நீதிக் கதைகள்! தர்மம் தலை காக்கும்!

குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டிய நீதிக் கதை.
நீதிக் கதைகள்! தர்மம் தலை காக்கும்!
Updated on
2 min read

சிவராஜன் ஒரு செல்வந்தர். நற்காரியங்கள் பலவற்றைச் செய்துவருபவர். தானம் என்று கேட்பவர்களுக்குத் தன்னாலான உதவிகளைச் செய்பவர். அவரிடம் ஒரு உண்டி இருந்தது.

அதன் அருகில் உண்டியலின் சாவியும் இருந்தது!.அதில் அவர் செய்யும் ஒவ்வொரு நற்காரியங்களுக்கும் ஒரு சிறு வெள்ளி நாணயத்தை அந்த உண்டியலில் போடுவார்! அது வெறும் பெருமைக்காக அல்ல!... வருட முடிவில் அதில் ஏராளமான வெள்ளிக் காசுகள் சேர்ந்து விடும்! அதை அவர் ஊரில் நடைபெறும் பொதுக் காரியங்களுக்காகக் கொடுத்து விடுவார். இப்போது அதில் கொஞ்சம் வெள்ளி நாணயங்கள் சேர்ந்திருந்தன.

சிவராஜன் வியாபார நிமித்தமாக வெளியூர் செல்ல நேரிட்டது. அவரது செல்லப் பெண் கோமதியைக் கூப்பிட்டு, "நான் வியாபார விஷயமா வெளியூர் போறேன்....இந்தா,.... இருபது வெள்ளி காசுகளை நான் உங்கிட்டே தந்துட்டுப் போறேன்.......பசி என்றோ பொருளுதவி கேட்டோ யாராவது வந்தால்... உதவி செய்!... அம்மாவிடம் பணம் தந்துட்டுப் போறேன்...வீட்டில் செய்யும் ஒவ்வொரு தர்ம காரியங்களுக்கும் இந்த உண்டியலில் ஒரு வெள்ளிக் காசைப் போட்டுவிடு!...." என்று கூறிவிட்டு வெளியூருக்குச் சென்று விட்டார்.

சில நாள்கள் கழிந்தன. ஊருக்குச் சென்ற சிவாராஜன் திரும்பி வந்தார்.

"கோமதீ...கோமதீ!..." என்று தன் செல்ல மகளைக் கூப்பிட்டார்.

"என்னப்பா?"

"ஒண்ணுமில்லேம்மா.... அந்த உண்டியலையும், சாவியையும் எடுத்துக்கிட்டு வா!..."

"இந்தாங்கப்பா!"

உண்டியலை வாங்கிக்கொண்ட அவர் அதன் பூட்டைத் திறந்து பார்த்தார்! அவருக்கு அதிசயமாக இருந்தது! அதில் ஒரே ஒரு வெள்ளி நாணயம்தான் இருந்தது!

"என்னம்மா இது?... நான் போகும்போதே இதில் கொஞ்சம் வெள்ளி நாணயங்கள் சேர்ந்திருந்தனவே...என்ன ஆச்சு? "

"இல்லைப்பா... அது வந்து...."

"சொல்லும்மா!..."

"ஒரே ஒரு தர்ம காரியம்தான் அம்மா செஞ்சாங்க.... நீங்க ஊருக்குப் போயிருந்தப்போ ஒரு வயசான தாத்தா வந்தாரு.... அவரு பேரு, ஊரெல்லாம்கூட ஒரு காகிதத்திலே எழுதி வெச்சிருக்கேன்!... அவரு தன்னோட பேத்திக்குக் கல்யாணம்....பத்திரிகையோடு வந்திருந்தார். பிள்ளை, மருமகள் கிட்டே பணமில்லாம தவிக்கிறாங்கன்னு சொன்னாரு.... நீங்க அம்மா கிட்டே கொடுத்திருந்த பணம் போதாது போல எனக்குத் தோணிச்சு!.... அதனாலே அந்த வெள்ளிக்காசு உண்டியலைத் திறந்து பார்த்தேன்!.... அதில் சுமார் 81 வெள்ளிக்காசு இருந்தது!..... என் கிட்டே நீங்க கொடுத்த வெள்ளிக்காசு இருபது இருந்தது! ஒரு காசை நான் எடுத்துக்கிட்டு அவருகிட்டே 100 வெள்ளிக்காசைக் கொடுத்தேன்! அது அந்தத் தாத்தாவுக்கு ஓரளவுக்கு உதவியா இருக்கும்னு தோணிச்சு!..." எனறாள் கோமதி.

"எங்கே, அந்த காகிதத்தைக் காண்பி!"

கல்யாணப் பத்திரிகையோடு அந்த காகிதத்தையும் காண்பித்தாள் கோமதி.

அதில், சந்தானம், ஓய்வு பெற்ற உதவி ஆசிரியர், ஆரம்பப் பள்ளி, கீழப்பள்ளம் கிராமம்... என்று இருந்தது.

"நல்ல காரியம் செஞ்சேம்மா நீ!.... நான் ரொம்ப பாக்கியசாலிம்மா!.... என்னோட ஆரம்பப் பள்ளி ஆசிரியர் அவர்!...."

அந்த ஒற்றை வெள்ளி நாணயம் பூரணசந்திரனைப்போல உண்டியலில் மின்னியது. உண்டியலின் மூடியைச் சாற்றிப் பூட்டினார். லேசாக ஆட்டினார். தர்மத்தின் குரல் போல அது கண, கண என ஒலித்தது!

மகள் கோமதியை அன்புடன் அணைத்துக் கொண்டார்.

Summary

A moral story that children should know.

நீதிக் கதைகள்! தர்மம் தலை காக்கும்!
நீதிக் கதைகள்! எவ்வளவு பணம் தந்தாலும் ஈடாகாது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com