32. சொர்க்கமே இலக்கு, சடங்குகளே கடமை

ஒருவகையில், நாத்திகர்களான லோகாயதர்களுக்கும் ஆத்திகர்களான மீமாம்சகர்களுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.


ஒருவகையில், நாத்திகர்களான லோகாயதர்களுக்கும் ஆத்திகர்களான மீமாம்சகர்களுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. இரு சாராரின் பொது நோக்கமும் இன்ப நாட்டமே. ஆன்மா இல்லை என்று கூறும் முன்னவர்கள் இகத்தில் மட்டுமே நம்பிக்கை வைத்து அதிலே இன்பத்தை அனுபவிப்பதுதான் வாழ்வின் இலக்கு என்று கருதினால், ஆன்மா உண்டு என்று ஏற்கும் பின்னவர்கள் இகத்தில் மட்டுமில்லாது பரத்திலும் இன்பம் அனுபவிப்பதுதான் பிறவியின் இலக்கு என்று கருதுகிறார்கள். பின்னவர்களான இந்த மீமாம்சர்களின் பரமானது முக்தி அல்ல, சொர்க்க போகமே. இருப்பினும், பிற்காலத்தில் வேதாந்தத்தின் செல்வாக்கு காரணமாக முக்தியை ஏற்றுக்கொண்டாலும், வெறும் ஞானத்தால் முக்தி கிடைத்துவிடாது, கர்மங்களைக் கைவிடாமல் நிறைவேற்றினால் மட்டுமே அது கிடைக்கும் என்று புதிய வியாக்கியானம் (விளக்கம்) கொடுத்தார்கள்.

உண்மையான அறிவு அல்லது ஞானத்துக்கு இரண்டு வகையிலான பிரமாணங்களை (சான்றாதாரங்களை) மீமாம்சை முன்வைக்கிறது. ஒன்று, பிரத்யக்ஷம் (நேரடியாக அறிதல்), மற்றொன்று பரோக்ஷம் (பிற வழிகளில் அறிதல்). பிரத்யக்ஷம் என்பது, கண், காது உள்ளிட்ட புலன்களைக் கொண்டு நாமே நேரடியாக அறிந்துகொள்வது. இதற்கு நிர்விகல்ப-பிரத்யக்ஷ என்று பெயர்.

பிறவழி அறிதலாகிய பரோக்ஷத்துக்கு சவிகல்ப-பிரத்யக்ஷ என்று பெயர். இதனை 5 விதங்களாக மீமாம்சை வகைப்படுத்துகிறது. அவை, அனுமானம் (ஊகம்), உபமானம் (உவமை அல்லது ஒப்பீடு), சப்தம் (உரை), அர்த்தாபத்தி (பொருத்திக்கொள்ளல்), அனுபலப்தி (உணரப்படாமை).

மலை மீதிருந்து புகை வருவதைப் பார்த்து அங்கே தீப்பற்றி இருக்கலாம் என்று ஊகித்து அறிவது அனுமானம். புதிதாக அறிய நேரிடும் ஒரு பொருளை, விஷயத்தை ஏற்கெனவே நாம் அறிந்துகொண்டுள்ள ஒரு பொருளோடு, விஷயத்தோடு ஒப்பிட்டுப் பார்த்து அறிந்துகொள்வது உபமானம். ஏற்றுக்கொள்ளக்கூடிய வேதம் மற்றும் நம்பத்தகுந்தவர்களின் உரை ஆகியவற்றின் மூலம் ஒன்றை அறிந்துகொள்வது சப்தம். இதற்கு, ஆப்தவாக்கியம் என மற்றொரு பெயரும் உண்டு. உண்ணாவிரதப் பந்தலில் இருக்கும் ஒருவர் களைப்படையாமல் இருப்பதைப் பார்த்து, அவர் ரகசியமாக உணவருந்தி இருக்கலாம் என்று பொருத்திப் பார்த்து அறிதல் அர்த்தாபத்தி. ஒரு பொருளை குறிப்பிட்ட இடத்தில் காண இயலாததன் மூலம் அது அங்கு இல்லை என்று அறிந்துகொள்வதற்கு அனுபலப்தி என்று பெயர்.

உடலின் செயல்பாடுதான் உயிர் என்று கூறும் நாத்திகர்களைப்போலன்றி, உடல் வேறு, புலனறிவு வேறு, ஆன்மா வேறு என்று பிற ஆத்திகர்களைப் போலவே மீமாம்சகர்களும் கூறுகின்றனர். ஆயினும் ஆன்மா, ஆண்டவன் குறித்த விரிவான ஆய்வையோ முக்தி நாட்டத்தையோ மீமாம்சை முன்னிறுத்தவில்லை. வேதமே அதன் தெய்வம். அதை விஞ்சி தனியொரு தெய்வமில்லை. வேதச் சடங்குகளில் குறிப்பிடப்படுகின்ற இந்திரன், அக்னி உள்ளிட்ட தேவர்கள் எல்லாம் ஒருவித கற்பனைப் பாத்திரங்கள் போன்றதே. எனினும் அத்தேவர்கள், இயற்கை ஆற்றலின் உருவகங்கள். வேதத்தில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளை, நெறிமுறைகளை அதாவது நித்ய, நைமித்திக கர்மங்களை (தினசரி மற்றும் குறிப்பிட்ட காலத்திலான சடங்குகளை) தவறாமல் நிறைவேற்றுவது மட்டுமே மனிதனின் கடமை. தர்மத்தைக் கடைப்பிடி (தர்மம் சர), தர்மம் தவறக்கூடாது என்பதெல்லாம் மீமாம்சையைப் பொருத்தவரை இந்தக் கர்மங்களைச் செய்வதுதான்.

அதேநேரத்தில், அத்வைத வேதாந்திகளைப்போல நாம் வாழுகின்ற இந்த உலகம் மாயையானது என்று மீமாம்சை கூறவில்லை. நாத்திகவாதிகளைப் போலவே இந்த உலகம் உண்மையானது என்று கூறுகிறது. அதேநேரத்தில், இந்த உலகில் நாம் கண்ணால் காண இயலாத, மரணத்துக்குப் பின் அனுபவிக்க உள்ள சொர்க்கம் உண்டு என்று கூறுகிறது. பொதுவாக, நாத்திகவாதிகளின் கடும் கண்டனத்துக்கு உள்ளாகுபவை இந்த சொர்க்க-நரக கருத்துகளும், சொர்க்கத்தை அனுபவிப்பதற்காகச் செய்கின்ற சடங்கு சம்பிரதாயங்களுமே. இதில் ஒரு வினோதம் என்னவென்றால், வேதாந்திகள் உள்ளிட்ட ஆத்திகவாதிகளும் மீமாம்சை வலியுறுத்தும் சொர்க்க வாழ்வு, சடங்கு சம்பிரதாயங்களைப் புறந்தள்ளுகிறார்கள். அதற்குப் பதிலாக ஆன்ம அறிவையும், முக்திக்கான முயற்சியையும் வலியுறுத்துகிறார்கள்.

உண்மையான இந்த உலகம், புலன்கள் மற்றும் உயிர் வாழக்கூடிய உடல்களால் ஆனது. இந்த உலகில், குறிப்பிட்ட உடலில், தான் முன்பு செய்த கர்ம பலன்களை அனுபவிப்பதற்காக ஆன்மா குறிப்பிட்ட காலம் வரை வசிக்கிறது. ஆன்மாக்கள் எண்ணற்றவை. ஆன்மா நிரந்தரமானது என்றபோதிலும், இக உலகில் அது செய்த பாவ-புண்ணியங்களுக்கு ஏற்ப மாற்றம் பெறுகிறது. இந்த ஆன்மாவுக்கு சுய பிரக்ஞை கிடையாது. மனத்தின் துணைகொண்டு, புலன்களின் (உணர்வுக் கருவிகளின்) மூலம் குறிப்பிட்ட பொருட்களைத் தொடர்புகொள்ளும்போது அதுதொடர்பான அறிவை ஆன்மா பெறுகிறது. ஆழ்ந்த உறக்கத்தின்போது ஆன்மாவுக்கு (உயிருக்கு) எந்த பிரக்ஞையும் இல்லாதிருப்பதைக் கொண்டு இதனை உறுதி செய்துகொள்ளலாம்.

வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள கர்மங்களை (வேதச் சடங்குகளை) செய்வதே உடலில் வதிகின்ற ஆன்மாவுக்கான கடமை. இதன்மூலம் உருவாகின்ற அபூர்வம் என்ற ஆற்றல், மனிதர் இறந்ததும் அவரது ஆன்மாவை சொர்க்க லோகத்தில் இடம்பெறச் செய்கிறது. உரிய கர்மங்களைக் கைவிடுவதாலோ அல்லது செய்யக்கூடாத கர்மங்களைச் செய்வதாலோ பாவம் ஏற்பட்டு, நரகத்தை அனுபவிக்க நேரிடுகிறது. வேதச் சடங்குகளே உரிய பலன்களைக் கொடுக்க வல்லவை என்பதால், எல்லாம் வல்ல இறைவன் என்று எதுவுமிருக்க அவசியமில்லை.

(இந்த விஷயத்தில், புண்ணிய - பாவங்களுக்கு ஏற்ப மரணத்துக்குப் பின் சொர்க்க அல்லது நரக வாழ்வு என்ற மீமாம்சையின் கருத்து, கிறிஸ்தவமும் இஸ்லாமும் சொல்லும் மறு வாழ்வை ஒத்து உள்ளது. ஆயினும் அதில் ஆண்டவன்தான் ஓர் உயிரின் சொர்க்க, நரக வாழ்வை தீர்மானிக்கிறார். ஆனால், மீமாம்சையைப் பொருத்தவரை அவரவர் வினைகளே அவற்றுக்குரிய விளைவுகளாகிய அபூர்வம் என்ற ஆற்றலின் மூலம் உரிய பலன்களைத் தந்து விடுகின்றன. அதேநேரத்தில் மீமாம்சை, ஆண்டவனை மறுத்து வேதச் சடங்குகளை தர்மம் (அறம்) என்றுகூறி வலியுறுத்துவது, ஆண்டவனை மறுத்து அறத்தை வலியுறுத்தும் பௌத்தத்தையும், சமணத்தையும் ஒத்துள்ளது. ஆனால், அந்த இரு மதங்களும் வேள்விச் சடங்குகளைக் கடுமையாக எதிர்த்து, அன்பு, ஒழுக்கம், தவநெறி உள்ளிட்ட வாழ்வியல் பண்புகளையே அறம் என்று உரைக்கின்றன. சாங்கியம், யோகம், வேதாந்தம் போன்ற தரிசனங்களும் இதுபோன்ற வாழ்வியல் பண்புகளையே அறம் என முன்னிறுத்துகின்றன).

ஆரம்பத்தில் ஆண்டவனை மறுத்த மீமாம்சை, பிற்காலத்தில் அபூர்வம் குறித்த கேள்வி எழுந்தபோது அதனைச் செயல்பட வைப்பது ஆண்டவன்தான் என்று சமரசம் செய்துகொண்டது. ஆயினும் ஆண்டவன் குறித்து மேற்கொண்டு விளக்கம் எதுவும் தரவில்லை. இதேபோல், சொர்க்கத்தில் அளவில்லாத இன்பத்தைத் துய்ப்பதே ஜீவனின் லட்சியம் என்று முதலில் கூறிய மீமாம்சை, பின்னர் இதர தத்துவங்களின் செல்வாக்கு காரணமாக மோட்சமே (முக்தியே) உயர்ந்த இலக்கு என்று ஏற்க வேண்டி வந்தது. இதற்கேற்ப சில விளக்கங்களைத் தந்தது. தமது விருப்பங்களை நிறைவேற்றுவதற்காகச் செய்யும் காம்ய கர்மங்களைச் செய்யாமல் விடுப்பதன் மூலம், மறுபிறவிக்கான வாய்ப்புகளைத் தவிர்க்கலாம். ஆனால், செய்ய வேண்டிய நித்ய, நைமித்திக கர்மங்களை விடாமல் செய்தால்தான், முக்திக்கான சித்த சுத்தி ஏற்படும். இந்தக் கர்மங்களைக் கைவிட்டால், பிரத்யவய தோஷம் தொற்றிக்கொண்டு முக்திக்கான வழி அடைபட்டுவிடும். தெரியாமல் செய்த பாவங்களை பிராயச்சித்த கர்மங்களைச் செய்து நிவர்த்தி செய்துகொள்ளலாம். அதேநேரத்தில் இந்தப் பிறவி எடுக்க நேர்ந்ததற்கான பிராராப்த கர்மம், இந்த உலகில் அதற்குரிய பலன்களை அனுபவிப்பதன் மூலமே தீரும். இவ்வாறாக, காம்ய கர்மங்களைத் தவிர்த்தும், நித்ய-நைமித்திக-பிராயச்சித்த கர்மங்களைச் செய்தும், பிராராப்த கர்மங்களின் பலன்களை அனுபவித்தும், மரணத்துக்குப் பின் விடுதலையை அடையலாம் என்கிறது மீமாம்சை.

ஒருவழியாக முக்தி என்ற கருத்தை ஏற்க நேர்ந்தபோதிலும், வேள்விச் சடங்குகளுக்கே பூர்வ மீமாம்சை முக்கியத்துவம் தருகிறது. ஹிந்து மதம் லௌகீகம், ஆன்மிகம் ஆகிய இரண்டு வழிமுறைகளை ஒரேநேரத்தில் கடைப்பிடிக்கிறது. இதில் ஆன்மிகம் என்ற அக வாழ்வு வேதாந்தம், சாங்கியம், யோகம் உள்ளிட்ட தத்துவங்களைச் சார்ந்து நிற்கின்ற போதிலும், லௌகீகம் என்ற யதார்த்த புற வாழ்வு மீமாம்சை முன்னிறுத்தும் வேள்விச் சடங்குகளையே பெரிதும் சார்ந்துள்ளது.

மீமாம்சையின் அடிப்படைக் கருத்துகளான சொர்க்க போகத்தையும், வேள்விச் சடங்குகளையும் கடுமையாக எதிர்த்துத்தான் சமணமும், பௌத்தமும் வளர்ந்தன. இவற்றில் சமணம் குறித்து அடுத்த வாரம் காண்போம்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com