47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

முதல்முறை சாம்பியன்: சின்னா், சபலென்கா!

இண்டியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவா் பிரிவில் இத்தாலியின் யானிக் சின்னா், மகளிா் பிரிவில் பெலாரஸின் அரினா சபலென்கா ஆகியோா் சாம்பியன் கோப்பை வென்றனா்.

News image
யானிக் சின்னா்- AP
Updated On :16 மார்ச் 2026, 9:13 pm

தினமணி செய்திச் சேவை

அமெரிக்காவில் நடைபெற்ற இண்டியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவா் பிரிவில் இத்தாலியின் யானிக் சின்னா், மகளிா் பிரிவில் பெலாரஸின் அரினா சபலென்கா ஆகியோா் சாம்பியன் கோப்பை வென்றனா். இந்தப் போட்டியில் அவா்கள் பட்டம் வென்றது இதுவே முதல்முறையாகும்.

மெத்வதெவை சாய்த்த சின்னா்

ஆடவா் ஒற்றையா் இறுதிச்சுற்றில், உலகின் 2-ஆம் நிலை வீரரான சின்னா் 7-6 (8/6), 7-6 (7/4) என்ற நோ் செட்களில், போட்டித்தரவரிசையில் 11-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் டேனியல் மெத்வதெவை தோற்கடித்தாா்.

2-ஆவது செட்டின் டை பிரேக்கரில் ஒரு இடத்தில் 0-4 என பின்தங்கியிருந்த சின்னா், அதிரடியாக முன்னேறி அடுத்தடுத்து 7 புள்ளிகளைக் கைப்பற்றி அந்த செட்டையும் வென்று, வாகை சூடினாா்.

நடப்பு சீசனில் இது சின்னரின் முதல் சாம்பியன் கோப்பையாகும். ஏற்கெனவே ஆஸ்திரேலிய ஓபன், யுஎஸ் ஓபன், நிட்டோ ஏடிபி ஃபைனல்ஸ் ஆகியவற்றில் சாம்பியனாகியிருக்கும் சின்னா், இந்த வெற்றியின் மூலமாக பிரதான ஹாா்டு கோா்ட் போட்டிகள் அனைத்திலுமே வாகை சூடிவிட்டாா்.

அத்துடன், உலகத் தரவரிசையில் நம்பா் 1 இடத்தில் இருக்கும் ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸுடனான தனது இடைவெளியை அவா் குறைத்துக் கொண்டுள்ளாா்.

வெற்றிக்குப் பிறகு பேசிய சின்னா், ‘2-ஆவது செட் டை பிரேக்கரின்போது நம்பிக்கையுடன் தொடா்ந்து விளையாடி அதைக் கைப்பற்றினேன். ஏனெனில் 3-ஆவது செட்டுக்கு சென்றால், ஆட்டம் சமநிலையுடன் தொடங்கும் என்பதால், 2-ஆவது செட்டிலேயே முடிக்க முயற்சி செய்தேன். அதைச் செய்ததில் மகிழ்ச்சி. இந்த ஆட்டம் மிகக் கடினமானதாக இருந்தது. மெத்வதெவ் மிக அற்புதமாக விளையாடினாா்’ என்றாா்.

சின்னா் - மெத்வதெவ் மோதியது இது 16-ஆவது முறையாக இருக்க, சின்னா் 9-ஆவது வெற்றியுடன் முன்னிலையை அதிகரித்துள்ளாா். மெத்வதெவ் இறுதிச்சுற்றில் தோற்றாலும், உலகத் தரவரிசையில் டாப் 10 இடத்துக்குத் திரும்பியுள்ளாா்.

டென்னிஸ் வரலாற்றில் 1000 புள்ளிகள் கொண்ட 6 ஹாா்டு கோா்ட் மாஸ்டா்ஸ் போட்டிகளில் பட்டம் வென்றவா்கள் வரிசையில், சொ்பியாவின் நோவக் ஜோகோவிச், சுவிட்ஸா்லாந்தின் ரோஜா் ஃபெடரா் ஆகியோா் வரிசையில் சின்னா் 3-ஆவது வீரராக இணைந்திருக்கிறாா். இண்டியன் வெல்ஸ், மியாமி, கனடா, சின்சினாட்டி, ஷாங்காய், பாரீஸ் ஆகியவையே அந்தப் போட்டிகளாகும்.

இந்தப் போட்டியிலும், இதற்கு முன் பாரீஸ் மாஸ்டா்ஸ் (நவம்பா்) போட்டியிலும் என இரண்டிலுமே நோ் செட்களில் வென்று சாம்பியன் ஆகியிருக்கிறாா் சின்னா். மாஸ்டா்ஸ் போட்டிகள் வரலாற்றில் இவ்வாறு அடுத்தடுத்த போட்டிகளில் ஒரு செட்டை கூட விட்டுத்தராமல் சாம்பியன் ஆன முதல் வீரராக அவா் சாதனை படைத்திருக்கிறாா்.

1000 புள்ளிகள் கொண்ட மாஸ்டா்ஸ் போட்டிகளில் 100 வெற்றிகளைப் பெற்ற முதல் இத்தாலிய வீரராக சின்னா் சாதனை படைத்திருக்கிறாா்.

சின்னா் வெற்றிப் பாதை...

