39. என் கண்ணே! - 7

ஒரு எழுத்தையோ ஒரு பொருளையோ, நம் கண்களால் ஒரு விநாடியின் ஒரு பகுதிக்கு மேல் பார்த்துக்கொண்டே இருக்க முடியாது. ஆமாம். அப்படி முயன்று பார்த்துக்கொண்டிருந்தால், கண்ணுக்கு ஸ்ட்ரெய்ன் ஏற்படும்.

திறந்திருக்கும் ஒவ்வொரு கண்ணும் பார்த்துக்கொண்டிருக்கவில்லை; மூடியிருக்கும் ஒவ்வொரு கண்ணும் தூங்கிக்கொண்டிருக்கவில்லை – பில் காஸ்பி

கண்களுக்கு ஓய்வு கொடுக்கும் ‘பாமிங்’ என்ற முக்கியமான பயிற்சி பற்றி முந்தைய கட்டுரையில் பார்த்தோம். இங்கே மேலும் சில முக்கியப் பயிற்சிகள்.

இடம் மாற்றுதலும் ஊஞ்சல்போல ஆடுவதும் (Shifting and Swinging)

கண் பார்வை நன்றாக உள்ளவர்களுக்கும் இப்போது சொல்லப்போவது நடந்துகொண்டிருக்கிறது. அது என்ன? அதுதான் ஷிஃப்டிங். ஒரு எழுத்தை அருகில் பார்த்தாலோ, தூரமாகப் பார்த்தாலோ, வலதாக அல்லது இடதாகப் பார்த்தாலோ அந்த எழுத்து துடிப்பது போலவோ, மேலும் கீழும் அசைவது போலவோ, பக்கவாட்டில் செல்வது போலவோ தோன்றும்.

ஆனால், உண்மையில் பார்க்கப்படும் எழுத்து எதுவும் நகர்வதில்லை. அந்த ஷிஃப்டிங் நம் கண்களில்தான் நடந்துகொண்டுள்ளது. அது நகரும் திசைக்கு எதிர்த்திசையில் எழுத்து நகர்வதாகத் தெரியும். ஒரு எழுத்தின் மேல் பகுதியை கண் பார்த்தால் அது கீழ்நோக்கி நகர்வது போலவும், கீழ் பகுதியைப் பார்த்தால் அது மேல் நோக்கி நகர்வது போலவும், வலது பக்கம் பார்த்தால் இடது பக்கம் நகர்வதைப் போலவும், இடது பக்கம் பார்த்தால் வலது பக்கம் நகர்வதைப் போலவும் தோன்றும். ரயிலில் போகும்போது, மரங்கள் எதிர்ப்பக்கம் போவதுபோல் தோன்றுகிறதல்லவா, அதுபோல.

ஆனால், சாதாரணப் பார்வை கொண்டவர்களால் இந்த ஷிஃப்டிங் நடப்பதை உணர முடியாது. பார்வை சரியாக இல்லாதபோது, எழுத்துகள் ஓரிடத்திலேயே நிலையாக இருப்பதைப் போலவும், கண் போகும் திசையிலேயே எழுத்தும் நகர்வதைப் போலவும் தெரியலாம். மாற்றமாகத் தெரிந்தால்தான் பார்வை சரியாக இருக்கிறதென்று அர்த்தம். விழித்திரையில் எல்லாம் தலைகீழாக விழும் என்று ஏற்கெனவே பார்த்தோமல்லவா? அதை இங்கே நினைவுகூரலாம்.

