34. என் கண்ணே! - 2

அருகில் உள்ளவை கண்களுக்கு சரியாகத் தெரியவில்லை என்றால், அது பார்வை தொடர்பான பிரச்னையா அல்லது கண் என்ற உறுப்பிலேயே ஏற்பட்ட பிரச்னையா என்று யாரும் யோசிப்பதில்லை.
கண்ணுக்குத் தெரியாததை இதயம் பார்க்கிறது – சூஃபி ஜுனைத் அல் பக்தாதி

உண்மையில் நாம் கண்களால் பார்ப்பதில்லை, மூளையால்தான் பார்க்கிறோம் என்று புரிந்துகொண்டோம். உண்மையில் மூளையும் பார்ப்பதில்லை! நம் ஆன்மாதான் பார்க்கிறது. அல்லது உண்மையான நாம்தான் பார்க்கிறோம். அந்தப் பார்வைக்கு கண்கள் தேவையில்லை. இது என்ன ஆன்மிகம் பேசுகிறேன் என்று நினைக்கிறீர்களா? உண்மைதான். உண்மைக்குப் பெயர் ஆன்மிகம் என்றால், நான் ஆன்மிகம்தான் பேசுகிறேன். இந்த உண்மையை நம் பாரம்பரியமும் நம் ஞானிகளும் சொல்லித்தான் சென்றுள்ளார்கள். நாம்தான் புரிந்துகொள்ளவில்லை. இந்த உலகம் ஒரு மாயை என்று நம் இந்தியப் பாரம்பரியம் சொல்லியிருப்பதன் மகத்துவம் கொஞ்சம் கொஞ்சமாக இப்போது புரியத் தொடங்கியிருக்கலாம். நீங்கள் உலகத்தில் இல்லை, இந்த உலகம்தான் உங்களுக்குள் இருக்கிறது என்று ரமணர் போன்ற மகான்கள் சொல்லியிருப்பதன் அர்த்தமும் புரியத் தொடங்கியிருக்கலாம். இருக்கட்டும். மீண்டும் கண்களுக்கு வருவோம். 

நம்முடைய கண் தொடர்பான பிரச்னைகள் பெரும்பாலும் நமது தவறான புரிந்துகொள்ளலால் வருவதாகும் என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கிறதா? ஆனால், பிரச்னைகளுக்கெல்லாம் காரணம் நம்முடைய குழப்பம்தான். அல்லது குழப்பத்தின் மீதான நமது நம்பிக்கைதான். என்ன புரியவில்லையா? 

கண்ணில் ஒரு பிரச்னை வந்தால் அது உறுப்பு ரீதியான பிரச்னையா அல்லது செயல்பாடு ரீதியான பிரச்னையா (organic or functional disease) என்று நாம் யோசிப்பதில்லை என்கிறார் ஓர் உளவியலாளர். சத்தியமான வார்த்தைகள். ஏனெனில், ஒரு உறுப்பின் செயல்பாட்டில் ஏற்படும் பிரச்னைகளை அந்த உறுப்பு சம்பந்தப்பட்ட பிரச்னையாக நாம் புரிந்துகொள்வதுதான் நம் பிரச்னையே! 

உதாரணமாக, அருகில் உள்ளவை கண்களுக்கு சரியாகத் தெரியவில்லை என்றால், அது பார்வை தொடர்பான பிரச்னையா அல்லது கண் என்ற உறுப்பிலேயே ஏற்பட்ட பிரச்னையா என்று யாரும் யோசிப்பதில்லை. செயல்பாடு ரீதியான பிரச்னையை உறுப்பில் ஏற்பட்ட பிரச்னையாகப் பார்ப்பது அடிப்படைத் தவறாகும். அதைத்தான் அந்த உளவியலாளர் சுட்டிக்காட்டியுள்ளார். இதுபற்றி பின்னர் கொஞ்ச விரிவாகப் பார்க்கவேண்டி உள்ளது. ஏனெனில், நோயாளியின் மனம் என்ற ஒன்றை மருத்துவர்கள் யாரும் பொருட்படுத்துவதே இல்லை. 

