25. வரி அதிகமாக வசூலித்தால்..

அதிக வரி வசூலிக்கப்பட்டதால் மக்கள் முறையிட்டு மன்னவன் திருத்திய செய்தியும் வரலாற்றின் வண்ணங்களில் உண்டு.
25. வரி அதிகமாக வசூலித்தால்..

வரி என்பது அரசாங்கத்தின் முதற்பொருள். வரியின்றி அரசாங்கத்தை நடத்துவது என்பது துடுப்பற்ற படகைச் செலுத்துவதைப் போன்றது. ஆனால், வரி வசூலிப்பது என்பது பூவுக்கு வலிக்காமல் தேனுண்ணும் வண்டைப் போல இருக்க வேண்டும். வலிந்து வாங்கும் வரி, மக்களை நோகச் செய்வதோடு முறையீடு, கொதித்தெழல் போன்ற செயல்களுக்கு அடிகோலிவிடும். இதைத்தான் வள்ளுவரும்,  

வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்

கோலொடு நின்றான் இரவு. (குறள் 552)

என்றார்.

இப்படி, அதிக வரி வசூலிக்கப்பட்டதால் மக்கள் முறையிட்டு மன்னவன் திருத்திய செய்தியும் வரலாற்றின் வண்ணங்களில் உண்டு. தஞ்சை பாபநாசத்தை அடுத்த மண்டங்குடியில் உள்ள சிவாலயத்தில் ஒரு கல்வெட்டு அமைந்துள்ளது. இந்தக் கல்வெட்டு மூன்றாம் இராசராசனின் 25-ம் ஆட்சியாண்டைச் சேர்ந்தது. இதன் காலம் பொ.நூ. 1241 ஆகும். இந்தக் கல்வெட்டில், இராசராச சதுர்வேதிமங்கலத்து சபையார் எடுத்த ஒரு முடிவு பற்றிய தகவல் பதிவாகியுள்ளது. வரி தண்டும் வன்னியர்கள் அதிகமாக வரிகளை வசூலிப்பதாலும், பட்டர்கள் செலுத்த வேண்டிய வரியையும் சேர்த்து தங்களிடம் வசூலிப்பதாகவும் குடிமக்கள் முறையிட்ட செய்தி இடம் பெற்றுள்ளது. இதைக் கேட்ட சபையார், அதற்கு முந்தைய மூன்றாம் குலோத்துங்கனின் காலத்தில் வசூலிக்கப்பட்டதைப் போலவே வசூலிக்கவும், மீறினால் நாட்டு துரோகியாவார்கள் எனவும் செய்யப்பட்ட முடிவைக் கல்வெட்டு எடுத்தியம்புகிறது.

நம்மூரில் கண்டு வன்னியர் பற்றி கடமை குடிமை தண்டுகிற இடத்து மு..துங்..டி அன்றிக்கே குடிமைகளை ஏறக்கொண்டும் காசு தண்டியும் பட்டகள் பேரில் வரிகளை எங்களை தண்டியும் இப்படிச் செய்கையாலே தரிப்பற்று பயிரேற்று..

இதுக்குச் சொல்லப்பட்ட தேவைகள் செய்யக் கடவதல்லாவதாகவும் கரை செயுமிடத்து ஓராட்டை நாள் நின்று தவிர.. ந்பு நாலாட்டை நாள் கழிச்சு ஊருக்கிரைய கரையிடக் கடவதாகவும் இப்படித் தவிரச் செய்தார்களாகில் கிராமத்து துரோகிகளும் நாட்டு துரோகிகளாகவும்..

என்பவை கல்வெட்டு வரிகள்.

ஆக, குடிமக்களின் முறை கேட்டு முன்பு நடைமுறையில் இருந்த வரி வசூலிக்கும் முறையையே மாற்றிக் கொடுத்து, நிலப் பங்கீட்டை (நாலாட்டை) நான்காண்டுகளுக்கு ஒருமுறையும் மாற்றி சரி செய்து கொடுத்த செய்தி கல்வெட்டில் பதிவாகியுள்ளது.

இவ்விதம், குடிகள் துயர் கண்டு வரி வசூலிக்கும் ஆட்சியே சிறந்த ஆட்சியாகத் திகழும் என்பதே வரலாற்றின் வண்ணம் காட்டும் செய்தி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com