Enable Javscript for better performance
Kezhadi and Arikkamedu Archaeological Excavations- Dinamani

சுடச்சுட

  

  கீழடி ஸ்பெஷல்: கீழடியும் அரிக்கமேடு தொல்லியல் அகழாய்வுகளும் ஒப்பீடு

  By C.P.சரவணன், வழக்குரைஞர்  |   Published on : 17th October 2019 04:34 PM  |   அ+அ அ-   |    |  

  arikkamedu

  Arikkamedu Archaeological Excavations

   

  பண்டைய தமிழர்களின் வணிக நகரம் – அரிக்கமேடு
  அரிக்கமேடு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய சிற்றூர். மார்டிமர் வீலர் [1945], மேரி கஸால் [1947 – 1950] மற்றும் விமலா பெக்லி [ 1989 – 1992] ஆகியோர் தாங்கள் மேற்கொண்ட அகழ்வாய்வுகளின்படி அரிக்கமேடு, இரண்டாயிரம் ஆண்டு முன்பு கிழக்கு கடற்கரையில் புகழ்பெற்ற வணிகத்தலமாக இருந்திருக்கும் என தெரிவித்துள்ளார்கள். 

  அகழ்வாய்வின் போது ரோமப் பேரரசனாகிய அகஸ்டஸ் சீசரின் [காலம் கி.மு. முதலாம் நூற்றாண்டு] தலை உருவம் பொறித்த காசு, பிராமி எழுத்துகள் உள்ள பானை ஓடுகள், பல நிறத்திலான உருக்கு மணிகள், உறைகிணறுகள், சங்கு வளையல்கள், கண்ணாடி மணிகள், பொன்னாலான கழுத்தணிகள் காதணிகள் என பல பொருள்களை கண்டெடுத்துள்ளனர். இதுவே தொல்லியல் அகழாய்வுகள் மண்ணடுக்கியல் (stratigraphy) நெறிமுறையைப் பயன்கொண்டு செய்யப்பட்ட முதல் தளம். அவர் இத்தளத்தை கி.மு. 2 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2 ஆம் நூற்றாண்டு வரையானது என நாள்குறித்தார். அவருடைய அகழாய்வில் பெரும் எண்ணிக்கையில் பானை ஓட்டு பிராமிப் பொறிப்புகள், உரோமர் மட்கலங்கள், உரோமக் காசுகள், உரோமர் குடியேற்றங்கள் ஆகியன கண்டறியப்பட்டன. அவர் இதன் காலக் கணக்கீட்டை கருப்பு - சிவப்புநிற மட்கலன்கள், உரோமக் காசுகள் ஆகியவற்றின் அடிப்படையில் பொருத்தினார்.

  சென்னைப் பல்கலைக் கழகத்தின் பண்டை வரலாறு மற்றும் தொல்லியல் துறை 1991 - 1993 ஆகிய ஆண்டுகளில் இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறை உடனுழைப்போடு (collaboration) இத்தளத்தில் மற்றுமொரு அகழாய்வைப் பொறுப்பேற்று நடத்தியது. இந்த அகழாய்வுகள் சொல்லும் அளவிற்கு பெரிதாக எந்த தொல்பொருள்களையும் ஈட்டித் தரவில்லை. மட்கலங்களான கருப்பு - சிவப்புநிற மட்கலம் போன்றனவும் சிறு தொல்பொருள்களான மணிகள் வளையல்கள் போன்றனவுமே சிறு அளவில் கண்டறியப்பட்டன என்பது முனைவர் வீலரால் தரப்பட்ட காலக்கணக்கீட்டைப் பெரிதும் உறுதி செய்கின்றது. இந்த அகழாய்வுகள் மேலதிகமான சான்றுகளைப் பெறும் நோக்கிலேயே நிகழ்த்தப்பட்டன.

  தமிழகத்தின் கிழக்குக் கடற்கரையோரம் பண்டைக்காலத்தில் பல வணிகத்தளங்கள் இருந்தன. அவற்றுள் மாமல்லபுரம், எயில்பட்டினம் (மரக்காணம்), அரிக்கமேடு (Arikkamedu), காவிரிப்பூம்பட்டினம், கொற்கை முதலியன குறிப்பிடத்தக்கன. மேற்கண்ட ஊர்களுள் அரிக்கமேடு என்பது புதுவை மாநிலத்தின் புகழ் சேர்க்கும் முகவரிப் பகுதியாக விளங்குகிறது.

