சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து : 36 பேர் பலி

வேடிக்கை பார்த்த பலர் வெடி விபத்துக்கு பலியாகியுள்ளனர். உள்ளே சிக்கிக்...
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து : 36 பேர் பலி
Updated on
2 min read

விருதுநகர், செப்.5 : விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே முதலிப்பட்டி என்ற பகுதியில் இருந்த ஓம்சக்தி பட்டாசு ஆலையில் இன்று பகல் 12 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி பலியானவர்களில் 36 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் இன்னும் பலர் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. பலர்  படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்து மருத்துவனையில் சேர்க்கப்பட்டவர்களில் சிலர் மரணமடைந்ததை அடுத்து பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. 

சாத்தூர் - சிவகாசி அருகில் உள்ள முதலிப் பட்டியில் ஓம் சக்தி பட்டாசு ஆலையில் ஆலை வாயிலில் உள்ள அலுமினியம் கலவை செய்யும் ஓர் அறையில்தான் முதலில் வெடி விபத்து நேர்ந்தது என்றும் அந்த அறை பயங்கரமாக வெடித்துச் சிதறியதும், பலர் ஓடத் தொடங்கினர் என்றும் தெரிகிறது. இதை அடுத்து, வெடி விபத்து நிகழ்ந்த இடத்தை வேடிக்கை பார்க்க பலர் கூடியுள்ளனர். 
இந்நிலையில், வெடிப் பொருள்கள் தீப்பிடித்து, மேலும் பல அறைகளுக்கு பரவியுள்ளது. இதனால், வேடிக்கை பார்க்க வந்தவர்கள் மீது பட்டாசுகள் பட்டு தீக்காயம் அதிகமாகியுள்ளது.
வெடி விபத்து பட்டாசு ஆலையின் முகப்பில் நிகழ்ந்ததால், அங்கே எழுந்த புகை மூட்டத்தில் உள்ளே இருந்தவர்களில் பலர் வெளியே தப்பித்து வர இயலவில்லை. 
வெளியே வேடிக்கை பார்த்த பலர் வெடி விபத்துக்கு பலியாகியுள்ளனர். உள்ளே சிக்கிக் கொண்டிருப்பவர்கள் குறித்து உடனடித் தகவல் இல்லை. 
தீயை அணைக்கவும், சிதறிய கட்டடங்களில் இருந்து மீட்கவும் தீயணைப்பு வண்டிகள், ஜேபிசி இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. 
அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தன. இந்தப் பட்டாசு ஆலையில், வேடிக்கை பார்க்கவும், பாதிக்கப்பட்டவர்களை மீட்கவும் வந்த பொதுமக்கள் பலரும்  இந்தத் தீ விபத்தில் பாதிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பட்டாசு தயாரிக்க ரசாயனங்களை கலந்த போது ஏற்பட்ட உராய்வில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், ஆலை முழுவதும் பட்டாசுகளும், ரசாயனங்களும் நிறைந்து இருந்தால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிகிறது.



இந்த விபத்தில் பட்டாசு ஆலை முழுவதும் எரிந்து தீக்கிரையானது. பட்டாசு வெடிபொருட்கள் வெடித்துச் சிதறியதில் சுமார் 40 அறைகளும் இடிந்து விழுந்து தரைமட்டமாகியுள்ளன. இந்த ஆலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வேலை செய்து வந்ததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.



பல தனியார் மருத்துவனைகள் தாங்களாக முன்வந்து ஆம்புலன்ஸ் வாகனங்களையும், மருத்துவ உதவிக் குழுக்களையும், விபத்து நடந்த பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளன. அருகில் உள்ள ஊர்களில் இருந்தும் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளது. இப்போதும் சில அறைகளில் பட்டாசுகள் வெடித்த வண்ணம் உள்ளன. இதனால் அப்பகுதியை நெருங்கவே முடியாமல் தீயணைப்பு வீரர்கள் கடும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.



விருதுநகர், சிவகாசி அரசு மருத்துவமனைகளில் முதலுதவி சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்கள் குறித்து தகவல்கள் அறிந்து கொள்ள 0452-2532535 தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com