நம்முடைய மனம் எந்நேரமும் இயங்கிக்கொண்டே இருக்கிறது. லட்சக்கணக்கான எண்ணங்கள் வந்து போய்க்கொண்டே இருக்கின்றன. நமக்குத் தெரிந்தும், தெரியாமலும். நம்முடைய பார்வையின் இயக்க முறையும் மனதின் செயல்பாடுகளில் ஒன்றுதான் என்று சொன்னால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனாலும் அதுதான் உண்மை. விழிப்பந்தின் வடிவத்தை மாற்றுகின்ற தசைகள், கண்ணில் பட்ட ஒளிக்கதிர்களின் சக்தியை கடத்திக்கொண்டுச் செல்லும் நரம்புகள், மூளையில் பார்வைக்கான மையத்தில் ஏற்படுத்தப்படும் பதிவுகள் – இதெல்லாம் சேர்ந்ததைத்தான் பார்வை என்பதாக விஞ்ஞானம் கூறுகிறது. 

இப்படி மூளையில் பதிவான காட்சிகளுக்கான விளக்கத்தை, அர்த்தத்தை மனம்தான் கொடுக்கிறது என்கின்றனர் உளவியலாளர்கள். மனம் என்று சொல்லும்போது நம்முடைய நினைவாற்றல், அனுபவம், இது கருப்பு, இது வெள்ளை என்ற மதிப்பீடு மற்றும் கற்பனை எல்லாம் சேர்ந்த ஒன்று. இவற்றையெல்லாம் சார்ந்துதான் நம் பார்வையின் ஆற்றல் உள்ளது. 

முதல் மனிதர் ஆதமைப் படைத்து தன் ஆன்மாவை அவருக்குள் ஊதியிருப்பதாக இறைவன் கூறுவதாக திருக்குர்ஆனில் ஒரு வசனம் உள்ளது (15:29). The Spirit of God என்றும் பொதுவாக அது அறியப்படுகிறது. உளவியலாளர்கள் மனம், ஆழ்மனம் என்று சொல்வதும் அதையே குறிப்பதாகப் புரிந்துகொள்வது கூடுதல் பயனளிக்கும்.

ஒரு சின்ன உதாரணம் தருகிறேன். இருட்டில் எரிகின்ற ஒரு ஊதுபத்தியை வட்டமாகச் சுழற்றிக்கொண்டிருந்தால் பார்ப்பவருக்கு ஒரு தீ வட்டம் தெரியும். ஆனால் அப்படி ஒரு தீவட்டம் உண்மையில் இல்லை. பார்ப்பதற்குத்தான் அப்படித் தெரியும். அவ்வளவுதான். ஏன் அப்படித் தெரிகிறது? ஏற்கெனவே நாம் உள்ளே போட்டு வைத்திருந்த சமாசாரங்களில் இலிருந்து இந்தப் புதிய அனுபவத்தை மனம் விளக்க அல்லது விளங்கிக்கொள்ள முற்படுகிறது. அப்போது நம் நினைவுப்பெட்டகத்தில் இருக்கும் தீ, வட்ட வடிவம் போன்ற விஷயங்கள் அதன் உதவிக்கு வருகின்றன. கூட்டிக் கழித்துப் பார்த்து அது தீயால் ஆன வட்டம் என்ற முடிவுக்கு மனம் வருகிறது. எனவே, நம் கண்களும் ஒரு தீவட்டத்தைப் பார்க்கின்றன! என்ன, கொஞ்சமாவது பற்றிக்கொண்டதா இல்லையா?!

கண்கள் செய்த அற்புதம்

உண்மையில், பார்ப்பது கண் அல்ல என்பதை ஒரு உளவியலாளர் ஒரு பரிசோதனையின் மூலம் நிரூபித்தார். Use Your Own Eyes என்ற நூலில் இந்நிகழ்ச்சி பதிவாகியுள்ளது.

கண் பார்வையின் அற்புதத்தை நிரூபிக்க அந்த உளவியல் பேராசிரியர் ஒரு வேலை செய்தார். ஒரு ஸ்பெஷல் மூ.க. தயாரித்தார். அதன் வழியாகப் பார்க்கும்போது பிம்பத்தை தலைகீழாக விழித்திரை உள்வாங்கிக்கொள்வதற்கு முன்பே, அந்தக் மூக்குக் கண்ணாடியே ஒளிவிலகலை ஏற்படுத்தி பிம்பத்தை தலைகீழாகக் காட்டியது. 

