மண்ணும் மனிதர்களும்... அங்கோலா
தெற்கு ஆப்பிரிக்கப் பகுதியிலுள்ள அங்கோலாவுக்கு மேற்கே அட்லாண்டிக் பெருங்கடல், தெற்கே நமீபியா, கிழக்கே ஜாம்பியா, வடக்கே காங்கோ. பிரேசிலுக்கு அடுத்தபடியாக போர்த்துகேய மொழியை அதிகளவில் பேசும் மக்களைக் கொண்ட இரண்டாவது நாடு; போர்த்துகீஸின் காலனியாக இருந்தது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பண்டு மொழி பேசும் மக்கள் இங்கே வசிக்கத் தொடங்கியுள்ளனர். 1500-களில் போர்த்துகேயர்கள் வருகின்றனர். 1600-களின் தொடக்கத்தில் உள்ளூர் மக்களை அடிமைகளாகத் தங்களுடைய காலனி நாடான பிரேசிலுக்குப் பிடித்துச் சென்றனர்.
1800-களில் அடிமை வணிகம் குறையத் தொடங்கியதும் அங்கோலாவில் மக்காச்சோளம், கரும்பு, புகையிலை போன்றவற்றைப் போர்த்துகேயர்கள் பயிரிடத் தொடங்கினர்.
1920-களின் பிற்பகுதியில் போர்த்துகேய சர்வாதிகாரியான அந்தோனியோ டி ஒலிவெரா அதிகாரத்துக்கு வந்ததும் இந்தப் பகுதியின் பொருளாதாரம் மேம்படத் தொடங்கியது. 1950-களில் போர்த்துகேயர்களிடமிருந்து விடுதலை பெற மக்கள் போராடத் தொடங்கினர். 1956-ல் அங்கோலா விடுதலைக்கான மக்கள் இயக்கம் தொடங்கப்பட்டது.
1961-ல் தலைநகர் லுவாண்டாவில் இவர்கள் தொடங்கிய புரட்சி பரவி, கெரில்லா போராக மாறியது. இவர்கள் ஒடுக்கப்பட்டபோதும் அருகிலுள்ள நாடுகளில் தளங்களை அமைத்துக் கொண்டனர். அடுத்தடுத்து வடக்கிலும் தெற்கிலும் ஆயுதப் புரட்சிக் குழுக்கள் உருவாகின.
1975-ல் போர்த்துகீசில் ஆளும் அரசைத் தூக்கியெறிந்த ராணுவ அதிகாரிகள், அங்கோலாவுக்கு விடுதலை அளிக்க முடிவு செய்தனர். தங்கள் பிரதிநிதிகளைக் கொண்ட அரசு அமைக்க மூன்று குழுக்களைச் சேர்ந்தவர்களும் ஒப்புக்கொண்டாலும் யார் தலைமையேற்பது என்பதில் மோதல்கள் – உள்நாட்டுச் சண்டைகள் தொடங்கின.
1976 மார்ச்சில் பொதுவுடைமை நாடுகளான சோவியத் ரஷியா, கியூபா உதவி பெற்ற அங்கோலா விடுதலைக்கான மக்கள் இயக்கம் ஆட்சிப் பொறுப்பேற்றது. எனினும், கிளர்ச்சிக் குழுக்கள் இடையே சண்டைகள் தொடர்ந்தன.
1990-ல் மார்க்சிய கருத்தியலைவிட்ட அரசு, சமூக ஜனநாயகக் கொள்கையைப் பின்பற்றுவதெ முடிவு செய்தது. 2002-ல் உள்நாட்டுச் சண்டைகள் முடிவுக்கு வந்தன. 2017-ல் 38 ஆண்டுகளாக அதிபராக இருந்த ஜோஸ் எடுவர்டோ டோ சான்டோஸ் பதவி விலக, ஜோவோ லொரன்கோ அதிபரானார். 2022-ல் இரண்டாவது முறையாக அவரே அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கடலோர சமவெளிப் பகுதிகளில் ஓரளவு பயிர்கள் விளைகின்றன. மற்றபடி நாட்டின் பிற பகுதிகள் முழுவதும் புல் தரைகளைக் கொண்ட மலைப் பகுதிகள்தான். தெற்கே பாறை பாலைகள், வடக்கே வெப்ப மண்டலக் காடுகள்.
கடலோரங்களில் மீன்பிடி தொழில். எனினும், பொருளாதாரத்தில் பெரும் பங்கு விவசாயத்துக்கு; மேய்ச்சலும் உண்டு. 75 சதவிகிதத்தினர் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். கனிம வளங்கள் நிறைந்திருக்கின்றன. சுரங்கத் தொழிலும் இருக்கிறது. சுற்றுலாத் தொழிலும் வளர்கிறது.
அங்கோலாவின் மக்கள் அனைவருமே அனேகமாக கறுப்பு ஆப்பிரிக்கர்கள். பல்வேறு இனக்குழுக்களைச் சேர்ந்தவர்கள். அதிகளவாக 37 சதவிகிதத்தினர் ஓவிம்பண்டு இனத்தினர். பண்டு குடும்ப மொழிகளைப் பேசுகின்றனர். ஐரோப்பியர்கள், படித்த கறுப்பினத்தவர், சுமார் 45 சதவிகித அளவுக்கு போர்த்துகேய மொழி பேசுகின்றனர். போர்த்துகீஸ்தான் அலுவல் மொழி.
நாட்டின் அதிகாரப்பூர்வ பெயர், அங்கோலா குடியரசு. தலைநகர் லுவாண்டா. பரப்பு – 12.46 லட்சம் சதுர கி.மீ., மக்கள்தொகை 3.66 கோடி. மக்களில் 92 சதவிகிதத்தினர் கிறிஸ்துவர்கள்; பாதிக்கும் சற்றுக் கூடுதலாக கத்தோலிக்கர்கள். அங்கோலாப் பண்பாட்டில் போர்த்துகேயத் தாக்கம்தான் மிக அதிகம்.
About the countries and their people - with cultural background... Angola
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

