ரோஜா மலரே - 9

நான் வாய் அசைக்க, பாடியது யார் தெரியுமா? ‘பாரத ரத்னா’ லதா மங்கேஷ்கர்தான்.
ரோஜா மலரே - 9

‘ஒளவையார்’ படப்பிடிப்பு முடிந்து அந்தப் படத்தின் பிரத்யேக காட்சி எங்களுக்கு போட்டுக் காண்பிக்கப்பட்டது. அதற்கு முன்பாகவே இந்த சிறப்புக் காட்சிக்கு நான் கண்டிப்பாக வர வேண்டும் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது. நானும் சந்தோசத்துடன் பாட்டி மற்றும் என் குடும்பத்துடன் சென்றிருந்தேன். அங்கு பல புகழ்பெற்றவர்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அன்றைய நாளில் என்று சொன்னால் அது தவறாகிவிடும். அன்றும், என்றும் புகழ்பெற்ற பலர் அங்கு அந்தப் படத்தை பார்க்கக் கூடி இருந்தார்கள். அவர்களில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியவர், நமது தேசத் தந்தை மகாத்மா காந்தியின் பேரன் தேவதாஸ் காந்தி, அந்தப் படத்தை பார்க்க வந்திருந்தார். எனது நடிப்புத் திறமையைப் பாராட்டி தேவதாஸ் காந்தி எனக்கு ஒரு பரிசளித்தார். அந்தச் சிறிய வயதில் நான் பாராட்டுப் பெற்றதும், அவரது கையால் பரிசு வாங்கியதும் எனக்கு மிகவும் சந்தோசமாகவும், பெருமையாகவும் இருந்தது.

அந்தப் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக எனக்கு இன்னுமொரு பாராட்டும் கிடைத்தது. இன்றும் நாம் எல்லோரும் நமது மூதாதையர்களை, சாதனை புரிந்த பலரை பார்த்ததில்லை. அதிலும் நம்முடன் வாழ்ந்து, மறைந்த பல்வேறு சுதந்திர போராட்ட வீரர்கள், பல்வேறு அறிஞர் பெருமக்களை நாம் புகைப்படத்தின் வாயிலாகத்தான் பார்த்திருக்கிறோம். புராண இதிகாச பாத்திரங்களை நான் இங்கு கூறவில்லை. பல நூறு வருடங்களுக்கு முன்பு நம்மில் வாழ்ந்து மறைந்த பலரை, இந்த மாதிரி சினிமாதான் நமக்கு தெளிவாக காட்டுகிறது. அதற்கு உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் ‘கப்பலோட்டிய தமிழன்’ படத்தை இங்கு நான் குறிப்பிட வேண்டும். அதேபோல் மற்றொரு படம் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இந்த இரண்டு படங்களிலும் நடித்தார் என்று சொல்லக் கூடாது, வாழ்ந்தார் என்றுதான் சொல்ல வேண்டும். இப்படித்தான் வ.உ.சி., அல்லது கட்டபொம்மன் இருந்தாரோ என்று நினைக்கும் வண்ணம் அந்த இரண்டு பெரு மகன்களை நம் கண் முன் காட்டினார்.

அதேபோல் கவியரசி ஒளவையார் எப்படி இருப்பார் என்று யாராவது கேட்டால், நாம் எல்லோரும் இன்றும் இந்த ‘ஒளவையார்’ திரைப்படத்தைத்தான் மேற்கொள் காட்டுவோம். கே.பி. சுந்தராம்பாள்தான் அன்று ஒளவையாராக பிறந்தார்களோ என்று நினைக்கத் தோன்றும் அளவிற்கு அந்தப் பாத்திரமாகவே அன்று படத்தில் தோன்றினார்கள். அந்த அளவிற்கு தத்ரூபமாக நடித்திருந்தார் கே.பி.எஸ். அப்படிப்பட்ட பழம் பெரும் நடிகை, இசையரசி கே.பி.எஸ். என் சிறிய வயது பெண்ணாக நடித்துள்ள குழந்தை யார்? அவர் சிறப்பாக நடித்துள்ளார் என்று கூறியதுடன் நில்லாமல், அந்தக் குழந்தையை ஒருநாள் வீட்டிற்கு அழைத்து வாருங்கள், நான் பார்க்க வேண்டும் என்று கூறியதாக, ஜெமினி தலைமை நிர்வாகி, என்னிடமும் என் பாட்டியிடமும் சொன்னபோது, நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.