  (ஆங்கிலத்தில் ARIKAMEDU) அரிக்கமேடு என்னுமிடம், தென் இந்தியாவின் பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தின் அருகிலுள்ள தொல்பொருளாய்வு சார்ந்த இடமாகும்.சோழர் காலத்தில் அரிக்கமேடு ஒரு மீனவ கிராமமாக இருந்து. இங்கிருந்து ரோம் நகருடன் வாணிபம் நடைபெற்றது என்று அகழ்வாராய்ச்சி தெரிவிக்கின்றது .

  புதுச்சேரிக்குத் தெற்கே ஆறு கிலோ மீட்டர் தூரத்தில் அரியாங்குப்பம் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. அரியாங்குப்பம் ஆற்றின் வலது கரையில் அரிக்கமேடு அமைந்துள்ளது. அந்த இடத்தில், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கியோடிய ஆறு வளைந்து வடக்கு நோக்கிச் சென்று பின்னர் கடலில் கலக்கிறது. அரிக்கமேடு அழகான அமைதியான இடம் என்பது மட்டுமின்றி அங்கு வெளிநாட்டு வாணிபம் மிகச் செழிப்புற்று வளர்ந்திருந்திருக்கிறது என்பதும் கவனத்திற்குரியது ஆகும். இந்த இடம் எவ்வளவு வளத்துடனும் வனப்புடனும் விளங்கியது என்பதை அங்குள்ள திருமிகு "பிஞ்ஞோ தெ பெகெய்ன்" (MGR PIGNAY DE BEHAINE) என்ற கிறித்துவ மதகுருவின் அழகிய வீடு நமக்கு நன்கு புலப்படுத்துகிறது. இந்த வீட்டை மக்கள் "அத்ரான் சாமியார் வீடு" என்று அழைத்து வந்தனர். இந்த வீடு 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை, புதுச்சேரியில் இருந்த "கிருத்து சபைக்கு" (MISSIONS ETRANGERES) சொந்தமாக இருந்தது. அங்கு பாடசாலைகளும், ஓய்வு இல்லங்களும் நடத்தப்பட்டு வந்தன. தற்போது இச்சாமியாரின் வீட்டின் முகப்பின் ஒரு சிறு பகுதியும், பிற்பகுதி முபுவதும் இடிந்து கிடப்பதைக் காணலாம். இவை அடர்ந்த மாந்தோப்பின் நடுவில் காணப்படுகின்றன. மரங்கள் அடர்ந்து காணப்பட்டாலும், முறைப்படி திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட தோட்டத்தின் அமைப்பு காணப்படுகிறது. இந்த வீட்டிற்கு மேற்கே 150 மீட்டர் தொலைவில் அரியாங்குப்பம் ஆறு ஓடுகிறது.

  1937-ஆம் ஆண்டு "திரு.ழுவோ துய்ப்ரேய்" என்றழைக்கப்படும் பேராசிரியர், புதுச்சேரி பிரெஞ்ச்சுக் கல்லூரியில் பணிபுரிந்து வந்தார். இவர் ஒரு பிரெஞ்சுக்காரர். இவர் ஒருமுறை அரிக்கமேடு பகுதிக்கு உலாவச் சென்றார். அங்குச் சிதறிக்கிடந்த சிறு சிறு பொருட்களும் கண்ணாடித் துண்டுகளும்,சில அரியகற்களும். பளபளக்கும் பல்வகைக் கற்களும் அவரது கவனத்தைக் கவர்ந்தன. இக்கற்களை அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் அவரிடம் கொண்டு வந்து கொடுத்தனர். திரு. துய்ப்ரேய் அவர்களுக்கு மிட்டாய், பணம் அல்லது வேறு ஏதாவது பரிசுப் பொருட்கள் கொடுப்பார். இப்பரிசுப் பொருட்களால் கவரப்பட்ட சிறுவர்கள் மேலும் மேலும் பொருட்களை சேமித்து அவரிடம் கொண்டுவந்து கொடுப்பதில் ஆர்வம் காட்டினர்.

