தற்போது உலக மக்கள்தொகை 710 கோடி. சைனாவின் மக்கள்தொகை 135 கோடி. (2012) இந்தியாவின் மக்கள்தொகை 121 கோடி (2011) அமெரிக்காவின் மக்கள்தொகை 31 கோடி(2013) இந்தோனேஷியா 23 கோடி, பிரேசில் 19 கோடி, பாகிஸ்தான் 18 கோடி, நைஜீரியா 17 கோடி, பங்களாதேஷ் 15 கோடி, ரஷ்யா 14 கோடி, ஜப்பான் 12 கோடி.
உலக மக்கள்தொகையில் முதல் இடம் பெற்றுள்ளது சைனா. இந்தியா இரண்டாவது இடம் பெற்றுள்ளது. உலக மக்கள்தொகையில் 20 சதவீத இடம் சைனாவின் மக்கள்தொகை இந்தியாவின் மக்கள்தொகை 18 சதவீதம். மூன்றாவது இடம் பெற்றுள்ள அமெரிக்காவின் மக்கள் தொகை 5 சதவீதம்தான். வளர்ந்த நாடுகளைவிட வளரும் நாடுகளில் மக்கள்தொகை பெருக்கம் அதிகமாக உள்ளது. 2018-ஆம் ஆண்டில் உலக மக்கள்தொகையில் இந்தியாவின் மக்கள்தொகை 145 கோடியாகும் என ஐக்கிய நாடுகள் சபை கணக்கிட்டு அறிவித்துள்ளது.
தமிழகத்தின் மக்கள் பிறப்பு விகிதம் 1971-ஆம் ஆண்டில் 31.4 ஆக இருந்தது. குடும்ப நலத்துறையின் சிறந்த செயல்பாட்டினால் அது 1990 ஆண்டில் 20 என்றானது. 2008-ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி 16 எனக் குறைந்துள்ளது. ஒரு நிமிடத்தில் 18,333 குழந்தைகள் பிறக்கின்றன. பிறந்த குழந்தையைக் காப்பது கடமை எனவே பிறக்கின்ற குழந்தைகளை வரவேற்போம்.
1950 ஆண்டுக்கு முன்னதாக ஒரு பெண் குறைந்தது அரை டஜன் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள். கிராமங்களில் பிள்ளையைப் பெற்றெடுப்பதைப் பெரும் பேறாகக் கருதுகின்றனர். ஆல் போல் தழைத்து, அறுகு போல் வேரூன்றி, மூங்கில் போல் சுற்றம் முழுமையாய் சூழப் பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க என திருமண நிகழ்வில் நம் முன்னோர்கள் வாழ்த்தினார்கள். பதினாறு குழந்தைகளைப் பெறுவதென முயன்று அதிகபட்சம் பன்னிரண்டு பெற்றனர்.
அறிவார்ந்த மக்களைப் பெறுவதைவிட மற்ற பேறுகள் மதிப்பிற்குரியவை அல்ல என்கிறார் வள்ளுவர்.
அறிவார்ந்த மக்கட்பேற்றிற்கு அளவான குடும்பம் அவசியம். அறிவு வளரும்போது அறியாமை நீங்கும்போது மக்கள் தொகைப் பெருக்கம் குறையும். அறிவிற்கான விழிப்புணர்வினை உலக மக்கள்தொகை தினத்தில் ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது.
அதிக குழந்தை அதிக சொத்து என்ற மக்களின் தவறான கருத்தை மாற்ற அளவான குடும்பம் வளமான குடும்பம், அளவோடிருந்தால் வளமாக வாழலாம். வீட்டிற்கு ஒரு குழந்தை என்ற விழிப்புணர்வு வாசகங்களை மக்களிடையே பரப்பி வருகின்றோம்.
சிறு குடும்பம் சுகமான குடும்பம் என்ற வாசகம் எதிர்கால குழந்தைகளின் நலத்திற்கான, பொருளாதார வளத்திற்கான வேண்டுதலாகும். திட்டமிட்ட குடும்பம் திகட்டாத குடும்பமாக, மகிழ்வான குடும்பமாக அமையும். திட்டமிட்ட செயல் சிறப்பாக நடக்கும். திட்டமிடப்படாத எதுவும் சிறப்பாக இருக்காது.
பருவத்தே பயிர் செய் என்பது முதுமொழி. பருவ காலத்தில் கருத்தரித்தல் என்பதும் வரவேற்கத்தக்கதுதான். திருமணத்திற்குப் பிறகு தாய்மைப் பேறடைதல் என்பதை எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், பதின் பருவத்தில் கருத்தரித்தலைத் தவிர்ப்பது நல்லது. பதின்மூன்று வயது முதல் பத்தொன்பது வரையான பருவம் பதின் பருவமாகும்.
15 வயது முதல் 19 வயதிற்குள்ளான 16 மில்லியன் பெண்கள் தாய்மைப் பேற்றை அடைகிறார்கள். பதின் பருவத்தில் கருத்தரிக்கின்ற இளம் தாய்மார்கள் பிரசவகாலத்தில் பல சிக்கல்களுக்கு உள்ளாகிறார்கள், சில நேரத்தில் இறப்பிற்கும் இக்கருத்தரித்தல் காரணமாகிறது. பிறக்கும் குழந்தைகளின் வளர்ச்சி பாதிப்படைகிறது. அவர்களின் அறிவாற்றல் குறைகிறது.
பதின் பருவம் என்பது கல்வி கற்பதற்குரிய பருவம். உலகைப் புரிந்து கொள்வதற்கான பருவம். இப்பருவத்தில் திருமணமும் கருத்தரித்தலும் அவர்களது வாழ்வுரிமையைப் பறிக்கும் செயலாகும். பெண்கள் பூப்படைந்ததை அடிப்படையாகக் கொண்டு மட்டும் அவர்கள் பருவமடைந்ததாக கருதக்கூடாது. கல்வி கேள்வி அறிவுகளால் மனதாலும் உடலாலும் பக்குவமடைந்த நிலையையே பருவமடைதல் எனக் கருத வேண்டும். மனப்பக்குவத்திற்கான வாய்ப்பினை அவர்களுக்கு அளிக்க வேண்டும். மனப்பக்குவமற்ற மயக்க நிலையிலேயே காதலும் கருத்தரித்தலும் கருக்கலைத்தலுமான செயல்கள் சமுதாயத்தில் அவசர அவசரமாக அரங்கேறுகின்றன.
பதின் பருவத்தைவிட வாலிபப் பருவம் கருத்தரிப்பதற்கேற்ற உடல் நிலையும், குழந்தையைப் பெற்றெடுத்து பேணி வளர்ப்பதற்குரிய மனநிலையும் உள்ள பருவமாகும். இப்பருவத்தில் திருமணம் செய்வதும், கருத்தரிப்பதும் தாய் சேய் நலத்திற்குரியதாகும். 2013-ஆம் ஆண்டு உலக மக்கள்தொகை தினத்தில் ஐக்கிய நாடுகள் சபை வாலிபப்பருவத்தின் கருத்தரிப்பினை வலியுறுத்துகின்றது.
பெண்ணின் நலத்தைப் பேணவும் கருகாலத்தில் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்கவும் கருத்தரித்தலுக்கு இடையேயான கால இடைவெளி மூன்றாண்டாக இருந்தால் 1.6 மில்லியன் பெண்களின் எதிர்காலம் பாதுகாப்பானதாக அமையும். வளரும் நாடுகளில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 500 மில்லியன். அவர்கள் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் உருவாக்குகின்றவர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.
ஒரு குடும்பத்தின் வாழ்க்கைத் தரம் அக் குடும்பத்தின் அளவினைப் பொறுத்தது. சமூகத்தின் மிகச்சிறிய அலகுதான் குடும்பம். சிறுதுளிதான் பெருவெள்ளமாகிறது. குடும்ப அளவு பொருளாதார வளத்தை நிர்ணயிக்கின்றது. சிறு குடும்பத்தில் மனஅழுத்தம் குறைவு. எனவே மகிழ்வு அகத்தில் முகிழ்கிறது. சிறு குடும்பத்தில் பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையேயான அன்பு, பிணைப்பு அதிகரிக்கிறது. ஆணோ பெண்ணோ ஒன்று போதும். வரவிற்கேற்ற செலவு செய். சிறுகக் கட்டி பெருக வாழ் என்பதெல்லாம் மகிழ்வான சிறு குடும்பத்திற்கான வழிகாட்டுதல்களாகும்.
மருத்துவர் கி.கூத்தரசன், தருமபுரி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மீனவர்களுக்காக விஜய் அளித்த வாக்குறுதிகள்!

அமர்நாத் யாத்திரை எப்போது?

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... மாதம் ரூ. 85,920 சம்பளத்தில் பஞ்சாப்-சிந்து வங்கியில் வேலை!

அதிரடியாக சதம் விளாசிய சஞ்சு சாம்சன்!
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை


