Enable Javscript for better performance
ரோஜா மலரே - 7- Dinamani

சுடச்சுட

  
  SACHU

   

  கோகலே அரங்கத்தில் என் அக்கா உடை மாற்றுவதற்காக பின்புறம் உள்ள அறைக்கு சென்றிருந்தார்கள். நான் ஆட வேண்டும் என்ற ஆசையில் இருந்தேன். ஆனால், என்னை யாரும் ஆடச் சொல்லவில்லை. அவர் என்ன ஆடப்போகிறார் என்று எனக்கு நன்றாகவே தெரியும். காரணம், என் அக்கா ரிகர்சலின்போது ஆடியதை நான் பலமுறைப் பார்த்துள்ளேன். அந்த நடன அசைவு எனக்கு மனப்பாடம் ஆகிவிட்டது.

  ஆனாலும், என்னை யாரும் ஆடவிடப்போவதில்லை என்பதால் நான் ஒன்றே ஒன்றைச் செய்தேன். எந்த தைரியத்தில் செய்தேன் என்று இன்றுகூட எனக்கு தெரியாது. அன்றும்கூட தெரியாது. காரணம் வயது அப்படி? அந்த சின்ன வயதில் (6 வயது) ஆசை இருக்கு. நாம் ஆடிடுவோம் என்ற எண்ணமும் இருக்கு. அதனால் திரையை விலக்கும் ஆளை பார்த்து, “திரையை விலக்குங்கள். பாட்டை போடுங்க” என்று கூற, அவர்களும், அக்கா வந்துவிட்டார்கள் போலிருக்கு. அவரது தங்கை (நான்) வந்து சொல்கிறேன் என்று நினைத்து திரையை மேலே உயர்த்தினார்கள்.

  பாட்டு ஒலிக்க, நான் நடுநாயகமாக மேடையில் ஆடத் தொடங்கினேன். நான் அன்று என்ன உடை உடுத்திக்கொண்டிருந்தேன் என்று பார்க்கவில்லை. அந்தப் பாட்டுக்கு சரியான உடைதானா என்று பார்க்க எனக்குத் தோன்றவில்லை. என் எண்ணமெல்லாம், நான் மேடையில் நடனம் ஆட வேண்டும் என்பதுதான்.

  முன்பே சொன்னதுபோல் மேடையில் பரதநாட்டியம் நிகழ்ச்சியில், சாஸ்த்ரோத்தமான பரதநாட்டியம் ஆடிய பிறகு, மக்களின் ரசனைக்கு ஏற்பட சினிமா பாடல்களுக்கும் ஆடுவோம். அன்றைய சினிமா பாடல் எல்லாமே பரதத்துடன் ஒட்டியே சினிமாவில் அமைந்துவிடுவதால், எங்கள் நிகழ்ச்சியில் அதனையும் இணைத்துக்கொள்வோம். ஒரு மணி நேரத்திற்கு மேல் ஒரே உடையுடன் ஆடுவதால் மக்களுக்கு அலுப்பு தட்டிவிடும் என்று நினைத்து, இதுபோன்ற சினிமா பாடல்களையும் இணைத்துக்கொள்வோம்.

  அந்த மாதிரி கண் கவர் வண்ண உடையில், நடனம் ஆடுவதால் மக்கள் சந்தோஷமாக ரசித்தார்கள். இந்த மாதிரி நேரத்தில்தான் என்னுடைய குறும்பு அரங்கேறியது. அரங்கேற்றம் என்ற வார்த்தையை ஏன் சொல்கிறேன் என்றால், இதுதான் என்னுடைய முதல் மேடை. என் அக்கா பரதநாட்டிய உடையை களைந்துவிட்டு, சினிமா பாடலுக்கான உடையை, அதுவும் வடஇந்திய பெண்ணைப்போல் உடை உடுத்திக்கொண்டு வர வேண்டும்.

  அதற்கு சில நிமிடங்கள் நேரம் பிடிக்கும் என்பதால், அந்த சிறிய இடைவேளையில் நான் செய்த சிறிய செயல் இது. பாடல் ஒலிக்க, திரை விலக, இந்த நிலையில்தான் நான் மேடையில் புகுந்து என்னுடைய சின்ன ப்ராக்கை இருபுறமும் கைகளினால் பிடித்துகொண்டு ஆட ஆரம்பித்தேன். அதுவும் எந்த பாட்டுக்கு என்று கேட்டால் கண்டிப்பாக இன்று உள்ளவர்களுக்கு சிரிப்புத்தான் வரும். அந்த பாடல் ‘நந்தகோபாலானோடு நான்’ என்ற பாடலுக்கு ஆடத் தொடங்கினேன்.

