10. ஊகத்துக்கு முன் ஊக்கம்

சில காரணங்களால் எதிர்காலத்தில் விலை உயரும் அல்லது சரியும் என்பதை முன்கூட்டியே கணித்து, அதற்கேற்ப அப் பங்குகளைத் தற்போது வாங்குவது அல்லது விற்கும் நடவடிக்கையைக் குறிக்கும்.

பங்கு முதலீடு என்பதே அதிக இடர்களும் அதிக ஆதாயங்களும் நிறைந்திருக்கும் முதலீடு ஆகும். அதிலும், ஊக வணிகம் (ஸ்பெகுலேஷன்) என்பது மிக மிக அதிக இடர்களும், அதற்கேற்ப மிக மிக அதிக ஆதாயங்களும் தரக்கூடிய முதலீடு ஆகும். ஊக வணிகம் என்பது ஒரு முதலீட்டாளருக்குப் பண மழையைப் பொழியவும் செய்யும், மாறாக இழப்பு என்னும் இடியைப் பாய்ச்சவும் செய்யும்.

பங்குச் சந்தையைப் பொருத்தவரை ஊக வணிகம் என்பது, குறிப்பிட்ட ஒரு நிறுவனப் பங்கின் விலை, சில காரணங்களால் எதிர்காலத்தில் விலை உயரும் அல்லது சரியும் என்பதை முன்கூட்டியே கணித்து, அதற்கேற்ப அப் பங்குகளைத் தற்போது வாங்குவது அல்லது விற்கும் நடவடிக்கையைக் குறிக்கும். அதேநேரத்தில் இந்தக் கணிப்பு என்பது குறிப்பிட்ட நிறுவனத்தின் செயல்பாடு, லாபத் திறன், அப் பங்கின் விலைப் போக்கு, பி.இ. விகிதம், அந்நிறுவனம் தொடர்பாகக் கிடைத்த தகவல்கள் (உதாரணத்துக்குப் புதிய தொழிலில் அந் நிறுவனத்துக்கு மிகுந்த லாபம் கிடைக்க வாய்ப்பு போன்றவை), வரி குறைப்பு உள்ளிட்ட அரசின் எதிர்கால நடவடிக்கைகள், நாட்டின் மற்றும் உலகப் பொருளாதாரச் சூழலில் ஏற்படவிருக்கும் மாற்றம் என பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் சூதாட்டத்தில் தாயக்கட்டையை உருட்டுவதைப் போன்றோ, காசைச் சுண்டிப் பார்த்து பூவா தலையா பார்த்து அறிவதைப் போன்றோ, ஆரூடம் பார்ப்பதைப் போன்றோ, என் மனத்தில் தோன்றுகிறது என்று கருதுவதன் அடிப்படையிலோ அமைவதல்ல ஊக வணிகம். இது ஒருவிதமான மதிப்பீடு; தவறாகிப்போகவும் வாய்ப்புள்ள ஒருவித கணக்கு.

ஆகையால், ஊக வணிகத்தில் மிகுந்த பண பலமும், மன பலமும் மிக்கவர்கள் மட்டுமே இறங்க வேண்டும். அதிலும் மதியூகமும், இழப்புகளைத் தடுக்க முடியாவிட்டாலும் குறைத்துக்கொள்ளக்கூடிய தற்காப்பு மதிநுட்பமும் இருக்க வேண்டியது அவசியம். ஊக்கம் அல்லது துணிவு என்பது அசட்டுத் துணிச்சலாக அமைந்துவிடக் கூடாது. உரிய பலத்துடன் கூடிய துணிவாக இருக்க வேண்டும். உலகின் எல்லா பிரச்னைகளுக்கும் எக்காலத்துக்கும், எந்நாட்டவர்க்கும் ஏற்ப தீர்வுகளை மொழிந்துள்ள திருவள்ளுவர், இந்த ஊக வணிகத்துக்கு ஏற்பவும் மிகச் சிறந்த குறள் ஒன்றை, ‘வலியறிதல்’ அதிகாரத்தில் கூறியுள்ளார்.

உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி

இடைக்கண் முரிந்தார் பலர். (473)

தம்முடைய உண்மையான பலம் என்ன என்பதை அறிந்துகொள்ளாமல், வெறுமனே ஊக்கத்தின் காரணமாக ஒரு நடவடிக்கையைத் தொடங்கி, இடைவழியில் அதனை முடிக்க வழியில்லாமல் அழிந்துபோனவர்கள் பலர் என்று எச்சரிக்கிறது இத் திருக்குறள். ஊக வணிகர்களுக்கு நேரடி எச்சரிக்கை தரும் இக்குறளுக்கு வேறு விரிவான விளக்கம் தேவையா?

