ரயில்வே குடியிருப்புகளில் குடிநீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதை கண்டித்து ஊழியர்களின் குடும்பத்தினர் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டிஆர்இயு மற்றும் சிஐடியு தொழிற்சங்கங்கள் சார்பில் இப்போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்துக்கு டிஆர்இயு ஈரோடு கிளை செயலர் ஏ.அன்பரசு தலைமை வகித்தார்.
போராட்டத்தில் அவர் பேசியது:
பருவமழை பொய்த்ததால் காவிரி ஆறு வறண்டு கிடக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல வறட்சி ஏற்பட்டபோது தினமும் 10 லாரிகள் மூலம் ரயில்வே காலனி குடியிருப்புகளுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது. அதேபோல 9 ஆழ்துளை கிணறுகளும் அமைக்கப்பட்டன.
இப்போதும் ரயில்வே காலனி குடியிருப்புகளில் தண்ணீர் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. எனவே, போர்க்கால அடிப்படையில் ரயில்வே காலனிக்கு குடிநீர் வழங்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ரயில்வே காலனி குடியிருப்புகள், டீசல், ஏசி பணிமனை பகுதி, பிளாட்பாரம், யார்டு மற்றும் அனைத்து அலுவலகங்களுக்கும் தேவையான குடிநீரை கேன்களில் விநியோகம் செய்ய வேண்டும் என்றார்.
உண்ணாவிரதப் போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.