31. நற்செயல்களுக்கு நன்கொடை கொடுப்போர் கவனத்துக்கு..

செல்வத்தை ஈட்ட எந்த வழியை வேண்டுமானாலும் நாடலாம் என்பதுதான் நம் எல்லோர் மனதிலும் இருக்கும் எண்ணம்.
31. நற்செயல்களுக்கு நன்கொடை கொடுப்போர் கவனத்துக்கு..

செல்வத்தை ஈட்ட எந்த வழியை வேண்டுமானாலும் நாடலாம் என்பதுதான் நம் எல்லோர் மனதிலும் இருக்கும் எண்ணம். அப்படி ஈட்டிய பிறகு, அதில் ஒரு பகுதியை அறச்செயல்களுக்குக் கொடையாக வழங்கிவிட்டால், பாவச்செயலால் செல்வத்தை ஈட்டியிருந்தாலும் அது சரியாகிவிடும் என்றும் நம்புகிறோம். செல்வந்தர்களும் மற்றோரும் இதை ஒரு வழியாகவே வைத்துக்கொண்டிருக்கின்றனர். கோயில் உண்டிகளில் லட்சக்கணக்கில் போடப்படும் காணிக்கைகளில் பல இந்த வகையைச் சேர்ந்தவையே. ஆனால், உண்மை என்ன என்பதை எவரும் உணர்வதில்லை. ஈட்டும் முறை சரியாக இருந்தால் தவிர, இத்தகைய கொடைகள் பலனை அளிப்பதில்லை என்பதுதான் அறநூல்கள் காட்டும் முடிபு. இது வரலாற்றிலும் எதிரொலித்திருக்கிறது.

இராமநாதபுரத்தைக் கொண்டு ஆண்டுவந்த பரம்பரையினர் சேதுபதியினர். இவர்கள் செய்த அறச் செயல்கள் கணக்கிலடங்கா. இவர்களுள் திருமலை இரகுநாத சேதுபதி மன்னர் வழங்கிய செப்பேடு ஒன்று, அவர் அறநெறி நின்று வழங்கிய கொடையைக் குறிப்பிடுகிறது. இந்தச் செப்பேடு 1653-ச் சேர்ந்தது. இந்தச் செப்பேட்டில், மன்னர் இராமநாதசுவாமி கோயிலின் காரியகர்த்தரான இராமநாத பண்டாரத்துக்குப் பிறப்பித்த ஆணை ஒன்று பதிவாகியுள்ளது. இந்த ஆணையில், கோயிலுக்கு முன்பு வைத்த கட்டளைகளுக்கான செல்வம், நாட்டில் காணிக்கையாகப் பெற்ற செல்வத்திலிருந்து கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் அதில் அற வழியிலும் அறமல்லாத வழியிலும் ஈட்டிய செல்வம் இருக்கலாம். ஆகவே, இனி அந்தச் செல்வம் இல்லாமல் சொந்த செல்வம் கொண்டே கட்டளைகளை நிறைவேற்றுவதாக அரசர் பிறப்பித்த ஆணை அந்தச் செப்பேட்டில் பதிவாகியுள்ளது.

பிறநாட்டிலேயிருந்து வருகிற காணிக்கையள் உபையங்களும் நம்முடைய ராச்சியத்திலேயிருந்து வருகிற காணிக்கை உபையங்களெல்லாம் நல்ல திரவியங்களாக இருக்கிறதுமுண்டு. பாவத் திரவியங்களாக இருக்கிறதுமுண்டு. அப்படி கொண்டாலந்த திரவியம் வாங்கி நம்முடைய சொந்த கட்டளையிலே நடப்பித்தால் நமக்குப் பலனென்கிறதைக் குறித்து நம்முடைய அறைவாசலிலே இருக்கிற காரியகாறரைக் கண்டிச்சி நடப்பித்து காணிக்கை உபையங்கள் ஒன்று வாங்குவோமென்று நினைக்கத் தேவையில்லையென்றும் ....

அறைக்கட்டளைக்கு விடுகிற கிராமங்களிலேயும் பெரிய அய்யா அவர்களும் நாமும் விட்ட கிறாமங்களிலேயும் உண்டாகிய திரவியம் கொண்டு நம்முடைய அறைக்கட்டளை பூசை முதலாகியது நடப்பித்து அந்தச் சுகிற்தம் நம்முடைய ஆதீனத்துக்கு வந்து சேருகிற வளியாக நடப்பித்துக் கொள்ளச் சொல்லியும் பிறருடைய திரவியங்கள் வாங்கி நடப்பிக்க தேவையில்லையென்றும் நிலவரம் பண்ணுவித்து...

இதுதான் செப்பேட்டு வரிகள்.

அதாவது, பிறர் செல்வம் அற வழியில் ஈட்டியதோ அல்லது அறமற்ற வழியில் ஈட்டியதோ என்னும் ஐயமிருப்பதால், தாங்கள் கொடுத்த கிராமங்களை வைத்து அதன் மூலமாகவே கோயில் கட்டளைகளை நடத்திவரும்படி செய்த உத்தரவு தெளிவாகிறது.

ஆக, அறமற்ற வழியில் செல்வத்தை ஈட்டிவிட்டு அதைக்கொண்டு தானதர்மம் செய்தால் செய்த பாவம் நீங்கிவிடும் என்று நம்புவோருக்கு இந்தச் செப்பேடு தரும் பாடம் அலாதியானது. செல்வத்தைக் கொடையாக கொடுக்க வேண்டுமானாலும், அறவழியில் ஈட்டுக் கொடுப்பதே நிலையான பலனைத் தரும் என்பதுதான் வரலாற்றின் வண்ணங்கள் தரும் செய்தி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com