பங்குகளின் விலை நிலவரம், அதுசார்ந்த நிறுவனம் மற்றும் தொழில் துறையின் நிலவரம் ஆகியவற்றை உன்னிப்பாக அறிதல் ஊக வணிகர்களுக்கு மிகவும் அவசியம். குறிப்பிட்ட நிறுவனத்துக்கு உள்ளேயும் அதுதொடர்பாக வெளியேயும் நடைபெறும் அனைத்துத் தகவல்களையும் அறிந்துகொள்வது ஊகத்தை சரியாகக் கணிப்பதற்கு உதவும். இவ்வாறான ரகசியத் தகவல்களை அல்லது மறைவான தகவல்களைச் சேகரிப்பதோடு மட்டுமின்றி, அவை சரியானவைதானா என்பதையும் ஆராய்ந்து உண்மையைக் கண்டறிய வேண்டும். அப்போதுதான் ஒருவரது ஊகம் மெய்ப்பட வழிபிறக்கும். இதற்கு ஏற்ற குறளை ‘ஒற்றாடல்’ அதிகாரத்தில் காணலாம்.

மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை

ஐயப்பா டில்லதே ஒற்று. (587)

மறைவாக பேசப்படும் விஷயங்களையும் கேட்டறியக்கூடிய திறன் படைத்தவராகவும், அவ்வாறு அறிந்துகொண்ட விஷயங்களில் எவ்வித சந்தேகமும் இல்லாத தெளிவான கருத்தை உடையவராகவும் இருப்பவரே ஒற்றர், அதாவது உளவாளி ஆவார் என்று திருவள்ளுவர் கூறுகிறார். ஓர் அரசுக்கு ஒற்றரின் பணி எவ்வளவு அவசியம் என்பதை உணர்த்துவதற்காக இக்குறளை வள்ளுவர் படைத்துள்ளார். அதே குறள், ஊக வணிகத்தில் ஈடுபடுவோர்க்கும் பொருந்தி வருகிறது. ஒரு நிறுவனப் பங்கு குறித்த ரகசியத் தகவல்களைக்கூட ஊடுருவித் தெரிந்துகொள்ளும் ஆற்றலும், அவ்வாறு தெரிந்துகொண்டவற்றில் எவ்வித ஐயப்பாடுகளும் இல்லாத தெளிவான அறிவும் ஓர் ஊக வணிக முதலீட்டாளருக்கு அவசியம் என்று இதற்குப் பொருள்கொள்ளலாம்.

ஆக, ஊக வணிகத்தில் இறங்குவதற்கு முன்பு அதுகுறித்த விவரங்களை நன்கு ஐயம் திரிபறத் தெரிந்துகொள்ள வேண்டும். சரியாகப் புரிந்துகொள்ளாமல் அல்லது குழப்பங்களுடன் ஒருவர் முதலீடுகளை மேற்கொள்வார் எனில், அவரது முதலுக்கே மோசம் விளைந்துவிடும். இதுதொடர்பாக ‘தெரிந்து செயல்வகை’ அதிகாரத்தில் தெய்வப் புலவர் கூறியிருக்கும் குறளைக் காண்போம்:

வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்

பாத்திப் படுப்பதோ ராறு. (465)

வகை அறச் சூழாது எழுதல் பகைவரைப் பாத்திப்படுப்பதோர் ஆறு என்று பிரித்துப் படிக்க வேண்டும். வகை அறச் சூழாது எழுதல் என்றால் செய்யக்கூடிய வழிவகைகளை நன்கு தெரிந்துகொள்ளாமல் ஒன்றை செய்யத் தொடங்குதல் என்று பொருள். அவ்வாறு ஒருவர் செயல்பட்டாரேயானால், அது தமது எதிரிகளை ஒருவர் பாத்தி கட்டி நன்கு வளரச் செய்வதற்குச் சமம் என்று இடித்துரைக்கிறார் வள்ளுவர். முழுமையாக ஒன்றைப் புரிந்துகொள்ளாமல் ஒரு செயலில் இறங்குவது, நமது எதிரிகளை நாமே வளர்த்துவிடுவதற்குச் சமம் என்று இதற்கு எளிய பொருள் கூறலாம். ஆக, ஊக வணிக முதலீட்டாளர் தமது முதலுக்குப் பகையாகிய நஷ்டத்தை வளர்த்துவிடக் கூடாது என்று கருதினால், உரிய வழிவகைகளுடன் ஊக வணிகத்தில் இறங்க வேண்டும்.

