
பொதுவாக, எல்லா நிறுவனங்களுக்கும் நிலையாக நடப்பதற்கான கொடையைக் கட்டளையாக - நிரந்தர ஏற்பாடாகச் செய்திருப்பர். இவ்விதமான ஏற்பாடுகள் முட்டினால் அதாவது தடைப்பட்டால், அவற்றை ஏற்பாடு செய்தவர்கள் மீண்டும் சரிசெய்து தர வேண்டும். அந்த நிறுவனம் கல்வி நிறுவனமாக இருந்தால் அதற்கான ஏற்பாட்டை உடனே செய்து தர வேண்டும். இதற்கான எடுத்துக்காட்டும் வரலாற்றின் வண்ணங்களில் உண்டு.
சாலை என்பது பண்டைய நாளில் கல்விச்சாலையைக் குறிக்கும். கன்னியாகுமரியில் ஸ்ரீவல்லபப் பெருஞ்சாலையான இராசராசப் பெருஞ்சாலை, அதாவது பெரிய பள்ளிகூடம் இருந்தது. இது அங்கிருந்த வேதிய சாத்தன் என்னும் சாஸ்தா கோயிலுக்குத் தென்கிழக்கில் இருந்திருக்கலாம் என்பதற்கு ஒரு கல்வெட்டு சான்று உண்டு. அதற்கு மணற்குடியிலிருந்த பேரளத்திலிருந்து ஒரு கலத்திற்கு ஒரு நாழி என்ற வீதத்தில் உப்பை வழங்குமாறு ஒரு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த உப்பை விற்றும் உணவுக்கும் பயன்படுத்துமாறு இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்க வேண்டும். அப்படி செய்யப்பட்ட ஏற்பாடு முதலாம் இராசாதிராச சோழனின் காலத்தில் தடைப்பட்டது. உடனே அவனுடைய அரசியாக இலங்கிய உலகுடைய பிராட்டியாரின் அதிகாரிகளில் ஒருவனான அரிகுலகேசரியான பவித்திரகுலமாணிக்க தொங்கப் பேரரையன் என்பான் அரசனிடம் சென்று முறையிட்டான். கல்விச்சாலைக்கான திட்டம் முடங்கியதைக் கண்ட அரசன், உடனே ஆவன செய்யுமாறும் கலம் உப்புக்கு ஒரு நாழியை உடனே தொடர்ந்து வழங்குமாறும் ஆணையிட்டான். இந்த ஆணைக்கான கல்வெட்டு கன்னியாகுமரியிலுள்ள அகத்தீசுவரர் கோயிலில் அமைந்துள்ளது.
குமரி ஸ்ரீவல்லவப் பெருஞ்சாலையான ராஜராஜபெருஞ்சாலைக்கு உத்தமசோழவளநாட்டு நாஞ்சிநாட்டு மணற்குடியான மயில்வாளகுலகாலப் பேரளத்து உப்பு முதலிலும் செலவிலும் கலத்துவாய் நாழி கையுறை கொண்டு இச்சாலைக்கு முன்பு நிவந்தம் செலுத்தி வந்தமையில் இப்போது உப்பு உறைநெய் பிடித்து கொள்ளுங்கலீரென்று கேட்டோம். முன்பு இப்பரிசு செய்து வருமாகில் உறை உப்பு முதலிலும் செலவிலும் கலத்துவாய் நாழி உறை உப்பு ராஜராஜபெருஞ்சாலை ..வசம் கூட்டிக் குடுக்க என்று திருமந்திர ஓலை...
என்பது கல்வெட்டு வரிகள்.
ஆக, கல்விச்சாலைக்கான நிவந்தம் முட்டுப்பட்டால், அதிகாரி உடனே அரசனிடம் தெரிவிப்பதும், அரசனும் உடனேயே உப்பைக் கூட்டிக் கொடுக்க ஆணையிடுவதும் கல்விக்கான பெரும் மதிப்பைக் காட்டுகிறது. கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் நிவந்தங்கள் இவ்விதம் முட்டுப்படாமல் வழங்குவதற்கு அரசாங்கம் ஆணையிடுமானால் அது உண்மையிலேயே பொற்காலமாகத்தான் இருக்கும் என்பதுதான் வரலாற்றின் வண்ணம் காட்டும் செய்தி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.