13. பொருள்படுத்தும் முதலீடு

பண்டகச் சந்தையிலோ, பங்குப் பத்திரங்கள் பங்குச் சந்தையில் விற்கப்படுவதைப்போல, பல்வேறு பொருள் தொடர்பான வர்த்தக ஒப்பந்தப் பத்திரங்கள் விற்கப்படும், வாங்கப்படும்.

பொருளாதாரம் என்பதே பொருள்களின் உற்பத்தி, வர்த்தகம், அதன்வழி வருவாயும் லாபமும் ஈட்டல் என்பதன் அடிப்படையில்தான் அமைந்துள்ளது. செல்வம் என்ற சொல்லின் உண்மையான பொருள், பொருள் வளத்தைத்தான் சுட்டும். சொல்லுக்குப் பொருள் இருப்பது அவசியம் என்பதைப்போல, வாழ்வுக்கும் பொருள் இருப்பது அவசியம். பணம் என்பது பொருள்களை வாங்கி - விற்பதற்கு அல்லது பொருளாதார நடவடிக்கைகளுக்குப் பயன்படுகின்ற கருவி மாத்திரமே. பணம் இல்லாவிடினும் பொருள்கள் இருந்தால் வாழ்வை எளிதில் நடத்திவிடலாம். ஆனால், பணம் இருந்து பொருள்கள் இல்லையெனில் அல்லது கிடைக்கவில்லையெனில் அந்தப் பணம் வெறும் குப்பைக்குச் சமம்.

ஆக, பொருள்கள்தாம் நாம் பொருள்படுத்தக்கூடிய முக்கியப் பொருளாதார விஷயம். இந்நிலையில், அத்தகு பொருள்களை நேரடியாக வர்த்தகத்தில் ஈடுபடுத்தத் தேவையின்றி மறைமுகமாக அதைவைத்து நடத்தப்படுகின்ற லாபமீட்டல் முயற்சிக்கான களம்தான் பொருள் சந்தை எனப்படும் பண்டகச் சந்தை. சாதாரண சந்தைகளில் பல்வேறு பொருள்கள் விற்கப்படும், வாங்கப்படும். ஆனால், இந்தப் பண்டகச் சந்தையிலோ, பங்குப் பத்திரங்கள் பங்குச் சந்தையில் விற்கப்படுவதைப்போல, பல்வேறு பொருள் தொடர்பான வர்த்தக ஒப்பந்தப் பத்திரங்கள் விற்கப்படும், வாங்கப்படும். சில சந்தர்ப்பங்களில் நேரடியாகப் பொருள்களை வாங்குவதும், விற்பதும்கூட நடைபெறும். ஆங்கிலத்தில் இதனை கமாடிடீஸ் மார்க்கெட் என்பார்கள்.

எனினும், இந்தப் பண்டகச் சந்தை முதலீடு என்பது பங்குச் சந்தையையும்விட மிகுந்த நுணுக்கம் தேவைப்படுகின்ற முதலீடாகும். அதனைவிட இடர்பாடுகளும் மிகுதியாக உள்ள சந்தையாகும். ஆகையால், இதனை முழுமையாகத் தெரிந்துகொள்ளாமல் களமிறங்கினால் முதலுக்கு மோசம் ஏற்பட்டுவிடும்.

பண்டகச் சந்தை முதலீடு குறித்து எச்சரிக்கை விடுப்பதைப்போன்ற குறள் ஒன்று, ‘தெரிந்து செயல்வகை’ அதிகாரத்தின் கீழ் அமைந்துள்ளது. அக்குறள் -

தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்

ஏதப்பா டஞ்சு பவர். (464)

தெளிவு இலதனைத் தொடங்கார் இளிவு என்னும் ஏதப்பாடு அஞ்சுபவர் என்று பிரித்துப் படிக்க வேண்டும். இழிவு என்பதைத்தான் திருக்குறள் இளிவு என்று குறிக்கிறது. ஏதப்பாடு என்பதற்கு குற்றம் என்று பொருள். நமக்கு என்ன பயன் அல்லது இடர் ஏற்படும் என்பது குறித்து தெளிவாகத் தெரியாத செயலைத் தொடங்க மாட்டார்கள். யார்? பிற்காலத்தில் நமக்கு இதனால் இழிவாகிய குற்றம் ஏற்படுமோ என்று அஞ்சுபவர்கள். ஆக, நமக்கு இழிவை ஏற்படுத்திவிடக்கூடுமோ என்று அஞ்சுபவர்கள், தெளிவு இல்லாத ஒரு விஷயத்தைத் தொடங்கமாட்டார்கள் என்கிறது திருக்குறள்.