பாராட்டு என்றால் யாருக்குதான் பிடிக்காது? அது மட்டும் அல்ல, இந்த மகிழ்ச்சிக்கு வேறு ஒரு காரணமும் இருந்தது. நாங்கள் ரங்கூனில் இருந்தபோது கே.பி.எஸ். அம்மா ரங்கூன் வந்துள்ளாராம். அந்த சமயத்தில் எங்களது வீட்டில்தான் அவர் தங்கினார்கள் என்று ஒரு செய்தியையும் என் பாட்டி சொன்னபோது, நான் மிகவும் உவகை உற்றேன். ஒருநாள் பாட்டியுடன் கே.பி.எஸ். அம்மா வீட்டிற்குச் சென்றோம். என் பாட்டி மகிழ்ச்சியுடன் கே.பி. சுந்தராம்பாளை, எங்கள் வீட்டிற்கு வந்து தங்கின விஷயத்தை சொல்ல, கே.பி.எஸ். அம்மா என் தலையில் கையை வைத்து ஆசீர்வதித்து பாராட்டினார். நான் நடித்த சில காட்சிகளை நினைவில் வைத்து, அதை எல்லாம் சொல்லி அவர் பாராட்டியது என்னையும், என் பாட்டியையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது. அது மட்டும் அல்ல, இந்த சிறிய பெண் (நான்) இவருடைய பேத்தி என்று தெரிந்தபோது, அவர் இன்னும் பெரு மகிழ்ச்சி கொண்டார். அவர்கள் பாராட்டு மழையில் நனைந்துவிட்டு வீடு வந்து சேர்ந்தோம்.

இதேபோல் நான் நடித்த மற்றொரு படமும் ஜெமினி தயாரித்த படம்தான். அது முதலில் தெலுங்கில் வந்தது. தெலுங்கில் வந்த அந்த வெற்றிப்படம்தான் ‘பால நாகம்மா’. இந்தப் படத்தை இந்தியில் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தார்கள். அதில் ஒரு நல்ல பாத்திரத்தில் நான் நடிக்க வேண்டும் என்று என்னையும் ஒப்பந்தம் செய்தார்கள். ‘பால நாகம்மா’ படத்தில் நடிகை மதுபாலா கதாநாயகியாக நடித்தார். அவரின் சிறிய வயது பெண்ணாக நான் இந்தியில் நடித்தேன். நான் ஜெமினி எடுத்த பல படங்களில் அன்றே தொடர்ந்து நடித்துள்ளேன். இந்த ‘பால நாகம்மா’ படத்தில் நடித்த மற்றொரு பிரபலமான நடிகை லலிதா பவர். இவர் எனது சித்தி வேடத்தில் நடித்தார்.

கதைப்படி அவர் வீட்டில் உள்ள சிறிய குழந்தையான என்னை கொடுமைப்படுத்த வேண்டும். அதாவது குட்டிக் குழந்தையான என்னை பாத்திரம் கழுவச் சொல்ல வேண்டும், துணி துவைக்கச் சொல்ல வேண்டும். இதை எல்லாம் கோபத்துடன் செய்யச் சொல்ல வேண்டும். இவைகளை எல்லாம் சொல்லிவிட்டு லலிதா பவர் நகரும்போது, இறந்த என் அம்மா, (அந்த வேடத்தில் நடித்த புஷ்பவல்லி) தேவதைபோல் வந்து சித்தி சொன்ன எல்லா வேலைகளையும் நொடியில் செய்துவிட்டு போய்விடுவதாக காட்சி அமைதிருந்தார்கள். இந்த மாதிரி சில காட்சிகளில் அவர் என்னைப் பார்த்து கத்த வேண்டும். காலால் எட்டி உதைக்க வேண்டும். இதை எல்லாம் செய்ய அவர் மறுத்தார்.

‘வாசன் சாப் நை கரேகா, நை கரேகா’ என்று இந்தியில் கெஞ்சிக்கொண்டே கிட்டத்தட்ட அழாத குறையாக சொன்னார்கள். ஒரு காட்சியில் என்னை அவர்கள் அடிக்க வேண்டும். உண்மை வாழ்க்கையில் நடிகை லலிதா பவர் தனக்கு குழந்தை கிடையாது என்று சொன்னார்கள். அதனால் என்னை கட்டி முத்தமிட்ட வண்ணம், ‘நான் இந்த அழகான குழந்தையை கண்டிப்பாக அடிக்கமாட்டேன்’, என்று அழுதுகொண்டே கூறினார்கள். இயக்குநரோ, ‘நீங்கள் கண்டிப்பாக செய்தே ஆக வேண்டும்’ என்று கூறினார்கள். சரி என்று அடிப்பதுபோல் செய்ய சொன்னால், நன்றாக அடியுங்கள் என்று இயக்குநர் சொல்ல, வேண்டாத வெறுப்பாக அடிப்பதுபோல் நடித்தார்கள். எங்காவது தெரியாமல் என்மீது சிறிதாக அடி விழுந்தாலும், அவர்களே ‘கட்.. கட்’ என்று சொல்லிவிட்டு, ஓடிவந்து என்னை இறுக அணைத்துக்கொண்டு, அடிபட்ட இடத்தை தடவி கொடுப்பார். பிறகு எப்படியோ அந்தக் காட்சியை படமாக்கி முடித்தார்கள். அந்த அளவிற்கு லலிதா பவரின் பாசம் என் மீது பெரிதாக இருந்தது.

