மேட்டூரில் 10 நாள்களுக்கு மட்டுமே நீர் இருப்பு: சம்பா, தாளடிக்கும் ஆபத்து

காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா, தாளடி நெல் பயிர்களுக்கு ஜனவரி மாதம் வரையிலும் தண்ணீர் தேவைப்படும் நிலையில்
Updated on
3 min read

காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா, தாளடி நெல் பயிர்களுக்கு ஜனவரி மாதம் வரையிலும் தண்ணீர் தேவைப்படும் நிலையில், மேட்டூர் அணையில் இருந்து மேலும் 10 நாள்களுக்கு மட்டுமே தண்ணீர் திறக்கக் கூடிய சூழல் உள்ளது. இதனால், சம்பா, தாளடி நெல் பயிரிட்டுள்ள விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12ஆம் தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். ஆனால், கர்நாடகத்தில் இருந்து போதுமான அளவு தண்ணீர் கிடைக்காததால், 3 மாதம் தாமதமாக கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. பருவ மழையை எதிர்நோக்கியும், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி கர்நாடகம் வழங்க வேண்டிய தண்ணீரைக் கணக்கில் கொண்டும் மேட்டூர் அணையைத் திறக்க தமிழக அரசு முடிவு செய்தது.
 தாமதமாக அணை திறக்கப்பட்டதால் ஜூன், ஜூலை மாதங்களில் நடவு செய்யப்படும் குறுவை நெல் சாகுபடி வெகுவாகப் பாதித்தது. கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள் மூலம் சாகுபடி செய்த சில விவசாயிகள் குறுவையைத் தொடர்ந்து தாளடி நெல்லைப் பயிரிட்டுள்ளனர். குறுவையால் ஏற்பட்ட இழப்பை மறந்து சம்பா நெல் சாகுபடி மூலம் வாழ்வாதாரத்தை நிலைநிறுத்திக் கொள்ள முயன்ற லட்சக்கணக்கான டெல்டா விவசாயிகள், முழுவீச்சில் பாடுபட்டு வருகின்றனர்.
 சம்பா நெல் பயிர்கள் நடவு முடிந்து பல இடங்களில் ஏறத்தாழ ஒரு மாதமே ஆகியுள்ளது. முன் கூட்டியே பயிரிட்ட சில இடங்களில் நெல் பயிர்களில் இருந்து கதிர் வெளியே
 வரத் தொடங்கியுள்ளது. இந்த விவசாயிகளுக்கு குறைந்தது ஜனவரி 15ஆம் தேதி வரையிலும் தண்ணீர் தேவைப்படுகிறது அல்லது அடுத்த 30 நாள்களுக்கு தண்ணீர் கிடைத்தாலும் ஆழ்துளைக் கிணறுகள், பம்பு செட்டுகள் மூலம் மேலும் தண்ணீர் தேவையை நிறைவு செய்து கொள்ளக்கூடிய நிலையில் உள்ளனர்.
 ஆனால், இவர்களுக்கு பெரும் அதிர்ச்சியூட்டும் விதமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து செப்டம்பர் 17 முதல் விநாடிக்கு சுமார் 12 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. கர்நாடகத்தில் இருந்து நீர்வரத்து ஏதும் இல்லாத நிலையில், தொடர்ந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் நீர்மட்டம் 84 அடியில் இருந்து திங்கள்கிழமை 48 அடியாகக் குறைந்தது.
 இந்த நிலையில், நீர்மட்டம் வேகமாகக் குறைவதைக் கருத்தில் கொண்டு தண்ணீர் திறப்பு ஞாயிற்றுக்கிழமை 10 ஆயிரம் கன அடியாகக் குறைக்கப்பட்டது. அணையில் இப்போது 16.67 டி.எம்.சி. மட்டுமே தண்ணீர் உள்ளது. சராசரியாக நாளொன்றுக்கு ஒரு டி.எம்.சி. வீதம் தண்ணீர் குறைந்து வருகிறது. இதே நிலை நீடித்தால், மேலும் 10 நாள்களுக்கு மட்டுமே தண்ணீர் திறக்க முடியும் என்று பொதுப் பணித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 இதனால், லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள சம்பா, தாளடி நெல் பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகும் அபாயம் ஏற்படும். இதன்மூலம், ஏற்கெனவே குறுவையால் பாதிக்கப்பட்டு, இப்போது நம்பிக்கையுடன் சம்பா, தாளடி நெல் பயிரிட்டுள்ள டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
 கரையோர விவசாயிகள் மகிழ்ச்சி
 மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவதால், அணையின் கரையோரப் பகுதிகளை ஒட்டியுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 மேட்டூர் அணை சேலம் மாவட்டத்தில் அமைந்திருந்தாலும், அதன் நீர்ப்பிடிப்பு பரப்பு தருமபுரி மாவட்டம் வரையிலும் நீண்டுள்ளது. சுமார் 59.25 சதுர மைல் அளவுக்கு (37,750 ஏக்கர்) அணையின் தண்ணீர் பரவிக் கிடக்கும். அணை முழு கொள்ளளவை எட்டும் நேரத்தில் சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒகேனக்கல் வரையிலும் தண்ணீர் தேங்கி நிற்கும் என்று கூறப்படுகிறது. அப்போது அணையைச் சுற்றிலும் உள்ள கொளத்தூர், கீரைக்காரனூர், கூனாண்டியூர், வத்தல்பட்டி, கொண்டையனூர், நாகமரை, ஏமனூர், பாலாறு, கோட்டையூர், பண்ணவாடி, மூலக்கடை அதன் சுற்றுப் பகுதிகளில் உள்ள பல குக்கிராமங்களைச் சேர்ந்த சுமார் 15 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலத்தில் நீர் சூழ்ந்திருக்கும். பொதுப் பணித் துறைக்குச் சொந்தமான இந்த நிலத்தில் மோட்டார் பம்பு செட்டுகளை பயன்படுத்தாமல் விவசாயம் செய்து கொள்ள அதிகாரிகள் தடை ஏதும் கூறுவதில்லை. இதனால், அணையின் நீர்மட்டம் குறையும் நேரங்களில் இந்தப் பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் குறுகிய காலப் பயிர்களாக நிலக்கடலை, சோளம், கால்நடைகளுக்கான தீவனப்புல் உள்ளிட்டவற்றை பயிர் செய்து பயனடைகின்றனர்.
 பண்ணவாடி பரிசல் துறையை ஒட்டியுள்ள பகுதிகளில் குறுகிய கால நெல் பயிரிடப்படுகிறது. ஆண்டு முழுவதும் நீரில் அடித்துவரப்பட்ட வண்டல் மண், மீன்களின் கழிவுகளால் வளம் செறிந்திருக்கும் இந்த மண்ணில் செயற்கை உரம் ஏதுமின்றியே பயிர்கள் செழித்து வளருவது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். பண்ணவாடி பரிசல் பகுதியில் நிலக்கடலை பயிரிட்டுள்ள விவசாயிகள் கனகா, இந்திராணி கூறியது: மேட்டூர் அணையின் நீர்மட்டம் இப்போது 50 அடிக்கு குறைந்துள்ளதால், அணையின் கரையோரங்களில் வேளாண் பணிகள் தீவிரமடைந்துள்ளன. டிராக்டர் மூலம் உழுது, நடவுப் பணிகளைத் தொடங்கியுள்ளோம். கோடை மழை வருவதற்கு முன்பு அல்லது தென் மேற்குப் பருவமழை தொடங்கும் முன்பு இரண்டு போகம் சாகுபடி செய்துவிடலாம் என்றனர் அவர்கள்.
 கர்நாடகம் இன்னும் 126 டி.எம்.சி.
 தண்ணீரை திறந்துவிட வேண்டும்
 காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி, ஆண்டுதோறும் ஜூன் 1ஆம் தேதி முதல் மே 31ஆம் தேதி வரையிலும் 205 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் தமிழகத்துக்கு வழங்க வேண்டும். (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கன அடி தண்ணீராகும்).
 இதன்படி, ஜூன் 1ஆம் தேதி முதல் நவம்பர் 25ஆம் தேதி வரையிலும், தமிழகத்துக்கு 180.35 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் வழங்கியிருக்க வேண்டும். ஆனால், 54.07 டி.எம்.சி. மட்டுமே வந்துள்ளது. மேலும், 126.28 டி.எம்.சி. வர வேண்டியுள்ளது. இந்த நிலையில், ஜூன் முதல் செப்டம்பர் வரை விடப்பட வேண்டியதில் நிலுவையில் உள்ள 52.80 டி.எம்.சி. தண்ணீரையாவது வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இதற்கிடையே, காவிரி டெல்டா மாவட்டப் பாசனத்துக்காக மேட்டூரில் இருந்து ஞாயிற்றுக்கிழமை வரையிலும் 59.28 டி.எம்.சி. தண்ணீர் விடப்பட்டுள்ளது. அணை மூடப்படும் நாளான ஜனவரி 28 வரையிலும் மேலும் குறைந்தது 60 டி.எம்.சி. தண்ணீராவது இருந்தால் மட்டுமே பயிர்களைக் காப்பாற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com