இது பண்டகச் சந்தை முதலீட்டுக்கு மிகவும் பொருந்தக்கூடியது. தெளிவாகத் தெரிந்துகொள்ளாமல் பண்டகச் சந்தை முதலீட்டில் இறங்கினால் நமக்கு மிகுந்த பேரிழப்பு ஏற்பட்டுவிடும். இந்த இழிவு வேண்டாம் என்று அஞ்சுபவர்கள், இதில் இறங்காமல் இருப்பதே உத்தமம். எனினும், ஒரு முதலீட்டு முயற்சியாக இதில் இறங்கலாமே என்று கருதுபவர்கள், முதலில் இதுபற்றித் தெளிவாகத் தெரிந்துகொண்டு, சந்தேகங்களைப் போக்கிக்கொள்ள வேண்டும்.

இனி, பண்டகச் சந்தை குறித்து சற்று விளக்கமாகப் பார்ப்போம். பொருள்கள் அல்லது பண்டங்களை நேரடியாக விற்பனை செய்ய வேண்டும் என்ற நோக்கத்திற்காக இந்தப் பண்டகச் சந்தை உருவாக்கப்படவில்லை. மாறாக, எதிர்காலத்தில் பொருள்களின் விலையில் ஏற்படும் திடீர் ஏற்ற - இறக்கங்களைச் சமாளிக்கும் நோக்கிலும், ஊகத்தின் அடிப்படையில் இத்தகு விலை ஏற்ற - இறக்கங்களைப் பயன்படுத்தி லாபமீட்டும் நோக்கிலும் வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கு இப் பண்டகச் சந்தை வழிவகுக்கிறது. இதன்படி, குறிப்பிட்ட ஒரு பொருளை, எதிர்காலத்தில் குறிப்பிட்ட தேதியில், குறிப்பிட்ட விலைக்கு வாங்கவோ அல்லது விற்கவோ ஒப்பந்தம் செய்துகொள்ளப்படுகிறது.

நேரடியாகப் பொருள் வணிகத்தில் ஈடுபடுவோர் இந்தப் பண்டகச் சந்தையில் இத்தகு வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டு, எதிர்காலத்தில் விலை குறைவாக அப் பொருள்களை உண்மையிலேயே வாங்கவோ அல்லது கூடுதல் விலைக்குப் பொருள்களை விற்று லாபம் ஈட்டவோ செய்வர். பொதுவாக இதுபோன்ற வர்த்தகர்கள், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய இழப்பிலிருந்து தற்காத்துக்கொள்ளும் எதிர் நடவடிக்கையாக (ஹெட்ஜிங்) பண்டகச் சந்தையில் இதுபோன்ற வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்வர். அதேநேரத்தில் ஊகத்தின் அடிப்படையில் இதில் ஈடுபடும் முதலீட்டாளர், பொருள்களை நேரடியாக வாங்காமல், அதன் விலை வித்தியாசத்தைப் பணமாகப் பெறுகின்ற லாப முயற்சியில் ஈடுபடுவர்.