ஒரு எழுத்தையோ ஒரு பொருளையோ, நம் கண்களால் ஒரு விநாடியின் ஒரு பகுதிக்கு மேல் பார்த்துக்கொண்டே இருக்க முடியாது. ஆமாம். அப்படி முயன்று பார்த்துக்கொண்டிருந்தால், கண்ணுக்கு ஸ்ட்ரெய்ன் ஏற்படும். பார்வையில் குறைபாடு உண்டாகும். (அதை நாம் உணராமல் இருக்கலாம், அது வேறு விஷயம்). சும்மா ஒரு விரலையே உங்கள் கண்களுக்கு எதிரில் வைத்துப் பாருங்களேன். சில விநாடிகளில், அல்லது நாநோ விநாடிகளில், அது மங்கலாகத் தெரிய ஆரம்பிக்கும். அல்லது நகர்வது போலத் தோன்றும். அப்படியானால், காதலனும் காதலியும் ஒருவரையொருவர் வெகு நேரம் கண் இமைக்காமல் பார்க்கிறார்களே அது எப்படி என்கிறீர்களா? அது வேறு உலகம். கண்ணை மூடினால்கூட காதலி தெரிந்துகொண்டுதானே இருப்பாள்! காதலின்போது எல்லா அதிசயங்களும் நடக்கும்! நாம் இங்கே பேசிக்கொண்டிருப்பது விஞ்ஞானம்! கண் அவர்களுக்கே தெரியாமல் ஷிஃப்ட் ஆகிக்கொண்டே இருக்கும். இதை ஒரு ஆஃப்தால்மாஸ்கோப் வைத்து நிரூபிக்கலாம்.

கண் பார்வை நார்மலாக இருக்கும்போது இந்த ஷிஃப்டிங் படு வேகமாக நடக்கும். எனவே அது உணரப்படாது. கும்கி படத்தில் ‘‘சொல்லிட்டாளே அவ காதல’’ என்ற பாடல் காட்சியில், குடத்தை வைத்துக்கொண்டு இடுப்பை ஆட்டும் லட்சுமி மேனன், நீள் மூக்குக் கதாநாயகன், அந்தப் பச்சைப் பசேலென்ற வயல்கள், அந்த நீர்வீழ்ச்சி, அதன் உயரம் – இப்படி எல்லாவற்றையும் பார்க்க வேண்டுமென்றால், ஆயிரக்கணக்கான தடவைகள் நம் கண்கள் ஷிஃப்டிங் செய்யவேண்டி இருக்கும்! ஆனால், பார்வைக்கோளாறு உள்ளபோது ஷிஃப்டிங் மெதுவாக நடக்கும்.

இப்படி படுவேகமாக கண்ணும் மனமும் ஷிஃப்டிங் செய்யும்போதுதான், இரண்டுமே ஓய்வில் இருக்கும், இரண்டுமே பிரமாதமாக வேலை செய்யும் என்கிறார் பேட்ஸ். எவ்வளவு வேகமாக ஷிஃப்டிங் நடக்கிறதோ, அவ்வளவு தெளிவாகப் பார்வை இருக்கும். தொடர்ந்து ஷிஃப்டிங் நடக்காமல் பார்வை தெளிவாக இருக்காது. ஆனால், இந்த ஷிஃப்டிங்கை உணர்ந்துகொள்ள விரும்பி அதற்கு நாம் முயன்றால் ஸ்ட்ரெய்ன் ஏற்பட்டுவிடுகிறது. ஒரு பொருளை அல்லது ஆளை முறைத்துப் பார்த்துக்கொண்டே இருக்கும்போதோ அல்லது தெளிவாகத் தெரியாத ஒரு பொருளை தொடர்ந்து விடாமல் பார்த்துக்கொண்டே இருக்கும்போதோ ஷிஃப்டிங் நடக்காது. அது பார்வைக் குறைவுக்கு வழி வகுக்கும் என்கிறார் பேட்ஸ்.

சரி இதெல்லாம் எதற்காக பேட்ஸ் சொல்கிறார்? ஷிஃப்டிங் என்பது தெளிவான, சாதாரண பார்வை உள்ளவர்களுக்கு இயற்கையாக, இயல்பாக நடக்கும் ஒரு விஷயமாகும். எனவே, பார்வைக் குறைவு உள்ளவர்கள் வேண்டுமென்றே ஷிஃப்டிங் செய்தால் பார்வை மேம்படுகிறது என்று கண்டுபிடித்தார் பேட்ஸ்! அதுதான் விஷயம், அதுதான் பயிற்சி. கண் பார்வை சரியாக இருந்தாலும், கோளாறாக இருந்தாலும், ஷிஃப்டிங் செய்வதால் கண்களுக்கு நன்மை ஏற்படுகிறது. பார்வைக் கோளாறு சரியாகும் வாய்ப்பு மட்டுமல்ல, இயல்பான பார்வை மேம்படும் வாய்ப்பும் கிடைக்கிறது.

