ரோஜா மலரே - 6

பணம் கட்டுவதற்கு முன் என் பாட்டி தயங்கி தயங்கி நான் சினிமாவில் நடிக்கும் விஷயத்தைச் சொல்ல, அந்தத் தலைமை ஆசிரியை சொன்னது எங்கள் இருவருக்குமே வருத்தத்தைக் கொடுத்தது.
ரோஜா மலரே - 6

நான் தொடரமுடியாமல்போனது பள்ளிக்குச் சென்று படிக்கும் அனுபவங்களைத்தான். என் பாட்டி என்னைப் பல பள்ளிகளுக்கு அழைத்துச்சென்று படிக்கவைக்க முயற்சி செய்தார்கள். ஆனால், நான் சென்ற பள்ளிகளில் எல்லாம் என்னை லீவு போடாமல், பள்ளிக்கு வந்தால் மட்டுமே சேர்த்துக்கொள்வோம் என்று கூறினார்கள்.

எங்கள் வீட்டின் அருகே உள்ள பள்ளிக்குச் சென்று அதன் தலைமை ஆசிரியையிடம் எப்படியாவது சேர்த்துக்கொள்ள சொல்லி என் பாட்டி கேட்டார்கள். அவர்களும் சேர்த்துக்கொள்ள சம்மதித்தார்கள். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், நாங்கள் இருவரும் சினிமாவில் நடிக்கும் விஷயத்தைச் சொல்லவில்லை. பணம் கட்டுவதற்கு முன் என் பாட்டி தயங்கி தயங்கி நான் சினிமாவில் நடிக்கும் விஷயத்தைச் சொல்ல, அந்தத் தலைமை ஆசிரியை சொன்னது எங்கள் இருவருக்குமே வருத்தத்தைக் கொடுத்தது.

‘‘குழந்தை சினிமாவில் நடிக்கச் செல்ல வேண்டும் என்றால் ஏன் பள்ளிக்கு அழைத்து வருகிறீர்கள். சினிமாவில் மட்டுமே நடிக்கட்டும்’’. நாங்கள் இருவரும் எவ்வளவோ சொல்லிப்பார்த்தும் அந்த தலைமை ஆசிரியை சமாதானம் ஆகவில்லை. வேறு வழி இல்லாமல்தான் நான் படிப்பை ஆரம்பத்திலேயே நிறுத்தவேண்டி வந்தது. பாட்டி கொஞ்சம்கூட கவலைப்படவில்லை. அப்படியே உள்ளூர கவலை இருந்தாலும், அதை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை என்றே சொல்ல வேண்டும். ஒரு ஆசிரியரை வரவழைத்து எனக்கு பாடம் சொல்லிக்கொடுக்க ஏற்பாடு செய்தார்கள். அப்படிதான் நான் என்னுடைய பள்ளி அனுபவ நாட்களை மிஸ் பண்ணவேண்டி வந்தது.

நடனம்கூட இதே காரணங்களால்தான் தொடர்ந்து ஆடமுடியாமல் போனது என்று சொல்ல வேண்டும். நான் முன்பே சொன்னது போன்று நான் சினிமாவில் நுழைந்த காலகட்டத்தில் என்னை விட்டால் வேறு குழந்தை நட்சத்திரங்களே இல்லை என்ற நிலை இருந்தது. சிறியதும் பெரியதுமான பல்வேறு கதாபாத்திரங்களை நான்தான் நடிக்க வேண்டும் என்று பல்வேறு இயக்குநர்கள் கேட்கும் நிலையில் இருந்ததால் நடிப்பு முன்னிலை பெற்றது. நடனம் எனக்கு இயல்பாகவே வந்தது என்றாலும், அது பயிற்சி பெற முடியாத நிலையில் தொடர்ந்து நடனம் ஆட நேரம் கிடைக்காத நிலையும் ஏற்பட்டது.

ஒரு பக்கம் நடிப்பில் நான் பிஸியாக இருந்தாலும், நான் முதன் முதலில் நாட்டியம் ஆடிய, கோகலே ஹாலை என்னால் இன்றும், என்றும் மறக்க முடியாது. சமீபத்தில்கூட யாரோ கேட்டார்கள். ‘‘உங்களுக்கு சென்னையில் எதையெல்லாம் அப்படியே வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்றால், முதலில் எதைச் சொல்வீர்கள் என்று?’’ நான் உடனேயே சொன்னது என்ன தெரியுமா? இன்றைய பாரிசான, அன்றைய டவுன். அதிலும் குறிப்பாக நான் என்றும் நினைக்கும் கோகலே ஹாலை அப்படியே வைத்திருக்க வேண்டுகிறேன் என்று சொன்னேன். காரணம், நான் முதன்முதலில் இங்குதான் நடனம் ஆடினேன்.

