பெரும்பாலும் மனதால்தான் பார்க்கிறோம். கண்களால் கொஞ்சம்தான் பார்க்கிறோம் என்கிறார் பேட்ஸ்! விழித்திரையில் விழும் பிம்பங்களை மனம் எப்படிப் புரிந்துகொள்கிறது என்பதைப் பொறுத்தே நாம் பார்க்கமுடிகிறது. உண்மையில் நாம் காண்பது உருவங்களை அல்ல; அவற்றைப் பற்றிய மனதின் புரிந்துகொள்ளல்களையே. இன்ன நிறம், இன்ன வடிவம், இன்ன அளவு என்பதெல்லாமே மனதின் அல்லது மூளையின் புரிந்துகொள்ளல்கள்தான். பார்வையின் கோணமும் விழித்திரையில் விழும் பிம்பமும் ஒன்றாகவே இருந்தாலும், அடிவானத்தில் தெரிவதைவிட சின்னதாகவே வானுச்சியில் நிலவு தெரிகிறது. ஏனெனில், அடிவானத்துக்கு வரும்போது சுற்றி இருக்கும் பொருள்களோடு நிலவை மூளை ஒப்பிட்டுப் பார்க்கிறது. ஆனால், வானுச்சியில் அப்படி ஒப்பீடு செய்வதற்கு ஒன்றுமில்லை என்கிறார் பேட்ஸ். உயரமான கட்டடத்தின் மீதி நிற்கும் மனிதன் சின்னதாகத் தெரிவதும் இதனால்தான் என்கிறார் அவர்.

பார்வை நார்மலாக உள்ளவர்களின், அதாவது பார்வையில் எந்தப் பிரச்னையும் இல்லாதவர்களின் நினைவாற்றலும் கற்பனையும் பார்ப்பதற்கு உதவுகிறது. ஆனால், பார்வையில் பிரச்னை உள்ளவர்களுக்கு நினைவாற்றலிலும் கற்பனையிலும் பிரச்னை இருக்கும். பிரச்னை ஏதும் இல்லாமல் நல்ல பார்வை உள்ள இரண்டு பேர் ஒரே பொருளைப் பார்த்தாலும், இருவரும் ஒரே மாதிரியாகப் பார்ப்பதில்லை. அவர்களது தனித்துவத்துக்குத் தக்கவாறுதான் பார்வையும் இருக்கும். பார்வைக் கோளாறு இருந்த ஒருவர் ஸ்நெல்லன் சார்ட்டில் இருந்த பெரிய C எழுத்தைப் பார்த்தார். பத்தடி தூரத்தில் அவர் அதைப் பார்த்தபோது, இருபதடி தூரத்தில் பார்த்ததைவிட சின்னதாக அது தெரிந்தது (பக்கம் 172)!

நம்முடைய கண் ‘அவுட் ஆஃப் ஃபோக’ஸில் உள்ளபோது பார்க்கப்படும் பொருளின் வடிவமும் கன்னாபின்னாவெனத் தெரிய வாய்ப்புண்டு. அப்பொருள் இருக்கும் இடம்கூட மாறித் தெரியலாம். ஒரு பொருள் இரண்டாகவோ பலவாகவோ தெரியலாம். 

கற்பனை சரியாக வர வேண்டுமென்றாலும் சரியான ரிலாக்சேஷன் தேவை என்கிறார் பேட்ஸ். சரியான கற்பனையானாது, விழித்திரையில் விழும் பிம்பங்களை சரியாகப் புரிந்துகொள்ள உதவுகிறது. அதுமட்டுமின்றி, பார்வையில் ஏற்படு ஒளிவிலகல்களையும் சரிசெய்கிறது. 

நம்முடைய கற்பனை நினைவாற்றலோடு தொடர்புகொண்டது. எனினும் தனித்துவம் கொண்டது. சூரிய அஸ்தமனத்தை வாழ்க்கையில் ஒருமுறைகூடப் பார்த்திருக்காவிட்டால், உங்களால் சூரிய அஸ்தமனத்தைக் கற்பனை செய்யவே முடியாது. ஏற்கெனவே பார்த்த நினைவுப்பெட்டகம்தான் கற்பனைக்கு உதவி செய்கிறது. ஏற்கெனவே ஒரு லயனையும் நம்ம நயனையும் பார்த்திருந்தால்தானே நயனின் முகத்தில் லயனின் முகத்தை ஃபோட்டோஷாப்பின் மூலமாக ஒட்டவைக்க முடியும்?! 

மனம் முழுமையாக ரிலாக்ஸ் ஆகாமல் இருந்தால், நினைவாற்றலும் கற்பனையும் சரியாக வேலை செய்யாது. அவை சரியாக வேலை செய்யாமல் நம்மால் எப்படி சரியாகப் பார்க்கமுடியும் என்று கேட்கிறார் பேட்ஸ்! ஒரே ஒரு எழுத்தை முழுமையாகப் பார்ப்பதாக கற்பனை செய்யமுடிந்த நோயாளிகளால், சார்ட்டில் இருந்த எல்லா எழுத்துகளையும் தெளிவாகப் பார்க்கமுடிந்தது என்கிறார் பேட்ஸ்.

நாற்பது ஆண்டுகளாக மூ.க. போட்டிருந்த ஒரு டாக்டர், பேட்ஸிடம் வந்தார். இருபதடி தூரத்தில் இருந்த சார்ட்டில் C என்ற பெரிய எழுத்தை அவரால் மூ.க. போடாமல் பார்க்கமுடியாது. ஆனால், கருப்பாக எழுத்துகளைப் பார்ப்பதாகக் கற்பனை செய்யக் கற்றுக்கொடுத்த பிறகு, பதினைந்தே நிமிடங்களில் அவரால் கண்ணாடி இல்லாமல் பத்து அங்குல தூரத்தில் பார்க்கவும் படிக்கவும் முடிந்தது (பக்கம் 171).

இன்னும் பார்க்கலாம்…

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com