  மக்கள் என்னை மேடையில் பார்த்தவுடன் கைகளை தட்டி அமர்க்களமாக ஆரவாரம் செய்தார்கள். அதற்குக் காரணம், என்னுடைய நடனம் மட்டும் அல்ல, என்னுடைய வண்ண உடையும்கூடத்தான். இந்த இடைச் செருகலைப் பார்த்த எங்களது மாஸ்டருக்கு ஒரு நிமிடம் எதுவுமே புரியவில்லை. அரங்கத்தின் ஓரம் வந்து, “கர்ட்டனை போடுங்க, இசையை நிறுத்துங்கள்” என்று கூறினார். ஆனால், மக்களோ ‘‘குழந்தை நன்றாக ஆடுகிறாள். ஆடட்டுமே’’ என்று சொல்ல, அக்கா வரும் வரை நான் சிறிது நேரம் ஆடிவிட்டு உள்ளே வந்தேன். என் பாட்டி என்னை நாலு சாத்து சாத்தினார்.

  “நான் நன்றாகத்தானே ஆடினேன். மக்களும் கரகோஷம் செய்தார்கள், இல்லையா, பின் ஏன் என்னை அடிக்கிறீர்கள்” என்று நான் கேட்க, “இந்த வயதில் எல்லோரும் உன்னை பாராட்டுவார்கள். ஆனால் பரதநாட்டியம் என்பது மிகவும் பெரியது. அதை சரியாக ஆட வேண்டும்” என்று சொல்லி எனக்கு முதல் ஆசிரியையாக இருந்து கற்றுக்கொடுத்தார் என் அக்கா.

  அவர்களது நிகழ்ச்சிகளில் பின்னர் நானும் சிறிய பாட்டுக்கான நடனத்தை ஆடத் தொடங்கினேன். ஆனால் என் அக்கா சொல்லிக்கொடுத்தாலும், அவர்களை நான் பலமுறை ஏமாற்றிவிடுவேன். ஏதாவது காரணம் கேட்டால், “நீ சரியாக ஆடு. நான் இப்படி ஆடினாலே கைத்தட்டல் வாங்கிவிடுவேன். இது போதும்” என்று கூறுவேன்.

  அதற்கு என் அக்கா சொன்னது இன்றும் எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. “இப்பவெல்லாம் நீ கை தட்டல் வாங்கலாம். பெரியவள் ஆனால் இப்படி செய்ய முடியாது. குற்றம் குறை இருந்தால் அது மிகப்பெரிய தவறாகப் போய்விடும். அதனால் முறையாக கற்றுக்கொள்ளவேண்டியது அவசியம்” என்று கூறி பரதநாட்டியத்தின் ஆரம்ப நிலைகளை எனக்கு சொல்லிக்கொடுத்தார்கள்.

  ஆனாலும், நான் ஆசைப்பட்டேன் என்பதால், வழுவூர் ராமையா பிள்ளையின் முதன்மை மாணாக்கர் எம்.எஸ். ராமசாமியிடம் நான் நடனம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். ராமசாமி பின்னர் பல படங்களுக்கும் நடன ஆசிரியாகப் பணிபுரிந்துள்ளார்.

  தண்டாயுதபாணி பிள்ளை, வழுவூர் ராமையா பிள்ளை உண்மையிலேயே பெரிய நடன ஆசிரியர்கள். இன்றும் நாம் எல்லோரும் பார்த்து ரசிக்கும் அன்றைய பல பாடல்களுக்கு இவர்களின் நடன அசைவு இருந்ததால்தான் நம்மால் அந்த பாடல் காட்சிகளை பார்த்து மகிழமுடிகிறது என்று சொன்னால் அது உண்மை. இன்று நாம் எல்லோரும் பேசும் பிரபுதேவாவும் அந்த வழி வந்தவர்தான். அவருக்கும் நாட்டியம் முழுமையாக ஆடத் தெரியும். முறையாக கற்று அரங்கேற்றமும் செய்துள்ளார்கள். இன்றும் மக்கள் பலரும் பாராட்டும் ‘ரோஜா மலரே ராஜகுமாரி’ என்ற என்றும் அழியாத பாடலுக்கு நடனம் அமைத்து தந்தது தண்டாயுதபாணி பிள்ளைதான் என்று பெருமையாகச் சொல்வேன்.

  இதற்குப் பிறகு நான் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கினேன். அன்றைக்கு இருக்கும் பல்வேறு கதாநாயகி நடிகைகளின் ஜூனியர் என்றால் என்னைத்தான் அழைப்பார்கள். சிறுவயது கதாபாத்திரம் என்றால் என்னைத்தான் அழைப்பார்கள். அப்படி நான் நடித்த படங்களில் சில ஒளவையார், ஷியாமளா, மாயாபஜார், தேவதாஸ் போன்ற பல படங்களை சொல்லலாம்.

