35. என் கண்ணே! - 3

மூ.க. நமக்கு எப்போதுமே நன்மை செய்வதில்லை. கூடுதலாகவோ குறைவாகவோ கெடுதிதான் செய்கிறது. இயல்பான பார்வையை அவற்றால் கொண்டுவரவோ கொடுக்கவோ முடியாது.

பார்வை என்பது மற்றவர் கண்களுக்குத் தெரியாமல் இருப்பதைப் பார்க்கமுடிகிற கலையாகும்.

- ஜொனாதன் ஸ்விஃப்ட்

டாக்டர் வில்லியம் பேட்ஸையும் அவரது பணிகளையும் பற்றித் தெரிந்துகொள்ளும் முன், கண் பற்றி இன்னும் சில தகவல்களைச் சொல்லவேண்டி உள்ளது. முதலில் அவற்றைப் பார்த்துவிடலாமா?

மற்ற உறுப்புகளில் பிரச்னை ஏற்படும்போது, அதைக் காலப்போக்கில் சரி செய்யமுடியும் எனில், கண்ணில் ஏற்படும் பிரச்னைக்கு மட்டும் ஏன் காலம் பூராவும் கண்ணாடி அணிந்துகொண்டே இருக்க வேண்டும்? இந்தக் கேள்வியை யாருமே கேட்பதில்லையே ஏன்? கண்ணில் பிரச்னை ஏற்பட்டால் கண்ணாடி, அல்லது லென்ஸ், அல்லது அறுவை சிகிச்சை என்று நாம் முடிவு செய்துவிட்டோம். ஏன், அது ஒரு மத நம்பிக்கையைப்போல உறுதியடைந்த ஒன்றாகிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். கண்ணாடி போட்டுக்கொள்பவர், கண்ணாடிக் கம்பெனியின் சொத்தாகிவிடுகிறார். கண்கள், கண்ணாடியின் அடிமைகளாகிவிடுகின்றன.

மூக்குக் கண்ணாடிகள் நமக்கு என்ன செய்கின்றன

மூ.க. நமக்கு எப்போதுமே நன்மை செய்வதில்லை. கூடுதலாகவோ குறைவாகவோ கெடுதிதான் செய்கிறது. இயல்பான பார்வையை அவற்றால் கொண்டுவரவோ கொடுக்கவோ முடியாது. ஏதாவதொரு உட்குழிவான அல்லது மேற்புறம் குவிந்த ஒரு கண்ணாடி வில்லையின் மூலமாக ஏதாவதொரு நிறத்தைப் பார்த்தால் இது விளங்கும். அந்த நிறம், கண்ணாடி வழியாகப் பார்க்கும்போது உண்மையிலேயே இருப்பதைவிட தீவிரம் குறைந்த நிலையில் (less intense) தெரியும். நிறமானாலும் வடிவமானாலும், கண்ணால் காண்பதைவிட தெளிவு குறைவாகவே கண்ணாடி மூலம் பார்க்கமுடியும்.

மூ.க. அணியும் பெண்கள் நாளடைவில் நிறக்குருடாகிவிடுவார்கள். கடைகளுக்குச் சென்று எதற்காவது ‘சாம்பிள்’களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அவர்கள் மூ.க.வை கழட்டிவிடுவதைப் பார்க்கமுடியும்! மூ.க. போடாமல் பார்க்கும்போது தோன்றும் நிறத்தைவிட, போட்டுப் பார்க்கும்போது நிறம் இன்னும் தெளிவாக, கூடுதலாகத் தெரிகிறது எனில், பார்வைத் திறன் மிகவும் மோசமாகிவிட்டது என்று அர்த்தம்.

பல வகையான லென்ஸ்கள் உள்ளன. மூ.க. போடுவதால்தான் தெளிவாகப் பார்க்கமுடிகிறது என்றால், ஒளிக்கதிர்களின் பிரதிபலிப்பில் (refraction) ஏற்படும் தவறுகள் நிரந்தரமாக்கப்படுகின்றன என்று அர்த்தம். பொடி எழுத்துகளை மூ.க. போட்டுதான் படிக்கமுடிகிறது என்றால், நாளடைவில் ஏற்கெனவே மூ.க. போடாமல் படிக்கமுடிந்த பெரிய எழுத்துகளையும் மூ.க. போட்டால்தான் படிக்க முடியும் என்ற நிலை ஏற்படும்.

20/70 அடி கிட்டப்பார்வை உள்ள ஒருவர், மூ.க. போட்ட பிறகு 20/20-ல் பார்க்கமுடிகிறது என்றால், ஒரே வாரத்தில் அது 20/200 அடியாக கூடிப்போகும். அதாவது 70 அடி தூரத்தில் உள்ளதை 20 அடி தூரம் அருகில் சென்றால்தான் பார்க்கமுடியும் என்ற பிரச்னை மூ.க. போட்ட பிறகு 20/20-ஆகக் குறைந்து, பிறகு ஒரு வாரத்திலேயே 200 அடி தூரத்தில் உள்ளதையும் 20 அடிக்கு அருகில் கொண்டுவந்தால்தான் பார்க்கமுடியும் என்ற சூழ்நிலை உருவாகும். இன்னும் பலருக்கு, பகலில் மூ.க. போட்டு ஒழுங்காகத் தெரிவதெல்லாம் இரவு நேரத்தில் தெரிவதில்லை!

மூ.க. உடைந்துபோய், ஓரிரு வாரங்கள் அது இல்லாமல் பார்க்கவேண்டி இருந்தால், அந்தக் காலகட்டத்தில் இயற்கையான பார்வைத் திறன் கூடியிருப்பதை உணரமுடியும். மூ.க. போடாமல் இருந்தால், பார்வைத் திறனானது கூடிக்கொண்டேதான் இருக்கும். முதன்முறையாக மூ.க. போட்டவுடன் ஒரு மாதிரியாக இருக்கும். கொஞ்சம் பழக வேண்டும் என்று டாக்டர் சொல்லுவார்! ஏன்? ஏனெனில், மூ.க.வை நம் கண்கள் என்றுமே ஏற்றுக்கொள்வதில்லை.

பார்க்கும் காட்சிகளின் தளத்தை எல்லா மூ.க.க்களுமே சுருக்கிவிடுகின்றன. இயல்புக்கும் இயற்கைக்கும் மாறான ஒரு விஷயம் என்பதால்தான், மூ.க. போட்ட பிறகு சிலருக்குத் தலைவலி, தலைச்சுற்றல் போன்றவை வருகின்றன. பல திசைகளிலும் சுதந்தரமாக அவர்களால் கண்களைச் சுழற்ற முடிவதில்லை. இந்த லட்சணத்தில், தலைவலிக்காகத்தான் மூ.க. போடுகிறேன் என்று சொல்வது காமெடியா ட்ராஜடியா என்று சொல்ல முடியவில்லை!

தீவிரமான ஒளியை மூ.க. வழி பார்க்கும்போது, அது மூ.க.விலிருந்து பிரதிபலிக்குமானால், தெருவில் போகும்போது பெரிய அபாயத்தை அது உண்டு பண்ணலாம். ராணுவ வீரர்கள், கடல் பயணிகள், விளையாட்டு வீரர்கள், குழந்தைகள் போன்றவர்களுக்கு மூ.க.வால் பெரிய பிரச்னைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, astigmatism என்று சொல்லப்படும் சிதறல் பார்வை கொண்டவர்களுக்கு இப்பிரச்னை தீவிரமாக உணரப்படுகிறது.

குழந்தைகளுக்கு மூ.க. அணியச் செய்துவிட்டால் போதும், தேவதைகள் அழ ஆரம்பித்துவிடுகிறார்கள் என்கிறார் டாக்டர் பேட்ஸ். கவிதை மாதிரி ஒரு உண்மையை அழகாகச் சொல்லியிருக்கிறார்!

தூரப்பார்வை உள்ள கண்கள் நாளடைவில் கண்ணில் உள்ள லென்ஸின் வளைவைக் கொஞ்சம் மாற்றி, கண்ணின் தசைகளைப் பயன்படுத்தி தன்னைத்தானே சரிசெய்துகொள்கிறது. ஆனால், சாதாரண கிட்டப்பார்வை உள்ள கண்ணால் இப்படிச் செய்யமுடிவதில்லை. இயல்பான, இயற்கையான பார்வைக்கு மூ.க.வானது ஒரு மாற்றே கிடையாது என்பதுதான் சத்தியம்.

சின்ன எழுத்தில் உள்ள மெடிக்கல் லிட்ரேச்சரைப் படிக்க வேண்டுமானால் என்ன செய்வது? கஷ்டப்பட்டுத்தானே படிக்கவேண்டி உள்ளது? அருகில் உள்ளதைத் தெளிவாகப் பார்க்க நம் கண்கள் அதன் தசைகளை கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்யவேண்டி உள்ளது. மூ.க. இல்லாமல் ஊசியை நூலுக்குள் கோர்க்க முடியுமா இப்போது?!

கற்கால மனிதர்களுக்குக் கண் பார்வைப் பிரச்னையே வந்ததில்லை. ஆனால், நவீனகால மனிதர்களில் பத்தில் ஒன்பது பேருக்கு மூ.க. போட்டால்தான் கண் தெரிகிறது! ஒரு அவசியமான உபகரணமாகவே மூ.க. உலகெங்கிலும் பார்க்கப்படுகிறது.

ஜெர்மனி, ஆஸ்திரியா, ஃப்ரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகளில், ராணுவத்துக்கு ஆள் எடுக்கும்போது கண் பார்வைத்திறன் மூ.க. போட்டுக்கொண்டு 6/12 இருந்தால் போதும், எடுத்துக்கொள்வார்கள். அதாவது, சாதாரணமாக ஒரு மனிதர் 12 மீட்டர் தூரத்தில் உள்ளதை மூ.க. இல்லாமல் தெளிவாகப் பார்ப்பதை, நீங்கள் மூ.க. போட்டுக்கொண்டு ஆறு மீட்டர் தூரத்திலேயே பார்க்கிறீர்கள் என்று அர்த்தம்! இன்னும் சொல்லப்போனால், மூ.க. போடாமல் பார்வைத்திறன் 6/24 இருப்பதைவிட மூ.க. போட்டுக்கொண்டு 6/12 இருப்பது மேல் என்று அவர்கள் நினைத்தனர்! 6/12-ஐவிடக் குறைவாக இருந்தால், நீங்கள் அந்த ஊர் ராணுவத்தில் சேரமுடியாது!

பார்வைத் திறன் பற்றிய பெரும்பாலான தகவல்கள் யாவும் ‘சைமல்டேனியஸ் ரெடீனோஸ்கோபி’ (simultaneous retinoscopy) எனப்படும் பரிசோதனை மூலமே பெறப்படுகின்றன. கண்ணுக்குள், ரெடீனாவுக்குள் ரெடீனோஸ்கோப் கருவி மூலம் ஒளியைப் பாய்ச்சி, அதிலிருந்து எப்படி ஒளி வெளியேறுகிறது, ஒளி விலகலின் அளவு என்ன என்று பார்த்து, பார்வையின் தகுதியை அல்லது பார்வைக் கோளாறை அளக்கும் பரிசோதனையாகும் அது. ரெடீனோஸ்கோப் என்பது கண்களுக்குள் நிகழும் ஒளிவிலகலை (refraction) அளக்கும் கருவி என்றும் புரிந்துகொள்ளலாம். ஒரு சின்ன துளை வழியாகப் பார்க்கும்போது, கண்ணின் பாவை ஒளியால் நிரம்பியிருப்பதைக் காணமுடியும்.