நேராக உள்ள ஒரு பொருளின் ஒளி பிம்பங்களை தலைகீழாக விழித்திரை வாங்கி பின் அதை நேராகப் புரிந்துகொள்வதுதான் கண்ணின் இயற்கை என்று பார்த்தோம். ஆனால், இந்த ‘லொள்ளு’ பேராசிரியர் செய்த காரியத்தினால், பொருள் தலைகீழாக இருப்பதுபோலத் தெரிந்ததால், விழித்திரையில் பிம்பம் நேராக விழ ஆரம்பித்தது! பகல் பூரா இந்த மூ.க.வை ஒருவரைப் போடவைத்து, இரவில் பார்க்க முடியாதபடி அவர் கண்களையும் கட்டிவைத்து ஒரு பரிசோதனையை அந்த பேராசிரியர் நிகழ்த்தினார். அதனால் என்னானது?

கண் கொஞ்சம் குழம்பிப்போனது. அதாவது, விழித்திரையில் விழும் பிம்பங்களைப் புரிந்துகொள்ளும் மனமும் மூளையும் குழம்பிப்போயின. அதனால் என்னானது? வலது பக்கம் தூண் இருப்பதாக நினைத்துக்கொண்டு அந்த மனிதன் இடது பக்கம் போனான். ஆனால், தூண் இடது பக்கம்தான் இருந்தது! தூணில் போய் அவன் மோதிக்கொண்டான்! இப்படியாகக் கொஞ்சநாள்தான் நடந்தது. அதன்பிறகு அந்த அற்புதம் நடந்தது. அது என்ன?

இது ஒரு சிறப்புக் குழறுபடி, இது சரியானதல்ல என்பதை மூளை புரிந்துகொண்டுவிட்டது! எப்படிக் காட்டினாலும் சரியாகப் பார்க்க ஆரம்பித்தது! என் கண்ணே என்று குழந்தைகளை நாம் கொஞ்சுவோம். இந்த ஆராய்ச்சி பற்றி முதன்முதலில் நான் படித்துத் தெரிந்துகொண்டபோது, என் கண்ணையே அப்படிக் கொஞ்ச வேண்டும் போலிருந்தது! 

ஒருவருக்குக் கிட்டப்பார்வை இருக்கும்போது, பார்க்கப்படும் ஒரு பொருளில் இருந்து எல்லா ஒளிக்கதிர்களும் விழித்திரையில் விழுவதில்லை. ஏனெனில், விழிப்பந்து மிக நீளமாக ஆவதால், தூரப்பொருள்களில் இருந்து விழும் ஒளிக்கதிர்கள் விரைவில் சந்திக்கின்றன. தூரப்பார்வை உள்ள ஒருவருக்கு இதற்கு நேர்மாறானது நடக்கிறது. விழிப்பந்து ரொம்ப சின்னதாக ஆவதால், ஒளிக்கதிர்கள் விழித்திரைக்குப் பின்னால் விழுகின்றன. சிதறல் பார்வை கொண்டவர்களுக்கு, விழிப்பந்தின் வடிவம் சரியான கோளவடிவில் இல்லாமல் போவதால், அசாதாரண முறையில் ஒளிக்கதிர்களை ஒளிவிலகல் செய்து சிதறல் பார்வையை ஏற்படுத்துகிறது – இப்படியாகத்தான் கண்ணில் தோன்றும் பிரச்னைகளைப் பற்றிய பாட நூல்கள் கூறுகின்றன. 

ஆனால் மேலே சொன்ன உளவியல் பேராசிரியர் நடத்திய பரிசோதனையில் நடந்தது என்ன? கன்னாபின்னாவென ஒரு பொருளைக் காட்டியபோதும், முதலில் குழம்பிய கண் பின்னர் தன்னைத்தானே சரிசெய்துகொண்டு, பொருளை எப்படிக் காட்டினாலும் சரியான வடிவத்தில், சரியான திசையில் அதைப் புரிந்துகொண்டு பார்த்தது. அப்படியானால் கிட்டபார்வை, தூரப்பார்வை, சிதறல் பார்வை என்று சொல்லப்படும் பிரச்னைகளையெல்லாம்கூட அது சரி செய்துகொள்ளும் சாத்தியம் உண்டல்லவா?