  அரியாங்குப்பம் ஆற்றை ஒட்டிய பகுதியில் பழங்கால அரிக்கமேட்டுப் பகுதியை அகழாய்வு வழி அடையாளம் கண்டுள்ளனர். மிகப்பரந்து விளங்கிய அரிக்கமேடு கடல் அரிப்பாலும் இயற்கை மாற்றங்களாலும் மிகச்சிறிய தீவுப்பகுதியாக இன்று விளங்குகிறது.

  மேலும் அறிய.. கீழடி ஸ்பெஷல்:  கீழடி-கொடுமணல் தொடர்புகள்

  அரிக்கமேடு கி.மு. 200 முதல் கி.பி. 200 வரை புகழ்பெற்ற வணிகத்தளமாக விளங்கியது. வரலாற்றியல், தொல்லியல் அறிஞர்கள் இதனைக் குறிப்பிடுகின்றனர். அயல்நாட்டுப் பயணிகளான பெரிப்புளுஸ், தாலமி முதலானவர்கள் காவிரிப் பூம்பட்டினத்திற்கும் மரக்காணத்திற்கும் இடையே "பொதுகே' என்னும் வணிகத்தலம் (எம்போரியம்) இருந்துள்ளது எனக் குறித்துள்ளனர். பொதுகே என்பது இன்றைய புதுவை சார்ந்த அரிக்கமேடு பகுதியாகும் என மார்ட்டின் வீலர், கசால், விமலா பெக்லி, பீட்டர் பிரான்சிஸ் முதலானவர்கள் கருதுகின்றனர்.

  அரிக்கமேட்டுப் பகுதியை இன்று பார்வையிடச் சென்றால் இன்று நமக்குப் பழந்தமிழக அகழாய்வுக் காட்சிகள் எதுவும் காண முடியாத படி மேட்டுப்பகுதியாக மாமரத்தோப்புகளாக மட்டும் காட்சியளிக்கும். ஏனெனில் இங்கு ஆய்வு செய்த அறிஞர்கள் தங்கள் ஆய்வினை நிறைவு செய்த பிறகு அவற்றைப் பாதுக்காப்பாக மூடி விட்டனர். ஆனால் அரியாங்குப்பம் ஆற்றின் கரையோரம் மண்ணரிப்புகளுக்கு இடையே பழைய பானை ஓடுகள், செங்கல், கட்டடச் சுவர் அமைப்புகளின் எச்சம், சிறு சிறு மணிகள் இவற்றை இன்றும் கீழே கிடக்கக் காணலாம்.

  இதையும் படிக்கலாம்.. அழிவின் விளிம்பில் அரிக்கன்மேடு

  தொல்பொருள் ஆய்வுத்துறை ஏறத்தாழ 21 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்திப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக மாற்றி வைத்துள்ளது. இப்பகுதியில் கி.பி. 17ஆம் நூற்றாண்டு அளவில் கட்டப்பட்டதாக நம்பப்படும் கட்டிடச் சுவர்களின் மேல் பகுதியைக் காணலாம். அழகிய செங்கல் கொண்டு கட்டப்பட்டுள்ளது. இக்கட்டடச் சுவரின் இடையே மிக அகலாமான, நீளமான கற்கள் இடம்பெற்றுள்ளன. இவை பழைய அரிக்கமேட்டுக் கல் என நம்புவோரும் உண்டு.

  அரிக்கமேடு பண்டைக்காலத்தில் பெருமைமிக்க ஊராகப் புகழுடன் இருந்தது. கடற்கோளோ, இயற்கைச் சீற்றமோ, சமய மதப் பூசல்களோ, அயல் நாட்டினரின் படையெடுப்போ இவ்வூரின் பெருமையை அறிய முடியாமல் செய்துவிட்டது. ஆங்கிலேயர்களும் பிரெஞ்சுக்காரர்களும் தமிழகத்தின் பகுதிகளைக் கைப்பற்றியபோது பிரெஞ்சுக்காரர்களின் ஆளுகைக்குப் புதுச்சேரி வந்தது.