பிரச்னைகளற்ற சாதாரண கண்ணாக இருந்தால், அது சிவப்புகலந்த மஞ்சள் நிறத்தில் தெரியும். ஏனெனில், அதுதான் விழித்திரையின் இயற்கையான நிறமாகும். பூனையாக இருந்தால் அது பச்சை நிறத்தில் இருக்கும். சரியான புள்ளியில் விழித்திரையைப் பார்க்காவிட்டால், பாவையின் ஓரத்தில் நிழல்போலத் தெரியலாம். கண்ணாடியை பல கோணங்களில் அசைக்கும்போது, அதற்குத் தகுந்த மாதிரி அந்த நிழலும் அசையும். அதை வைத்துத்தான், கண்ணில் ஒளிவிலகல் நிலையை அளப்பார்கள். ரெடீனோஸ்கோப்பை ஆறடி அல்லது அதற்கு மேல் தள்ளிவைத்துப் பார்க்கும்போது, நிழல் எதிர்த்திசையில் நகர்ந்தால் கிட்டப்பார்வை என்று புரிந்துகொள்வார்கள். அதே திசையில் நகர்ந்தால், தூரப்பார்வை அல்லது பிரச்னைகளற்ற சாதாரண நிலை என்றும் புரிந்துகொள்ளப்படும்.

என்ன பிரச்னை என்று கண்டுபிடிப்பதற்கு முன், நோயாளியின் கண்ணுக்கு முன் ஒரு கண்ணாடியைப் பொருத்தவேண்டி இருக்கும். சரி, இனி டாக்டர் வில்லியம் பேட்ஸைப் பற்றிப் பார்க்கலாம்.

வில்லியம் பேட்ஸ் (William Bates)

கண்களைப் பற்றி, கண்களின் பிரச்னைகளைப் பற்றி, கண்களின் தகவமைப்பு பற்றியெல்லாம் பேசும்போது, டாக்டர் வில்லியம் பேட்ஸை அறிந்தவர்கள் அவரை நினைக்காமல் இருக்கமுடியாது. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு, இளவரசர்களுக்குகூட எழுதப் படிக்கக் கற்றுக்கொடுக்கவில்லை என்றார் வில்லியம் பேட்ஸ்! காரணம், அதற்கான அவசியம் அப்போது ஏற்படவில்லை. அருகில் பார்க்கும் அவசியம் நவீன காலத்தியது. அதனால், அந்தத் தகவலை அவர் கொடுத்தார். கண் பற்றிய இக்கட்டுரைகளின் முக்கியக் கதாநாயகனே அவர்தான் என்று ஏற்கெனவே சொல்லியிருந்தேன்.

டாக்டர் வில்லியம் பேட்ஸ்

கண் பார்வை பற்றி, ஒளிவிலகல் பற்றியெல்லாம், முப்பது ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்தவர் வில்லியம் பேட்ஸ். அறுபதாயிரம் கண்களுக்கு மேல் பரிசோதித்துப் பார்த்தவர். குழந்தைகள், பள்ளி செல்லும் சிறுவர்கள், ஆண்கள், பெண்கள், நாய், பூனை, முயல், குதிரை, பசு, பறவை, ஆமை, பல்லி, ஓணான், மீன் என எல்லாவகையான விலங்குகளின் கண்களையும் இவர் ஆராய்ச்சி செய்துள்ளார்.

எப்போதெல்லாம் ஆராய்ந்துள்ளார்? மனிதர்களும் விலங்குகளும் அசையும்போது, அசையாதபோது, தூங்கும்போது, விழித்திருக்கும்போது, மயக்க மருந்து கொடுக்கப்பட்டிருக்கும்போது, பகலில், இரவில், அவர்களின் சாதாரண நிலையில், ரொம்ப உணர்ச்சிவசப்பட்ட நிலையில், அவர்கள் பார்க்க முயலும்போது, அவர்கள் பார்க்காதபோது, அவர்கள் உண்மை சொன்னபோது, அவர்கள் பொய் சொன்னபோது, அவர்கள் கண்கள் லேசாக மூடியிருந்தபோது, கண்ணின் பாவை தளர்ந்த நிலையில் இருந்தபோது, அது சுருங்கி இருந்தபோது, கண் அங்குமிங்கும் அலைந்துகொண்டிருந்தபோது, அலையாமல் நிலை குத்தி நின்றபோது – அம்மாடி, மூச்சு முட்டுகிறது - இப்படி எல்லா நிலைகளிலும், எல்லா சூழ்நிலைகளிலும் அவர் கண்களை ஆராய்ச்சி செய்துள்ளார்!