உதாரணத்துக்கு குறிப்பிட்ட ஒரு பொருள், ஒரு மாதம் கழித்து சுமார் இரு மடங்காக விலை உயரும் என்று கருதுகின்ற ஓர் ஊக வணிக முதலீட்டாளர், அந்த விலைக்கு அப் பொருளை குறிப்பிட்ட தேதியில் புட் ஆப்ஷன்ஸ் முறையில் விற்பதாக ஒப்பந்தம் மேற்கொள்வார். விலை உயர்ந்துகொண்டே செல்லும் நிலையில் குறிப்பிட்ட தேதி வரும் வரையில் காத்திருந்தால், அத்தேதியில் அவர் அப்பொருளை வெளிச்சந்தையில் கூடுதல் விலைக்கு வாங்கித்தான் ஒப்பந்தத்தை நிறைவு செய்ய வேண்டும். மாறாக, ஒப்பந்தத்தின்படியான விற்பனைத் தேதி வருவதற்கு சில தினங்களுக்கு முன்பாகவே அந்த புட் ஆப்ஷன்ஸ் ஒப்பந்தத்தை, உண்மையான பொருள் வர்த்தகர் அல்லது ஹெட்ஜரிடம் அல்லது வேறு ஊக வணிகரிடம் விற்றுவிடலாம். அவர் முதலில் ஒப்பந்தம் செய்துகொண்ட தேதியைவிட, அன்றைய தேதி நிலவரப்படி பொருளின் விலை எவ்வளவு உயர்ந்திருக்கிறதோ அந்த விலை வித்தியாசத் தொகையை மட்டும் அவர் பெற்றுக்கொண்டு ஒப்பந்தத்தை முடித்துக்கொள்ளலாம் அல்லது கைமாற்றிவிடலாம். ஏனெனில், இந்த ஊக வணிகத்தின் கீழ் அவர் அப் பொருளை விலை கொடுத்து வாங்கியிருக்கவில்லை; மாறாக ஒப்பந்தம் மட்டுமே செய்துகொள்கிறார். முன்னதாகர இவ்வாறான ஒப்பந்தம் மேற்கொள்ள குறிப்பிட்ட தரகுக் கட்டணமும், வரம்புத் தொகையும் செலுத்தவேண்டி இருக்கும்.

பொதுவாக, இந்தப் பண்டகச் சந்தை முதலீட்டுக்கான பண்டங்களை மென்பண்டங்கள் (சாஃப்ட் கமாடிடீஸ்), வன்பண்டங்கள் (ஹார்டு கமாடிடீஸ்) என்று இரு வகையாகப் பிரித்துக் கூறுவர். விரைவில் அல்லது குறுகிய காலத்துக்குள் அழிந்துவிடக்கூடிய இயல்புடைய வேளாண் பொருள்கள் எல்லாம் மென்பண்டங்களாகும். அரிசி, கோதுமை, சோளம், சோயா பீன்ஸ், சர்க்கரை, சமையல் எண்ணெய் ஆகியவை இவ்வகையைச் சார்ந்தவையே. மாறாக, நீடித்து இருக்கக்கூடிய தன்மை வாய்ந்த கனிமப் பொருள்கள் வன்பண்டங்களாகும். தங்கம், வெள்ளி, அலுமினியம், கச்சா எண்ணெய் போன்றவை இவ்வகையைச் சார்ந்தவை. மென்பண்டங்களைக் காட்டிலும் வன்பண்டங்களே, பண்டகச் சந்தை முதலீட்டில் எளிதாகக் கையாளத் தகுந்தவை. ஏனெனில், வன்பண்டங்கள் நீண்ட காலத் தேவைக்கானவை என்பதுடன், பொருள் உற்பத்தித் துறைக்கும் மிகவும் பயன்படக்கூடியவை. ஆகையால், வன்பண்டங்களில்தான் அதிக முதலீட்டாளர்கள் கவனம் செலுத்துகின்றனர்.

பொருள்களை வைத்து மறைமுக வர்த்தக நடவடிக்கை நடைபெறும் பண்டகச் சந்தையில், பொருள்களின் விலை நிலவரம், அதில் மாற்றம் நிகழ்வதற்கான வாய்ப்புகள், தட்பவெட்ப சூழ்நிலை, நாட்டின் மற்றும் உலகப் பொருளாதாரச் சூழல், அரசியல் மற்றும் சமூக நிகழ்வுகள் எனப் பல்வேறு விஷயங்களையும் கூர்ந்து கவனித்து, குறிப்பிட்ட பொருள் விலை ஏற்ற - இறக்கத்தைக் கணிக்க வேண்டும். அவ்வாறு தெரிந்து வைத்திருக்கவில்லையெனில், நமது முதலீட்டை எந்நேரத்திலும் இழந்துவிடக்கூடிய அபாயம் காத்திருக்கிறது. இதை உணர்த்தும் வகையில் ‘சுற்றந்தழால்’ அதிகாரத்தில் வருகின்ற குறளை இப்போது பார்ப்போம் -

அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்

கோடின்றி நீர்நிறைந் தற்று. (523)

அளவளாவு இல்லாதான் வாழ்க்கை, குளவளாக் கோடு இன்றி நீர்நிறைந்து அற்று எனப் பிரித்துப் படிக்க வேண்டும். அளவளாவு என்பதற்கு அளவளாவுதல் அதாவது சுற்றத்தாருடன் மனங்கலந்து பேசுதல் என்று பொருள். கோடு என்பதற்கு மலை, கரை என்று பொருள். இங்கே கரை என்ற பொருளிலே கையாளப்பட்டுள்ளது. அற்று என்பது அற்றுப்போகும் என்பதைக் குறிப்பதல்ல, போலும் என்பதைக் குறிக்கிறது. எதனைப் போலும்? அளவளாவுதல் இல்லாதவன் வாழ்க்கையானது, ஒரு குளப் பரப்பு கரையில்லாமல் நீர் நிறைந்திருப்பதைப் போன்றது என்கிறது திருக்குறள். கரையில்லாத குளத்திலே நீர் நிறைந்திருக்குமா? விரைந்து வடிந்தோடிப் போகும் அல்லவா? அதனைப்போலத்தான் சுற்றத்தாரை அடிக்கடி சந்தித்து மனம்விட்டுப் பழகிப் பேசாதவன் வாழ்க்கையானது, கரையில்லாத குளம்போல நீர் தங்கியிருக்க வழியின்றி வீணாகிவிடும் என்று எச்சரிக்கிறார் திருவள்ளுவர். இத்தகு அளவளாவுதல், அதாவது நாம் என்ன பண்டத்தில் முதலீடு செய்ய விரும்புகிறோமோ அல்லது செய்துள்ளோமோ அதுபற்றிய தகவல்களை இடைவிடாது அறிந்திருத்தல் பண்டகச் சந்தை முதலீட்டுக்கு மிகவும் அவசியம்.

பண்டகச் சந்தையில் பொதுவாக 4 வகைப் பண்டங்களின் மீதான வர்த்தகம் மேற்கொளப்படுகிறது. அவை - 1. எரிசக்தி (கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, ஆலைகளில் பயன்படும் சூடேற்றும் எண்ணெய்), 2. உலோகங்கள் (தங்கம், வெள்ளி, பிளாட்டினம், தாமிரம். வைரக் கல்லையும் இந்த வகைப்பாட்டில் சேர்க்கலாம்), 3. கால்நடைகள் மற்றும் மாமிசம் சார்ந்தவை, 4. வேளாண் பொருள்கள் (அரிசி, கோதுமை, சோளம், சோயா பீன்ஸ், பருத்தி, சர்க்கரை, கோகோ போன்றவை). இந்தப் பொருள்கள் குறித்து அவற்றின் உற்பத்தி, அவற்றுக்கான தேவை, இருப்பு, விலை நிலவரம், பொருள்கள் உற்பத்தி மற்றும் போக்குவரத்துக்கு ஏற்படக்கூடிய இடையூறுகள், அரசின் வரி விகித மாற்றங்கள் மற்றும் புதிய அறிவிப்புகளால் நிகழக்கூடிய பாதிப்புகள் அல்லது பயன்கள் என அனைத்துத் தகவல்களையும் தெரிந்துகொண்டு இவ் வகை முதலீட்டில் இறங்க வேண்டும். முழுமையாகத் தெரிந்துகொள்ளாமல் நுனிப்புல் மேய்வது பலன் தராது; மாறாக பேரிடியைத் தந்துவிடும்.

