கீழடி ஸ்பெஷல்: சங்க கால மக்களின் எழுத்தறிவு கீறல்கள் / குறியீடுகள் 

இந்தியாவில் கிடைக்கப்பெற்ற வரிவடிவங்களில் காலத்தால்தொன்மையானது 4,500ஆண்டுகள் பழமை வாய்ந்த சிந்துவெளி வரிவடிவங்களாகும்.
 கீழடியில் நடைபெற்று வரும் 5-ஆம் கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்ட தொழில்கூடச் சுவர்.
 கீழடியில் நடைபெற்று வரும் 5-ஆம் கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்ட தொழில்கூடச் சுவர்.

இந்தியாவில் கிடைக்கப்பெற்ற வரிவடிவங்களில் காலத்தால்தொன்மையானது 4,500ஆண்டுகள் பழமை வாய்ந்த சிந்துவெளி வரிவடிவங்களாகும்.

சிந்துவெளி பண்பாடு மறைந்தற்கும் தமிழி எழுத்துகள் தோன்றியதற்கும் இடைப்பட்ட காலத்தில் ஒருவரிவடிவம் இருந்தது. அவ்வரிவடிவத்தினை ஆய்வாளர்கள் குறியீடுகள் என்றும் கீறல்கள் என்றும் அழைக்கின்றனர். இவற்றை சாதாரண கீறல்கள் என்று புறந்தள்ளிவிட இயலாது.

ஏனெனில், இவை சிந்துவெளி வரிவடிவத்தின் நீட்சியாகவும் தமிழி எழுத்துகளின் முன்னோடியாகவும் இருக்க வேண்டும். சிந்துவெளி எழுத்துகள் போன்றே இவற்றை படித்தறிதலும் முழுமைபெறவில்லை. செப்புக்கால பண்பாட்டிலும் அதன் தொடர்ச்சியாக பெருங்கற்கால பண்பாட்டில் இக்குறியீடுகள் கிடைக்கின்றன.

இத்தகைய குறியீடுகள் கருப்பு-சிவப்பு பானை ஓடுகளில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. இரும்புக் காலத்தில் ஊர் இருக்கைகளிலும், பெருங்கற்கால ஈமச்சின்னங்களிலும் காணப்படுகின்றன.

தமிழகத்தில் ஆதிச்சநல்லூர், கொற்கை, அழகன்குளம், கொடுமணல், கரூர், தேரிருவேலி, உறையூர், மாங்குளம், பேரூர் மற்றும் பிற தொல்லியல்சார் இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளிலும் குறியீடுகள் கொண்ட பானை ஓடுகள் கிடைத்துள்ளன. தமிழகம் மட்டுமின்றி இலங்கையில் திசமஹரம, கந்தரோடை, மாந்தை, ரிதியகாமா போன்ற ஊர்களிலும் இதுபோன்ற குறியீடுகள் கிடைத்துள்ளன.

இந்திய துணைக்கண்டத்தில் தமிழகத்தில் இவை பரந்த அளவில் சேகரிக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக தென்னிந்தியாவில் கண்டெடுக்கப்பட்டுள்ள குறியீடுகளில் 75 சதவீதம் தமிழகத்தில் கிடைக்கப்பெற்றவை என்பது சிறப்பாகும்.

தமிழிக்கு முந்தைய வரிவடிவமாக விளங்கிய குறியீடுகள் பெருங்கற்கால மற்றும் இரும்புக் கால மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் எழுத்துவடிவமாகும். கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டு இத்தகைய கீறல்கள் பொறித்த 1,001 பானை ஓடுகள் இரும்புக் காலம் தொட்டு இப்பகுதியில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர் என்பதை உணர்த்துகின்றன.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை குறியீடுகளுக்கு அடுத்து காணக்கிடைக்கின்ற வரிவடிவம் தமிழ்-பிராமி எழுத்து வடிவமாகும். இவ்வெழுத்தை தமிழி என்றும் பண்டைத் தமிழ் எழுத்துகள் என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

தமிழகத்தில் வரலாற்றுத் தொடக்ககாலத்தைச் சார்ந்த இடங்களில் நடைபெற்ற அகழாய்வுகளில் தமிழி எழுத்துப் பொறிப்பு பானை ஓடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. தமிழி எழுத்துகள் பொறிக்கப்பட்ட மோதிரங்கள் முந்தைய அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்டன. தமிழகத்தில் 32-க்கும் மேற்பட்ட ஊர்களில் சங்ககாலத்தைச் சார்ந்த தமிழி எழுத்துப் பொறிக்கப்பட்ட 110 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இவை பத்மஸ்ரீ ஐராவதம் மகாதேவன் அவர்களால் படித்தறியப்பட்டு நூலாக வெளியிடப்பட்டுள்ளன. கீழடி அகழாய்வில் தமிழி எழுத்துப் பொறிக்கப்பட்ட 56 பானை ஓடுகள் தமிழ்நாடு அரசு, தொல்லியல் துறை மேற்கொண்ட அகழாய்வில் மட்டும் சேகரிக்கப்பட்டுள்ளன.