இப்படியெல்லாம் செய்ததன் மூலமாக, அதுவரை யாராலும் கண்டுணரப்படாத பல உண்மைகளை அவர் கண்டறிந்தார். அந்த உண்மைகள் ஏற்கெனவே கண் பற்றி பாரம்பரியமாகச் சொல்லப்பட்ட அல்லது ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்துகளுக்கு மாற்றமாக இருந்தன!

எனவே, யார் சொல்வது உண்மை என்று கண்டறிய அவர் பல ஆராய்ச்சிகளைச் செய்தார். முடிவில் அவர் நினைத்தது சரிதான் என்ற முடிவுக்கு வந்தார். கிட்டப்பார்வை, தூரப்பார்வை, சிதறல் பார்வை போன்ற கண் பார்வைக் கோளாறுகளெல்லாம் தீர்க்கமுடியாத பிரச்னைகள் அல்ல. மூ.க. போட்டுதான் அவற்றைத் தீர்க்க வேண்டும் என்பதில்லை. அவை தாமாகவே தீர்ந்துபோகின்றன. அல்லது வேண்டுமென்றேகூட அவற்றை உருவாக்கமுடியும் என்று அவர் சொன்னார்! ஆயிரக்கணக்கானவர்களுக்கு கிட்டப்பார்வை, தூரப்பார்வை போன்ற பலதரப்பட்ட கண் பிரச்னைகளை மூ.க. போடாமலே குணப்படுத்திய அற்புதத்தை அவர் நிகழ்த்தினார்.

கண்ணில் உள்ள லென்ஸ்தான் பார்வைத் தகவமைப்பு உண்டாக உதவியாக உள்ளது என்ற பாரம்பரிய கருத்து தவறு என்ற முடிவுக்கு அவர் வந்தார். வேறுபட்ட தூரங்களில், தூரத்துக்கு ஏற்றவாறு தன் குவிமையத்தை கண் மாற்றிக்கொள்கிறது. ரொம்ப கிட்ட இருக்கும் காதலியின் உதடுகளைப் பார்க்க ஒரு மாதிரியாகவும், வானத்திலிருக்கும் நிலவைப் பார்க்க வேறு மாதிரியாகவும் தன் குவியத்தை மாற்றிக்கொள்ளும் ஆற்றலைக் கண் கொண்டிருக்கிறது!

விழிப்பந்துக்கு வெளியே ஆறு தசைகள் உள்ளன. அவற்றில் நான்குக்கு ‘ரெக்டி’ என்று பெயர். இரண்டுக்கு ‘ஒப்லீக்’ என்று பெயர் என்றெல்லாம், ஏற்கெனவே கண் பற்றிய பாலபாடத்தில் சொன்னேன். தூரப்பார்வை, சிதறல் பார்வைக்கு ரெக்டி காரணமாகிறது. கண்ணின் தகவமைப்புக்கு ஒப்லீக்குகள் பொறுப்பேற்றுக்கொள்கின்றன என்பதை கண்ணின் ‘அக்காமடேஷன்’ பற்றிய தன் ஆராய்ச்சியின் மூலமாக அவர் நிரூபித்தார். உலகில் அப்படி ஒரு ஆராய்ச்சியை முதன் முதலில் செய்தவரும் அவர்தான்.

கண்ணின் தகவமைப்புக்கு லென்ஸ் காரணமில்லை என்ற முடிவுக்கு வந்த பேட்ஸ், கண்ணுக்கு வெளியே இருக்கும் ஆறு தசைகளையும் ஆராய்ச்சி செய்தார். அதில் ஒப்லீக் எனப்படும் இரண்டு சாய்வுத் தசைகளின் மீது தன் கவனத்தைக் கொண்டுவந்தார். விழிப்பந்தை நடுவில் சுருக்குவதாலும், படுக்கைவாக்கில் நீளச் செய்வதாலும், கண்ணின் அக்காமடேஷனுக்கு அவை காரணமாக இருக்கின்றன என்று அவர் யூகித்தார். தன் யூகம் சரி என்பதை பல பரிசோதனைகள் மூலம் அவர் நிரூபித்தார். அப்படி என்ன பரிசோதனைகள்?