  1940 அளவில் அரிக்கமேட்டுப் பகுதியில் பூமியில் தென்னம்பிள்ளை நட குழிதோண்டிய பொழுது மண்சாடி, மட்பாண்ட ஓடுகள் கிடைத்தன. இதன் விளைவாக 1944இல் மார்ட்டின் வீலர் அரிக்கமேடு பகுதியில் பல்வேறு உண்மைகள் மறைந்து இருக்குமென நினைத்து அகழாய்வில் ஈடுபட்டார். இதில் பல்வேறு உண்மைகள் வெளியுலகிற்கு தெரியவந்தன.

  அரிக்கமேட்டுப் பகுதியில் கிடைத்த பொருட்கள்
  அரிக்கமேட்டுப் பகுதியில் அகழாய்வு செய்துப் பார்த்த அறிஞர்கள் அழகிய செங்கல் சுவர், ஈமத்தாழிகள், பலவண்ண மணிகள், பலவகை ஓடுகளைக் கண்டுபிடித்துள்ளனர். இங்குக் கிடைக்கும் பல்வேறு மணிகளை ஒத்துக் கிழக்குக் கடற்கரையின் பழந்தமிழக நகரங்களிலும் மணிகள் கிடைக்கின்றன. கழிமுகப்பகுதிகளில், கிடைத்த ஓடுகளில் தமிழிஎழுத்துகள் இடம்பெற்றுள்ளன.

  பதினொரு அடி ஆழத்தில் ஒரு மண்டை ஓடும், பூணைக்கண் மணிகளும் கிடைத்துள்ளன. மணி உருக்குச் சட்டங்கள். சாயக்கலவை படிந்த ஓடுகள், கோமேதகக் கல், பச்சைமணிக்கல், படிகமணிகள், அரைத்தான் ஓடுகள், ரோமாணிய காசு, மோதிரம், உறைகிணறுகள் முதலியன குறிப்பிடத்தக்க பொருள்களாகும். இங்குக் காணப்படும் உறைகிணற்றில் சாயம் படிந்து காணப்படுவதால் துணிகளுக்குச் சாயம் ஏற்றும் தொழில் இங்கு நடைபெற்று இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

  அரிக்கமேட்டுப் பகுதியில் பல்வேறு வடிவங்களில் மணிகள் கிடைப்பதாலும், அவற்றில் வேலைப்பாடுகள் காணப்படுவதாலும் இங்கு மணி உருக்குத் தொழிற்சாலைகள் இருந்தனவோ என்று எண்ண வேண்டியுள்ளது.

  பண்டைக்காலத்தில் மணிகளை உருக்கி, காய்ச்சி, துளையிட்டு, தூய்மை செய்து மணிகளை உருவாக்கியுள்ளனர். இங்கு நீலமணி, பச்சைமணி, ஊதாமணி, கருப்பு மணி மிகுதியாகக் கிடைத்தன. தங்கக் காசுகளும் செப்புக் காசுகளும் அரிக்கமேட்டில் கிடைத்துள்ளன. ஏறத்தாழ 200 வகையான மட்பாண்ட ஓடுகள் இங்குச் சேகரிக்கப்பட்டுள்ளன.பானை ஓடுகளில் "அண்டிய மகர்', அந்தக, ஆவி, ஆமி, ஆதித்தியன் எனும் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன.

  கூர்முனை சாடிகளில் பழச்சாறு தயாரித்து மண்ணில் புதைத்து உண்டுள்ளனர். பழங்காலத்தில் அயல்நாட்டினரை (ரோமானியர்) யவனர் என்றழைத்தனர். இவர்கள் மது அருந்தும் இயல்பு உடையவர்கள். இந்த யவனர்கள் மிகுதியாக இப்பகுதியில் தங்கியிருந்தமைக்குக் கூர்முனைச்சாடிகள் சான்றுகளாக உள்ளன.