அப்படியானால் விழித்திரையல்லாத, பார்வை தொடர்பான வேறு ஏதோ ஒன்று சரியாகப் புரிந்துகொண்டு, விழித்திரையையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து பார்வைக் கோளாறு ஏற்படாமல் பார்த்துக்கொண்டது என்றுதானே அர்த்தம்? உண்மையில் பார்ப்பது கண் அல்ல, இறைவன் கொடுத்த உயிர் எனும் ஆற்றல்தான் என்பதை இப்பரிசோதனை அற்புதமாக நிரூபித்தது. அதை ஆழ்மனம் என்றுகூடச் சொல்லலாம். தவறில்லை. வார்த்தை முக்கியமில்லை. புரிந்துகொள்ளல்தான் முக்கியம். 

மூ.க. அணிய வேண்டியது நமக்கு ஒரு தேவையாக, அவசியமாகக்கூட இருக்கலாம். ஆனால், பார்வையில் ஏற்படும் ஒரு தவறை, ஒரு கோளாறை மூ.க. சரி செய்கிறது என்ற நினைப்பு சுத்தமான கற்பனை மட்டுமே. அது எதையும் சரிசெய்வதில்லை. அப்படிச் செய்யவும் முடியாது. கண்ணில் உள்ள லென்ஸுக்கு பதிலாக மூக்குக் கண்ணாடியில் உள்ள லென்ஸ் வழியாகப் பார்க்க அது உதவுகிறது. அவ்வளவே. 

ஒரு பொருள் மங்கலாகத் தெரிந்தால், ஒளிக்கதிர்களை முறையாக விழித்திரையில் பாயவிடாமல் நரம்புகளின் இயக்கம் சரியாக இல்லாமல் போய்விட்டதென்று அர்த்தம். நரம்புத் தூண்டுதல்களில் உள்ள குளறுபடிகளே பலவிதமான பார்வைக் கோளாறுகளுக்குக் காரணங்களாக அமைகின்றன என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். 

ஒவ்வொரு சரியான பார்வைக்கும் அல்லது பார்வைக் கோளாறுக்கும் visual centre என்று சொல்லப்படும் பார்வை மையத்திலிருந்து வரும் உத்தரவுகள்தான் காரணம் என்றும், அந்த உத்தரவுகள் நரம்புகள் வழியாக விழியின் தசைகளை வந்தடைகின்றன என்றும், அந்த உத்தரவுகளுக்குத் தக்கவாறு சரியாகவோ, குளறுபடியாகவோ நாம் பார்க்க நேரிடுகிறது என்பதும் அவர்கள் வாதம். மேலே பார்த்த உதாரணம் மூலம் நாம் இதைத் தெளிவாகப் புரிந்துகொண்டோம். 

அக்காமடேஷன் (Accommodation)

கண் ஒரு பொருளைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது நடக்கும் மாற்றங்களை கண்ணியல் நிபுணர்கள், மருத்துவர்கள் ‘அக்காமடேஷன்’ என்ற சொல்லால் குறிக்கிறார்கள். அதாவது, தான் பார்க்கும் பொருளுக்கும் தனக்கும் இடையில் உள்ள தூரத்துக்குத் தக்கவாறு கண் அல்லது லென்ஸ் தன்னை தகவமைத்துக்கொள்கிறது என்று அர்த்தம். இந்த ‘அக்காமடேஷன்’ எப்படி நடக்கிறது என்று பல ஆண்டுகள் ஆராய்ச்சிகள் நடந்துள்ளன. 

1614-ல் ஒரு ஆய்வு செய்யப்பட்டது. கண்ணின் லென்ஸின் வடிவத்தில் மாற்றம் செய்வதன் மூலம் குவிமையத்தில் மாற்றம் செய்ய முடியும் என்று ஒரு கருத்து முன்வைக்கப்பட்டது. பிறகு, 1894-ல் வாழ்ந்த ஜெர்மன் டாக்டர் ஹெம்ஹோல்ட்ஸ் என்பவராலும் இக்கருத்து உறுதி செய்யப்பட்டது. அதாவது, விழி லென்ஸின் வெளிப்பக்கமாகக் குவிந்த அமைப்பு நீளும்போது, அதில் விழும் படிமங்கள் சின்னதாகத் தெரியும் என்பதுதான் கருத்து. இதற்கு ‘அக்காமடேஷன்’தான் காரணம் என்று புரிந்துகொள்ளப்பட்டது. இது தவறு என்பதை பின்னாளில் டாக்டர் வில்லியம் பேட்ஸ் நிரூபித்தார்.

