34. பெற்றோரின் புகழ்ச்சி

ஒவ்வொரு வெற்றிக்கும், ஒவ்வொரு சாதனைக்கும் பரிசுப் பொருட்கள் தருவது சில பெற்றோர்களின் வாடிக்கை. ஆனால் இந்த வகைப் பாராட்டு மிக கவனமாகக் கையாளப்பட வேண்டிய ஒன்று.
34. பெற்றோரின் புகழ்ச்சி

பெற்றோர்களுக்குத் தங்கள் பிள்ளைகள் நல்ல பிள்ளைகள் என்று சொல்லிக்கொள்வதில் எப்போதும் பெருமிதம் இருக்கும். ‘என் பிள்ளை வகுப்பில் முதல் மாணவன்’, ‘என் மகள் கல்லூரியில் முதலிடம் பெற்றாள்’ , ‘என் மகன் நுழைவுத் தேர்வில் மாநிலத்தில் முதலிடம்’ இப்படி பெருமிதம் கொள்கின்றனர். இதில் தவறு இல்லை என்பது மட்டுமில்லை; இது இயல்பானதும் ஆகும். ஆனால் புகழ்ச்சி அதிகமாகும்போதோ அல்லது சரியான தருணம் இல்லாத புகழ்ச்சியின்போதோ பிள்ளைகளின் மனநிலையை அது பாதிக்கும் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

தூக்க மருந்தைப் போன்றது பெற்றோர் போற்றும் புகழுரைகள் என்பது திரைப்படப் பாடலில் வரும் வரி மட்டுமல்ல. அது உளவியல் உண்மையும் ஆகும்.

பிள்ளைகளுக்கு மனநிலை திடமாக இருப்பதில்லை. பெற்றோரின் புகழ்ச்சியில் அவர்களுக்கு மகிழ்ச்சி மட்டும் ஏற்படுவதில்லை. அந்த புகழ்ச்சி அதிகமாகும்போது அவர்களிடம் ஒருவிதமான அக்கறையின்மையும் தோன்றுகிறது என்பது உளவியலாளர்களின் கருத்து. இதனால் அவர்கள் சிக்கல்களைக் எதிர்கொள்ளும் மனோபாவத்தை வளர்த்துக்கொள்ள இயலாமல் போவதுடன், எதிர்பாராது நிகழும் தோல்விகளை எதிர்கொள்ளவும், அந்தத் தோல்வி தரும் அச்சத்திலிருந்து மீண்டுவந்து வெற்றிகொள்ளவும் இயலாது தடுமாறுகின்றனர்.

பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் சாதனைகளை, முயற்சிகளை ஊக்குவிக்க அவர்களைப் பாராட்டத்தான் வேண்டும். அதே சமயம் அந்தப் பாராட்டு அளவுக்கு மிஞ்சிய நஞ்சாக அமையாது கவனமாகப் பாராட்ட வேண்டும்.

பிள்ளைகளின் முயற்சியின்போது இருக்கும் செயல்களைச் சரிவர செய்வதில் அக்கறையும் ஒவ்வொரு நிலையினை அவர்கள் கடக்கும்போது சிறு சிறு வாக்கியங்கள், அன்பான செயல்கள் மூலம் அவர்களைக் கௌரவிக்க வேண்டும். பாராட்டு வேறு, கௌரவிப்பது வேறு. அவர்கள் ஒரு பெரிய செயலைச் செய்து முடிக்க, பல நிலைகளில் சின்ன சின்ன செயல்களைச் செய்து முடிக்கவேண்டி இருக்கும். அப்படி முடித்தால்தான் அந்தச் செயல் முழுவதும் முடிவுறும். அந்தச் செயலின் இறுதிப் பலனைக் குறித்துப் பேசாமல், ஒவ்வொரு நிலையிலும் இருக்கும் செயல்களைச் செய்து முடிப்பதில் கவனம் செலுத்தவைக்க அவர்களை ஊக்குவிக்கும் வகையில் அந்தப் பாராட்டு இருக்க வேண்டும். இதன் காரணமாக அவர்களுக்கு தாங்கள் மேற்கொண்டுள்ள பெரிய செயலைக் குறித்து அச்சமோ தயக்கமோ இருக்காது. அவர்களின் தன்னம்பிக்கை மெல்ல மெல்ல பலமாகும். பாராட்டும்போதும், உற்சாகப்படுத்தும்போதும் எதையும் மிகைப்படுத்தாமல் பாராட்ட வேண்டும். மிக எளிமையான மொழியில் அவர்களது முயற்சிகளை முன்னிறுத்தி, அவர்களது முயற்சிக்கு கிடைத்த பலன் இது என்பதை வலியுறுத்த வேண்டும். வெற்றி என்பதை மிகவும் அழுத்தம் கொடுத்து சொல்ல வேண்டியதில்லை. ஆனால் முயற்சியின் பலன்தான் என்பதை வலியுறுத்த வேண்டும். அவர்களது சாதனையில்/வெற்றியில் பெற்றோர் கொண்ட பெருமிதம், மகிழ்ச்சியை வெளிப்படுத்தும்போதும் அளவு மிகாது செய்வது மிக அவசியம்.

பிள்ளைகளைப் பெற்றோர் பாராட்டும்போது, பெற்றோரின் உடல்மொழியும் மிக முக்கியம். உடல்மொழியில் அன்பும், அக்கறையும் கலந்திருக்க வேண்டும். பெருமிதம் ஓரளவு வெளிப்பட வேண்டும். அளவு மிகுந்த உற்சாகத்தை வெளிப்படுத்துவதாக இருக்கக் கூடாது. நிம்மதிப் பெருமூச்சு விடும் உடல்மொழிகளை அவசியம் தவிர்க்க வேண்டும்.