பார்வைக் கோளாறு உள்ளவர்கள் ‘பாமிங்’ செய்வதால் கிடைப்பதைப் போலவே, ஷிஃப்டிங் செய்வதாலும் கண்களுக்குத் தேவையான ஓய்வு கிடைக்கிறது. ஒளிவிலகலில் ஏற்படும் பிரச்னைகளையும் அது சரி செய்கிறது. ‘பாமிங்’ செய்துவிட்டு பிறகு ஷிஃப்டிங், ஸ்விங்கிங் செய்தால் அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்கிறார் பேட்ஸ்.

இரண்டு வேறுபட்ட புள்ளிகளை மாறிமாறிப் பார்ப்பது ஷிஃப்டிங். தொடர்ந்து கண்ணை ஒரு படத்தின் ஊடேயோ, வாக்கியத்தின் ஊடேயோ நகர்த்திக்கொண்டிருந்தால் கிடைக்கும் தொடர் நகர்வுதான் ஸ்விங்கிங் என்று எளிமையாகப் புரிந்துகொள்ளலாம். பாமிங் செய்யும்போது கண்களுக்கு ஓய்வு கிடைக்கிறது. ஷிஃப்டிங் செய்யும்போது பார்வையில் தெளிவு கிடைக்கிறது. இப்படிச் செய்வதன் மூலம், ஒரு சில வாரங்களிலேயே நிரந்தரமான குணம் கிடைக்க வாய்ப்பு உண்டு என்கிறார் பேட்ஸ். கண்களை அங்குமிங்கும் நகர்த்திப் பார்க்கும் ஷிஃப்டிங்கை படுவேகமாகச் செய்ய வேண்டியதில்லை. உதாரணமாக, ஒரு விநாடிக்கு இரண்டு மூன்று முறைகள் ஷிஃப்டிங் செய்தால், ஸ்விங் ஆவதைப் புரிந்துகொள்வது கஷ்டமாகிவிடும்.

மனதால்கூட இந்த ஸ்விங்கை நிகழ்த்தலாம். பலருக்கு இது இன்னும் எளிதாக இருக்கலாம். உதாரணமாக, A என்ற எழுத்து, இடம் வலமாக பெண்டுலம் போல ஊஞ்சலாடிக்கொண்டிருப்பதைப் போலவும், அதைத்தொடர்ந்து கண்கள் ஓடிக்கொண்டிருப்பதைப் போலவும் கற்பனை செய்யலாம்.

இப்படிச் செய்து பழகிய பிறகு, உண்மையிலேயே ஸ்நெல்லன் சார்ட்டில் உள்ள எழுத்துகளை ஸ்விங் செய்து பார்க்கலாம். செய்து பழகிவிட்டால், செய்தித்தாளில் உள்ள ஒரு புள்ளியைக்கூட ஊஞ்சலாட்டிப் பார்ப்பது எளிதாகிவிடும். இப்படி புள்ளியில் தொடங்கி, உட்கார்ந்திருக்கும் நாற்காலி, எதிரில் இருக்கும் மேஜை, வீடு, தெரு என்று உலகம் முழுவதையுமே ஊஞ்சலாட்டிப் பார்க்கலாம்.

கீழ்க்கண்ட ஷிஃப்டிங், ஸ்விங்கிங் பயிற்சிகளைச் செய்து பார்க்கலாம் -

பயிற்சி ஒன்று

1. ஒரு வாக்கியத்தில் உள்ள ஒரு எழுத்தைப் பார்க்கவும்.

2. பின்னர் அதே வாக்கியத்தில் முதலில் பார்த்த எழுத்தைவிட்டு தூரமாக இருக்கும் வேறொரு எழுத்தைப் பார்க்கவும். இப்படிப் பார்க்கும்போது முதலில் பார்த்த எழுத்து சரியாகத் தெரியாது.

3. மீண்டும் முதலில் பார்த்த எழுத்தைப் பார்க்க வேண்டும். இப்போது இரண்டாவதாகப் பார்த்த எழுத்து சரியாகத் தெரியாது.

4. இப்படி மாற்றி மாற்றி சில விநாடிகளுக்குப் பார்க்க வேண்டும். இப்படிப் பார்க்கும்போது பார்க்காத எழுத்து சரியாகத் தெரியாமல் இருக்க வேண்டும்.