  இதன் விளைவாக பள்ளி வாழ்க்கை என்னை விட்டு மெல்ல மெல்ல விலகியது. என் பாட்டியும் எவ்வளோ முயற்சித்தும் என்னை ஒரு பள்ளியில் சேர்க்க முடியவில்லை. என்னைப் பொருத்தவரை எனக்கு பள்ளி வாழ்க்கையின் அருமை அன்று எனக்கு தெரியவில்லை. காரணம், நான் கேட்டது எல்லாம் எனக்கு படப்பிடிப்பில் கிடைத்தது. ஐஸ்கிரீம் வேண்டும் என்றால், ஐந்து நிமிடங்களில் வந்துவிடும். படப்பிடிப்பில் நான் வைத்துதான் சட்டம். உயர்ந்த பிஸ்கெட் அல்லது சாக்லேட், எது கேட்டாலும் கிடைக்கும்.

  நான் நடிக்கமாட்டேன் என்று சொன்னால் என்னை தாஜா செய்து நடிக்கவைப்பார்கள், அல்லது நான் விரும்பும் திண்பண்டங்கள் கொடுத்து என்னை நடிக்கவைப்பார்கள். சூட்டிங் சமயத்தில் எது கேட்டாலும் கிடைத்தது. ஆனால், வீட்டிற்கு வந்தால் என் பாட்டியிடம் அடியும் கிடைத்தது. ஏனென்றால் என் பாட்டி யாருக்கும் வீண் செலவு வைக்கக் கூடாது என்றும், நேரத்தை சரியாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற கொள்கை உடையவர்கள். “உனக்கு என்ன வேண்டுமோ, அதை என்னிடம் கேளு. நான் கண்டிப்பாக வாங்கிக்கொடுக்கிறேன். படப்பிடிப்பில் யாருக்கும் சங்கடம் கொடுக்க கூடாது’’ என்று சொல்வார்கள். அதனால் பள்ளிக்கு சென்று படிப்பதோ, பள்ளி வாழ்க்கையோ எனக்கு தெரியாமல் போய்விட்டது.

  ஆனால், சூட்டிங் சமயத்தில் நான் சிறுமியாக இருந்தபோது செய்த குறும்புகள் ஏராளம். ‘தேவதாஸ்’ படத்தில் நடிக்கும்போது எனக்கு ஒரு நாள் படப்பிடிப்பின் இடைவேளையின்போது என் முன் பல் விழுந்துவிட்டது. ஒரு காட்சியில் அழகான பல்வரிசை இருக்கும், அடுத்த காட்சியில் அந்தப் பல்லை காணோம் என்றால் எப்படி இருக்கும்? அதனால் அன்று சூட்டிங் நிறுத்திவைக்கப்பட்டது. ஒரு பல் மருத்துவரிடம் என்னை அழைத்துப்போய் என் முன் பல்லை கட்டிவிட்டார்கள். மருத்துவரும் என்னை பார்த்து, ஏதாவது சாப்பிட வேண்டும் என்றால் முன்பல்லை எடுத்துவிட்டு சாப்பிடுங்கள் என்று கூற, நானும் பலமாக தலை ஆட்டினேன். அடுத்த நாள் படப்பிடிப்பிற்கு சென்றேன்.

  யாரோ என்னிடம் முறுக்கு கொடுக்க, ஆசையுடன், பல்கட்டின விஷயத்தை மறந்து, முறுக்கை முன் பல்லால் கடிக்க, புதிதாக கட்டப்பட்ட அந்தப் பல்லும் உடைந்தது. திரும்பவும் திட்டு, அடி, இப்படி குறும்பு செய்வது, எனக்கு கரும்பு சாப்பிடுவதுபோல் என்று சொல்லலாம். இதெல்லாம் நான் தெரிந்தே செய்வது கிடையது. அதற்கு காரணம் என்னுடைய வயது. தெரியாமல் செய்வது தெரிந்தே செய்வதுபோல் இருக்கும்.

  ‘ஒளவையார்’ படத்தில் நான் செய்த குறும்பை கேட்டால் இன்று எல்லோரும் சிரிப்பார்கள். ஆனால் என் வயதுடைய பிள்ளைகள் எல்லோரும் அன்று பயந்துபோனார்கள். அன்றைய படப்பிடிப்பில் நான்தான் மெயின் என்றாலும், என்னுடன் பல வேறு பிள்ளைகள் நடித்துக்கொண்டிருந்தார்கள். நான் செய்த தவறால் அவர்கள் எல்லோரும் தலைதெறிக்க ஓடினார்கள். அப்படி நான் என்ன தவறு செய்தேன் என்று உங்களுக்கு அடுத்தவாரம் சொல்கிறேன்.

  (தொடரும்)

  சந்திப்பு: சலன்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai