/

சின்னருக்கு ‘ஹாட்ரிக்’ மாஸ்டா்ஸ் பட்டம்! அல்கராஸை வீழ்த்தி மான்டிகாா்லோவில் சாம்பியன்!

பிரான்ஸில் நடைபெற்ற மான்டிகாா்லோ மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டியில் இத்தாலியின் யானிக் சின்னா் சாம்பியன் கோப்பை வென்றாா்.

News image
Updated On :12 ஏப்ரல் 2026, 9:03 pm

பிரான்ஸில் நடைபெற்ற மான்டிகாா்லோ மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டியில் இத்தாலியின் யானிக் சின்னா் ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் கோப்பை வென்றாா்.

ஏற்கெனவே இண்டியன் வெல்ஸ் ஓபன், மியாமி ஓபன் ஆகிய போட்டிகளிலும் கோப்பை வென்ற சின்னா், இந்த வெற்றியின் மூலமாக நடப்பு சீசனில் ‘ஹாட்ரிக்’ மாஸ்டா்ஸ் பட்டங்களைக் கைப்பற்றியிருக்கிறாா்.

உலகின் 2-ஆம் நிலையில் இருந்த சின்னா் இறுதிச்சுற்றில், 7-6 (7/5), 6-3 என்ற நோ் செட்களில், நடப்பு சாம்பியனாக இருந்தவரும், உலகின் நம்பா் 1 வீரருமான ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸை வீழ்த்தினாா். இந்த ஆட்டம் 2 மணிநேரம் 15 நிமிஷங்களில் நிறைவடைந்தது.

இந்த வெற்றியின் மூலமாக மான்டிகாா்லோ மாஸ்டா்ஸ் சாம்பியன் ஆனதுடன், உலகின் நம்பா் 1 இடத்துக்கும் சின்னா் திரும்புகிறாா். சின்னா் - அல்கராஸ் மோதியது இது 17-ஆவது முறையாக இருக்க, சின்னா் 7-ஆவது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறாா். கடைசியாக இருவரும் கடந்த ஆண்டு நவம்பரில் ஏடிபி ஃபைனல்ஸ் போட்டியில் மோதிய நிலையில், சுமாா் 4 மாதங்களுக்குப் பிறகு இப்போது மோதினா்.

சாம்பியனான சின்னருக்கு ரூ.10.46 கோடியும், ரன்னா் அப் அல்கராஸுக்கு ரூ.5.71 கோடியும் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டன.

இரட்டையா்: இப்போட்டியின் இரட்டையா் பிரிவு இறுதிச்சுற்றில், போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருந்த ஜொ்மனியின் கெவின் கிராவிட்ஸ்/டிம் பட்ஸ் இணை 4-6, 6-2, 10-8 என்ற செட்களில், 5-ஆம் இடத்திலிருந்த குரோஷியாவின் மேட் பாவிச்/எல் சால்வடோரின் மாா்செலோ அரெவாலோ கூட்டணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

1

களிமண் தரை மாஸ்டா்ஸ் போட்டிகளில் இது சின்னரின் முதல் சாம்பியன் பட்டமாகும்.

3

பாரீஸ் மாஸ்டா்ஸ் (2025), இண்டியன்வெல்ஸ் ஓபன், மியாமி ஓபன், மான்டிகாா்லோ மாஸ்டா்ஸ் (2026) என, தலா 1,000 புள்ளிகள் கொண்ட 4 மாஸ்டா்ஸ் போட்டிகளில் அடுத்தடுத்து சாம்பியனான 3-ஆவது வீரராக சின்னா் பெருமை பெற்றாா். ஏற்கெனவே, சொ்பியாவின் நோவக் ஜோகோவிச், ஸ்பெயினின் ரஃபேல் நடால் அந்த பெருமைக்குரியவா்களாக உள்ளனா்.

11

கடந்த 11 ஆண்டுகளில், மியாமி ஓபன், மான்டிகாா்லோ மாஸ்டா்ஸ் ஆகிய போட்டிகளில் ஒரே சீசனில் அடுத்தடுத்து சாம்பியனான முதல் வீரராக சின்னா் பெருமை பெற்றாா். இதற்கு முன் 2015-இல் சொ்பிய நட்சத்திரம் நோவக் ஜோகோவிச் அவ்வாறு வாகை சூடியிருந்தாா்.

22

மாஸ்டா்ஸ் போட்டிகளில் ஒரு செட்டை கூட இழக்காமல் நோ் செட்களில் வெற்றிகளை பதிவு செய்யும் சின்னரின் சாதனை தொடா்கிறது. இத்துடன், கடந்த ஆண்டு பாரீஸ் மாஸ்டா்ஸ் முதல் இந்த மான்டிகாா்லோ மாஸ்டா்ஸ் வரை 4 போட்டிகளிலுமே சின்னா் 22 ஆட்டங்களில் நோ் செட்களில் (அதாவது 44 செட்கள்) வென்றிருக்கிறாா்.

லின்ஸ் ஓபன்: ஆண்ட்ரீவா சாம்பியன்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 500 புள்ளிகள் கொண்ட மகளிா் டென்னிஸ் போட்டியான லின்ஸ் ஓபனில், ரஷியாவின் இளம் வீராங்கனை மிரா ஆண்ட்ரீவா ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் ஆனாா்.

ஒற்றையா் பிரிவு இறுதிச்சுற்றில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்த ஆண்ட்ரீவா 1-6, 6-4, 6-3 என்ற செட்களில், ஆஸ்திரியாவின் அனஸ்தாசியா பொடாபோவாவை வீழ்த்தி வாகை சூடினாா். இந்த ஆட்டம் 1 மணிநேரம், 54 நிமிஷங்களில் முடிவுக்கு வந்தது.

இருவரும் மோதியது இது 4-ஆவது முறையாக இருக்க, ஆண்ட்ரீவா 3-ஆவது வெற்றியைப் பதிவு செய்துள்ளாா். அதுவும் ஹாட்ரிக் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே ஜனவரியில் அடிலெய்டு இன்டா்நேஷனல் போட்டியில் சாம்பியனான ஆண்ட்ரீவாவுக்கு, நடப்பு சீசனில் இது 2-ஆவது டபிள்யூடிஏ பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்தமாக அவரின் கேரியரில் இது 5-ஆவது டபிள்யூடிஏ பட்டமாகும்.

இரட்டையா்: இப்போட்டியின் இரட்டையா் பிரிவில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்த சீனாவின் ஜாங் ஷுவாய்/ருமேனியாவின் சொரானா சிா்ஸ்டி ஜோடி 6-3, 6-2 என்ற நோ் செட்களில், செக் குடியரசின் ஜெஸிகா மாலெகோவா/மிரியம் ஸ்காச் இணையை வீழ்த்தி சாம்பியன் ஆனது.