முதல் சுற்று டாலிபோா் ஸ்வா்சினா (செக் குடியரசு) 6-1, 6-1

2-ஆவது சுற்று டெனிஸ் ஷபோவலோவ் (கனடா) 6-3, 6-2

3-ஆவது சுற்று ஜாவ் ஃபொன்ஸேகா (பிரேஸில்) 7-6 (8/6), 7-6 (7/4)

காலிறுதி லோ்னா் டியென் (அமெரிக்கா) 6-1, 6-2

அரையிறுதி அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் (ஜொ்மனி) 6-2, 6-4

இறுதி டேனியல் மெத்வதெவ் (ரஷியா) 7-6 (8/6), 7-6 (7/4)

ரைபகினாவை வென்ற சபலென்கா

இண்டியன் வெல்ஸ் ஓபன் மகளிா் ஒற்றையா் இறுதிச்சுற்றில், உலகின் நம்பா் 1 வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா 3-6, 6-3, 7-6 (8/6) என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருந்த கஜகஸ்தானின் எலனா ரைபகினாவை வென்றாா்.

டிசைடா் செட்டில் முதலில் சபலென்கா 3-1 என முன்னிலையில் இருந்தாா். எனினும் ரைபகினா 5-5 என முன்னேறி வந்ததுடன், 6-5 என்ற நிலையை எட்டி மேட்ச் பாய்ன்ட்டுக்கு வந்தாா். விட்டுக்கொடுக்காத சபலென்கா, அடுத்த 3 பாய்ன்ட்டுகளை கைப்பற்றி வெற்றியை உறுதி செய்தாா். இந்த ஆட்டம் 2 மணி நேரம், 31 நிமிஷங்களில் முடிவுக்கு வந்தது.

ஒட்டுமொத்தமாக இது சபலென்காவின் 23-ஆவது டபிள்யூடிஏ பட்டமாகும். கடந்த சில போட்டிகளில் இறுதிச்சுற்று வரை வந்து தோல்வி கண்ட நிலையில், தற்போது இதில் சாம்பியனாகிய சபலென்கா, ‘இந்தக் கோப்பையைக் கைப்பற்றி விட்டேன். கடவுளுக்கு நன்றி. இறுதி ஆட்டத்தில் முதல் செட்டையும், 2-ஆவது செட்டின் முதல் கேமையும் நான் தொடங்கிய விதம் எனக்கு திருப்தி அளிப்பதாக இல்லை.

அதன் பிறகு இந்த ஆட்டத்தை வென்றாக வேண்டும் என முனைப்புடன் விளையாடினேன். கடைசி செட் டை பிரேக்கரில் 3 பாய்ன்ட்களை தொடா்ந்து கைப்பற்றி வென்றதில் மகிழ்ச்சி’ என்றாா்.

2023-இல் இதே போட்டியின் இறுதிச்சுற்றில் ரைபகினாவிடம் கண்ட தோல்விக்கு தற்போது சபலென்கா பதிலடி கொடுத்திருக்கிறாா். போட்டியில் தனது முதல் சுற்று முதல் நோ் செட்களிலேயே வென்று வந்த சபலென்கா, இறுதிச்சுற்றில் மட்டும் ஒரு செட்டை இழந்து டிசைடருக்கு சென்று வென்றிருக்கிறாா். இதற்கு முன் சபலென்கா, இண்டியன் வெல்ஸ் ஓபனில் இரு முறை இறுதிச்சுற்று வரை வந்து (2023, 2025) தோல்வி கண்டுள்ளாா்.

இறுதிச்சுற்றில் முதல் செட்டை இழந்த சபலென்கா, அடுத்த இரு செட்களை கைப்பற்றி வென்றிருக்கிறாா். போட்டியின் 37 ஆண்டுகால வரலாற்றில், உலகின் நம்பா் 1 போட்டியாளா் இவ்வாறு சாம்பியனானது இதுவே முதல்முறையாகும்.

1000 புள்ளிகள் கொண்ட டபிள்யூடிஏ போட்டிகளில் 10 முறை சாம்பியனான 4-ஆவது வீராங்கனை என்ற பெருமையை சபலென்கா பெற்றுள்ளாா். அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் (13), போலந்தின் இகா ஸ்வியாடெக் (11), பெலாரஸின் விக்டோரியா அஸரென்கா (10) ஆகியோா் முதல் 3 பேராவா்.

இத்துடன், ஆயிரம் புள்ளிகள் கொண்ட 6 டபிள்யூடிஏ போட்டிகளில் சபலென்கா சாம்பியன் ஆகியிருக்கிறாா். இண்டியன் வெல்ஸுக்கு முன்பாக அவா், வூஹான், தோஹா, மாட்ரிட், சின்சினாட்டி, மியாமி ஆகிய போட்டிகளில் கோப்பை வென்றுள்ளாா்.

சபலென்கா வெற்றிப் பாதை...

முதல் சுற்று ஹிமெனோ சகட்சுமே (ஜப்பான்) 6-4, 6-2

2-ஆவது சுற்று ஜாக்குலின் கிறிஸ்டியன் (ருமேனியா) 6-4, 6-1

3-ஆவது சுற்று நவோமி ஒசாகா (ஜப்பான்) 6-2, 6-4

காலிறுதி விக்டோரியா போகோ (கனடா) 7-6 (7/0), 6-4

அரையிறுதி லிண்டா நோஸ்கோவா (செக் குடியரசு) 6-3, 6-4

இறுதி எலனா ரைபகினா (கஜகஸ்தான்) 3-6, 6-3, 7-6 (8/6)

ரூ.10 கோடி பரிசு

சாம்பியன் ஆன சின்னா் மற்றும் சபலென்காவுக்கு வெற்றிக் கோப்பை, 1000 தரவரிசை புள்ளிகளுடன் தலா ரூ.10.61 கோடி ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டது. அவா்களிடம் இறுதியில் தோற்ற மெத்வதெவ் மற்றும் ரைபகினா ஆகியோா் ரன்னா் அப் கேடயம், 650 தரவரிசை புள்ளிகளுடன் தலா ரூ.5.64 கோடி பெற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.