மீன்கள், முயல்கள், பூனைகள், நாய்கள் ஆகியவற்றில் சாய்வுத் தசைகளை அவர் நீக்கினார். அவை நீக்கப்பட்ட பிறகு அந்த விலங்குகளால் ‘அக்காமடேட்’ செய்ய முடியவில்லை. அவற்றை நீக்காமல், ஆனால் அவை வேலை செய்ய முடியாத வகையில் ஒரு ஊசி போட்டு அவற்றை ஸ்தம்பிக்கவைத்தபோதும், அவற்றால் ‘அக்காமடேட்’ செய்ய முடியவில்லை. பிரித்து எடுக்கப்பட்ட அந்த இரு தசைகளையும் திரும்ப உள்ளே வைத்துத் தைத்த பிறகு, அவற்றால் ‘அக்காமடேட்’ செய்ய முடிந்தது. அவற்றை ஸ்தம்பிக்கவைத்த மருந்தை கழுவி வெளியே எடுத்தபிறகும், அவற்றால் ‘அக்காமடேட்’ செய்ய முடிந்தது.

இதெல்லாம் நிச்சயமாக நடந்தது என்பதை ரெடீனோஸ்கோப் என்ற கருவியின் மூலம் அவர் நிரூபித்தார். பல ஸ்பெஷலிஸ்ட்டுகள் முன்னிலையில் அப்பரிசோதனைகளை பேட்ஸ் நிகழ்த்திக் காட்டினார். லென்ஸ் இல்லாதபோதும் கண்ணால் எப்படிப் பார்க்கமுடிகிறது என்பதை பேட்ஸின் பரிசோதனைகள் நிரூபித்தன.

தூரத்திலுள்ள பொருள்களில் இருந்து வரும் ஒளிக்கற்றைகளுக்கு நம் கண்கள் எதுவும் செய்யவேண்டியதில்லை. ஆனால், அருகில் இருக்கும் பொருளில் இருந்து ஒளிக்கற்றைகள் வந்தால், அதற்கேற்றவாறு கண்கள் தங்களைத் தகவமைத்துக்கொள்ளவேண்டி உள்ளது. அருகில் உள்ள பொருளில் இருந்து வரும் ஒளிக்கதிர்கள் ரெடீனாவுக்குப் பின்னால் குவியும். எனவே, அருகிலோ அல்லது தூரத்திலோ இருக்கும் பொருளில் இலிருந்து வரும் ஒளிக்கதிர்களுக்குத் தகுந்தவாறு சாய்வுத் தசைகள் சுருங்கவோ, தளர்ந்திருக்கவோ வேண்டியுள்ளது என்று கூறினார் பேட்ஸ்.

ஸ்நெல்லன் டெஸ்ட் சார்ட்

டாக்டர் வில்லியம் மெக்ராக்கன் என்ற கண் மருத்துவரின் நோயாளி ஒருவருக்கு 85 வயது. நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவர் மூ.க. அணிந்திருந்தார். ஆனால், டாக்டர் பேட்ஸின் வழிமுறைகளைப் பின்பற்றி, அந்த நோயாளி இறப்பதற்கு முந்தைய இரண்டு ஆண்டுகளிலும், அவரால் மூ.க. அணியாமல் தன் குடும்பத்தினர் முன்னிலையில் எழுத்துகளைப் பார்க்கவும் படிக்கவும் முடிந்தது. கண் பார்வைக் குறைவு உள்ளவர்களைப் படிக்கச் சொல்லும் ஸ்நெல்லன் டெஸ்ட் சார்ட்டில் (Snellen Test Chart) உள்ளவற்றையும் அவர் மூ.க. போடாமல் தெளிவாகப் படித்தார்!

இன்னும் விரிவாக நாமும் கொஞ்சம் பார்க்க இருக்கிறோம்…

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com