சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

ரயில் மோதல் தவிர்ப்பு முறையைப் பொருத்த 2 நிறுவனங்கள் தேர்வு

விபத்துகளைத் தடுக்கும் நோக்கத்தில் இந்தத் திட்டம் சோதனை அடிப்படையில் முதலில் தெற்கு மத்திய மண்டலத்தில் விகாராபாத்-பிடார் (200 கி.மீ.) இடையே ரூ.18 கோடி செலவில் செயல்படுத்த முடிவு

Updated On :21 ஜூலை 2013, 10:55 am

நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படும் ரயில் மோதல் தவிர்ப்பு முறையை (டிசிஏஎஸ்) பொருத்துவதற்காக 2 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

விபத்துகளைத் தடுக்கும் நோக்கத்தில் இந்தத் திட்டம் சோதனை அடிப்படையில் முதலில் தெற்கு மத்திய மண்டலத்தில் விகாராபாத்-பிடார் (200 கி.மீ.) இடையே ரூ.18 கோடி செலவில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் 2014ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரயில் விபத்துகளைத் தடுப்பதற்காக டிசிஏஎஸ் முறையைப் பொருத்த ரயில்வே முடிவு செய்துள்ளது. இந்திய ரயில்வேயின் ஆராய்ச்சி, வடிவமைப்பு மற்றும் ஸ்டேண்டர்டு நிறுவனம் (ஆர்டிஎஸ்ஓ) இந்த முறையைப் பொருத்துவதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரி இருந்தது. வெளிநாட்டு நிறுவனங்கள் உள்பட மொத்தம் 6 நிறுவனங்கள் போட்டி போட்டன. இதில் மேதா சர்வோ மற்றும் கெர்னெக்ஸ் மைக்ரோ சிஸ்டம்ஸ் ஆகியவை தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்வதைத் தவிர்ப்பதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்தக் கருவி, வானொலி தொலைத்தொடர்புடன் கூடிய ரயில்வே சமிக்ஞை தகவல், குலோபல் பொசிஷன், சாப்ட்வேர் உள்ளிட்டவற்றின் உதவியுடன் செயல்படுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜிபிஎஸ், வானொலி அலைகள் உணர்வி (ஆர்எப்ஐடி) ஆகியவற்றுடன் பொருத்தப்படும் இந்தக் கருவி, தண்டவாளத்தில் ஏதாவது பிரச்னை இருப்பதை உணர்ந்தால் உடனடியாக ரயிலின் இயக்கத்தைத் தானாக நிறுத்தி விடும்.ஆர்டிஎஸ்ஓ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள இந்தக் கருவிக்காக ஒரு கிலோமீட்டருக்கு ரூ.10 லட்சம்தான் செலவாகும். ஆனால் ஐரோப்பிய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள ரயில் பாதுகாப்பு எச்சரிக்கை முறைக்கு (டிஜிடபிள்யூஎஸ்) ரூ.70 லட்சம் செலவாகிறது என ஒரு அதிகாரி தெரிவித்தார்.இந்தத் திட்டம் வெற்றிகரமாக இயங்கினால் நாட்டின் அனைத்து ரயில்வே மண்டலங்களிலும் செயல்படுத்தப்படும் என ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.