இந்த பயிற்சி சரியாக வந்துவிட்டால், இரண்டு எழுத்துகளுமே கண்கள் அசையும் திசைக்கு எதிர்த்திசையில் நகர்வதாகத் தோன்றும்.

பயிற்சி இரண்டு

1. ஒரு பெரிய எழுத்தைப் பார்க்கவும்.

2. அதிலிருந்து தூரமாக இருக்கும் ஒரு சின்ன எழுத்தைப் பார்க்கவும். இப்போது பெரிய எழுத்து சரியாகத் தெரியாது.

3. இப்போது மீண்டும் பெரிய எழுத்தை தெளிவாகத் தெரியுமாறு பார்க்கவும்.

4. இப்பயிற்சியை ஆறு தடவைகள் செய்யவும்

வெற்றிகரமாகச் செய்துவிட்டால், இரண்டு எழுத்துக்களுமே தெளிவாகத் தெரிய ஆரம்பிக்கும். எழுத்துகளைக் கொண்டிருக்கும் அட்டை, மேலும் கீழும் நகர்வது போலத் தோன்றும்.

பயிற்சி மூன்று

தொடர்ந்து எழுத்துக்களைத் தெளிவாகப் பார்க்க வேண்டுமென்றால், மேல் கீழாக, கீழ் மேலாகத் தொடர்ந்து பார்த்து, செங்குத்தான ஒரு ஊஞ்சலாட்டம் நடப்பதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

1. ஒரு எழுத்துக்கு மேலே, அந்த எழுத்து சரியாகத் தெரியாத அளவுக்கு தூரமாக மேலே பார்க்க வேண்டும். அப்போது அந்த எழுத்துக்குக் கீழே உள்ள பகுதியும் அந்த எழுத்தும் சரியாகத் தெரியாது.

2. அந்த எழுத்துக்குக் கீழே, அந்த எழுத்து சரியாகத் தெரியாத அளவுக்குத் தூரமாகக் கீழே பார்க்க வேண்டும். அப்போது அந்த எழுத்துக்கு மேலே உள்ள பகுதியும் அந்த எழுத்தும் சரியாகத் தெரியாது.

3. இதை ஆறு முறைகள் செய்ய வேண்டும்.

சரியாகச் செய்துவிட்டால், அந்த எழுத்து மேலும் கீழும் அசைவது போலத் தெரியும். பார்வை மேம்படும். இது ஒருவேளை முதல் முயற்சியில் சரியாக வராவிட்டால், கண்களுக்கு ‘பாமிங்’ செய்து ஓய்வு கொடுக்கவும். பின்னர் முயன்று பார்க்கவும்.

பயிற்சி நான்கு

1. நன்றாகத் தெரியும் தூரத்தில் ஒரு எழுத்தைப் பார்க்கவும். பின்னர் அந்த எழுத்துக்கு மேலும் கீழும் கண்களை ஷிஃப்டிங் செய்யவும். எழுத்தின் மேல் பகுதியும் கீழ் பகுதியும் மாற்றி மாற்றி சரியாகத் தெரியாமல் போகும். எழுத்து நல்ல கருப்பாக, தெளிவாகத் தெரியும்போது, அசைவது போன்ற தோற்றம் ஏற்படும்.

2. இப்போது கண்களை மூடிக்கொண்டு, எழுத்தின் மேலும் கீழும் கண்களை ஓடவிட்டு, மனதால் ஷிஃப்டிங் செய்யவும்.

3. இப்போது திறந்த கண்களுடன் ஒரு வெற்று சுவரைப் பார்த்து, 2-ல் செய்த அதே பயிற்சியைச் செய்யவும். கற்பனையால் ஷிஃப்டிங் ஸ்விங்கிங் செய்வதற்கும், கண் திறந்து செய்வதற்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை ஒப்பிட்டுப் பார்க்கவும்.

4.    இப்போது அந்த எழுத்தை அதே தூரத்தில் மேலும் கீழுமாகப் பார்க்கவும். வெற்றிகரமாகச் செய்திருந்தால், அந்த எழுத்து நல்ல கருப்பாகவும், ஒரு ஊஞ்சாலட்டம் நடப்பதைப் போலவும் தோன்றும்.

பயிற்சி ஐந்து

சிலர், முக்கியமாக குழந்தைகள், எழுத்தை சுட்டிக் காட்டினால் நன்றாகப் பார்ப்பார்கள். அப்படியான சூழ்நிலைகளில் இப்பயிற்சியை மேற்கொள்ளலாம்.

1. எழுத்துக்கு மூன்று அல்லது நான்கு அங்குலம் கீழே விரல் நுனியை வைத்துக்கொள்ளவும். நோயாளி எழுத்தைப் பார்க்க வேண்டும். பின்னர் அது சரியாகத் தெரியாத அளவுக்கு விரல் நுனியைப் பார்க்க வேண்டும்.

2. விரல் நுனிக்கும் எழுத்துக்கும் இடையில் உள்ள இடைவெளியைக் குறைக்க வேண்டும். முதலில் இரண்டு அல்லது மூன்று அங்குலங்கள், பின்னர் ஒன்று அல்லது இரண்டு அங்குலம், பின்னர் அரை அங்குலம் என. ஒவ்வொரு முறையும் 1-ல் செய்ததுபோலவே செய்யச் சொல்ல வேண்டும்.

3. இப்பயிற்சி வெற்றிகரமாகச் செய்ய முடிந்தால், எழுத்தின் மேல் கீழ் பகுதிகளை நோயாளி தெளிவாகப் பார்க்க முடியும். அதே நேரம், ஒரு மாயையான ஊஞ்சலாட்டம் நடப்பதையும் உணர முடியும். அதன் பிறகு அந்த எழுத்தை தொடர்ந்து பார்க்க முடியும்.

பயிற்சி ஆறு

பார்வையில் கோளாறு உள்ளபோது, ஸ்நெல்லன் சார்ட்டில் உள்ள சின்ன எழுத்தை நோயாளி பார்க்கும்போது, மேலே உள்ள பெரிய C என்ற எழுத்தோ அல்லது வேறு பெரிய எழுத்துகளோ இருப்பதைவிட பெரியதாகத் தெரியும். இதனால் சின்ன எழுத்துகளை சரியாகப் பார்ப்பது சிரமமாகிவிடும். இதைச் சரி செய்ய, நன்றாகத் தெரியும் எழுத்தை முதலில் பார்த்துவிட்டு, உடனே சின்ன எழுத்துகளுக்கு பார்வையை ஷிஃப்ட் செய்ய வேண்டும். வெற்றிகரமாகச் செய்ய முடிந்தால், சில முறைகள் முயன்ற பிறகு, சின்ன எழுத்துகளும் பெரிய எழுத்தைவிடக் கருப்பாக, தெளிவாகத் தெரிய ஆரம்பிக்கும். முயற்சி பலிக்கவில்லையெனில், ‘பாமிங்’ செய்து கண்களுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு பின்னர் மீண்டும் தொடங்கலாம்.

இனி வரும் பயிற்சிகளை பத்து தடவைகள் செய்து பார்க்கலாம். கண்கள் களைப்படையாதவாறு பார்த்துக்கொள்வது நல்லது. களைப்பாக உணர்ந்தால் குறைத்துக்கொள்ளலாம்.

பயிற்சி ஏழு (இரண்டு கண்களுக்குமான பயிற்சி)

1. ஒரு பென்சிலை கண்களுக்கு எதிரில் ஐந்து அல்லது ஆறு அங்குல தூரத்தில் வைத்துக்கொண்டு, பென்சிலின் முனையையே சில விநாடிகள் பார்க்கவும்.

2. பிறகு தூரமாக உள்ள மேகத்தையோ, கட்டடத்தையோ, ஒரு மரத்தையோ சில விநாடிகள் பார்க்கவும்.

3. உடனே மீண்டும் பென்சிலின் முனையைப் பார்க்கவும்.

உங்கள் பார்வை நார்மலாக இருந்தால், பென்சில் முனையைப் பார்த்துவிட்டு தூரத்தில் உள்ள ஒரு பொருளுக்குப் பார்வையை மாற்றுவதில் எந்த சிரமமும் இருக்காது. பார்வையில் எதாவது பிரச்னை இருந்தால், ஒருவித தசைச் செயல்பாடு (muscular action) இருப்பதை உணர முடியும். ஆனால், இப்படி மாற்றி மாற்றிப் பார்ப்பதன் மூலம் கிட்டப்பார்வை, தூரப்பார்வை பிரச்னைகள் சரியாகும்.

பயிற்சி எட்டு

மேலே உள்ளது போன்ற பயிற்சிதான். ஆனால் ஒரு கண்ணை மூடிக்கொண்டு இதைச் செய்ய வேண்டும்.

1. ஒரு பென்சிலை கண்களுக்கு எதிரில் ஐந்து அல்லது ஆறு அங்குல தூரத்தில் வைத்துக்கொண்டு, ஒரு கண்ணை மூடிக்கொண்டு, திறந்த கண்ணால் பென்சிலின் முனையை சில விநாடிகள் பார்க்கவும்.

2. பிறகு தூரமாக உள்ள மேகத்தையோ, கட்டடத்தையோ, ஒரு மரத்தையோ திறந்த கண்ணால் சில விநாடிகள் பார்க்கவும்.

3. உடனே, திறந்த கண்ணால் பென்சிலின் முனையை மீண்டும் பார்க்கவும்.

பயிற்சி ஒன்பது

1. ஒரு கண்ணை மூடிக்கொண்டு, திறந்த கண்ணால் மூக்கின் நுனியை சில விநாடிகள் பார்க்கவும்.

2. பிறகு, திறந்த கண்ணால் தூரத்தில் உள்ள எதையாவது பார்க்கவும்.

3. மீண்டும் திறந்த கண்ணால் மூக்கின் நுனியைப் பார்க்கவும்.

பயிற்சி பத்து

1. இரண்டு கண்களையும் திறந்து மூக்கின் நுனியைப் பார்க்கவும்

2. பின்பு, இரண்டு கண்களாலும் தூரத்தில் உள்ள எதையாவது பார்க்கவும்

3. பின் மீண்டும் மூக்கின் நுனியைப் பார்க்கவும்

பயிற்சி பதினொன்று, பனிரண்டு, பதிமூன்று, பதிநான்கு, பதினைந்து

1. தலையை அசைக்காமல், இரண்டு கண்களையும் விரித்து நீட்டி இடது பக்கமாகப் பார்க்கவும். அதேபோல தலையை அசைக்காமல், இரண்டு கண்களையும் விரித்து நீட்டி வலது பக்கமாகப் பார்க்கவும்.

2. அதேபோல, இரண்டு கண்களாலும் மேலே பார்க்கலாம். பின்பு கீழே பார்க்கலாம்.

3. அதேபோல, இரண்டு கண்களையும் வட்டமாக இடம் வலமாக உருட்டலாம். இடப்பக்கமாக மேலே கொண்டுபோய் வலப்பக்கமாக கீழே கொண்டுவந்து வட்டமடிக்கலாம். அல்லது வலப்பக்கமாக மேலே கொண்டுபோய் இடப்பக்கமாக கீழே கொண்டுவந்து வட்டமடிக்கலாம்.

4. சட்டென்று கண்களை இறுக்கமாக மூடிக்கொள்ள வேண்டும். பின்பு திறக்க வேண்டும். இப்படி திரும்பத் திரும்ப பத்து முறைகள் செய்யலாம்.

5. மூக்கின் தண்டைப் பார்ப்பதுபோல ஓரக்கண் போடலாம். இரண்டு கண்களாலும்தான் இதைச் செய்ய வேண்டும் என்று சொல்லவேண்டியதில்லை என்று நினைக்கிறேன். ஓரக்கண் போட்டுப் பார்ப்பது ரொம்ப திடமான பயிற்சிகளில் ஒன்றாகும். கண்களின் தசைகளுக்கு இது ஒரு நல்ல பயிற்சியாகும்.

இந்த பயிற்சியைச் செய்யும்போது நமக்கும் ஓரக்கண் வந்துவிடுமோ என்ற அச்சம் தேவையில்லை. ஏனெனில், வேண்டுமென்றே ஓரக்கண் போடுவது கண் தசைகளுக்கு ஒரு நல்ல பயிற்சியாகும். அவற்றை நல்ல நிலையில் வைக்க இது உதவும். வேண்டுமென்றே இப்படிச் செய்து பார்ப்பதனால், ஓரக்கண் பிரச்னை உள்ளவர்கள் அதிலிருந்து விடுதலை பெற இப்பயிற்சி உதவும்.

இன்னும் உள்ளது, பார்க்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com