81. ஒரு சொல்

அதர்வத்தின் உபநிஷத்துகளுக்கு நிகராக இந்த உலகில் ஓரிலக்கியமும் கிடையாது. ஆயுர்வேதம் என்னும் அற்புதமான மருத்துவ முறை அதில் கிளைத்து வந்ததுதான்.

புருவங்களின் மத்தியில் பொட்டு வைத்தாற் போன்ற மச்சம் கொண்ட யோகியைத் தேடிக் காசி நகரெங்கும் அலைந்து திரிந்த சூரிப் போத்தி களைத்துப்போய் ஒரு அன்ன சத்திரத்தின் வெளித் திண்ணையில் வந்து படுத்தான். அது நடு மதிய நேரம் என்பதால் சத்திரத்துக்கு வந்துகொண்டிருந்த பரதேசிகளின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டிருந்தது. யார் யாரோ எங்கெங்கிருந்தோ அங்கு வந்துகொண்டே இருந்தார்கள். உள்ளே இரண்டு பெரிய கூடங்கள் இருந்தன. கீழ்த்தளத்தில் இருந்ததைப் போலவே மாடியிலும் இரண்டு கூடங்கள் இருக்க வேண்டும் என்று போத்திக்குத் தோன்றியது. எல்லா இடங்களிலும் ஆட்கள் வரிசையில் போய்ப் போய் உட்கார்ந்தார்கள். யார் எழுதி வைத்த நிதியோ, யாருக்குப் போய்ச் சேர்ந்துகொண்டிருந்த புண்ணியமோ. அங்கு வந்த அத்தனைப் பேருக்கும் சப்பாத்திகளும் பருப்புக் கூட்டும் கிடைத்தன. நல்ல தடி தடியான பெரிய அளவிலான சப்பாத்திகள். சத்திரத்துக்கு வந்த யாத்ரீகர்களும் பிச்சைக்காரர்களும் சாதுக்களும் தயாராகத் தட்டு அல்லது இலை எடுத்து வந்ததைப் போத்தி கவனித்தான். தானும் வரிசையில் போய் தட்டேந்தி உட்கார்ந்து சாப்பிட்டுப் பார்த்தால்தான் என்னவென்று தோன்றியது. ஆனால் மிகவும் சோர்வாக இருந்தது. மோதிக்கொண்டிருந்த கூட்டத்தில் இடம் பிடித்துப் போய் உட்கார்ந்து நான்கு சப்பாத்திகளை வாங்குவதற்கே ஒரு மணி நேரம் ஆகிவிடும் என்று தோன்றியது. பசியைக் காட்டிலும் உறக்கம் அப்போது அவனுக்கு அவசியமாகத் தோன்றியதால் வெளித் திண்ணையில் வந்து படுத்தான்.

இரண்டு நாள்களாக ஓயாமல் நடந்து திரிந்ததில் கால் வலி கொன்றெடுத்துக்கொண்டிருந்தது. அவனுக்கு எப்படியாவது அந்த யோகியைச் சந்தித்துவிட வேண்டும் என்ற வெறி ஒன்றைத் தவிர வேறெதுவும் மனத்தில் இல்லை. சந்தித்தால் மட்டும் என்ன அற்புதம் நிகழ்ந்துவிடும் என்று அடிக்கடித் தனக்குள் கேட்டுக்கொண்டான். ஒரு யோகி பொருட்படுத்தக்கூடிய வாழ்க்கை அவனுடையதல்ல. இதில் அவனுக்குச் சந்தேகமில்லை. ஆனால் அவரை மீண்டுமொரு முறை பார்த்துவிட்டால் சிறிய அளவிலாவது ஏதேனும் மாற்றம் உண்டாக வாய்ப்பிருக்கலாம் என்று நினைத்தான்.

இவ்வாறு எண்ணியபடி அவன் கண்ணை மூடி உறங்க ஆரம்பித்தபோது யாரோ தன்னை எழுப்புவது போலத் தோன்றி, கண்ணைத் திறந்து பார்த்தான். அவன் எதிரே இருபது வயது மதிக்கத்தக்க வாலிபன் ஒருவன் நின்றிருந்தான். அவன் கையில் ஒரு மந்தார இலையில் வைத்த இரண்டு சப்பாத்திகளும் பருப்புக் கூட்டும் இருந்தது.

‘என்ன?’ என்று போத்தி கேட்டேன்.

‘இதைச் சாப்பிட்டுவிட்டு உன்னை என்னோடு கிளம்பி வரச் சொல்லி என் குருநாதர் செய்தி அனுப்பினார்’ என்று அவன் சொன்னான்.

‘யார் உன் குருநாதர்?’

‘அவர் பெயர் விஜய். அவர் ஒரு யோகி. உன்னை இரண்டு நாள் முன்பு மணிகர்ணிகா கட்டத்தில் அவர் பார்த்ததாகச் சொன்னார்’.

‘ஐயோ அவரா?’ என்று போத்தி அலறி எழுந்து நின்றான்.

‘அவர் எங்கே இருக்கிறார்? நான் இப்போதே அவரைப் பார்க்க வேண்டும். இரண்டு நாள்களாக அவரைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன்’.

