37. பொதுச் செயலுக்கு ஊர்கூடி..

மொழி வேறுபாடு இருந்தாலும், ஊருக்கான பொதுச்செயல்களுக்கு ஒன்று கூடுவர். இதுவும் காலகாலமாக நடந்து வருவதுதான். மொழிரீதியான வேறுபாடு ஒருபோதும் அவர்களைத் தடுத்ததில்லை.
37. பொதுச் செயலுக்கு ஊர்கூடி..

பொதுவாக எல்லா இடங்களிலும் எல்லா மொழி பேசுவோரும் இனத்தவரும் கலந்து இருப்பர். இது இன்று நேற்றல்ல, பன்னெடுங்காலமாக இருந்து வருவதுதான். அவர்களில் மொழி வேறுபாடு இருந்தாலும், ஊருக்கான பொதுச்செயல்களுக்கு ஒன்று கூடுவர். இதுவும் காலகாலமாக நடந்து வருவதுதான். மொழிரீதியான வேறுபாடு ஒருபோதும் அவர்களைத் தடுத்ததில்லை. ஊர்ச் செயல்களுக்கும் அவர்கள் சேர்ந்தே செயல்பட்டிருக்கிறார்கள் என்பதும் வரலாற்றின் வண்ணங்கள் தரும் செய்தி.

அவிநாசியை அடுத்த சேவூரில் அமைந்துள்ள அழகப்பெருமாள் கோயில் கல்வெட்டு ஒன்று, அந்தக் கோயிலுக்குத் திருப்பணி அமைத்தவர்களைப் பற்றிய தகவல்களைத் தருகிறது. அவர்கள் பல்வேறு மொழியினராக, இனத்தவராக இருந்தாலும், அவர்கள் ஒன்றிணைந்து கோயில் திருப்பணி செய்தமையைக் காட்டுகிறது. கொங்க பாண்டியருள் சுந்தர பாண்டியனின் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்த இந்தக் கல்வெட்டு பதினான்காம் நூற்றாண்டு எழுத்தமைதியில் அமைந்துள்ளது. இந்தக் கல்வெட்டு மலையாளர், அரிவார், கன்னடியர், தெலுங்கர் மற்றும் சவளைக்காரர்கள் இணைந்து செய்த திருப்பணியைக் குறிக்கிறது. மொழிரீதியாக தனித்தனியாக இருந்தாலும் திருப்பணிக்கு அனைவரும் இணைந்து செயல்பட்டதைக் கல்வெட்டு எடுத்துக் காட்டுகிறது.

வடபரிசார நாட்டு சேவூரான செம்பியன் கிழானடி நல்லூர்த் திருமேற்கோயில் நாயினார் அழகப்பெருமாள் கோயிலுக்கு உடையார் அதிகமானார் நாளில் விடைப்பேரில் மலையாளரும், ஆரிவாரும் குந்னடியரும் தெலுங்கரும் சவளக்காறரும் செய்வித்த படை உத்தரமும் எழுதகமும் இரண்டுபடையும் இவர்கள் தர்மம்..

என்பது கல்வெட்டு வரிகள்.

கோயில் திருப்பணிக்கு மலையாளர், கன்னடியர், ஆரிவார், தெலுங்கர் மற்றும் சவளக்காரர் இணைந்து செய்த திருப்பணியைக் கல்வெட்டு சுட்டுகிறது. சவளக்காரர் என்பது பொதுவாக துணி துவைக்கும் இனத்தைச் சுட்டும். ஆரிவார் என்பது ஆரியர் என்றிருக்கலாம். ஆக, மொழிரீதியாக இனரீதியாக இருந்தோரும் ஒன்றிணைந்து திருப்பணியில் ஈடுபட்ட செய்தி நமக்குக் கூறுவது வேற்றுமைகளை மறந்து ஒற்றுமை போற்ற வேண்டும் என்பதே.

ஊர்கூடி தேரிழுப்பது முதல் இத்தகைய செயல்கள் பண்டைக்காலம் தொட்டு இனம் மறந்து மொழி வேற்றுமை மறந்து ஒருங்கிணைத்தது. இராமேசுவரம் முதலிய கோயில் கல்வெட்டுகளிலும் இவ்விதம் பலதரத்தார் இணைந்து பணியாற்றிய செய்தியைத் தருகிறது. ஆக இத்தகைய பணிகள் புனிதமாக புண்ணியத்தைச் சேர்த்ததோடு, அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றும் வாய்ப்பையும் அளித்திருந்தன. இன்றும் இதுபோன்ற திருப்பணிகள் ஊரார் இணைந்து தொடங்கினால், வேற்றுமைகள் மறைந்து ஒற்றுமை ஓங்கும் என்பதே வரலாற்றின் வண்ணம் காட்டும் செய்தி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com