9. விமரிசனங்களை எதிர்கொள்ளும் திறன்

நீங்கள் நினைக்கலாம் இதெல்லாமா ஒரு விளையாட்டு வீரரை பாதிக்குமா என.
9. விமரிசனங்களை எதிர்கொள்ளும் திறன்
Published on
Updated on
2 min read

நீங்கள் நினைக்கலாம் இதெல்லாமா ஒரு விளையாட்டு வீரரை பாதிக்குமா என. உண்மையை சொல்லப் போனால் விமரிசனங்களே பல விளையாட்டு வீரர்களை சிறந்த விளையாட்டு வீரர்களாக மாற்றியிருக்கிறது.

விமரிசனம் என்பது ஒரு விளையாட்டு வீரரின் வாழ்க்கையில் மிக மிக முக்கியமான ஒன்று. எனவே இளம் வயது முதலே நீங்கள் விமரிசனங்களை பழகிக் கொள்ள வேண்டும். இல்லையெனில் விமரிசனம் உங்கள் விளையாட்டு வாழ்வில் எதிர்மறையான விளைவுகளை உருவாக்கும். விமரிசனங்களுக்கு செவி சாய்த்து கேட்கும் திறமை உங்கள் குழந்தைகள் வளர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் இதனால் ஏற்படப் போகும் நல்ல மாற்றங்களையும் எடுத்துரைக்க வேண்டும்.

ஒவ்வொரு சிறந்த விளையாட்டு வீரரின் வாழ்விலும், யாரவது ஒரு நபர் கூறிய விமரிசனம் அவர்களின் வாழ்க்கையை புரட்டிப் போட்டிருக்கும். அது மட்டுமல்லாது அவர்களின் உண்மை நிலைய (Reality) என்ன என்பதையையும் நிதர்சனமாகக் காட்டும். இந்த விமரிசனங்களால் தங்களின் தவறுகளை உணர்ந்து, அதை சரி செய்து விளையாட ஆரம்பிப்பார்கள்.

நம்மிடம் என்ன தவறு உள்ளது என்பதை நம்மால் அவ்வளவு சீக்கிரம் அறிய முடியாது. நம் உடன் இருப்பவர்களாலும் அவ்வளவு சீக்கிரம் நம் தவறை சுட்டிக் காட்ட முடியாது. இதற்காகவே சில சமயங்ககளில் நம் மீது எழும் விமரிசனங்களை கூர்ந்து கவனித்தல் அவசியம். எடுத்துக்காட்டாக, எனக்குத் தெரிந்த ஒரு பத்திரிக்கையாளர், ஒரு டென்னிஸ் வீரரைப் பற்றி ஒரு விமரிசனம் எழுதினார், அதுவும் ஒரு தேசிய நாளிதழில். அது என்னவென்றால், அந்த டென்னிஸ் வீரரை, டென்னிஸ் மைதானத்திலிருந்து அகற்றி, உடற்பயிற்சி கூடத்தில் 6 மாதங்கள் பூட்டி வைக்க வேண்டும் என்பதே. இந்த செய்தியைப் பார்த்ததும் அந்த வீரர் அதிர்ந்து போனார். ஆனால் அந்த பத்திரிக்கையாளர் சொல்ல வந்தது என்னெவென்றால், டென்னிஸ் விளையாட்டில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு ஓடிக் கொண்டே இருக்க வேண்டும்.

ஆனால் அவரின் கால்கள் அவ்வளவு வலிமையை எல்லை எனவே அவரால் சிறப்பாக விளையாட முடியவில்லை என்பதே. இதனால் அவர் உடல் வலிமையை அதிகரிக்க உடற்பயிற்சிக் கூடத்திற்கு செல்ல வேண்டும் என்பதை மிகவும் வித்தியாசமான விமரிசனமாக வைத்தார். இம்மாதிரியான விமரிசனம் விளையாட்டு உலகில் மிகவும் ஆரோக்கியமான ஒன்றாகும். சொல்லப்போனால், அதன்பிறகு அந்த டென்னிஸ் வீரர் உடற்பயிற்சி செய்து, உடல் வலிமைப் பெற்று இப்போது உலக அரங்கில் இந்தியாவிற்கான பிரதிநிதி ஆகியுள்ளார். எனவே சில நேரங்களில் விமரிசனங்கள் என்பது உங்களுக்கு மனா வருத்தத்தை தந்தாலும், அதனால் பல நல்ல நேர்மறை விளைவுகளே அதிகம் ஏற்படும். அதேபோல், விமர்சனங்கள் என்பது ஊடகங்களால் மட்டுமே வைக்கப்படுவது அல்ல.

சில நேரங்களில் ஒரு இக்கட்டான சூழ்நிலை கூட உங்களுக்கு பாடம் புகட்டும் விமர்சனமாக மாறும். எடுத்துக்காட்டாக, நம் இந்திய கிரிக்கெட் அணியின் உலகக் கோப்பை அரையிறுதி குறித்து பல்வேறு விமரிசனங்கள் வைக்கப்படுகின்றன. அரை இறுதியில், டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சரிவர விளையாடாத சூழ்நிலை ஏற்பட்டதால், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் என ஸ்திரமான ஒரு ஆட்டக்கார் இல்லாத சூழ்நிலையாலும், இந்திய அணி தோற்றுவிட்டது எனக் கூறப்படுகிறது.

இது ஒரு அசாதாரண சூழ்நிலையால் ஏற்பட்டது. ஏனெனில், அந்த ஆட்டத்திற்கு முன்பு வரை அப்படி ஒரு சூழ்நிலை இந்திய அணிக்கு ஏற்படவில்லை. சொல்லப் போனால் இந்திய அணியின் பேட்டிங்கை அதுவரை எல்லோரும் புகழ்ந்து கொண்டிருந்தார்கள். ஆனால் இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையால், நாம் உலகக் கோப்பை கனவைப் பறிகொடுத்தோம். இவ்வகையான சூழ்நிலைகள் வைக்கும் விமரிசனங்கள் நம்மை எதிர்காலத்தில் ஏற்படப்போகும் சூழ்நிலைகளுக்கு தயார்படுத்தும். நான் பார்த்தவரை, விமரிசனங்கள் எப்போதும் ஒரு நல்ல தாக்கத்தையே ஏற்படுத்துகிறது. விமரிசனங்களை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதை பொறுத்தே அதன் விளைவுகள் நிர்ணயிக்கப்படுகின்றது என நான் கூறுவேன். எனவே விமர்சனங்களை வரவேற்போம், நம் விளையாட்டுத் திறனை அதன் மூலம் மேம்படுத்துவோம்.

தொடரும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com