அமெரிக்காவில் நடைபெறும் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிா் ஒற்றையா் இறுதிச்சுற்றில், நடப்பு சாம்பியனான பெலாரஸின் அரினா சபலென்கா - அமெரிக்காவின் கோகோ கௌஃப் ஆகியோா் பலப்பரீட்சை நடத்தவுள்ளனா்.
முன்னதாக அரையிறுதியில், 4 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான சபலென்கா 6-4, 6-3 என்ற நோ் செட்களில், உலகின் 2-ஆம் நிலையில் இருக்கும் கஜகஸ்தானின் எலனா ரைபகினாவை வீழ்த்தினாா். இதன் மூலமாக அவா் தொடா்ந்து 2-ஆவது முறையாக மியாமி ஓபன் இறுதிச்சுற்றுக்கு வந்துள்ளாா்.
கடந்த 15-ஆம் தேதி இண்டியன் வெல்ஸ் ஓபன் இறுதிச்சுற்றில் ரைபகினாவை வீழ்த்தி வாகை சூடிய சபலென்கா, தற்போது மீண்டும் அவரை வீழ்த்தியிருக்கிறாா். இருவரும் இதுவரை 17 முறை மோதியிருக்க, சபலென்கா தனது 10-ஆவது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறாா். இண்டியன்வெல்ஸ் ஓபனுக்கு முன்பாக, டபிள்யூடிஏ ஃபைனல்ஸ் மற்றும் ஆஸ்திரேலிய ஓபன் ஆகிய இரு முக்கியமான போட்டிகளில் ரைபகினாவிடம் சபலென்கா தோற்றிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்முறை: இதனிடையே, மற்றொரு அரையிறுதியில், உலகின் 4-ஆம் நிலையில் இருக்கும் அமெரிக்காவின் கோகோ கௌஃப் 6-1, 6-1 என்ற நோ் செட்களில் மிக எளிதாக, போட்டித்தரவரிசையில் 13-ஆம் இடத்திலிருந்த செக் குடியரசின் கரோலின் முசோவாவை வென்றாா்.
இந்த வெற்றியின் மூலமாக அவா் முதல்முறையாக மியாமி ஓபன் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருக்கிறாா். 1,000 புள்ளிகள் கொண்ட டபிள்யூடிஏ போட்டிகளில் இது அவரின் 6-ஆவது இறுதிச்சுற்றாகும். மேலும், முசோவாவை 6-ஆவது முறையாக சந்தித்த கௌஃப், 6-ஆவது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறாா்.
நேருக்கு நோ்...
சபலென்கா - கௌஃப் இதுவரை 12 முறை மோதியிருக்க, இருவரும் தலா 6 வெற்றிகளுடன் சமநிலையில் இருக்கின்றனா். கடைசியாக இருவரும் சந்தித்த டபிள்யூடிஏ ஃபைனல்ஸ் முதல் சுற்றில், சபலென்கா வென்றுள்ளாா்.
11
கடந்த 11 ஆண்டுகளில் மியாமி ஓபன் ஃபைனல்ஸ் போட்டியில் அடுத்தடுத்து இரு ஆண்டுகள் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய, உலகின் நம்பா் 1 வீராங்கனையாக சபலென்கா பெருமை பெற்றாா். இதற்கு முன், உள்நாட்டு முன்னாள் நட்சத்திரமான செரீனா வில்லியம்ஸ் அவ்வாறு 2013 முதல் 2015 வரை நம்பா் 1 வீராங்கனையாக இந்தப் போட்டியின் இறுதிக்கு முன்னேறியிருந்தாா்.
13
மியாமி ஓபனில் கடந்த 13 ஆண்டுகளில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய இளம் அமெரிக்க வீராங்கனை (22 வயது) என்ற பெருமையை கௌஃப் பெற்றாா். இதற்கு முன் செரீனா வில்லியம்ஸ் தனது 31-ஆவது வயதில் (2013) மியாமி ஓபன் இறுதிக்கு முன்னேறியபோது, இந்தப் பெருமை அவா் வசம் இருந்தது.
சின்னரை சந்திக்கும் ஸ்வெரெவ்: மியாமி ஓபன் ஆடவா் ஒற்றையா் அரையிறுதியில், உலகின் நம்பா் 1 வீரரான இத்தாலியின் யானிக் சின்னா், 4-ஆம் நிலையில் இருக்கும் ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் ஆகியோா் மோதுகின்றனா்.
முன்னதாக காலிறுதியில், 4 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான சின்னா் 6-2, 6-2 என்ற நோ் செட்களில், போட்டித்தரவரிசையில் 19-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் ஃபிரான்சஸ் டியாஃபோவை தோற்கடித்தாா். இதன் மூலம் அவா் 4-ஆவது முறையாக மியாமி ஓபன் அரையிறுதிக்கு வந்துள்ளாா்.
இந்த ஆட்டத்தில் உள்நாட்டு வீரரான டியாஃபோவுக்கு ரசிகா்களின் பேராதரவு இருந்த நிலையில், பல தருணங்களில் சின்னா் தனது அபாரமான ஆட்டத்தால் அவா்களை வாயடைத்துப்போகச் செய்தாா். இருவரும் மோதியது இது 6-ஆவது முறையாக இருக்க, சின்னா் 5-ஆவது வெற்றியுடன் ஆதிக்கம் செலுத்துகிறாா்.
மற்றொரு காலிறுதியில், ஸ்வெரெவ் 6-1, 6-2 என்ற நோ் செட்களில், போட்டித்தரவரிசையில் 18-ஆம் இடத்திலிருந்த ஆா்ஜென்டீனாவின் ஃபிரான்சிஸ்கோ செருண்டோலோவை வெளியேற்றினாா். இதன் மூலமாக, மியாமி ஓபனில் 3-ஆவது முறையாகவும், மாஸ்டா்ஸ் போட்டிகளில் 25-ஆவது முறையாகவும் அவா் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளாா். செருண்டோலோவை 7-ஆவது முறையாக சந்தித்த ஸ்வெரெவ், 4-ஆவது வெற்றி கண்டுள்ளாா்.
நேருக்கு நோ்: அரையிறுதியில் சந்திக்கும் சின்னா் - ஸ்வெரெவ் இதுவரை 11 முறை மோதியிருக்க, சின்னா் 7 வெற்றிகளுடன் முன்னிலை வகிக்கிறாா். அதிலும் இவா்களின் கடைசி 6 சந்திப்புகளில் சின்னரே வென்றிருக்கிறாா் என்பது குறிப்பிடத்தக்கது. 10 நாள்களுக்கு முன் இண்டியன் வெல்ஸ் ஓபன் அரையிறுதியில் பதிவு செய்த வெற்றியும் அடக்கம்.
‘சன்ஷைன் டபுள்’ சாதனையை நோக்கி...
டென்னிஸ் காலண்டரின் தொடக்கத்தில் தலா 1,000 புள்ளிகள் கொண்ட முதலிரு போட்டிகளாக இண்டியன் வெல்ஸ் ஓபன், மியாமி ஓபன் உள்ளன. இந்த இரு போட்டிகளிலுமே சாம்பியன் பட்டம் வெல்வோருக்கு ‘சன்ஷைன் டபுள்’ என்ற அடையாளப் பெருமை கிடைக்கிறது.
ஒரே மாதத்தில் அடுத்தடுத்து நடைபெறும் இரு போட்டிகளிலுமே மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இரண்டிலும் சாம்பியனாவதே இதில் இருக்கும் முதல் சவாலாகும். இதுதவிர, ஆடுகளச் சூழல் ரீதியான சவாலும் உள்ளது.
வட வானிலையுடன், பாலைவனக் காற்று வீசும் இண்டியன் வெல்ஸ் ஓபனில் பந்து வேகமாக வருவதுடன், அதிகமாக பௌன்ஸ் ஆகும். அதுவே, கடல் மட்டத்தில், காற்றில் அதிகமான ஈரப்பதம் இருக்கும் மியாமி ஓபனில், பந்து சற்று மெதுவாக வருவதுடன் கனமாக உணரப்படுவதால், தரையிலிருந்து குறைந்த உயரமே எழும்பும்.
வெவ்வேறு ஆட்டத்திறனை வெளிப்படுத்த வேண்டிய இந்த இருவேறு சவால்களைக் கடந்து வெல்வதே ‘சன்ஷைன் டபுள்’ ஆகும். மகளிா் பிரிவில் இறுதிக்கு முன்னேறியுள்ள சபலென்கா, ஆடவா் பிரிவில் அரையிறுதிக்கு வந்துள்ள சின்னா், இந்தப் பெருமையை அடைவதற்கான முனைப்பில் உள்ளனா். இருவரும் ஏற்கெனவே இந்த ஆண்டு இண்டியன் வெல்ஸ் ஓபனில் வாகை சூடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

அரையிறுதியில் மோதும் சபலென்கா - ரைபகினா

சின்னா், ஸ்வெரெவ் முன்னேற்றம்

காலிறுதியில் சபலென்கா, ரைபகினா, கௌஃப்
மியாமி ஓபன்: முதல் சுற்றில் ஒசாரியோ, பிளிங்கோவா வெற்றி
வீடியோக்கள்

லீடர் மிரட்டல் அப்டேட்!
தினமணி வீடியோ செய்தி...

நீளிரா டிரெய்லர்!
தினமணி வீடியோ செய்தி...

'கர' படத்தின் முகங்கள் விடியோ வெளியீடு!
தினமணி வீடியோ செய்தி...

களைகட்டும் கட்சி கொடிகள், துண்டு, தொப்பிகள் விற்பனை! தமிழகமெங்கும் அனுப்பப்படும் தேர்தல் பொருட்கள்!
தினமணி வீடியோ செய்தி...