இவற்றில் குவிரன் ஆத[ன்], ஆதன் போன்ற ஆட்பெயர்களும், முழுமைபெறாத சில எழுத்துகளுடன் கூடிய உடைந்த பானை ஓடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. இதில் வரும் “ஆதன்” என்ற பெயர் “அதன்”என்று குறிப்பிடப்பட்டுள்ளது. காலத்தால் முந்திய தமிழியில் உயிர்குறில் வடிவத்திலிருந்து உயில்நெடிலை வேறுபடுத்திக் காட்ட ஒலிக்குறியீடு இடும் வழக்கம் இல்லை என்பதை கா.இராஜன் தமது Early Historic Writing Sytem: A Journey from Graffiti to Brahmi என்ற நூலில் தெளிவுபடுத்தியுள்ளார். இந்நிலை உயிர் எழுத்துக்களில் மட்டுமே காணப்படுகிறது. 

எனவே, கீழடி தமிழி எழுத்து பொறிப்புகள் காலத்தால் முந்தியவை என்பதை நமக்கு உணர்த்துகின்றன.


சங்க கால மக்களின் எழுத்தறிவு (High Literacy level of the sangam age)


இவ்வெழுத்துகள் பானையின் கழுத்துப்பகுதியின் கீழ் பொறிக்கப்பட்டுள்ளன. பொதுவாக எழுத்துப் பொறிப்புகளை பெரும்பாலும் பானை வனையும்போது ஈரநிலையில் எழுதுவது அல்லது பானை உலர்ந்த பின்னர் கூர்மையான பொருளைக்கொண்டு எழுதுவதும் மரபாகும். பானை வனையும்போது பானை செய்வோர் மட்டுமே எழுத வாய்ப்புள்ளது. கீழடியில் கிடைக்கப்பெற்றுள்ள பெரும்பாலான தமிழி (தமிழ்-பிராமி) எழுத்துப்பொறிப்புகள் பானை வனைந்து உலர்ந்த பின்னர் பொறிக்கப்பட்டவையாக காணப்படுகின்றன. பானை ஓடுகளில் எழுதப்பட்ட எழுத்துகள் ஒரே எழுத்தமைதியில் இல்லாமல் வெவ்வேறான எழுத்தமைதியில் உள்ளதால், இவற்றை பானையின் உரிமையாளர்கள் பொறித்திருக்க வாய்ப்புள்ளது. அதனடிப்படையில், அக்காலமக்கள் கி.மு.6-ஆம் நூற்றாண்டளவிலேயே எழுத்தறிவு பெற்றவர்களாக விளங்கினர் என்பதை உறுதி செய்யலாம்.

அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட 17 பானை ஓடுகள் அவற்றிலுள்ள தனிமங்களைக் கண்டறியும் சோதனைக்காக இத்தாலியிலுள்ள பைசா பல்கலைக் கழகத்தின் புவிஅறிவியல் துறைக்கு வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மூலமாக அனுப்பிவைக்கப்பட்டன.

பானை ஓடுகளில் காணப்பட்ட கனிமங்கள், பாறைத் துகள்களின் தன்மை, மேலும் அவற்றின் பயன்பாடு குறித்து ஆய்வு முடிவுகள் பெறப்பட்டுள்ளன.

கீழடியில் கிடைக்கப்பெற்ற, தண்ணீர் சேகரிக்கவும், சமையலுக்காகவும் பயன்படுத்தப்பட்ட பானைகள் தனித்த பானை வனைவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உள்ளூரிலேயே வனையப்பட்டவை என்பது உள்ளூர் மண் மாதிரியை ஒப்பீட்டாய்வு செய்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கீழடி அகழாய்வில் இரண்டு இடங்களில் 4 மீட்டர் அளவுக்கு மேல் மிகப்பெரிய அளவில் பானை ஓடுகளின் குவியல்கள் கண்டறியப்பட்டதைக் கருத்தில் கொண்டு கீழடியில் பானை வனையும் தொழிற்கூடம் செயல்பட்டிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வரலாம்.

அடுத்து, கீழடியில் கிடைத்த கருப்பு - சிவப்பு நிறப் பானை ஓடுகள் (Black and Red ware) சிலவற்றின் மாதிரிகள் நிறமாலையியல் பகுப்பாய்வு (Spectroscopic Analysis) சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அந்த ஆய்வு முடிவுகளின் மூலம், கருப்பு-சிவப்பு நிறப் பானை ஓடுகளின் சிவப்பு நிறத்திற்கு இரும்பின் தாதுப் பொருளான ஹேமடைட் என்பதையும், கருப்பு நிறத்திற்கு கரிமப் பொருளான கரியையும் பயன்படுத்தியுள்ளது தெரிய வருகிறது. இக்கருப்பு-சிவப்பு நிறப்பானைகளை 1100கு செ வெப்பநிலையில் சுட்டு உருவாக்கும் தனித்தன்மை வாய்ந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளனர்.

கீழடியில் கிடைத்த மட்பாண்டங்களின் தொழில்நுட்பம், தனிமங்களின் கலவை, களிமண்ணின் தன்மை ஆகியவை கி.மு. 6-ஆம் நூற்றாண்டிலிருந்து கி.மு.2-ஆம் நூற்றாண்டு வரை ஒரே மாதிரியாக இருந்துள்ளன என இத்தாலியின் பைசா பல்கலைக் கழக அறிக்கையில் தெரிய வருகிறது. சில பானை ஓடுகளின் மாதிரிகள் தமிழகத்தின் பிறபகுதியில் உள்ள மண்தன்மையை ஒத்திருப்பதாகவும், அது கி.மு. 2-ஆம் நூற்றாண்டிற்குரியது என்றும் ஆய்வறிக்கை விளக்குகிறது. எனவே, இதன்மூலம் வணிகர்கள், தொழில் சார்ந்தோர், பயணியர் ஆகியோரிடையே நிலவிய வணிக பரிமாற்றங்கள் உறுதியாகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com