மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவுதமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்! வாக்குப்பதிவு தொடங்கியது!!வாக்குச்சாவடிகளில் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க ஓஆா்எஸ் கரைசல் சட்டப்பேரவை தோ்தல்: விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்வு ஹோா்முஸ் நீரிணை பிரச்னையால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்புபுகைபிடித்தல் இல்லாத புதிய தலைமுறை- பிரிட்டனில் வரலாற்று மசோதா நிறைவேற்றம்
/

வறட்சியால் பொய்த்துப்போனது நெல் சாகுபடி: 3ல் ஒரு பங்கு மட்டுமே விளைச்சல்

கடலூர் மாவட்டத்தில் வறட்சி காரணமாக நெல் விளைச்சல் கடுமையாக குறைந்ததால் அரசு கொள்முதல் நிலையங்களில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மூன்றில் ஒரு பங்கு நெல் மட்டுமே கொள்முதல் செய்ய முடிந்தது. தமிழகத்தில் கடந்த ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவ மழை பொய்துப் போனது.

Updated On :27 ஏப்ரல் 2013, 9:36 am

கடலூர் மாவட்டத்தில் வறட்சி காரணமாக நெல் விளைச்சல் கடுமையாக குறைந்ததால் அரசு கொள்முதல் நிலையங்களில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மூன்றில் ஒரு பங்கு நெல் மட்டுமே கொள்முதல் செய்ய முடிந்தது. தமிழகத்தில் கடந்த ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவ மழை பொய்துப் போனது. இதனால் காவிரியில் வரவேண்டிய தண்ணீர் வராததால் காவிரி டெல்டா மாவட்டங்களில் முழுமையாக நெல் நடவு செய்ய முடியவில்லை. இதை சரி செய்ய, பருவமழை கடைசியாக பெய்யும் என எதிர்பார்த்து சமுதாய நாற்றங்கால் திட்டத்தை அரசு கொண்டு வந்தது.

ஆனால் நாற்று விட்ட விவசாயிகள் காவிரியில் தண்ணீர் வரும் என்கிற நம்பிக்கை போய் விட்டதால் நாற்றங்காலில் இருந்து நாற்றுகளை பிடுங்கி நடவு செய்யாமல் விட்டு விட்டனர். நிலத்தடி நீர் உள்ள பகுதியில் மின் மோட்டார் பம்புசெட் கொண்டு பயன்படுத்த முடியாத அளவுக்கு மின் தடை அதிகரித்தது. இதனால் விவசாயிகள் நெற்பயிர் செய்யும் பரப்பளவு குறைந்தது.கடலூர் மாவட்டத்தில் 2.50 லட்சம் ஏக்கரில், 1.90 லட்சம் ஏக்கரில் மட்டுமே சம்பா நடவு செய்யப்பட்டது. கதிர் வரும் தருணத்தில் தண்ணீர் இல்லாமல் நெற்பயிர் காய்ந்து கருகியது. தண்ணீர் பாய்ச்ச மாற்று வழியைத்தேடி அலைந்து திரிந்தனர் விவசாயிகள். இன்னும் சிலர் குடிநீருக்கு பயன்படுத்தப்படும் டேங்கர் லாரிகளில் தண்ணீர் கொண்டுவந்து நெற்பயிருக்கு தெளித்து பயிரைக் காப்பாற்றினர்.உற்பத்தி குறைவால் கடலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 135 இடங்களில் துவக்கப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இந்த ஆண்டு வெறும் 86 இடங்களில் மட்டுமே கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. அதன் மூலம் அரசு ஏ கிரேடு நெல் கிலோ ஒன்றுக்கு ரூ.13.50-க்கும், பி கிரேடு ரூ.13-க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. நெல் உற்பத்தி குறைந்ததால் வெளிச்சந்தையில் நெல் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இதன்காரணமாக வியாபாரிகள் கிலோ ரூ.21 வரை கொடுத்து வாங்கினர். விவசாயிகள் கொள்முதல் நிலையங்களுக்குச் செல்லாமல் மார்க்கெட் கமிட்டியில் விற்பனை செய்தனர். உற்பத்தி குறைவு, வெளிமார்க்கெட்டில் அதிக விலை போன்ற காரணங்களால் அரசு கொள்முதல் நிலையங்களில் நெல் வரத்து குறைந்தது. கடந்த ஆண்டு கடலூர் மாவட்டத்தில் இதே காலகட்டத்தில் 1.13 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு வறட்சி காரணமாக 35 ஆயிரம் டன் நெல் மட்டுமே கொள்முதல் செய்ய முடிந்தது. இதை ஒப்பிட்டுப் பார்க்கும் போது வறட்சியால் 3ல் ஒரு பங்கு மட்டுமே விளைச்சல் இருப்பது  தெரியவந்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் கோ.மாதவன் கூறுகையில், டெல்டா அல்லாத பகுதிகளில் 50 சதவீதத்துக்கும் குறைவாக பயிர் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் டெல்டா அல்லாத பகுதிகளுக்கு வறட்சி நிவாரணம் அளிக்க முடியாது என்றும் வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் நெல் கொள்முதல் 3ல் ஒரு பங்காக குறைந்துள்ள நிலையில், வறட்சியின் நிலையை அறிந்துகொள்ள முடியம். இதனால் டெல்டா பகுதிகளில் விடுபட்ட விவசாயிகளுக்கும், டெல்டா அல்லாத பகுதிகளில் அனைத்து விவசாயிகளுக்கும் வறட்சி நிவாரணம் வழங்க அரசு முன்வரவேண்டும் என்றார்.

இதுகுறித்து வேளாண் இணை இயக்குநர் ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது, மாவட்டத்தில் சிதம்பரம் வட்டம் மட்டும் டெல்டா பகுதி. இங்கு அரசு அறிவித்த வறட்சி நிவாரணம் தகுதியான விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் டெல்டா அல்லாத பகுதிகளில் 50 சவீதத்துக்கும் குறைவான அளவே பயிர் இழப்பு ஏற்பட்டுள்ளாதாக கள ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் கடலூர் மாவட்டத்தில் டெல்டா அல்லாத பகுதிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்கவேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்படும் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.