பிள்ளைகள் ஒரு செயலுக்கு முயற்சி செய்யும்போது, சில தவறுகள் செய்திருக்கலாம். அவை பெற்றோரால் கண்டுபிடிக்கப்பட்டு பிள்ளைகளுக்கு அதைச் சொல்லி, அவர்களும் அதை ஏற்றுக்கொண்டு, தவறுகளைத் திருத்திக்கொண்டிருப்பார்கள். அந்தச் செயல் வெற்றிகரமாக முடிந்த தருணத்தில் பிள்ளைகளிடம் பாராட்டுகளை மகிழ்ச்சியாகத் தெரிவிக்கும்போது, அந்தத் தவறுகள் தொடர்பான உரையாடலை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். மிகையான புகழ்ச்சி எப்படி விஷம் போன்றதோ அதேபோல், வெற்றியின்போது தவறுகளை வலியச் சென்று சுட்டிக்காட்டுவதும் விஷம் போன்றதுதான். அந்தச் சமயத்தில் பிள்ளைகள் தங்களின் தவறுகளை அவசியம் நினைத்துப் பார்ப்பார்கள். அவர்களுக்கு பெற்றோரின் பங்களிப்பின் மீது நன்மதிப்பும் இருக்கும். பெற்றோர் பாராட்டும்போது பிள்ளைகள் தெரிவிக்கும் வெட்கம் கலந்த நன்றிப் பெருக்கில், அந்தத் தவறுகளும் அதைத் திருத்திக் கொண்டதும் அடங்கியே இருக்கும்.

பிரபல உளவியலாளர் Dr. Haim Ginott, பெற்றோர்களின் பாராட்டுகளைக் குறித்து சொல்லும்போது, அவை ஊசி மூலம் செலுத்தப்படும் பென்சிலின் போன்றது என்று சொல்வார். அதாவது முதலில் கொஞ்சம் செலுத்தி விளைவுகளைச் சோதித்து பாதிப்பு ஏதும் இல்லை எனத் தெரிந்துகொண்டு முழுவதும் மருந்தைச் செலுத்துவதுபோல என்பார். அது மட்டுமில்லை, அப்படியான மருந்து அவர்களை எதிர்மறை நினைவுகளில் இருந்து காப்பாற்றி சிறப்புடன் செயல்புரிய வைக்கும்படி இருக்க வேண்டும் என்றும் அவர் சொல்வார்.

அவர்களது பயணம் நீண்ட வழி. அதில் அவர்களது வெற்றி அல்லது அந்தச் சாதனை ஒரு படிக்கட்டு. அவர்கள் கடக்க வேண்டிய தூரம் இன்னமும் இருக்கிறது எனும் உணர்வும் அதை நிறைவேற்றும் கடமையும் அவர்களுக்கு இருக்கிறது என்பதை பெற்றோர்கள் கவனத்தில் வைத்திருக்க வேண்டும். ஆனால் இதை வலியுறுத்திச் சொல்லப்படும் சொற்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உதாரணமாக, ‘நீ இந்த நுழைவுத் தேர்வில் தேறிவிட்டாய். ஆனால் அடுத்த நுழைவுத் தேர்வு மிகக் கடினம். நீ இன்னமும் உழைக்க வேண்டும்’ இப்படிச் சொல்வது சோர்வைத் தரும். உற்சாகத்தை இழக்க வைக்கும். மாறாக, ‘முதல்கட்ட நுழைவுத் தேர்வை வெற்றியுடன் கடக்க உன் கடின உழைப்பு காரணம். இதே உற்சாகத்துடன் தொடர்ந்து நீ உழைத்தால் உனக்கு அடுத்த கட்டங்களிலும் வெற்றியே கிட்டும். நீ அவசியம் வெற்றிபெறுவாய்’. இப்படிச் சொல்வதில் நினைவூட்டலும் உள்ளது, பாராட்டும் உள்ளது.

ஒவ்வொரு வெற்றிக்கும், ஒவ்வொரு சாதனைக்கும் பரிசுப் பொருட்கள் தருவது சில பெற்றோர்களின் வாடிக்கை. ஆனால் இந்த வகைப் பாராட்டு மிக கவனமாகக் கையாளப்பட வேண்டிய ஒன்று. அவர்கள் வெற்றியை மிக முக்கியம் என நினைப்பதற்கு அந்த வெற்றியினால் கிடைக்கும் வாழ்க்கை, அந்தஸ்து, பெருமிதம் காரணமாக இருந்து இயக்க வேண்டும். மாறாக, விலை உயர்ந்த பரிசுப் பொருள் அந்தக் காரணமாக இருக்கக் கூடாது. இதன் காரணம் மிக எளிமையானது.

அந்தப் பரிசுப் பொருள் என்னவோ அந்த வெற்றிக்குக் கிடைத்த பரிசுதான். ஆனால் அந்தப் பொருள் அப்படி வெற்றிபெறாதவராலும் விலை கொடுத்து வாங்க இயலும். ஆனால் வெற்றிபெற்றவருக்குக் கிடைக்கும் உள மகிழ்ச்சி, அங்கீகாரம், தொடர்ந்து கிடைக்கும் மேல் வாய்ப்புகள் இவைதான் உண்மையான பரிசு.

பெற்றவர்களின் புகழ்ச்சிகளைக் குறித்தும் மேலும் சில கருத்துகளை வரும் வாரத்தில் கவனிப்போம். பெற்றவர்களின் இகழ்ச்சி குறித்தும் வரும் வாரம் கவனிக்க இருக்கிறோம்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com