  எலும்பில் அமைந்த எழுத்தாணி, தங்கத்தில் செய்த கலைப்பொருள், மீன் முள்ளாலான கலைப்பொருள்கள் கிடைத்துள்ளன. சுடுமண் பொம்மைகளில் மனித உருவங்கள் கலைநுட்பத்துடன் காட்டப்பட்டுள்ளன. முடி, முலை, முகம் சிறப்புடன் காட்டப்பட்டுள்ளன. கிளிஞ்சல், சங்கு இவற்றால் செய்த பொருள்களும் கிடைத்துள்ளன. உரோமானிய விளக்கு, மரச்சாமான்கள், வடகயிறு, மரச்சுத்தி முதலான மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்கள் அரிக்கமேட்டு அகழாய்வில் கிடைத்துள்ளன.

  கீழடி ஸ்பெஷல்: சங்க கால மக்களின் எழுத்தறிவு கீறல்கள் / குறியீடுகள் 

  ரோமப் பேரரசன் அகஸ்டஸ் தலை பொறித்த காசு அரிக்கமேட்டில் கிடைத்துள்ளது. அவன் வாழ்ந்த காலம் கி,மு. இருபத்து மூன்று முதல் கி.பி. பதிநான்கு வரை. அக்காலத்தில் அரிக்கமேடு சிறந்த வாணிபத்தலமாக விளங்கியது. அரிக்கமேட்டில் கிடைத்த மணிகள், மட்பாண்ட ஓடுகள் ஆகியவற்றைக் கொண்டு அவ்விடம் 2000 ஆண்டுகாலப் பழைமையுடையது எனக் கருதுகின்றனர். அரிக்கமேட்டில் கிரேக்க ரோமானியர்கள் வந்து தங்கி ஏற்றுமதி, இறக்குமதி செய்தனர். துணி நெய்தல், மட்பாண்டம் செய்தல், மணிவகைகள் செய்தல், சங்கு வளையல் செய்தல், உருக்கு மணி செய்தல் ஆகியவற்றில் ஈடுபட்டனர். அங்குப் பெரிய நகரமே புதையுண்டு கிடக்கிறது. இவற்றிற்கு அடையாளமாகப் பல சாயத்தொட்டிகள், உறைக் கிணறுகள் அங்கு கிடைத்து வருகின்றன. அரிக்கமேட்டில் உருக்குமணி (Beads) செய்தல் நடைபெற்றுள்ளது. உருகுந் தன்மையுடைய மணற் பொருட்களைச் சூளையிலிட்டு உருகச்செய்து வண்ணமேற்றி நீண்ட இழைகளாகச் செய்து, அதனுள்ளே காற்றைச் செலுத்தி ஊது குழலாக்கிச் சூடு குறைந்த பின்னர் சிறு சிறு துண்டுகளாக வெட்டி மணிகள் செய்து மெருகூட்டி மணிமாலையாகக் கோர்த்துள்ளனர். கருப்பு, நீலம், ஊதா, மஞ்சள், சிவப்பு, பச்சை முதலிய நிறங்களில் மணிகள் செய்யப்பட்டுள்ளன. அங்கு அகழ்வாராய்ச்சி செய்தபோது மணி செய்த சிட்டங்களும், கச்சாப் பொருட்களும் உருக்குக் கிண்ணங்களும் கிடைத்துள்ளன.

  ஒளியூடுருவக் கூடிய கண்ணாடிக் கற்களைக் கொண்டு மணிகள் (Semi precious stones), செய்தனர். நீலக்கல், பச்சைக்கல், சிவப்புக்கல், கோமேதகம் முதலிய கற்களைச் சிறு சிறு துண்டுகளாக வெட்டிப் பட்டை தீட்டித் துளையிட்டு, மெருகேற்றி மணியாக்கினர். கடினமான கற்களில் மெல்லிய துளையிட்டுள்ளதைக் காணும்போது அவர்களின் கைவினைத்திறம் தெளிவாகப் புரிகிறது. இதனைக் கண்ணாடி மணிகளென்பர் (Glass Beads). கடலில் கிடைக்குஞ் சங்குகளைக் கொண்டுவந்து அறுந்து பட்டை தீட்டி, மெருகேற்றி மணியாகவும், வளையலாகவும், மோதிரமாகவும் செய்துள்ளனர். அரிக்கமேட்டில் பொன்னால் செய்யப்பட்ட கழுத்தணிகள், காதணிகள், மூக்கணிகள் ஆகியவை கிடைத்துள்ளன. அரியாங்குப்பத்து ஆறு, வெள்ளப் பெருக்கெடுத்தோடி மண்ணை அரித்து விடுகிறது. அப்படி அரிக்கப்பட்ட பகுதியே அரிக்கமேடு என்பர் சிலர். அங்கே அருகன் சிலையுள்ளது. ஆதலால் அருகன்மேடு - அருக்கன்மேடு - அரிக்கன் மேடு - அரிக்கமேடு என வழங்கப்பட்டதென்பர் சிலர். இங்குள்ள சிலை பர்மாவிலிருந்து கொண்டுவரப் பட்டதென்றும் அதனால் அது பர்மாக் கோயிலென வழங்கப் பட்டதென்றும், பின்னாளில் பிருமன் கோயில் - பிர்மன் கோயில் என்று மருவியது எனவும் கூறுகின்றனர். 