‘முதலில் சாப்பிடு’ என்று அவன் சப்பாத்திகளை அவனிடத்தில் கொடுத்தான். போத்திக்கு நடப்பது நிஜமா கனவா என்று புரியவில்லை. இரு சப்பாத்திகளையும் நாலே வாயில் அள்ளி அடைத்துக்கொண்டு கையைக் கழுவிவிட்டு ஓடி வந்து, ‘நாம் போகலாம்’ என்று சொன்னான்.

அந்த வாலிபன் அவனை அழைத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தான். வழியெங்கும் போத்தி தனக்கு நிகழ்ந்த அந்த ஒரு சிறு அனுபவத்தைப் பல்வேறு சொற்களில் திரும்பத் திரும்ப அந்த வாலிபனிடம் சொல்லிக்கொண்டே வந்தான். ‘நான் அவரை இதற்குமுன் பார்த்ததில்லை. அவரும் என்னைச் சந்தித்ததே இல்லை. ஒரு வழிப்போக்கனாக நான் இந்த ஊருக்கு வந்தேன். அவர் என்னைப் பார்த்தது மிஞ்சிப் போனால் பத்து விநாடிகள் இருக்கும். அதற்குள் நான் யார், என்ன செய்கிறேன் என்றெல்லாம் அவருக்குத் தெரிந்துவிட்டது என்றால்...’

‘அதை அறியப் பத்து விநாடிகள் அவருக்கு அதிகம். ஒரு கணம் போதும். சொல்லிவிடுவார்’ என்று சொன்னான்.

‘அப்படியா? அவ்வளவு பெரிய ஞானியா!’

‘அவர் எவ்வளவு பெரிய ஞானி என்று எனக்குச் சரியாகத் தெரியாது. நான் சிறுவன். அவரிடம் பயில்பவன்’.

போத்திக்கு அவனிடம் மேற்கொண்டு என்ன பேசுவதென்று தெரியவில்லை. அவனாகப் பேச்சுக் கொடுக்காவிட்டால் அந்த வாலிபன் வாயே திறப்பதில்லை என்பதில் உறுதியாக இருந்தான். காசி நகரம் முழுவதையும் நன்கறிந்தவன் போல அவன் விறுவிறுவென்று நடந்துகொண்டிருந்தான்.

‘தம்பி சற்று மெதுவாக நட. என்னால் உன் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியவில்லை’ என்று போத்தி சொன்னான். அவன் நடை வேகத்தைச் சிறிது குறைத்தான். சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்த பின்பு குடிசைகள் அடர்ந்த குடியிருப்புப் பகுதி ஒன்றை அவன் வந்தடைந்தான். நதிக்கரையில் இருந்து அந்த இடம் குறைந்தது பத்து கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் என்று போத்தி நினைத்தான். அத்தனை தூரத்தையும் நடந்தேதான் கடந்திருந்தான்.

போத்திக்கு மிகவும் மூச்சு வாங்கியது. வாழ்வில் என்றுமே அவன் அத்தனை வேகமாக, அத்தனை தூரத்தை நடந்து கடந்ததில்லை. ‘அட இரப்பா! ஒரு பத்து நிமிடம் உட்கார்ந்துவிட்டுப் போகலாம்’ என்று சொல்லிவிட்டு ஓரிடத்தில் உட்கார்ந்தும் விட்டான். அந்த வாலிபன் சிரித்தான். ‘நமக்கு இன்னும் இருபது நிமிடங்கள் மட்டுமே உள்ளன ஐயா. குருநாதர் கிளம்பிவிடுவார்.’

‘எங்கே?’

‘வரணாவதி பறிக்க. போய்விட்டாரென்றால் திரும்பி வர எவ்வளவு நாள்களாகும் என்று தெரியாது’.

போத்தி அசந்துபோனான். ‘வரணாவதியா! அது இங்கே கிடைக்கிறதா!’

‘எங்கே கிடைக்கும் என்று எனக்குத் தெரியாது. ஆனால் குருநாதர் வரணாவதி பறிக்கப்போவதாகத்தான் சொன்னார்’.

அதற்குமேல் அவனால் அங்கு உட்கார முடியவில்லை. அவனால் அதிகபட்சம் யோசிக்க முடிந்தது ஒன்றுதான். காசியில் அந்த மூலிகை இருக்கிறது! இது போதும். யோகியைச் சந்திக்கும்போது அதைக் குறித்து மேலும் கேட்டுத் தெரிந்துகொண்டுவிடலாம். அருமை. இரண்டு நாள்கள் அவரைத் தேடி அலைந்ததற்குச் சரியான பலன்.

மேலும் சிறிது தூரம் நடந்த பின்பு ஒரு குடிசை வாசலுக்கு வந்து சேர்ந்தார்கள்.

‘உள்ளே அழைத்து வா’ என்று யோகி உத்தரவு கொடுத்தார்.

போத்தி அந்த வாலிபனுடன் குடிசைக்குள் சென்றான். அவர் அந்தக் குடிசையின் வடக்குச் சுவர் ஓரம் ஒரு பாய் விரித்து அமர்ந்திருந்தார். குடிசையில் வேறு ஒரு பொருளும் இல்லை. ஒரே ஒரு பாய். அவ்வளவுதான்.

அவரைக் கண்டதும் போத்திக்கு ஏனோ உணர்ச்சி மேலிட்டு அழுகை வந்தது. சட்டென்று விழுந்து கும்பிட்டு எழுந்தான். அவர் உணர்ச்சியற்ற முகத்துடன் அவனை உற்றுப் பார்த்தார். பிறகு, ‘சொல். எதற்கு என்னைத் தேடினாய்?’

‘தெரியவில்லை ஐயா. கணப்பொழுதில் நீங்கள் நான் யார் என்பதைத் தெரிந்துகொண்டுவிட்டீர்கள். அதை நான் எதிர்பார்க்கவேயில்லை’.

‘அதனால் என்ன?’

‘உங்களுக்கு ஒன்றுமில்லை. ஆனால்.. ஆனால்..’

என்ன சொல்வதென்று போத்திக்குத் தெரியவில்லை. சட்டென்று தன்னைப் பற்றி, தன் பிறப்பு, வளர்ப்பு பற்றியெல்லாம் விலாவாரியாக எடுத்துச் சொல்லத் தொடங்கினான். கோட்டயத்தில் ஒரு பண்டிதரிடம் அதர்வம் பயிலச் சென்ற கட்டம் வந்தபோது சற்றுத் தயங்கினான்.

‘அவர் மகளை நீ ஏமாற்றிவிட்டாய். அதானே?’ என்று யோகி சட்டென்று கேட்டதும் அவனுக்கு அச்சமாகிவிட்டது.

‘முட்டாள். அதர்வத்தின் உபநிஷத்துகளுக்கு நிகராக இந்த உலகில் ஓரிலக்கியமும் கிடையாது. ஆயுர்வேதம் என்னும் அற்புதமான மருத்துவ முறை அதில் கிளைத்து வந்ததுதான். அது உன் கண்ணில் படவில்லை. பரிபூரணத்தின் வாசற்கதவைத் திறக்கும் எளிய சாவி அது. நீ அதைக் கொண்டு சாக்கடை நோண்டிக்கொண்டிருக்கிறாய்’.

போத்திக்கு அழுகை வந்தது.

‘இதோ பார். உன்னிடம் பேசவும் விவாதிக்கவும் எனக்கு ஒன்றுமில்லை. நீ என்னைத் தேடிக்கொண்டே இருந்ததால்தான் அழைத்து வரச் சொன்னேன். இந்தச் சந்திப்பு உனக்கு நல்லது எதையேனும் செய்ய வேண்டும் என்று விரும்புவாயானால் நீ செய்துகொண்டிருக்கும் அனைத்தையும் விட்டொழித்துவிட்டுப் போய் பாரதப் புழையில் முக்குப் போடு’ என்று சொல்லிவிட்டு அவர் எழுந்துவிட்டார்.

‘ஐயா, நீங்கள் என்ன சொன்னாலும் கேட்கிறேன். இன்று முதல் நான் உங்கள் சீடன்’ என்று போத்தி சொன்னான்.

அவர் அதைக் கண்டுகொள்ளவில்லை. ‘போபோ. எனக்கு வேலையிருக்கிறது’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார்.

‘ஐயா போய்விடாதீர்கள். ஒரு சொல். ஒரே ஒரு சொல்லை எனக்கு அளியுங்கள். காசி நகரத்தில் வரணாவதி எங்கே கிடைக்கிறது?’

அவர் ஒரு கணம் போத்தியை உற்றுப் பார்த்தார். பிறகு, ‘காசியில் வரணாவதி இருப்பதாக உனக்கு யார் சொன்னது?’ என்று கேட்டார். போத்தி விழித்தான். சீடனைப் பரிதாபமாகத் திரும்பிப் பார்த்தான். யோகி புரிந்துகொண்டார்.

‘அட முட்டாளே. நான் வரணாவதி பறிக்ககப்போகிறேன் என்று அவன் சொல்லியிருப்பான். அது காசியில் இருப்பதாகச் சொல்லியிருக்க மாட்டானே’.

‘அப்படியா? காசியில் கிடையாதா? வேறு எங்கே உள்ளது?’

மீண்டும் அவனை உற்றுப் பார்த்த யோகி, சற்றுச் சிரித்தார். ‘ஏன், உன் ஜென்சியிடம் கேளேன். முடிந்தால் அவள் பறித்துவந்து கொடுக்கட்டும்’ என்று சொல்லிவிட்டு வெளியேறிவிட்டார். திகைத்துவிட்ட போத்தி, அடுத்த விநாடி அவரைப் பின் தொடர்ந்து வெளியே பாய்ந்தான். ஆனால் யோகி எங்கே போனார் என்று தெரியவில்லை. அந்தச் சிறிய சந்தின் இருபுற எல்லைகளின் விளிம்புவரை அவர் நடந்தோ ஓடியோ சென்றதன் சுவடுகூட இல்லை.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com