டாக்டர் ஹெம்ஹோல்ட்ஸ்

கண்ணின் லென்ஸ் வழியாகச் செல்லும் ஒளிக்கதிர்கள், ஒளிவிலகலைச் சந்திக்கின்றன. எந்தப் பொருளின் உருவமும் விழித்திரையில் விழும் முன், ஒளிவிலகல் நிகழ்ந்தே ஆக வேண்டும். ஒருவேளை லென்ஸே இல்லாவிட்டால் என்னாகும்? அப்போதும் நம் கண் ‘அக்காமடேட்’ செய்துகொள்ளும்! அப்படியானால், லென்ஸின் குவியளவு நீளுவதற்கும், ஒரு படிமம் சின்னதாகத் தெரிவதற்கும் தொடர்பில்லை என்றுதானே அர்த்தம்? ‘கேட்டராக்ட்’ எனப்படும் கண்ணில் பூவிழும் நோய்க்கான நிவாரண அறுவை சிகிச்சையின்போது என்ன நடக்கிறது? இயற்கை நமக்குக் கொடுத்த கண்ணின் லென்ஸ் நீக்கப்படுகிறது! ஆமாம். ‘கேட்டராக்ட் ஆபரேஷன்’ என்பது அதுதான். அதன்பிறகு என்னாகிறது? லென்ஸ் இல்லாமலே பார்க்கக் கற்றுக்கொள்கிறது நம் கண்!

1892-ம் ஆண்டு பேராசிரியர் ஃபார்ஸ்டர் என்பவர் ‘கேட்டராக்ட்’ அறுவை சிகிச்சையில் லென்ஸ் நீக்கப்பட்ட 22 பேர்கள் எப்படி எந்தப் பிரச்னையும் இன்றிப் பார்த்தார்கள் என்று அறிவித்தார். அவருடைய 22 பேர்களில், 11 வயதிலிருந்து 74 வயதுடையவர்கள் வரை இருந்தனர்! அமெரிக்க ஆப்தால்மாலஜி சொசைட்டியை சேர்ந்த டாக்டர் டேவிஸ் என்பவருடைய நோயாளி ஒருவருக்கும் கண் புரைக்காக லென்ஸ் நீக்கப்பட்டிருந்தது. ஆனால், அவராலும் லென்ஸ் இல்லாமல் நன்றாகப் பார்க்க முடிந்ததை டேவிஸ் தன் பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்தினார். பின்னர் அதுபற்றி Accommodation in the Lensless Eye என்று ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையும் வெளியிட்டார்.

லென்ஸ் வழியாக ஒளிக்கதிர்கள் விழித்திரையை அடைந்து அதன் பின் அவை மின்னதிர்வுகளாக மாற்றப்பட்டு, அவ்வதிர்வுகள் மூளையை அடைந்து, அதில் உள்ள பார்வை மையத்தில் மொழிபெயர்க்கப்பட்ட பிறகு நாம் ‘பார்க்கிறோம்’ என்பதுவரை புரிந்துகொண்டோம். ஆனால், லென்ஸ் இல்லாமலே நம் கண்கள் ‘அக்காமடேட்’ செய்துகொள்கின்றன என்பது முன்னர் சொன்ன உயிர்தான் பார்க்கிறது என்ற கருத்தை வலுப்படுத்துவதாகவே உள்ளது. உயிர் பற்றி ரொம்ப யோசிக்க முடியாது என்பதால், இப்போதைக்கு அதை ஆழ்மனம் என்றோ மூளையின் ஒரு முக்கியப் பகுதி என்றோ வைத்துக்கொள்ளலாம். 

‘அக்காமடேஷன்’ பற்றிப் பேசிவிட்டதனால், டாக்டர் வில்லியம் பேட்ஸைப் பற்றிப் பேசவேண்டிய நேரம் வந்துவிட்டது. ஒருவகையில், கண் பற்றிய இக்கட்டுரைகளின் முக்கியக் கதாநாயகனே இவர்தான். கண் மருத்துவ உலகில் இவர் ஒரு புரட்சியாளர். கண் பற்றிய பல ‘விஞ்ஞானரீதியான புனைவுகளை’ உடைத்தெறிந்தவர் இவர். நிறைய எதிர்ப்புகளை இவர் சந்தித்தார். 