இந்த ஹால் சிறியதுதான் என்றாலும் மிகவும் வசீகரமாக இருக்கும். மேடைகூடச் சிறியதுதான். இன்னும் சொல்லப்போனால் நடுநடுவே தூண்கள் இருக்கும். நமக்கு முன்னால் உட்கார்ந்து இருபவர்கள் யாராவது கொஞ்சம் அசைந்தாலும், ஏதோ நாம் வெளியில் இருந்து உள்ளே நடப்பதை பார்க்கும் நிலைபோல, எட்டி எட்டிப் பார்க்கவேண்டி வரும். இப்படி சில சங்கடங்கள் இருந்தாலும் எனக்கு இந்த அரங்கமும், ஹாலும் மிகவும் பிடிக்கும். நாம் என்னதான் பல வகையில் முன்னேறி இருந்தாலும், ‘‘ஓல்ட் ஈஸ் கோல்ட்’’ (old is gold) என்ற பழமொழியை என்றும் நாம் மறக்கக் கூடாது இல்லையா? அதனாலே நான் பல்வேறு பழமையான விஷயங்களை மறக்கவும் கூடாது. போற்றவும் வேண்டும் என்று சொல்வேன். அதில் ஒன்றுதான் இந்த ஹால்.

என் அக்கா ‘மாடி’ லட்சுமி நடனம் ஆட, ஒரு சபா ஒப்பந்தம் செய்திருந்தது. அவர் எல்லோரும் பாராட்டும்விதமாக நாட்டியம் ஆடினார். வர்ணம் எல்லாம் ஆடி முடித்த பிறகு மக்களுக்காக சினிமாவில் உள்ள சில நடனங்களை ஆட ஆரம்பித்தார். அன்றைய நிலையில் சினிமாவில்கூட சாஸ்த்ரோத்தமாக பரதநாட்டியம் ஆடுவார்கள். உதாரணமாக, ‘‘வாழ்க்கை’’ படத்தில் வைஜெயந்திமாலா ஆடும் ‘‘நந்தகோபாலனோடு’’ என்ற பாட்டைச் சொல்லலாம். அதேபோல் குமாரி கமலா ‘‘நாம் இருவர்’’ படத்தில் ஆடிய ‘‘வெற்றி எட்டு திக்கும்’’ என்ற பாட்டையும் சொல்லலாம். இதில் ‘‘நந்தகோபாலனோடு’’ என்ற பாட்டில் ஒரு வடஇந்திய பெண்மணிபோல் உடையில் மாற்றம் இருக்கும். கண்கவர் வண்ணத்தில் இந்த நடனத்தைப் பார்க்க மிகவும் ரம்மியமாக இருக்கும்.

பரதநாட்டிய உடை போட்டுக்கொண்டு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடனம் ஆடுவதைவிட, இப்படிச் செய்தால் அது மக்களை சந்தோஷப்படுத்தும் என்பதால் இதையும் அன்று என் அக்கா மேடையில் ஆடுவார்கள். இப்படிப்பட்ட நடனங்களை ஆடுவது பார்ப்பதற்கு ஜனரஞ்சகமாக இருக்கும் இல்லையா? இந்த நடன நிகழ்ச்சி அன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டு இருந்தது. நான் இந்த நடன நிகழ்ச்சியை என் அக்கா பயிற்சியில் ஈடுபடும்போதே பார்த்தவள். எனக்கு இந்த நடனமும், அதன் ஒவ்வொரு அசைவும், முறையையும் இப்படித்தான் ஆடுவார்கள் என்று மிகவும் சரியாகத் தெரியும். என்னாலும் இந்த நடனத்தைச் சரியாக ஆட முடியும் என்று பலமுறை பெரியவர்களிடம் சொல்லிப்பார்த்தும், எந்த ஒரு பயனும் இல்லை.

என்னை ஆட விடவில்லை என்ற கோபம் ஒருபக்கம், நன்றாக ஆட தெரிந்திருந்தும் நம்மை ஏன் ஆட அனுமதிக்கவில்லை என்றும், மேடையில் நம்மை ஆட ஏன் இவர்கள் அனுமதிக்கவில்லை என்ற ஆதங்கம் மறுபக்கம் என்னைக் கோபப்படச் செய்தது. இதை நினைத்தே என் மனம் பலவித எண்ணங்களால் அலைபாய்ந்தது. கோகலே ஹாலில் நாம் ஆடியே தீர வேண்டும் என்று முடிவு செய்தேன். குழந்தையாக நான் இருந்ததால் இதை எப்படி செயல்படுத்துவது என்று மட்டும் எனக்கு தெரியவில்லை. சிறுமியாக இருந்த நான், என் சின்ன மூளையைப் போட்டு கசக்கினேன் என்று கூறினால் அது தவறு. அந்தச் சிறிய வயதில், எனக்கு என்ன பெரிதாகத் தோன்றப்போகிறது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். நான் ஆட வேண்டும். நான் நடனம் ஆடினேனா, இல்லையா? என்பதை அடுத்த வாரம் சொல்கிறேன்.

(தொடரும்)

சந்திப்பு: சலன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com