சேலத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளைக் கொள்ளையடித்த 3 பேர் கைது

சேலத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளைக் கொள்ளையடித்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஏற்கெனவே பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
Updated on
1 min read

சேலத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளைக் கொள்ளையடித்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஏற்கெனவே பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

 இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

சேலம் டவுன் மேட்டுத்தெரு அருகேயுள்ள கைக்கோல் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முகமது ஈசாக் (33). எலெக்ட்ரானிக் பொருள்கள் விற்பனை செய்யும் கடையில் வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 19-ம் தேதி இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் முகமது புறா தெருவில் உள்ள தனது மாமியார் வீட்டுக்குச் சென்றிருந்தார். மறுநாள் வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 15 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

 இது குறித்து டவுன் போலீஸில் ஈசாக் புகார் தெரிவித்தார். மாநகர போலீஸ் கமிஷனர் கே.சி.மஹாலி உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் ராமசாமி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.

 இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய தாதகாப்பட்டி வழிவாய்க்கால் தெருவைச் சேர்ந்த வ.பிரேம்குமார் (38), தி.சாந்தகுமார் (23), சீலநாயக்கன்பட்டி காட்டூரைச் சேர்ந்த தர்மன் (23) ஆகிய மூவரையும் கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த மூவரும் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடித்து வந்திருப்பது தெரிய வந்துள்ளது.

 இவர்களிடம் இருந்து சுமார் 10 பவுன் மதிப்புள்ள நகைகள் மீட்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட பிரேம்குமார் மீது அன்னதானப்பட்டி, அஸ்தம்பட்டி, டவுன் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை உள்ளிட்ட 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

 மேலும் குண்டர் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டு பின்னர் வெளியே வந்துள்ளார். பிக்பாக்கெட் அடித்து வந்த தர்மராஜ் திருப்பதியில் இரண்டு முறை கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறையில் இருந்துள்ளார். சாந்தகுமார் மீது 2 திருட்டு வழக்குகள உள்ளன. மேலும் கடந்த சில நாள்களுக்கு முன்பு சேலம் மத்திய சிறையில் உள்ள இவர்களது கூட்டாளிகளுக்கு கஞ்சா பொட்டலத்தை வெளியே இருந்து வீசிய வழக்கிலும் இவர் தேடப்பட்டு வந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com