இதே படத்தில் எனக்கு ஒரு பாட்டும் உண்டு. அந்தப் பாட்டை, நான் குட்டிக் குழந்தையாக இருந்தபோது பாட, பெரியவளான பின்னர் நடிகை மதுபாலா பாடுவதாக காட்சி அமைப்பு இருந்தது. நான் வாய் அசைக்க, பாடியது யார் தெரியுமா? ‘பாரத ரத்னா’ லதா மங்கேஷ்கர்தான். நான் பெரிய நடிகையான பிறகும் இந்த வாய்ப்பு, அதாவது லதாஜி பாடி நான் வாய் அசைக்கவில்லை.

நான் சில ஆண்டுகளுக்கு முன்பு இயல் இசை நாடக மன்ற செயலராக இருந்தபோது மும்பை போக வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டது. அப்படி போனால் அந்த சமயத்தில் லதாஜியை பார்த்துப் பேச வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதற்காக இங்கிருந்தே தொடர்புகொண்டு, நாள், நேரம் எல்லாம் முன்கூட்டியே சொல்லி, அவர்களைப் பார்த்துப் பேச அனுமதியும் வாங்கி இருந்தேன். உள்ளூர ஒரு சந்தோஷம் எனக்கு ஏற்பட்டது. அவர்களும் ஜெமினி எடுத்த ‘பால நாகம்மா’ இந்திப் படத்தை பார்த்திருப்பார்கள். அவர்கள் பாட்டு அவர்களுக்குத் தெரியும். ஆனால் அதை நான் குழந்தையாக இருந்தபோது வாய் அசைத்தது என்று கூறினால் நம்புவார்களா? அந்தக் குழந்தைதான் இன்று இந்த அளவிற்கு வளர்ந்து ஒரு பெண்மணியாக நம் முன்னே வந்து நிற்கிறது என்று சொன்னால், எப்படி இருக்கும் என்று பல்வேறு கற்பனைகளில் நான் மிதந்துகொண்டு மும்பை சென்று இறங்கினேன்.

எனக்கு இருந்த ஆவலில், விட்டால் நேராக அவரது வீட்டிற்கே சென்றிருப்பேன். ஆனால் அவர் வீட்டில் இல்லை என்றும், புணே வரை சென்றுள்ளார் என்று தெரிந்தது. குறித்த நேரத்தில் வந்துவிடுவார் என்று என்னையே சமாதானம் செய்துகொண்டு, நான் சென்று பார்க்க வேண்டிய மற்ற வேலைகளில் என் கவனத்தை செலுத்தினேன். சென்ற இடத்தில், லதாஜிக்கு திடீர் என்று ஜுரம் வந்ததால், அவரால் குறித்த தேதியில் மும்பைக்கு வர முடிய வில்லை என்று எனக்கு தெரிவிக்கப்பட்டது. பிரபல பின்னணிப் பாடகி ஜானகி அம்மா குழந்தைபோல் பாடுவார் என்று எல்லோருக்கும் தெரியும். அதேபோல் நான் குழந்தையாக இருந்தபோது லதா மங்கேஷ்கர்ஜி எனக்கு பாடியது எவ்வளவு பெரிய விஷயம். அவரால் நான் மும்பையில் இருக்கும் வரை புணேவில் இருந்து வர முடியவில்லை என்பது எனக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியது. இன்னும் நான் என் ஆசையை விடவில்லை. என்றாவது ஒருநாள் கண்டிப்பாக அவரைப் பார்ப்பேன் என்று நம்புகிறேன்.

ஆனால், இன்னொரு பாரத ரத்னாவிற்கு பிடித்த படம், நான் குழந்தையாக நடித்த ஒரு படம்தான். அது என்ன படம், யார் அந்த பாரத ரத்னா?

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com