இதுகுறித்து ‘வலி அறிதல்’ அதிகாரத்தில் வருகின்ற குறள் என்ன வலியுறுத்துகிறது என்பதைப் பார்ப்போம் -

நுனிக்கொம்ப ரேறினார் அஃதிறந் தூக்கின்

உயிர்க்கிறுதி யாகி விடும். (476)

நுனிக்கொம்பர் ஏறினார் அஃது இறந்து ஊக்கின் உயிர்க்கு இறுதி ஆகிவிடும் என்று பிரித்துப் பொருள் காண வேண்டும். ஒரு மரத்தின் அடிப்பாகத்தில் இருந்து ஏறாமல், நுனிக் கொம்பைப் பிடித்து ஏறியவர், அதையும் கடந்து முன்னேறிச் செல்ல (அஃது இறந்து ஊக்கின்) முயன்றால், கிளை முறிந்து கீழே விழுந்து அவரது உயிருக்கே உலைவைத்துவிடும் என்று எச்சரிக்கிறது இத் திருக்குறள். பண்டகச் சந்தையிலும் அவ்வாறே, முழுமையாக அறிந்துகொள்ளாமல் நுனிக்கொம்பில் ஏறிக்கொண்டு, வெறும் ஊகத்தின் அடிப்படையில் மேற்கொண்டு செயல்படத் துணிந்தால் நமது உயிரைப்போன்ற முதலீட்டைப் பறித்துச் சென்றுவிடும்.

பண்டகச் சந்தையில் ஃபார்வர்டு டிரேடிங், ஃபியூச்சர்ஸ், ஸ்பாட், ஹெட்ஜிங், ஆப்ஷன்ஸ், ஸ்வாப் என்று பல முறைகள் கையாளப்படுகின்றன. இவை பற்றியெல்லாம் நிபுணர்களிடம் கலந்துரையாடி முதலில் முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டும். ஃபார்வர்டு டிரேடிங் என்பது குறிப்பிட்ட பொருளை எதிர்காலத்தில் குறிப்பிட்ட தேதியில் இன்ன விலைக்கு விற்பது அல்லது வாங்கிக்கொள்வது என்பது குறித்து முறையே விற்பவர், வாங்குபவர் ஆகிய இருவர் மேற்கொள்ளும் ஒப்பந்தமாகும். உண்மையான பொருள் வர்த்தகர்கள் பெரும்பாலும் இதனை மேற்கொள்வர். மாறாக, குறிப்பிட்ட தேதியில், குறிப்பிட்ட விலைக்கு பொருளை விற்பது அல்லது வாங்குவது குறித்த ஒப்பந்தத்தை, அதனை முதலில் மேற்கொண்ட இருவர்தான் நிறைவேற்ற வேண்டும் என்பதற்குப் பதிலாக, அந்த ஒப்பந்தத்தை பிறர் கைக்கு மாற்றிக்கொடுக்க, விற்பதற்கு வழிவகுக்கும் முறையே ஃபியூச்சர்ஸ்.

ஸ்பாட் என்பது எதிர்காலத்தில் பொருளை விற்பதற்குப் பதிலாக உடனடியாக விற்பது அல்லது வாங்குவதைக் குறிக்கும். பொதுவாக, விற்பனைத் தேதிக்கு (டிரேடிங் டேட்) 2 நாள் கழித்து ஸ்பாட் தேதி நிர்ணயிக்கப்படுவது வழக்கம். ஹெட்ஜிங் என்பது பொருளின் விலை ஏற்ற-இறக்கத்தைச் சமாளிக்க எதிர்த்திசையில் மேற்கொள்ளப்படும் தற்காப்பு வாங்கல், விற்றல் நடவடிக்கைக்கான ஒப்பந்தம். ஆப்ஷன்ஸ் என்பது உண்மையிலேயே பொருளை வாங்கிக் கொள்வதற்குப் பதில் விருப்பப்பட்டால் பொருளை வாங்குவதற்கோ அல்லது விற்பதற்கோ உரிமை அளிக்கின்ற ஒப்பந்தம். ஸ்வாப் என்பது ஒரு வகையான முதலீட்டை அல்லது ஒப்பந்தத்தை இன்னொரு வகையான முதலீடாக அல்லது ஒப்பந்தமாக மாற்றிக்கொள்ள வசதி அளிக்கும் முறை.

இதுபோக, குறிப்பிட்ட பொருள்களின் விலை நிலவரத்தை வைத்து ஏறத்தாழ சூதாட்டம் போல் நடைபெறுகின்ற ஊக வணிகமும் உண்டு. இதற்கு கமாடிடீஸ் இன்டெக்ஸ் டிரேடிங் என்று பெயர். மேலும், அன்னியச் செலாவணிகளை பண்டகச் சந்தையில் விற்பதும் உண்டு. தங்கம் போன்றவற்றை நேரடியாக விற்காமல், அவற்றின் மீதான நிதிப் பத்திரங்களை அதாவது எக்ஸ்சேஞ்ச் டிரேடிங் ஃபண்ட் பத்திரங்களையும் பண்டகச் சந்தையில் விற்பனை செய்வதுண்டு.

உண்மையான தேவை, முதலீடு சார்ந்த நோக்கத்துக்காகப் பலர், பண்டகச் சந்தையில் ஈடுபடுகின்ற வேளையில், விலையை வேண்டுமென்றே உயர்த்தியோ, குறைத்தோ லாபமீட்ட வேண்டும் என்ற நோக்குடனும், இதற்காக பொருள் பதுக்கலை ஏற்படுத்தி செயற்கைத் தட்டுப்பாட்டை உருவாக்குகின்ற வகையிலும்கூட சிலர் இதில் களம் காண்பதுண்டு. இதுபோன்ற பேர்வழிகள் வெளிக்குத் தெரியாமல் ஒரு கூட்டாக – சிண்டிகேட்டாக – செயல்படுவதுண்டு. எவ்வளவுதான் நெறிமுறைப்படுத்தினாலும் பேராசை கொண்டவர்களும் புறம்பான வழிகளில் ருசி கண்டவர்களும் இதுபோன்ற செயல்களில் இறங்குகின்றனர். இதனால் உண்மையான வர்த்தகர்கள் மட்டுமின்றி, முதலீட்டாளர்களும் கடும் பாதிப்புக்கு ஆளாவதுண்டு.

ஆகையால், ஊகங்களும், அபாயங்களும் நிறைந்த பண்டகச் சந்தையில் பெருவாரியான பணத்தை முதலீடு செய்யக் கூடாது. நமது மொத்த முதலீட்டில் இதுபோன்ற பண்டகச் சந்தை முதலீடு எந்த வகையிலும் 10 சதவீதத்துக்கு மேல் போகவே கூடாது. பண்டகச் சந்தை முதலீட்டில் இறங்குவதற்கு முன்பே அதுகுறித்த நுணுக்கங்களை எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும் முறையாக அறிந்துகொள்ள வேண்டும்.

ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று

போற்றினும் பொத்துப் படும். (468)

‘தெரிந்து செயல்வகை’ அதிகாரத்தின் கீழ் இக்குறள் இடம்பெற்றுள்ளது. ஒரு முயற்சியை ஆற்றும்போது (செய்யும்போது) அதற்குரிய வழிமுறைகளில் மெனக்கெட்டு மேற்கொள்ளாத நடவடிக்கையானது, அதன்பிறகு பலபேர் காப்பாற்ற முன்வந்தாலும் பயன்தராது வீணாகிவிடும் என்று இக்குறளில் எச்சரிக்கிறார் திருவள்ளுவர்.

பொருள் சந்தையான பண்டகச் சந்தை முதலீட்டில் இறங்குவோர் இதனைப் பொருள்படுத்துக. இல்லையேல் அவர்தம் முதலீடு, பொருள் ‘படுத்தும்’ முதலீடாக மாறிவிடும்.

***

துணைத் தகவல்

பண்டகச் சந்தை தோன்றியது எப்படி?

ஆதிகாலத்தில் பொருள்களின் விற்பனை தொடங்கியபோதே ஏறத்தாழ பண்டகச் சந்தை உருவாகிவிட்டது. பண்டமாற்று முறைதான் பொருளாதாரத் துறைக்கான முதலாவது அடிக்கல். பெருமளவில் பொருள்களின் விற்பனை நடைபெறத் தொடங்கியபோது பொருள்களுக்குத் தட்டுப்பாடு, அதன் விலை மதிப்பு அதிகரிப்பு, பொருள்களின் வரத்து அதிகரிப்பால் விலைச் சரிவு ஆகியவை தோன்றின. அவற்றைச் சமாளிக்க எதிர்காலத்தில் குறிப்பிட்ட தேதியில், குறிப்பிட்ட எண்ணிக்கையில், குறிப்பிட்ட பொருள்களை விற்பதற்கு அல்லது வாங்குவதற்கான ஒப்பந்தங்கள் தோன்றின. இதனை அமைப்பு ரீதியிலான பண்டகச் சந்தையின் தொடக்கம் எனலாம்.

இன்றைக்கு இராக் என்று அழைக்கப்படும் நிலப்பகுதியான பண்டைய சுமேரியாவில்தான் இத்தகு முன்னோடிப் பண்டகச் சந்தை முதலில் தோன்றியதாகக் கருதப்படுகிறது. குறிப்பிட்ட தேதியில், குறிப்பிட்ட பொருளை, உதாரணத்துக்கு - எத்தனை ஆடுகளை வழங்க வேண்டும் என்பதைக் குறிக்க, களிமண் சட்டி ஒன்றில் அதற்குரிய எண்ணிக்கையிலான களிமண் வில்லைகளை இட்டு அதனை மூடிவிடுவர். பின்னர், குறிப்பிட்ட தேதியில், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பொருள்களை வழங்குவது குறித்த இரு தரப்பினர் இடையேயான ஒப்பந்தங்கள், களிமண் பலகைகளில் பொறிக்கப்பட்டன. இப் பழக்கம் கி.மு.4,600 வாக்கில் பயன்பாட்டுக்கு வந்ததாகக் கருதப்படுகிறது. இன்றைய ஃபார்வர்டு டிரேடிங், ஃபியூச்சர்ஸ் டிரேடிங் ஆகியவற்றுக்கு இதுவே முன்னோடி.

நவீன காலத்தில், கி.பி.10-ம் நூற்றாண்டில், ஐரோப்பிய நாடுகளில் பொருள் விற்பனைச் சந்தை வேகமாக வளரத் தொடங்கியது. இதனையொட்டி வியாபார ஒப்பந்தங்களும் நடைமுறைக்கு வந்தன. உலகின் முதல் பங்குச் சந்தை என்று மதிக்கப்படும் ஆம்ஸ்டர்டாம் (நெதர்லாந்து எனப்படும் ஹாலந்து நாட்டின் தலைநகர்) பங்குச் சந்தை,  முதல் நவீன பண்டகச் சந்தை என்ற பெருமையையும் பெற்றுள்ளது. கி.பி.1530-ல் இது தொடங்கப்பட்டபோது பல்வேறு பொருள்களை விற்பதற்கான பண்டகச் சந்தையாகத்தான் அது செயல்பட்டது. முன்கூட்டிய ஒப்பந்தங்கள் (ஃபார்வர்டு கான்ட்ராக்ட்ஸ்), போதுமான பொருள்கள் இல்லாமலேயே விற்பனை ஒப்பந்தம் மேற்கொள்வது (ஷார்ட் செல்லிங்), விருப்பப்பட்டால் மாத்திரமே பொருள்களை விற்பது அல்லது வாங்குவதற்கான உரிமையை அளிக்கும் ஒப்பந்தங்கள் (ஆப்ஷன்ஸ்) ஆகியவை அப்போதுதான் நடைமுறைக்கு வந்தன. பின்னர் 1608-ல் இது பங்குச் சந்தையாக உருமாறியது.

1864-ல் அமெரிக்காவின் சிகாகோ நகரில் உருவான சிகாகோ போர்டு ஆஃப் டிரேட் அமைப்பு, முழுமையான பண்டகச் சந்தையாக விளங்கியது. உலகின் பழைமையான ஃபியூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்ஸ் மார்க்கெட்டாக இது மதிக்கப்படுகிறது. இங்கு ஆடு-மாடுகள், பன்றிகள், கோதுமை, சோளம் ஆகியவற்றின் பேரில் பண்டகச் சந்தை நடவடிக்கைகள் நடைபெறத் தொடங்கின. பின்னர் பண்டகச் சந்தை சட்டம் கொண்டுவரப்பட்டு, 1930 முதல் அரிசி, இதர தானியங்கள், முட்டைகள், உருளைக் கிழங்கு, சோயா பீன்ஸ் போன்றவற்றின் மீதும் வர்த்தகம் நடைபெறத் தொடங்கியது.

தற்போது பல்வேறு நாடுகளிலும் பல பண்டகச் சந்தைகள் இயங்கி வருகின்றன. அவற்றில் வர்த்தக மதிப்பின் அடிப்படையில் அமெரிக்காவில் இயங்கிவரும் சிஎம்இ குரூப் பண்டகச் சந்தைதான் முன்னிலை வகிக்கிறது. அண்மைக்கால புள்ளிவிவரம் ஒன்றின்படி, இங்கு மாதத்துக்கு 26.80 கோடி டாலர் அளவுக்கு வர்த்தகம் நடைபெறுகிறது. இதற்கு அடுத்தபடியாக ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள டோக்கியோ கமாடிடீ எக்ஸ்சேஞ்ச் 2-ஆவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் உள்ள மல்டி கமாடிடீ எக்ஸ்சேஞ்ச் 5-ஆவது இடத்தில் உள்ளது.

இந்தியாவில் பண்டகச் சந்தை

சுமேரியாவில் பண்டைய பண்டகச் சந்தை தோன்றிய அதே காலகட்டத்தில் இந்தியாவிலும் பண்டகச் சந்தையும், அதற்கான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளும் பழக்கமும் தொடங்கிவிட்டன. சிந்து சமவெளி நாகரிகமே மாபெரும் வணிக சமுதாய, நகர்ப்புற நாகரிகமே. அகழ்வாய்வில் கிடைத்த சிந்து சமவெளிக் கால முத்திரைகளில் பல - வர்த்தகம், பண்டங்கள் சார்ந்தவையே. அதற்குப் பிந்தைய மௌரியர்கள், குப்தர்கள் ஆகியோரின் பேரரசுக் காலங்களிலும், பண்டைய தமிழ் மன்னர்களின் காலங்களிலும் திரைகடலோடி திரவியங்கள் தேடும் (கடல் கடந்து பொருள்களை விற்பது- வாங்குவது) பழக்கம் இருந்துள்ளது. அதுமட்டுமல்ல முத்து, விலையுயர்ந்த கற்கள் (ரத்தினங்கள்), பருத்தி, பட்டு, கலைப் பொருள்கள் உள்ளிட்ட பல பண்டங்களை வாங்குவதற்காக கடல் கடந்து இந்தியாவுக்கு ஐரோப்பியர்கள் உள்ளிட்ட பிற நாட்டினர்கள் வந்துள்ளனர். இதுபோன்ற வர்த்தகங்களில் ஒப்பந்த நடைமுறைகள் பின்பற்றப்பட்டதற்கு வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.

எனினும் நவீன கால பண்டகச் சந்தை இந்தியாவில் அண்மையில்தான் தொடங்கியது. இந்தியாவில் தற்போது, உலக அளவில் 5-ஆவது இடம் வகிக்கும் மல்டி கமாடிடீ எக்ஸ்சேஞ்ச் (எம்சிஎக்ஸ்) தவிர மேலும் 5 பண்டகச் சந்தைகளும் இயங்கி வருகின்றன. அவை - நேஷனல் கமாடிடீ அண்ட் டிரைவேட்டிவ்ஸ் எக்ஸ்சேஞ்ச், நேஷனல் மல்டி கமாடிடீ எக்ஸ்சேஞ்ச், இந்தியன் கமாடிடீ எக்ஸ்சேஞ்ச், ஏசிஇ டிரைவேட்டிவ்ஸ் எக்ஸ்சேஞ்ச், யுனிவர்சல் கமாடிடீ எக்ஸ்சேஞ்ச்.

பண்டகச் சந்தைகளைக் கட்டுப்படுத்தி ஒழுங்குமுறைப்படுத்துவதற்காக 1953-ல் முன்கூட்டிய சந்தைகள் ஆணையம் (ஃபார்வர்டு மார்க்கெட்ஸ் கமிஷன் எஃப்.எம்.சி.) என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. எனினும், 2015-ல் இது, இந்தியப் பங்குப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்துடன் (செபி) இணைக்கப்பட்டுவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com