ஊக வணிகத்தில் இறங்குபவர் முதலில் தெரிந்துகொள்ள வேண்டியது யாதெனில், எந்த அளவுக்கு இதில் முதலீடு செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதே. கையில் உள்ள பணத்தை எல்லாம் ஒரே திட்டத்தில் முதலீடு செய்வது புத்திசாலித்தனம் அல்ல என்பது நல்ல முதலீட்டாளருக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கும். ஆகையால் ஊக வணிகத்துக்கு என்று நமது சேமிப்புத் தொகையில் குறிப்பிட்ட சதவீதத்தை முதலில் தீர்மானிக்க வேண்டும். எந்த வகையிலும் இது நமது கையிருப்பில் 10 சதவீதத்துக்கு மிகக் கூடாது. ஒரு பங்குக்குப் பதில் பல்வேறு பங்குகளில் ஊக வணிகம் செய்வதாக இருந்தாலும் சரி, அவை அனைத்திலுமான முதலீடும் நமது கையிருப்பில் 10 சதவீதத்துக்கு உள்ளாகவே இருக்க வேண்டும். ஏனெனில், இழப்பு நேரிடும் பட்சத்தில் நமது கையிருப்பில் அல்லது சேமிப்பில் குறைந்தபட்சமே இழக்க நேரிடும் என்பதால் நமது தாங்குதிறனை அது பாதிக்காது.

அடுத்ததாக, கடன் வாங்கிய தொகையில் ஊக வணிகத்தில் ஈடுபடவே கூடாது. அது ஊக வணிகத்தில் இழப்பு ஏற்படும்போது, இழந்த தொகைக்கும் வட்டி கட்டக்கூடிய துயர நிலைக்கு ஆட்படுத்தி பாதிப்பை இரட்டிப்பாக்கிவிடும். இழப்பைத் தவிர்ப்பதற்கு அல்லது முடிந்தவரையில் அதனைக் குறைப்பதற்கான வழிவகையைச் செய்துகொள்ள வேண்டும். அதிக லாபத்துக்கு ஆசைப்பட்டு காத்திருக்காமல், ஓரளவு லாபம் கிடைக்கும்போதே ஒரு பங்கை விற்றுவிடுகின்ற அல்லது வாங்குகின்ற நடவடிக்கையில் இறங்க வேண்டும். ஏனெனில், குறிப்பிட்ட காலம் தாண்டும்போது நமது ஊகத்தை மீறி, அப் பங்கின் விலை சரியவோ அல்லது உயரவோ வாய்ப்புண்டு. அவ்வாறு நேரும்போது ஊகத்தில் ஒரு பங்கை விற்க நினைப்பவர் விலை சரியும்போதும், ஊகத்தில் ஒரு பங்கை வாங்க நினைப்பவர் விலையேற்றத்தின்போதும் இழப்பை அடைய நேரிடும்.

முக்கியமாக, இன்ட்ரா டே டிரேடிங் அல்லது டே டிரேடிங் என்று கூறப்படுகின்ற தினசரி வர்த்தகத்தில் ஈடுபடுவோர், பங்கை வாங்கி விற்கும் நடவடிக்கை குறித்த முடிவை மிக விரைவில் செயல்படுத்தியாக வேண்டும். இல்லையேல், தாமதிக்கின்ற ஒவ்வொரு நொடியும் இழப்பை அதற்கேற்ப அதிகரிக்கச் செய்துவிடும். இவ்வாறு மிகுந்த நஷ்டம் ஏற்படாமல் தடுப்பதற்கு அல்லது நஷ்டத்தைக் குறைப்பதற்கு ‘ஸ்டாப்லாஸ்’ என்ற முறை கடைப்பிடிக்கப்படுகிறது. அதனை ஊக வணிக முதலீட்டாளர்கள் சமயோசிதமாகப் பயன்படுத்த வேண்டும். ஸ்டாப்லாஸ் என்றால் நஷ்டத்தை குறிப்பிட்ட ஓர் நிலையோடு நிறுத்திக்கொள்ளுதல், அதற்கு மேல் வளரவிடாமல் தடுத்தல் என்று பொருள். குறிப்பிட்ட பங்கின் விலை, நாம் ஏற்கெனவே தீர்மானிக்கும் ஒரு விலையை எட்டியவுடன் தானாகவே அந்தப் பங்கை விற்றல் அல்லது வாங்குதல் நடவடிக்கையை மேற்கொள்வதற்கான வழிமுறையே ஸ்டாப்லாஸ் ஆகும். தமிழில் இதனை இழப்புத் தடுப்பு எனக் கூறலாம். இந்த வழிமுறை மூலம் ஊக வணிகத்தில் ஒருவருக்கு ஏற்படும் நஷ்டம் வரையறை செய்யப்படுகிறது, குறைக்கப்படுகிறது.

