47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மயிலாடுதுறை துலா உற்ஸவ கடைமுக தீர்த்த விழா

நாகப்பட்டினம், நவ. 16: நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருள்மிகு மாயூரநாதசுவாமி திருக்கோயிலின் துலா உற்சவ கடைமுக தீர்த்த விழா புதன்கிழமை சிறப்பாக நடைபெற்றது. திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான மயிலாடுது

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:26 pm

சங்கர்

நாகப்பட்டினம், நவ. 16: நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருள்மிகு மாயூரநாதசுவாமி திருக்கோயிலின் துலா உற்சவ கடைமுக தீர்த்த விழா புதன்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான மயிலாடுதுறை அருள்மிகு  மாயூரநாதசுவாமி திருக்கோயிலின் ஐதீக விழாவாக, துலா உற்சவ விழா ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் முழுவதும் மயிலாடுதுறையில் கொண்டாடப்படும்.

இறைவி உமாதேவி மயில் உருவம் ஏற்று, இறைவன் சிவப்பெருமானை நோக்கி  தவமிருந்து, இறைவனின் அருளைப் பெற்றதாகக் குறிப்பிடப்படும் ஆன்மிக வரலாற்றுடன் இணைந்த விழாவாக இவ்விழா கொண்டாடப்படுகிறது.

ஐப்பசி மாத முதல் நாளன்று ஐப்பசி மாத பிறப்புத் தீர்த்த விழாவுடன் துலா உற்சவம் தொடங்கி, ஐப்பசி மாதம் முழுவதும் நடைபெறும். தினமும், அருள்மிகு மாயூரநாதர், அருள்மிகு அபயாம்பிகை, அருள்மிகு ஐயாரப்பர், அருள்மிகு அறம்வளர்த்த நாயகி சுவாமிகள் வீதியுலா வந்து, மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியின் தென்புறக் கரையில் எழுந்தருளி, தீர்த்தமளிப்பர்.

கங்கை, யமுனை, சரஸ்வதி போன்ற புண்ணிய நதிகள், ஐப்பசி மாத அமாவாசை தினத்தில் மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் புனித நீராடி பொலிவுப் பெற்றதாகக் கூறப்படும் ஆன்மிக வரலாறுப்படி, ஐப்பசி மாதம் முழுவதும் மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் புனித நீராடுவது ஆன்மிகச் சிறப்பாகக் கருதப்படுகிறது.

துலா உற்சவ கடைமுக தீர்த்த விழாவின் போது மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் புனித நீராடினால், ஐப்பசி மாதம் முழுமையும் துலாக்கட்ட காவிரியில் புனித நீராடிய புண்ணியம் கிட்டும் என்ற ஐதீகத்தின் அடிப்படையில், துலா உற்சவ கடைமுக தீர்த்த விழா மிகுந்த சிறப்புக்குரியதாகக் கருதப்படுகிறது.

நிகழாண்டுக்கான துலா உற்சவ கடைமுக தீர்த்த விழா, புதன்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்றது.

அருள்மிகு மாயூரநாதர், அபயாம்பிகை சுவாமிகள் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, கணபதி, சுப்பிரமணியர், சண்டிகேசுவரருடன் பஞ்ச மூர்த்திகளாக, இன்னிசை முழக்கங்கள் மற்றும் வாணவேடிக்கைகளுடன் வீதியுலாவாக வந்து மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியின் தென்புறக்கரையில் எழுந்தருளினர்.

மேலும், மயிலாடுதுறை அருள்மிகு ஐயாரப்பர், அறம்வளர்த்த நாயகி சுவாமிகளும், அருள்மிகு காசி விசுவநாதர், விசாலாட்சி சுவாமிகளும் கணபதி, சுப்பிரமணியர், சண்டிகேசுவரருடன் பஞ்சமூர்த்திகளா வீதியுலா வந்து, துலாக்கட்ட காவிரியின் தென்புறக்கரையில் எழுந்தருளினர்.  

இதே போல, மயிலாடுதுறை அருள்மிகு வதான்யேஸ்வரர், ஞானாம்பிகை சுவாமிகள் பஞ்சமூர்த்திகளாக வீதியுலா வந்து, துலாக்கட்ட காவிரியின் வடப்புறக்கரையில் எழுந்தருளினர்.

திருவாவடுதுறை ஆதீன குருமகா சந்நிதானம் சீர்வளர்சீர் சிவப்பிரகாச தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் முன்னிலையில், மாயூரநாதர் திருக்கோயில் மற்றும் ஐயாரப்பர் திருக்கோயில் அஸ்திர தேவர் சுவாமிகளுக்கு, துலாக்கட்ட காவிரியின் தென்புறக் கரையில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இதே போல, துலாக்கட்ட காவிரியின் வடப்புறக்கரையில் அருள்மிகு வதான்யேஸ்வரர் கோயில் அஸ்திர தேவர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

புதன்கிழமை பிற்பகல் சுமார் 2.15 மணிக்கு வேத முழக்கங்களுடன் அருள்மிகு மாயூரநாதர் சுவாமி திருக்கோயில் அஸ்திர தேவர் சுவாமி, துலாக்கட்ட காவிரியில் இறங்கிய போது, அருள்மிகு மாயூரநாதர், அபயாம்பிகை, அருள்மிகு ஐயாரப்பர், அறம்வளர்த்த நாயகி, அருள்மிகு காசி விஸ்வநாதர், விசாலாட்சி சுவாமிகள் தீர்த்தமளித்து அருள்பாலித்தனர்.

இதைத் தொடர்ந்து, காவிரியின் வடப்புறக் கரையில் வதான்யேஸ்வரர் கோயில் அஸ்திர தேவர் சுவாமி காவிரியில் இறங்கிய போது, அருள்மிகு வதான்யேஸ்வரர், ஞானாம்பிகை சுவாமிகள் தீர்த்தமளித்து அருள்பாலித்தனர்.

அப்போது, துலாக்கட்ட காவிரியின் இருபுறங்களிலும் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், பக்தி முழக்கங்களுடன் காவிரியில் புனித நீராடி, சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில், நாகை மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி, மயிலாடுதுறை மக்களவை உறுப்பினர் ஓ.எஸ். மணியன், மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.ஆர். அருள்செல்வன், பூம்புகார் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். பவுன்ராஜ், நாகப்பட்டினம் மாவட்ட ஊராட்சித் தலைவர் எஸ்.டி. ரவிச்சந்திரன், வருவாய்க் கோட்டாட்சியர் பெ. ரெத்தினசாமி, திருவாவடுதுறை ஆதீன கட்டளை விசாரணை மீனாட்சிசுந்தரம் தம்பிரான் சுவாமிகள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த திரளான ஆன்மிக அன்பர்கள் கலந்து கொண்டனர்.

மாவட்ட நிர்வாகம், நகராட்சி நிர்வாகம் மற்றும் மாயூரநாதர் சுவாமி திருக்கோயில் நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. மயிலாடுதுறை உள்கோட்ட காவல் துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப் பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.