டாக்டர் வில்லியம் பேட்ஸ்

விக்கிபீடியாவில் இவர் பெயரைப் போட்டுப் பார்த்தால், அதில் இவருடைய வழிமுறைகள் questionable என்றும், mainstream ophthalmology-க்கு எதிரானது என்றும் போட்டிருக்கும். விக்கிபீடியாவில் ஒரு விஷயம் விஞ்ஞானப்பூர்வமானதில்லை என்று போட்டிருந்தாலே, அது மிகச்சரியான வழிமுறை என்று நாம் புரிந்துகொள்ள வேண்டும்! ஏனெனில், மனித குலத்துக்கு பெரும் நன்மைகள் செய்த யாருடைய கருத்தையும் உலகம் இப்படித்தான் பார்க்கிறது. ஏனெனில், விக்கிகளை உருவாக்கிய வணிக முதலாளிகளுக்கு எதிராக எது இருந்தாலும் அது விஞ்ஞானத்துக்கு எதிரானது என்றுதான் சொல்லப்படும். கிருமிகளைப் பற்றி தப்பு தப்பாகச் சொன்ன லூயி பாஸ்டருக்கு பல பக்கங்கள் ஒதுக்கி முக்கியத்துவம் கொடுக்கும் விக்கி, அவர் தவறு என்று நிரூபித்த பிசாம்ப்-புக்கு ஒரு பக்கம்தான் ஒதுக்கியுள்ளது!

பதினைந்தாம் நூற்றாண்டில் நடந்த ஒரு சம்பவம் எனக்கு நினைவுக்கு வருகிறது. 19 வயதுப் பெண்ணுக்கு வானவர் தலைவர் மைக்கேல், தூய காதரீன், தூய மார்கரெட் ஆகியோர் காட்சி கொடுத்து, ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஃப்ரான்ஸை மீட்டு, ஏழாம் சார்லஸை மீண்டும் ஆட்சியில் அமர்த்த உத்தரவு கொடுத்தனர். கிராமத்துப் பெண்ணான அவள், அவ்வுத்தரவுகளை ஏற்று ஆங்கிலேயருக்கு எதிராக ஃப்ரெஞ்சுப் போர்வீரர்களுக்குத் தலைமையேற்று போர்செய்து, ஆர்லியன்ஸ் என்ற இடத்தில் பெரு வெற்றியையும் பெற்றாள்! போர் என்றால் என்னவென்றே தெரியாத ஒரு கிராமத்துப் பெண்! எல்லாம் தெய்வீக ஆற்றல். அவள் பெயர் ஜோன் ஆஃப் ஆர்க். அவளைப் பற்றித் திரைப்படம்கூட வந்துள்ளது.

ஆனால் அவள் பொய் சொல்கிறாள், எங்களுக்குக் காட்சி கொடுக்காத தூயவர்களும் வானவரும் 19 வயதே இருந்த ஒரு சாதாரணப் பெண்ணுக்கு எப்படிக் காட்சி கொடுக்க முடியும் என்று சொல்லி அவளைக் கைது செய்த ஆங்கிலேயத் திருச்சபையினர், அவளைக் கட்டிவைத்து உயிருடன் கொளுத்தினர். ஆனால், அவள் இன்று ஒரு புனிதராக தூய ஜோன் என்று அறியப்படுகிறார். 

உண்மையைச் சொன்னவர்களுக்கு இந்த கதிதான் வரலாறு முழுவதும் கிடைத்திருப்பதைக் காண முடிகிறது.

டாக்டர் வில்லியம் பேட்ஸுக்கும் அதுதான் நடந்தது. ஆனால் அவரது பரிசோதனைகள், முயற்சிகள், கவனிப்பு மூலம் ஆயிரக்கணக்கானோர் கண் பார்வை பெற்றனர். அவருடைய வழிமுறைகள் இன்றளவும் பின்பற்றப்பட்டு பயன் கொடுத்து வருகின்றன. 

மூ.க. இல்லாமல் சரியாகப் பார்க்க வேண்டுமென்றால், இன்று இருக்கும் ஒரே சிறந்த வழி பேட்ஸின் வழிமுறைகள்தான். அவற்றைப் பார்ப்பதற்கு முன்னர் அவர் என்னென்ன செய்தார், என்னவெல்லாம் சொன்னார் என்றும் பார்க்கவேண்டி உள்ளது. பார்க்கலாமா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com