27. போட்டி அரசுகளிடையே ஒப்பந்தம்

27. போட்டி அரசுகளிடையே ஒப்பந்தம்

13-ஆம் நூற்றாண்டில், ஏறத்தாழ சோழ சாம்ராஜ்ஜியம் சரியத் தொடங்கியிருந்தது. சிற்றரசர்கள் தங்கள் எண்ணம்போல செயல்பட்டு தலைமையை ஒப்புக்கொள்ளாமல் தனித்து இயங்கத் தொடங்கினர்.
Published on

இரு நாட்டு மன்னர்கள் பிணங்கி மீண்டும் உடன்படிக்கை செய்துகொள்ள நேர்ந்தால், தமக்குள் நிகழ வேண்டியவற்றைப் பட்டியலிடுவர். ஒத்துழைக்க வேண்டிய சூழ்நிலைகள், உதவ வேண்டிய கட்டங்கள் என்று எல்லா வகையான சூழ்நிலைகளும் பட்டியலிடப்பெறும். இதுவொன்றும் புதிதில்லை. பொதுவாக நடைபெறக்கூடியதுதான். வரலாற்றின் பக்கங்கள் கண்ட செய்திதான் இது.

13-ஆம் நூற்றாண்டில், ஏறத்தாழ சோழ சாம்ராஜ்ஜியம் சரியத் தொடங்கியிருந்தது. சிற்றரசர்கள் தங்கள் எண்ணம்போல செயல்பட்டு தலைமையை ஒப்புக்கொள்ளாமல் தனித்து இயங்கத் தொடங்கினர். அப்போது அவர்களுக்குள்ளும் பூசல்கள் மலிந்தன. வாணாதிராயர்கள், அதியமான்கள், மலையமான்கள் என்று ஒவ்வொருவரும் பிணங்கினர். இடையில், ஒருவருக்கொருவர் உடன்படிக்கையும் செய்துகொண்டனர். இத்தகைய கல்வெட்டுகளை, தருமபுரி, திருவண்ணாமலை போன்ற இடங்களில் பார்க்கமுடியும்.

இத்தகைய ஒரு கல்வெட்டு ஆறகளூர் என்ற ஊரில் அமைந்துள்ளது. அந்தக் கல்வெட்டு இராசராசதேவர் பொன்பரப்பினான வாணகோவரையனுக்கும் திருக்கோவலூருடைய கிளியூர் மலையமானுக்கும் இடையே அமைந்த ஓர் ஒப்பந்தத்தைக் குறிப்பிடுகிறது. இருவரும் ஒருவருக்கொருவர் சந்தி செய்துகொண்டனர். ஆள்வினையாற்றுக்கு தெற்கும் வடக்குமாக தங்கள் எல்லைகளை வகுத்துக்கொண்டனர். இருபுறமும் வன்னியம் செய்வது, அதாவது வரிவசூலிப்பது மற்றும் அரச காரியங்களையும் இணைந்தே மேற்கொள்வது என்றும், எதிரிகள் படையெடுத்து வர நேர்ந்தால், ஒருவருக்கொருவர் படை முதலியவை தந்து உதவிக்கொள்வது என்று முடிவெடுத்தனர். இதை மீறினால் தங்கள் பெண்டுகளைப் பிறருக்குக் கூட்டிக் கொடுத்த பாவத்தில் படுவராகவும் ஒம்படைக்கிளவியையும் வகுத்தனர்.

ஆறகளூருடைய இராசராசதேவன் பொன்பரப்பினான குலோத்துங்க சோழ வாணகோவரையற்கு திருக்கோவலூருடைய கிளியூர் மலையமான்... நாடு நிற்குமிடத்து ஆழ்வினையாற்றுக்குத் தெற்கு இவற்கு நிற்கவும் இவ்வாற்றுக்கு வடக்கு எனக்கு நிற்கக் கடவதாகவும்...

நாங்கள் உள்ளதனையும் பிழையாதே நின்று இராசகாரியம் செய்யிலும் வன்னியஞ்செய்யிலும் கூடவே செய்யக் கடவோமாகவும் இவற்கு வினையுண்டாகில் என் முதலிகளும் படையும் குதிரையும் புகவிட்டு என்வினையாக ஏறட்டுக் கொண்டு நோக்க கடவேனாகவும் எனக்கு வினையுண்டாகில் இவருள் தம் முதலிகளும்... தம்வினையாக ஏறட்டுக்கொண்டு நோக்க கடவாராகவும்...

என்பது கல்வெட்டு வரிகள்.

இரு நாடுகளும் எல்லைகளை மதித்து பொதுவான அரச காரியங்களை ஒத்துழைத்துச் செய்யவும், எல்லை மீறாமலும், எதிரிகள் தாக்கினால் படை, தளபதி, குதிரை ஆகியவற்றைக் கொடுத்து தனக்கே ஆபத்து நேர்ந்தாற்போலப் பாவித்து உதவி செய்யவும் செய்து கொண்ட ஒப்பந்தமாக இந்தக் கல்வெட்டு அமைந்துள்ளது.

இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் உதவும் முகத்திலும் தனக்கு ஆபத்து நேர்ந்தாற்போல வரும் பாவனை எவ்வளவு உயர்வானது. இதல்லவோ வரலாற்றின் வண்ணம் தரும் படிப்பினை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com