  அயல்நாட்டார் குறிப்பிடும் புதுச்சேரி

  புதுச்சேரியை பண்டைய அயல்நாடு வரலாற்று ஆசிரியர்கள் பெரிப்ளூஸ் என்னும் நூலில் (The Periplus of the Erytheraean Sea) பொதுகெ (Podouke) என்றும், தாலமி (Ptolemy) எழுதிய நூலில் பொதுகா (Podouka) என்றும் குறிப்பிட்டுள்ளனர். இதே போல், தமிழகக் கடற்கரையை டிரிமிக்கா எனவும், காவிரிப்பூம் பட்டினத்தைக் காமரா எனவும், மரக்காணத்தை சொபட்னா (சோபட்மா) எனவும் அவர்கள் அழைத்தனர். அதற்கேற்றாற்போல் அரிக்கமேட்டில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகள், அங்கு கி.மு. முதல் நூற்றாண்டுக்கு முற்பட்டவொரு வணிகத் துறைமுக நகரம் இருந்ததைக் காட்டுகின்றன.

  சங்க இலக்கியமும் புதுச்சேரியும் 

  புதுச்சேரியில் வாழ்ந்ததாகக் கூறப்படும் வீரை வெளியனாரும், வீரை வெளியந்தித்தனாரும் பாடிய பாடல்கள் இலக்கிய சான்றுகளாகத் திகழ்கின்றன. தமிழ் இலக்கியங்களில் காலத்தாற் பழைமையானவை சங்க இலக்கியங்கள். அவை கி.மு. 500 ஆண்டுகளை மேல்எல்லையான உடையன. அவற்றில் வீரை வெளியனார், வீரை வெளியந்தித்தனார் என்னும் புலவர்களின் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. வீரைவெளி என்னும் ஊர், புதுச்சேரிப் பகுதியிலுள்ள ஒரு சிற்றூராகும். வீரர்வெளி என்பதே வீரைவெளியென மருவியது என்பர். அப்பகுதியில் வாழ்ந்தவர்களாக இவ்விரு புலவர்களையும் கருத இடமுண்டு. வீரைவெளியனார் பாடல் அகநானூற்றில் முன்னூற்று இருபதாம் பாடலாகவும், வீரைவெளியன் தித்தனாரின் பாடல் அந்நூலில் நூற்று எண்பத்தெட்டாம் பாடலாகவும் காணப்படுகின்றன. இவ்விருவரும் ஒருவரே எனக்கருதுவாரும் உண்டு.

  அரியாங்குப்பம் ஆற்றால் அரணிட்டுக் காக்கப்படும் அரிக்கமேட்டுப் பகுதியில் நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தித் தொடர் ஆய்வு செய்வதால் பழந்தமிழகத்தின் பெருமையையும் அயல்நாட்டுடன் கொண்டிருந்த கப்பல் வழி வணிகத்தையும் நிலைநாட்ட முடியும். கிட்டத்தட்ட மூன்று கிலோ மீட்டர் அளவிற்கு பூமிக்கு நெடுக புதைந்துள்ள ஒரு மாபெரும் நகரம். அருகிலுள்ள ஆற்றிலும் மறைந்துள்ளது .

  அரிக்கமேடு - கீழடி அகழாய்வுகள் ஒப்பீடு செய்ய வேண்டியுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai