

இங்கிலாந்தில் வசித்த ஒரு பெண்மணி கவர்னரிடம் ஒரு விண்ணப்பம் கொடுத்தார். அந்த விண்ணப்பத்தில் தங்கள் ஊரில் ஓர் அனாதை விடுதி கட்ட இடம் ஒதுக்கித் தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தார்.
கவர்னரோ அந்தப் பெண்மணிக்கு ஒரு இடத்தை ஒதுக்கினார். ஆனால் என்ன துரதிர்ஷ்டம்! அனாதை விடுதிக்காக ஒதுக்கப்பட்ட அந்த இடம் பாறைகள் சூழ்ந்த இடமாக இருந்தது.
சமூக அக்கறை மிகுந்த, இறை நம்பிக்கை அதிகமாயிருந்த அந்தப் பெண்மணிக்கு இது குறித்துக் கவலையாக இருந்தது. ஏனென்றால் பாறைகளை உடைத்து அங்கு கட்டடம் கட்டுவதற்கு மிக அதிகமாகச் செலவு ஆகும்போல் இருந்தது. அந்தப் பெண்மணியுடன் இருந்தவர்கள் மிகவும் சோர்வுற்று திட்டத்தைக் கைவிடலாம் என அறிவுறுத்தினர். ஆனால் பெண்மணி தளரவில்லை. இறைவனிடத்தில் அந்தப் பெண்மணிக்கு தீவிர விசுவாசம் இருந்தது. கர்த்தரின் படத்தை வைத்துக்கொண்டு தீவிரமாகப் பிரார்த்தனை செய்தார்.
சில நாட்கள் கழிந்தன. ஒரு ஒப்பந்ததாரர் அந்தப் பெண்மணியைச் சந்தித்தார்.
ஒப்பந்தக்காரர் அந்தப் பெண்மணியிடம், "சகோதரி!.... நான் புதிதாகக் கடலில் ஒரு பாலம் கட்ட ஒப்பந்தம் செய்துள்ளேன். அதற்கு நிறைய கற்கள் தேவை. தங்கள் நிலத்திலுள்ள பாறைகளை உடைத்துக்கொள்ள அனுமதி தருவீர்களா? நீங்கள் கேட்கும் தொகையை நான் உங்களுக்குத் தருவேன்!''
அந்தப் பெண்மணிக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது! உடனே சம்மதித்தார். அதனால் பெருந்தொகை அந்தப் பெண்மணிக்குத் தரப்பட்டது! ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல் கடவுள் அவரது பிரார்த்தனைக்குச் செவி சாய்த்துவிட்டார். கிடைத்த பெரும் தொகையைக் கொண்டு விடுதியையும் வெற்றிகரமாகக் கட்டி முடித்துவிட்டார்.
துணைக்கு வந்த கடவுளின் கருணையை நினைத்து அவர் கண்களில் நீர் திரண்டது! இறைவனுக்கு நன்றி கூறிப் பிரார்த்தனையைத் தொடர்ந்தார் அந்தப் பெண்மணி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.