உதாரணத்துக்கு ஒருவர், எக்ஸ்ஒய்இஸட் என்ற நிறுவனத்தின் பங்கு நன்கு விலை உயரும் என்று ஊகித்து, ரூ.800 என்ற விலைக்கு 100 பங்குகளை வாங்குகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் நினைத்தபடி விலை உயர்ந்து சென்றால் கணிசமான லாபத்தில் அவர் விற்று லாபம் ஈட்டலாம். மாறாக, அவர் அப் பங்கை வாங்கிய பிறகு விலை குறைந்துகொண்டே செல்ல நேரிட்டால், அதற்கேற்ப இழப்பும் அதிகரித்துச் செல்லும் அல்லவா? அப்போதுதான் ஸ்டாப்லாஸ் முறை கைகொடுக்கிறது. இந்த முறையின்கீழ் ரூ.800-க்கு எக்ஸ்ஒய்இஸட் பங்கை வாங்கிய ஒருவர், இழப்புத் தடுப்பு (ஸ்டாப்லாஸ்) ஆக, ரூ.780-ஐத் தீர்மானித்துக்கொள்கிறார் என்று வைத்துக்கொள்வோம். இவ்வாறு தீர்மானிக்கப்படுகின்றபோது அப்பங்கின் விலை குறைந்துகொண்டே வரும்போது ரூ.780 என்ற விலையை எட்டும்போது, தானாகவே பங்குச் சந்தையில் அது விற்கப்படும். இதன்மூலம் ஒரு பங்குக்கு ரூ.20 வீதம், அவரிடம் இருந்த 100 பங்குகளுக்கு ரூ.2,000 மட்டுமே இழப்பு ஏற்படும். இவ்வாறு ஸெல் ஸ்டாப்லாஸ் (விற்பனை இழப்புத் தடுப்பு) நிர்ணயிக்காமல் விடுகின்ற பட்சத்தில், ஒருவேளை அந்தப் பங்கின் விலை அன்றைய தினம் ரூ.750-ஆகக் குறைந்தால், அவரது 100 பங்குகளுக்கு ரூ.5,000 நஷ்டம் ஏற்பட்டிருக்கும் அல்லவா?

இதேபோல்தான் பங்குகளை வாங்குவதற்கும் பை ஸ்டாப்லாஸ் (கொள்முதல் இழப்புத் தடுப்பு) நிர்ணயித்துக்கொள்ளலாம். உதாரணத்துக்கு, ஏபிசி என்ற நிறுவனப் பங்கின் விலை குறைந்துகொண்டே செல்லும் என்று நினைத்து ஓர் ஊக வணிகர், தம்மிடம் அப் பங்குகள் இல்லாத நிலையிலும் அவற்றை முன்கூட்டி விற்கின்ற ஊக வணிகத்தில் ஈடுபடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். (இவ்வாறு தம் கைவசம் பங்குகள் இல்லாதபோதிலும் அதனை முதலில் விற்றுவிட்டு, பின்னர் பங்குச் சந்தையில் அவற்றை வாங்கி அந்த விற்பனை நடவடிக்கையை நிறைவு செய்வதற்கு ஷார்ட் ஸெல்லிங் என்று பெயர். தமிழில் இதனை குறைவு இருப்பு விற்பனை என்று கூறலாம்.)

இவ்விதம் ஏபிசி நிறுவனத்தின் 100 பங்குகளை ரூ.700-க்கு அவர் ஷார்ட் ஸெல்லிங் முறையில் முதலில் விற்றுவிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் ஊகித்ததைப்போல அந்நிறுவனத்தின் பங்கு விலை குறைந்துசென்று ரூ.650-ஐ எட்டுகிறது எனில், அந்நிலையில் அவர் அப்பங்கை வாங்கி, ஏற்கெனவே தாம் ஷார்ட் ஸெல்லிங் முறையில் விற்ற நபருக்கு அதனைக் கொடுத்து பங்குக்கு ரூ.50 வீதம் லாபம் ஈட்டி விடலாம். மாறாக, அப் பங்கு விலை உயர்ந்து சென்று அன்றைய தினம் ரூ.800 என்ற விலையில் முடிவடைகிறது என்றால் நிலைமை என்னவாகும்? கூடுதல் விலைக்கு அப் பங்கை வாங்கி, ஏற்கெனவே ஷார்ட் ஸெல்லிங் முறையில் வாக்களித்தபடி குறைந்த விலைக்கு அதனை விற்று, பங்குக்கு ரூ.100 வீதம் அவர் நஷ்டத்தை அடைய நேரிடும். இவ்வாறு ஏற்படுகின்ற நஷ்டத்தைக் குறைக்கும் வகையில் பை ஸ்டாப்லாஸ் முறையை அவர் பயன்படுத்தலாம். இதன்படி, அவர் பை ஸ்டாப்லாஸை ரூ.670 என்ற விலையில் நிர்ணயித்திருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். ஒருவேளை ஏபிசி பங்கின் விலை உயர்ந்துகொண்டே செல்லும்நிலையில், ரூ.670 என்ற விலையில் அப் பங்குகள் வாங்கப்பட்டுவிடும். இதன்மூலம் அவர் தனது நஷ்டத்தை பங்குக்கு ரூ.20 என்ற வீதத்தில் குறைத்துக்கொண்டுவிடுகிறார்.

இவ்வாறு முன்கூட்டியே ஸ்டாப்லாஸ் முறை மூலம் தமது இழப்பைக் குறைத்துக்கொள்ளும் திறனுடையவர்களைப் பாராட்டும் வகையிலான குறள், ‘அறிவுடைமை’ அதிகாரத்தின் கீழ் உள்ளது. அக்குறள்:

எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை

அதிர வருவதோர் நோய். (429)

தமக்கு வரக்கூடிய கெடுதியை அல்லது தீங்கை முன்கூட்டியே அறிந்துகொண்டு அதற்கு ஏற்ப தற்காப்பு செய்துகொள்ளக்கூடிய அறிவை உடையவர்களுக்கு, அவர்களை நடுங்கச் செய்கின்ற வகையில் வரக்கூடிய துன்பம் என்று எதுவும் இருக்காது என்று இதற்குப் பொருள். ஸ்டாப்லாஸ் முறையைப் பயன்படுத்துவோர், தமக்கு வரக்கூடிய இழப்புக்கு முன்கூட்டியே தற்காப்பு நடவடிக்கை எடுத்துக்கொள்வதால், அவர்களுக்கு அதிர்ச்சி தரக்கூடிய வகையில் பெரிய துன்பம் எதுவும் நேர்ந்துவிடாது. சிறிய இழப்போடு போய்விடும்.

ஆக, ஊக வணிகத்தை ஏதோ அதிர்ஷ்டப் பரிசு அல்லது சூதாட்டம் என்று கருதாமல், உரிய கணிப்புகளால் மேற்கொள்ளக்கூடிய, அபாயங்களும் ஆதாயங்களும் மிகுந்த முதலீடு என்பதைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ற முன்னேற்பாடுகளோடு மேற்கொள்ள வேண்டும். இல்லையேல் ஒதுங்கி இருப்பதே உத்தமம்.

***

துணைத் தகவல்

ஊக வணிகத்தின் வகைகள்

ஊக வணிகம் என்பது உரிய முறையில் மேற்கொண்டால் முதலீடாக இருக்கும். இல்லையேல் கையிருப்பை வாரிச் சுருட்டி விழுங்கிவிடும் சூதாட்டம்போல் ஆகிவிடும். எனவே ஊக வணிகத்தில் ஈடுபட்டு அதிக லாபத்தை அடைய வேண்டும் என்று கருதுவோர், அதில் அதிக இழப்புக்கும் வாய்ப்பு இருக்கிறது என்பதை உணர்ந்துகொண்டே இதில் இறங்க வேண்டும். ஊக வணிகத்துக்கும் சில வழிமுறைகள், வகைப்பாடுகள் உள்ளன. அந்த வகைப்பாடுகளை இனி காண்போம்...

மார்ஜின்

பங்குகளை முழுமையாக விலைகொடுத்து வாங்காமல் குறிப்பிட்ட வரம்புத்தொகையை பங்குத் தரகரிடம் செலுத்தி, கடனுக்கு அப் பங்குகளை வாங்கும் ஊக வணிக முறைக்கு மார்ஜின் என்று பெயர். இதனைத் தமிழில் வரம்புத் தொகை ஊக வணிகம் என்று கூறலாம். உதாரணத்துக்கு, குறிப்பிட்ட ஒரு பங்கின் விலை அபரிமிதமாக உயரும் என்று நீங்கள் கணிக்கிறீர்கள். அதில் 1000 பங்குகளை வாங்க நினைத்தாலும் அவ்வளவு தொகை தற்போது தங்கள் கைவசமில்லை. இந்நிலையில் பங்குத் தரகரிடம் வரம்புத் தொகை (மார்ஜின்) செலுத்தி கடனுக்கு அப்பங்குகளை வாங்கலாம். நீங்கள் நினைத்ததுபோல, விலை உயர்ந்து சென்றால், அப்பங்குகளை தரகரிடம் கூறி விற்கச் சொல்லி, நீங்கள் லாபத்தை அறுவடை செய்யலாம்.

இதன் எதிர்ப்பக்கத்தை இப்போது பார்ப்போம். கடனுக்கு வாங்குகின்ற பங்குகளுக்கு அதற்குரிய வட்டித் தொகையை தரகருக்குச் செலுத்தியாக வேண்டும். லாபம் கிடைத்தால் இத் தொகையைக் கழித்துக்கொண்டு மீதி லாபத்தை அடையலாம். மாறாக, நஷ்டம் அடைய நேரிட்டால் வட்டித் தொகையையும் செலுத்த வேண்டும், மேலும் விலைக் குறைவால் ஏற்படும் இழப்பையும் ஏற்க வேண்டும். விலை மாறுபாட்டால் ஏற்படும் இழப்பு, நீங்கள் ஏற்கெனவே செலுத்தியுள்ள வரம்புத் தொகையைவிட அதிகரிக்கும்பட்சத்தில், உங்களது கணக்கில் புதிதாக வரம்புத் தொகை செலுத்துமாறு பங்குத் தரகர் உங்களுக்கு அழைப்பு விடலாம். இதற்கு மார்ஜின் கால் என்று பெயர். இதுபோன்ற சூழல் எழுந்தால், மேற்கொண்டு மார்ஜின் முறையில் ஈடுபடாமல், கொடுக்க வேண்டிய பணத்தை மட்டும் கட்டிவிட்டு விலகிக்கொள்வதே நல்லது.

ஆப்ஷன்ஸ்

தெரிவு செய்யப்பட்ட ஒரு பங்கை உடனடியாக வாங்கவோ, விற்கவோ செய்யாமல் எதிர்காலத்தில் தெரிவு செய்யப்பட்ட குறிப்பிட்ட ஒரு தேதிக்குள், குறிப்பிட்ட ஒரு தொகைக்கு வாங்கவோ, விற்கவோ உரிமை அளிக்கின்ற ஊக முறைக்கு ஆப்ஷன்ஸ் என்று பெயர். இதனைத் தமிழில் விருப்ப ஊக வணிகம் என்று கூறலாம். பங்குத் தரகரிடம் செய்துகொள்ளப்படும் ஒப்பந்தத்தின் அடிப்படையில், இவ்வகையில் குறிப்பிட்ட பங்கை வாங்குவதற்கான உரிமையைத் தருகின்ற முறைக்கு கால் ஆப்ஷன்ஸ் என்று பெயர். இதேபோல் பங்கை விற்பதற்கான உரிமையைத் தருகின்ற முறைக்கு புட் ஆப்ஷன்ஸ் என்று பெயர். இதுபோன்ற தெரிவுகளை மேற்கொள்ள குறிப்பிட்ட தொகையை பங்குத் தரகருக்குச் செலுத்தவேண்டி இருக்கும்.

ஒரு முதலீட்டாளர் ஏற்கெனவே ஊகித்தபடி குறிப்பிட்ட விலையை, தெரிவு செய்த பங்கு எட்டுகின்றபோது தனது உரிமையைப் பயன்படுத்தி, அதனை வாங்குகின்ற அல்லது விற்கின்ற நடவடிக்கையை அவர் மேற்கொள்ளலாம். ஆப்ஷன்ஸ் முறையில், குறிப்பிட்ட தேதிக்குள் பங்கை வாங்கித்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயமில்லை. அது முதலீட்டாளரின் விருப்பத்தைப் பொருத்தது. ஆகையால்தான் இதற்கு ஆப்ஷன்ஸ் என்று பெயர். இந்த வகையிலான ஊக வணிகத்தில் முதலீட்டாளரின் லாபத்தை இரண்டு காரணிகள் தீர்மானிக்கின்றன. ஒன்று உள்ளார்ந்த மதிப்பு (இன்ட்ரின்ஸிக் வால்யூ), மற்றொன்று கால மதிப்பு (டைம் வால்யூ).

தற்போதுள்ள அடிப்படை விலைக்கும் (அண்டர்லையிங் ரேட்) தீர்மானிக்கப்பட்ட விலைக்கும் (ஸ்டிரைக் ரேட்) இடையிலான வித்தியாசமே உள்ளார்ந்த மதிப்பு. பங்கை வாங்குகின்ற பட்சத்தில், அதாவது கால் ஆப்ஷன் எனில், தற்போதுள்ள விலையிலிருந்து தீர்மானிக்கப்பட்ட விலையைக் கழித்தால் வருவது உள்ளார்ந்த மதிப்பு. அதாவது தற்போது ஒரு பங்கின் விலை ரூ. 80 ஆக உள்ளது. அது ரூ. 60 ஆகக் குறையும் என்று நாம் ஊகித்து விலையைத் தீர்மானிக்கிறோம். இப்போது உள்ளார்ந்த மதிப்பு ரூ. 20. இதேபோல், பங்கை விற்கின்ற பட்சத்தில், அதாவது புட் ஆப்ஷன் எனில், தீர்மானிக்கப்பட்ட விலையில் (உதாரணத்துக்கு ரூ. 100) இருந்து தற்போதைய விலையை (உதாரணத்துக்கு ரூ. 80) கழித்தால் வருவது உள்ளார்ந்த மதிப்பு. இவ்வாறின்றி குறிப்பிட்ட காலகட்டத்தில் எதிர்மாறாக நடக்குமானால், அப்பங்குக்கு உள்ளார்ந்த மதிப்பு என்று எதுவும் இருக்காது. அதாவது நமக்கு எந்த லாபமும் இல்லை, நடவடிக்கையை மேற்கொண்டால் நஷ்டம்தான் ஏற்படும்.

விருப்ப முறையிலான ஊக வணிகத்தில் பங்குகளை வாங்குபவர் அவற்றை விற்பவருக்கு, உள்ளார்ந்த விலையைவிடக் கூடுதலாகத் தர முன்வருகின்ற தொகைதான் கால மதிப்பு எனப்படுகிறது. எதிர்காலத்தில் (அதாவது தீர்மானிக்கப்பட்ட தேதியில்) இன்னமும் விலை ஏறலாம் என்ற கணிப்பில் ஓரளவு கூடுதல் தொகையைக் கொடுத்து இப்போதே பங்குகளை வாங்கிக் கொள்ளலாம் என்று கருதி, முன்கூட்டியே இவ்வாறு கூடுதல் தொகை கொடுத்து வாங்குவதுண்டு. இவ்வாறு வாங்கும் பட்சத்தில் ஒப்பந்தக் காலம் அதிகமாக இருந்தால், நாம் வாங்கிய கூடுதல் விலையைவிட அப் பங்கின் விலை அதிகரித்து, லாபம் கிடைக்க வழியுண்டு. மாறாக, ஒப்பந்தக் காலம் குறைவாக இருக்கும்பட்சத்தில் நாம் வாங்கிய விலையைவிட யதார்த்தில் விலை குறைந்த அளவிலேயே இருந்து நஷ்டம் ஏற்படவும் வழியுண்டு. ஒப்பந்தக் காலம் முதிர்வடையும்போது அப்பங்குக்கு கால மதிப்பு எதுவுமில்லை.

ஹெட்ஜிங்

ஊக வணிகத்தில் ஈடுபடுவோர் கடைப்பிடிக்கும் நடைமுறையில் ஒன்று ஹெட்ஜிங். தமிழில் இதனை எதிர் நடவடிக்கை முறை எனலாம். ஏற்கெனவே செய்யப்பட்டுள்ள முதலீட்டில் இழப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு எனக் கருதி, அதே அளவு தொகையை எதிர்த் திசையில் தற்காப்பாக முதலீடு செய்வதற்கு ஹெட்ஜிங் என்று பெயர். உதாரணத்துக்கு, ஏபிசி என்ற நிறுவனத்தின் 100 பங்குகளை ஒருவர் ரூ.100 விலை கொடுத்து வாங்குகிறார். அந்த நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு காரணமாக அதன் லாபம் அதிகரித்து, பங்கின் விலையும் ரூ.300 வரைகூட அதிகரிக்கலாம் என்ற கணிப்பில் இந்நடவடிக்கையை அவர் மேற்கொண்டுள்ளார். அதேநேரத்தில் ஒருவேளை அந்தப் புதிய கண்டுபிடிப்புக்கு அரசு அனுமதி அளிக்கவில்லை என்றால், முதலீட்டாளர்களின் நம்பிக்கை தகர்ந்துபோய் அந் நிறுவனப் பங்கின் விலை பாதிக்கும் கீழாகச் சரியவும் வாய்ப்புண்டு என்று அவர் கருதுகிறார். இந்நிலையில் நஷ்டத்தை ஈடுகட்டுவதற்காக, 100 ஏபிசி பங்குகளை விலை கொடுத்து வாங்கும்போது, பங்குத் தரகருக்கு உரிய தொகை செலுத்தி, அதே பங்குகளை எதிர்காலத்தில் குறிப்பிட்ட விலையில் விற்பதற்கான புட் ஆப்ஷனையும் வாங்கலாம் (அதாவது அதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளலாம்). அவர் ஏற்கெனவே ஊகித்தபடி புதிய கண்டுபிடிப்புக்கு அனுமதி கிடைத்து ஏபிசி பங்கின் விலை உயர்ந்தால், நேரடியாக பங்குச் சந்தையில் அவற்றை விற்று அவர் அபரிமித லாபம் ஈட்டலாம். புட் ஆப்ஷனுக்குச் செலுத்திய சிறிய தொகை மாத்திரமே இழப்பாகும். அதேநேரத்தில் சந்தேகப்பட்டபடி அனுமதி கிடைக்க இயலாமல் பங்கின் விலை சரியுமானால், புட் ஆப்ஷனைப் பயன்படுத்தி அப்பங்குகளை விற்று நஷ்டத்தைக் குறைக்கலாம்.

ஷார்ட் ஸெல்லிங்

ஒரு முதலீட்டாளர் தனது கையிருப்பில் குறிப்பிட்ட பங்குகளை வைத்திருக்காத போதிலும் அவற்றை பங்குச் சந்தையில் கடன் வாங்கி விற்றுவிட்டு, பின்னர் அப்பங்குகளை வாங்கித் திருப்பிச் செலுத்தும் ஊக வணிக முறைக்கு ஷார்ட் ஸெல்லிங் என்று பெயர். தமிழில் இதனை குறைவு இருப்பு விற்பனை முறை என்று கூறலாம். குறிப்பிட்ட பங்கின் விலை எதிர்காலத்தில் குறைய நேரிடும் என்று கணிக்கும் ஒரு முதலீட்டாளர், அப் பங்குகளை இம்முறையில் முன்கூட்டியே தற்போதுள்ள கூடுதல் விலைக்கு விற்றுவிடலாம். அவர் எதிர்பார்த்தபடி குறிப்பிட்ட பங்குகளின் விலை குறையும்போது அவற்றை குறைந்த விலைக்கு வாங்கி பங்குகளாகவே திருப்பிச் செலுத்தி கடனை அடைக்கலாம். அவர் ஊகம் சரியாக இருந்தால் லாபம்தான். ஆனால் அவரது ஊகம் பிசகி, விலை உயர்ந்து செல்லுமானால், அப் பங்குகளை அதிக விலைக்கு வாங்கி கடனைத் திருப்பி அடைப்பதன் மூலம் அவர் நஷ்டம் அடைய நேரிடும்.

டே டிரேடிங்

மிகக் குறைந்த கால அளவில் அதாவது ஒரே நாளைக்குள் பங்குகளை வாங்கி, விற்கின்ற நடைமுறைக்கு டே டிரேடிங் என்று பெயர். தமிழில் இதனை தினசரி வர்த்தகம் அல்லது நாள் வர்த்தகம் என்று கூறலாம். பொதுவாக பங்குச் சந்தை ஏறுமுகமாக இருக்கும்போது, குறிப்பிட்ட பங்குகளைத் தேர்ந்தெடுத்து இவையெல்லாம் சில மணி நேரங்களிலேயே விலை உயரும் என்ற கணிப்பில் வாங்கி, விற்போர் உண்டு. இருப்பதிலேயே அதிக லாபம் தரும் ஊக வணிகம் இதுதான். அதேபோல் இருப்பதிலேயே அதிக இழப்பைத் தரும் அபாயகரமான ஊக வணிகமும் இதுதான். நாள் வர்த்தகத்தில் பணம் ஈட்டியவர்களைவிட பணம் இழந்தவர்களே அதிகம்பேர். டே டிரேடிங் பலருக்கு டே ட்ரீமிங், அதாவது பகல் கனவாக ஆகிவிடுவதுண்டு. மேலும் சிலருக்கு பயங்கர கனவாகவும் வாட்டி வதைப்பதுண்டு. இருப்பினும் இதன் மீதான கவர்ச்சி குறையவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com